எரியும் ஒரு பிடிப் பிரபஞ்சம்

எரியும் ஒரு பிடிப் பிரபஞ்சம்

மனதின் உள்ளிணைவுகள் தீவிரங் கொண்டு மொழியை மோதுகையில் சிதறும் நட்சத்திரத் தீற்றல்கள் என மொழியில் பட்டுத் தெறித்தவை பிரமிளின் கவிதைகள்.

பிரபஞ்சம் என்பது ஓர் பருவெளி. அதன் நிறக்கோலங்கள், கருவிடை வெளிகள், காலங்கள் அமிழாமல் உறையும் துளைகள், தூசுகள், கிரகப் பாறைகள் என்று அளவிலாத பருக்களின் விரிவெளியெனப் பரந்து நிற்பது அது. மனித மனத்தின் உட்சாரமும் பிரபஞ்சத்தின் பருச்சாரமும் ஒன்றின் இன்னொரு வடிவங்களென ஆகுவது இத்தன்மைகளாற் தான்.

பிரமிள் மொழிக்கூட்டின் எலும்புடைத்தவர். அதனுள்ளிருந்து துடிக்கும் ஆன்மாவைத் தன் மெலிகரங்களால் மோதித் திறந்தவர். அதன் பிரபஞ்ச இசையை யாக்க முனைந்தவர். ஓரளவு வென்றவரும் கூட. நவீனத் தமிழின் மிகக்கூரிய சங்கீதம் வெளிப்படும் முதல் மொழி பிரமிளுடையது. பரபரவெனப் பற்றித் தகதவென மொழியில் தீப்பிடிக்கக் கூடியது அவரது தாளம்.

மனஒழுங்கின் குலைவை ஒரு ஒருங்கிணைவென நிகழ்த்தியவர். அதிலிருந்து பிரபஞ்ச இருளுள் மொழி, அடிமுடியற்ற சோதியென மனமுருகையில் பன்றியெனவும் அன்னமெனவும் நிகழ்ந்தவர்.

*

(பிரமிள்)

(உன்) பெயர்

சீர்குலைந்த சொல்லொன்று
தன் தலையைத்
தானே
விழுங்கத் தேடி
என்னுள் நுழைந்தது.

துடித்துத் திமிறி
தன்மீதிறங்கும் இப்
பெயரின் முத்தங்களை
உதறி உதறி
அழுதது இதயம்.
பெயர் பின் வாங்கிற்று.
“அப்பாடா“ என்று
அண்ணாந்தேன்…

சந்திர கோளத்தில் மோதியது
எதிரொலிக்கிறது.

இன்று, இடையறாத உன்பெயர்
நிலவிலிருந்திறங்கி
என்மீது சொரியும் ஓர்
ரத்தப் பெருக்கு.

*

பாலை

பார்த்த இடமெங்கும்
கண்குளிரும்
பொன் மணல்.

என் பாதம் பதித்து
நடக்கும்
இடத்தில் மட்டும்
நிழல் தேடி
என்னோடு அலைந்து
எரிகிறது
ஒரு பிடி நிலம்.

*

பச்சைக் கதை

கானகத்தினுள்
பசுமைச் சாறுபொங்க
துடிக்கிறது
“அல்ல, அல்ல” என்ற உன்
சொல்லின் தாளகதி.

சற்றே நிழல்களுள் சரிகிறேன்,
வழிதடுமாறாத களைப்பு.
எதிர்வரும் என் வேளைகளினுள்
உன்னைச் சிறைபிடிக்கின்றன
தீர்க்க தர்சனங்கள்.

தளிரே – என் மன எலும்பு
உன்னகத்தில் கிளைபடர
இலைமுகம் கொள்கிறாய் நீ.
நாம் எதிலும்
மறைமுகப்பொருள்களை
சர்ச்சிக்க வேண்டாம்.
எது மறை பொருள்?
இந்த உருகிய மறுப்புகளின்
உரம்தான் – அவ்வுரம்
உன்னுள் என்கிளையின்
பணியாத பக்திகளாகட்டும்
பளுவற்றுச் சிறுசிறு
பச்சைச் சிறகுகளில்
எழுந்து தத்தளிக்கட்டும்.

சிறகுகளில் சில
துடிப்பு அணைந்து
மண்வண்ணமாகும்
வீழும்.. வீழினும் உரமாகும்.

மீந்திருப்பவற்றுள்
விளைகின்றன புதர்த்தீ இருள்கள்
உணவுகள்
விஷங்கள்
முட்கள்
முட்கள்
ஸ்தாவர மான்களும் புலிகளும்.

நகங்கள் என்னைக் கிழிக்கின்றன
ஆயின் உன்
மூலிகை இலைக்கண்கள்
சிகிச்சையளிக்கின்றன.

*

பசுந்தரை

கருகாத தவிப்புகள் கூடி
நாவின் திரி பிளந்து
அணையாது எரியும் ஒருபெயர்
நீ!

புதுநெருப்பில் இடைபுதைத்து
வெளியில் எரியும் வகிடெடுத்து
திரண்டு சிவந்தவள்
நீ!

என்நரம்பு வலைதொறும் விரியும்
உன்தீத் தளிர் வடிவுகளை
என் தழுவல்கள் கவ்வி
மின் நதியைப் புணரும்
சர்ப்பச் சுருணைகளாய்
எரிந்து சிந்த
மீண்டும் என்
பஸ்மத்திலிருந்தே
படம்புடைத்தெழுகிறேன்
உன்மீது சரிகிறேன்.

எரிவின் பாலையிலிருந்து மீண்டு
உன்தசைப் பசுந்தரையில்
என்வாய் பாதம் பதிக்கிறது.
பற்கள் பதிந்தகல
இதோ உன்மீதென்
முதிராத யுவ நடையில்
தத்தளித்த முத்தங்கள்.
நீ தரும் பதில் முத்தங்களின்
மதுர வெளியில் மீண்டும் என்
உதிரம் அலைகிறது.

பாலையில் படர்கிறது
பசுந்தரை.

*

காவியம்

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது

*

வண்ணத்துப் பூச்சியும் கடலும்

சமுத்திரக் கரையின்
பூந்தோட்ட மலர்களிலே
தேன்குடிக்க அலைந்தது ஒரு
வண்ணத்துப் பூச்சி
வேளை சரிய
சிறகின் திசைமீறி
காற்றும் புரண்டோட
கரையோர மலர்களை நீத்து
கடல் நோக்கிப் பறந்து
நாளிரவு பாராமல்
ஓயாது மலர்கின்ற
எல்லையற்ற பூ ஒன்றில்
ஓய்ந்து அமர்ந்தது
முதல் கணம்
உவர்த்த சமுத்திரம்
தேனாய் இனிக்கிறது.

*

முதுமை

காலம் பனித்து விழுந்து
கண்களை மறைக்கிறது
கபாலத்தின் கூரையுள்
ஒட்டியிருந்து
எண்ணவலை பின்னிப்பின்னி
ஓய்கிறது மூளைச் சிலந்தி.
உணர்வின் ஒளிப்பட்டில்
புலனின் வாடைக் காற்று
வாரியிறைத்த பழந்தூசு.
உலகை நோக்கிய
என் விழி வியப்புகள்
உயிரின் இவ் அந்திப்போதில்
திரைகள் தொடர்ந்து வரும்
சவ ஊர்வலமாகிறது.
ஓவ்வொரு திரையிலும்
இழந்த இன்பங்களின்
தலைகீழ் ஆட்டம்
அந்தியை நோக்குகிறேன்.
கதிர்க் கொள்ளிகள் நடுவே
ஏதோ எரிகிறது
ஓன்றுமில்லை
பரிதிப்பிணம்.

*

கன்னி

ஒரு நூற்றெட்டு
அரிவாள் நிழல்கள் பறக்கும்
அறுவடை வயல்வெளியில்
ஏதோ ஒரு ஆள்நிழல்
மிதிக்க மடங்கி
சிரம் பிழைத்துக் கிடந்து
அறுவடை முடிய
ஆள்நகர
மெல்ல வளைந்தெழுந்து
தனித்து நாணிற்று
ஒரு கதிர், உச்சியில்
ஒரு நெல், சுற்றிலும்
வரப்பு நிழல் நகரும்
திசை நூல்கள்-
இன்று நிழல் நகரும்
நாளை உதயம்
உனக்கும்
நாணத் திரை நகரும்
உயிர் முதிரும், உன்
கூந்தலின் உமி நீக்கி
வேடித்தெழும் வெண்முகம்
ஓரு அணுத் தான்யத்தின்
பகிரங்கம்.

*

முதல் முகத்தின் தங்கைக்கு

துடித்து
அன்று விழுந்த பகலை மீண்டும்
மிதித்து நடப்பவளே
கொலுசு சூழாத நிசப்தத்தில் நின்
வெண்பாதச் சதைகள் மெத்திட்ட
புல்தரையைக் கவனி

உன்முன் சென்றவள் என்னை
உதறிச் சிந்திய சுவடுகள்
அழுதழுது வரளும் என்
மன வெறுமையிலே
ஏழுவண்ணப் புதிர்கள்
அவிழ எனவா நின்
ஒருதுளிப் பார்வை?
அல்ல
தோற்றழியும் என் தவிப்பை
என் உடலின் இலைநரம்புகள்
உள்ளுரப் பரிகசித்துச்
சிரிக்க என் முகம்தேடி
பார்க்க நிமிர்ந்தனையோ?

உயர்ந்து வளர்ந்த சின்னவளே
அண்ணாந்து
என் மாடியைப் பார்ப்பதேன்?

அழியத் துணிந்தும்
அழியாது தடுமாறி
எரிந்தெழுந்து
சாம்பல் புழுதியில்
உயிர் உடலாகத் திரண்டு
மீண்டும் நிலைத்த நிழல் நான்.
உன் முன்னவளின்
ஜால மருந்து தொடுத்த
பார்வைமழை நுனிகளை
எதிர்பார்த்து மறுப்பின்
குரூர நுனிகள் தைக்க
துடித்திறக்கும் எனது நாட்களை
மீண்டும் நிகழ்விக்கவா
என் வாசலில் நின்று
முகம் திரும்பினை?
கவனி-
என் மாடி உப்பரிகையல்ல
உச்சியில் ஒருகுடில்
என்னுள் கவிதையின்
காலதீதச் சழலெனினும்
நாசியில்-
உன் நாசியிலும் தான்-
நம்மிருவர் தெருவின்
எல்லையில் குடிகொண்டு
வாழ்வின் மறுப்புக்கணை பாய
இறந்து வீழ்ந்த
இதயங்களைச் சூழ்ந்து
பிழம்பு வளர்க்கும்
சுடலையின் வீச்சம்.
எனவே,
விளையாடாதே!
என் இதயத்தை வளைக்கும்
இருள் முடிச்சு
உன் புன்னகை விரல்களில்
அவிழ்ந்து
கருநிற மெத்தைகளாய்
சிதறிச் சிரிக்க
மன நடு இரவு
பூ முகம் கொள்ளுமெனில்
சொல்,
சொல்லை இதயத்தின்
சொல்லற்ற சுனைதர
பேசு.
அது இன்றி
விளையாடினாயெனில்
ஹோம குண்டங்கள் கூட
வெற்றுப் புகைமுடிச்சாய் மண்ட
வேதனை மீண்டும்
அக்னியை உரிமைகொள்ளும்.

*

மோஹினி

‘உனக்கே
உனக்கு நான்’ என
சப்தித்த நின் பார்வைகள்
உன் முகம் நீங்கி
எட்டாத நிலவாயிற்று.
வக்கரித்துத் தரையில்
இலைப்பார்வை பரப்பிற்று.

வழிதொறும்
நிழல் வலைக் கண்ணிகள்
திசை தடுமாற்றும் ஓர்
ஆயிரம் வடுக்கள்.
வேதனை வேர் நரம்பெழுந்து
மூடியது கானகம்.
எதிரே
தலைமயிர் விரித்து
நிலவொளி தரித்து
கொலு வீற்றிருந்தாள்
உன் நிழல்.
என் மன விகற்பத்தின்
வெண் இருள்
நிழலை வளைத்து
துளி வேல்கள் ஏந்தின
கருநீல முட்கள்.
உயரத்தே ஒரு கணம்
பார்வையைப்
பறிகொடுத்து
ஊளையிட்டது நிலவு.
அது கணம்
வெண்நிழல் அழைத்தது.
அணுக
அவளை என்
பாதங்கள் துணிந்து
அணுகக் கருநீல
வேல் நுனிகளில் என்
உதிரத்தின் மலர்ச் செம்மை.
முட்கள்
மொக்க விழ்கின்றன.
விரிகிறது
இதழ் வேளை.
ஊன்றி எடுத்த என்
பாதத்தில் ஊறி
உதிரத்தில் ஒலித்ததுவோ
நிலவின் விஷ ஊளை.

நாநுனி தவித்து
துளியளவு தீண்டி
பதிவுகள் தொடர
திசையறும்
வெண் இருளில்
ரகஸியக் கிணறு.
அதில் எரிகிறது
ஈரநெருப்பு.
குனிந்து பறந்து
கீழ்நோக்கி எழுகிறேன்.
தத்தளித்து
தாகம் தணித்த
நீர்வெளி
பாறையாய் இறுகி
என் புதைவை
சிறையிடுகிறது
கல்பீடம் ஆகிறது.

நிலவின் ஊளை வெளிறி
பலிசிந்தி வீழ
அவளது தந்தங்கள்
வெறிக்கின்றன.

ஓ! என்
பணிவுகளை உறிஞ்சும்
பலி பீடமடி நீ!

பசிதணிந்து
பசிகொண்டு
பாறை தளர்ந்து
தசை வெளியாய்
தத்தளித்து
பசியேற்றி
அசைகிற சுழலே,
இன்று கொட்டும்
இருளின் தமுக்கில்
நம் இருவர் தசைகளில்
தீராத
தினவுகள் அடியே!

TAGS
Share This