பொன் வாள்
மொழிக்குள் சில கவிஞர்கள் அரிதான ஒருங்கிணைவுகளைப் பெறுவார்கள். ஒரு மக்கள் திரளின் கூட்டு மனத்தின் பொன் வாளென அவர்களது கவிதைகள் திரண்டு வருவன. அவை போருக்குரியவை அல்ல. அம்மக்களின் அகத்தின் ஒவ்வொரு இழைகளும் நுட்பங்களும் உருகித் தங்கமென வழிந்து, பரவி, இறுகி, பிடியிடப்பட்டு, கூர் தீட்டப்பட்டு தகதவென மின்னி உறைபவை.
சேரன் ஈழத்தின் நிலத்தையும் அகத்தையும் மொழியுள் திகழ வைத்தவர். அவரின் நிலக்காட்சிகளின் அவதானிப்புகள் பலநூறு வரிகளின் மூலம் ஈழத்தை மீள மீளப் பனி கலைந்து நிலம் புலக்கும் சூரியனெனத் திரை நீக்குபவை. அவரின் அகக் கவிதைகள் இம்மக்களின் உள்ளோடும் அறங்களின் மகத்தான மானுடக் குரலெனவும் காதலினதும் காமத்தினதும் விரிகனவெனவும் மண்ணிற் பனையென எழுந்து நேர்கொண்டு நிற்பவை.
எனது பழைய மதிப்பீடொன்றில் அவரது கவிதைகள் குறித்த சில எளிய புரிதல்களை முன் வைத்திருந்தேன். தற்போது மொத்த மொழியிலும் கவிஞர்களின் பங்களிப்பை மதிப்பிடும் போது இவரது கவிதைகள் ஈழத்தின் பேராழியில் பொன் வாளென பிரகாசிக்கிறது. ஈழத்தின் நவீன கவிதை மொழியின் பயில்வில் தன்னை பேராழியுள் இருகைகளையும் கூர்ந்து குவித்து உட்புகும் நீரோடியென நுழைந்தவர். இந்த நிலத்தின் மொழியாழத்தை துளைத்து இன்னொரு நிலத்தின் பனியாழங்களிலிருந்து மேலெழுந்தவர்.
அவரது கவிதைகளுள் நீங்காத மரபின் சங்கீதமுண்டு. சொற்களுக்குத் தாளம் கதிரைகளுக்குக் கால்களைப் போலுண்டு. சுதந்திரத்தை வேட்கையுறும் ஆன்மாவின் அலைகின்ற பாடல்களுண்டு. மண்ணினுள் ஊடுருவி ஒன்றயொன்று தழுவி இறுகிப் பரவி உறுதிகொள்ளும் பல்லாயிரம் வேர்களின் பிடியுண்டு.
ஈழ நிலத்தினதும் அகத்தினதும் மதிப்பு வாய்ந்த பொன் வாளென மொழியுள் ஒளிவீசுபவை சேரனின் கவிதைகள்.
*
எல்லாவற்றையும் மறந்து விடலாம்…
எல்லாவற்றையும் மறந்து விடலாம்;
இந்தப் பாழும் உயிரை
அநாதரவாக இழப்பதை வெறுத்து
ஒருகணப் பொறியில் தெறித்த
நம்பிக்கையோடு
காலி வீதியில்
திசைகளும், திசைகளோடு இதயமும்
குலுங்க விரைந்த போது,
கவிழ்க்கப்பட்டு எரிந்த காரில்
வெளியெ தெரிந்த தொடை எலும்பை,
ஆகாயத்திற்கும் பூமிக்குமிடையில்
எங்கோ ஒரு புள்ளியில் நிலைத்து
இறுகிப்போன ஒரு விழியை,
விழியே இல்லாமல், விழியின் குழிக்குள்
உறைந்திருந்த குருதியை,
‘டிக்க்மண்ட்ஸ்’ ரோட்டில்
தலைக் கறுப்புக்ளுக்குப் பதில்
இரத்தச் சிவப்பில் பிளந்து கிடந்த
ஆறு மனிதர்களை,
தீயில் கருகத் தவறிய
ஒரு சேலைத் துண்டை,
துணையிழந்து,
மணிக்கூடும் இல்லாமல்
தனித்துப்போய்க் கிடந்த
ஒரு இடது கையை,
எரிந்து கொன்டிருக்கும் வீட்டிலிருந்து
தொட்டில் ஒன்றைச்
சுமக்க முடியாமல் சுமந்துபோன
ஒரு சிங்களக் கர்ப்பிணிப் பெண்ணை
எல்லாவற்றையும்,
எல்லாவற்றையுமே மறந்துவிடலாம்
ஆனால்-
உன் குழந்தைகளை ஒளித்துவைத்த
தேயிலைச் செடிகளின் மேல்
முகில்களும் இறங்கி மறைத்த
அந்தப் பின் மாலையில்
நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்த
கொஞ்ச அரிசியை பானையிலிட்டுச்
சோறு பொங்கும் என்று
ஒளித்தபடி காத்திருந்தபோது
பிடுங்கி எறிபட்ட என் பெண்ணே,
உடைந்த பானையையும்
நிலத்தில் சிதறி
உலர்ந்த சோற்றையும்
நான் எப்படி மறக்க….?
*
யமன்
காற்று வீசவும்
அஞ்சும் ஓர் இரவில்
நட்சத்திரங்களுக்கிடையே இருக்கிற
அமைதியின் அர்த்தம் என்ன
என்று
நான் திகைத்த ஓர் கணம்,
கதவருகே யாருடைய நிழல் அது ?
நான் அறியேன் ;
அவர்களும் அறியார்.
உணர்வதன் முன்பு
அதுவும் நிகழ்ந்தது….
மரணம்.
காரணம் அற்றது,
நியாயம் அற்றது,
கோட்பாடுகளும் விழுமியங்களும்
அவ்வவ்விடத்தே உறைந்து போக
முடிவிலா அமைதி.
மூடப்பட்ட கதவு முகப்பில்,
இருளில்,
திசை தெரியாது
மோதி மோதிச் செட்டையடிக்கிற
புறாக்களை,
தாங்கும் வலுவை என்
இதயம் இழந்தது.
இளைய வயதில்
உலகை வெறுத்தா
நிறங்களை உதிர்த்தன,
வண்ணத்துப் பூச்சிகள் ?
புழுதி படாது
பொன் இதழ் விரிந்த
சூரிய காந்தியாய்,
நீர் தொடச்
சூரிய இதழ்கள் விரியும்
தாமரைக் கதிராய்,
நட்சத்திரங்களாய்
மறுபடி அவைகள் பிறக்கும்.
அதுவரை,
பொய்கைக் கரையில்
அலைகளைப் பார்த்திரு!
*
இரண்டாவது சூரிய உதயம்
அன்றைக்கு காற்றே இல்லை;
அலைகளும் எழாது செத்துப் போயிற்று
கடல்.
மணலில் கால் புதைதல் என
நடந்து வருகையில்
மறுபடியும் ஒரு சூரிய உதயம்.
இம்முறை தெற்கிலே –
என்ன நிகழ்ந்தது?
எனது நகரம் எரிக்கப்பட்டது;
எனது மக்கள் முகங்களை இழந்தனர்,
எனது நிலம், எனது காற்று
எல்லாவற்றிலும்
அந்நியப் பதிவு.
கைகளைப் பின்புறம் இறுகக் கட்டி
யாருக்காகக் காத்திருந்தீர்கள்?
முகில்களின் மீது
நெருப்பு,
தன் சேதியை எழுதியாயிற்று!
இனியும் யார் காத்துள்ளனர்?
சாம்பல் பூத்த தெருக்களிலிருந்து
எழுந்து வருக.
*
எனது நிலம்
சிறகுவலை விரித்த பரவைக் கடல்.
மேலே மூச்செறியும் காற்று
கடல் நடுவில்,
கலையும் தலைமயிரை
விரல்களாலழுத்தி நிமிர்கையிலெல்லாம்
கரை தெரிகிறது,
பனைமரமும் இடையிடையே ஓடுகளும்.
அலையும், எஞ்சின் இரையும்பொழுது
சிதறும் துளியும்……
ஒன்றரை மணி நேரம்
எப்படி முடிந்ததாம்?
பிறகு, மணல் நிமிர்ந்த வெளி
அதனுள் புதைந்த பனைகள்,
ஒவ்வொன்றும் ஓராள் உயரமெனக்
கன்னி மணல் மீது தலைநீட்டும்…
மணலோ,
கண்ணாடி விதையிட்டுச்
சூரியன் போய்க் குடியிருந்த
பொன்னின் துகள்….
அதன் கீழ் –
இரண்டாயிரம் ஆண்டுகள்
முன்பாக, என்முன்னோர் நடந்த
நிலப்பரப்பு.
ஒரு காலடி ஆனால்
ஓராயிரம் ஆண்டு
எம்வேர் நீண்டுள்ளது.
துயிலாது, இந்த அலைகரையில்
நின்று
விண்மீன் சிதறிக் கடலுள்
விழுகின்றதைப் பார்த்திரங்கிய ஒருத்தியின்
அல்லது
தொடுவான் வெளி பிளந்து
கரை சேரும் நாவாய்க்குக்
காத்திருந்த இன்னொருத்தியின்
வெறும் மார்பில் புரண்ட மணி ஒன்றில்
பின்மாலை, அந்திப் பொழுது
புடமிட்ட
தென்னோலை காற்றாடும் வெளியின்
மண் மூடிய சுவடுகளில்,
என்முன்னோர்
விட்டுப் போயுள்ளார்கள்
எனக்கொரு செய்தி;
நூறுநூறாயிரம் தோள்களின்மீது
ஏறி நின்று
எனது நிலம் என உரத்துச் சொல்கிறேன்.
ஏழு சமுத்திர வெளிகளைத் தாண்டி
அதன் மேல் எழுகிற அலைகளை மீறி
அதனைக் கொண்டு போய்,
எங்கும் ஒல்லிக்கிறது காற்று
“எனது நிலம்
எனது நிலம்”
*
சே.யுடனான உறவு முறிந்தபோது
சே.யுடனான உறவு முறிந்தபோது
வெளியில் எறிவதற்கு
ஒரு பெருமூச்சாவது என்னிடம் இருக்கவில்லை
இந்த அறை வாசல் படியை
அவனது கால்கள் தாண்டிய நொடிப்பொழுதிலேயே
அவனது நினைவிலிருந்து
நான் அழிந்து போகிறேன்
‘திறந்து வைக்கப்பட்ட கற்பூரப் பெட்டியிலிருந்து
வெளியேறிய வாசனை போல
நான் விலகி விட்டேன்’
என்று எழுதி வைத்துவிட்டுப்
படுக்கையறைக் கட்டிலின் கீழ்ப்
புதைந்து கொள்கிற துணிவு
யாருக்கு வரும்?
அவனுக்கு. அவனோ
வேட்கையின் விசுவரூபம்
ஆயிரம் கோடி மயிர்க்கால்களிலும்
அன்பு நேசம் இன்னுமின்னுமெனும்
ஆசை கசியும் கவிஞன்
இருக்கும் வரையில் இனியன்.
காதல் கறைப்படுத்திய படுக்கை விரிப்புக்களையும்
சுக்கிலம் தெறித்துச் சிக்குண்ட கூந்தலையும்
வெந்நீரில் தோயவிட்டு
வெளியில் வந்தபோது
அவனுடைய வியர்வைத் துளியையும்
காணவில்லை.
அவன் மல்லாந்து கிடந்த இடத்தில்
குலைந்து போயிருக்கிறது ஒரு கனவு
அவன் நடந்து சென்ற வெளியில்
தெளிவற்ற சில முணுமுணுப்புகள் மிதக்கின்றன :
‘அச்சம் தருகிறது காதல்’
கலவியின் பின்
மெல்லிய, வெட்கங் கெட்ட குரலில்
அவனுடைய வழமையான மந்திரம்.
போய் வா, உடைந்த கண்ணாடித் துண்டே
உனது அச்சம் வேறு
எனது அச்சம் வேறு.
*
கேள்
கேள்
எப்படிப் புணர்வது என்பதைப்
பாம்புகளிடம். எப்படிப் புலர்வது என்பதைக்
காலையிடம். பொறுமை என்பது என்ன
என்பதை மரங்களிடம். கனவுகளுக்கு
வண்ணங்கள் உண்டா என்பதைத் தூக்கத்தில்
நடப்பவர்களிடம். கண்ணீர்த்துளிகள் சிறைக்கூடங்களாக
மாறியது எப்படி என்பதை
அகதிகளிடம். பயம் என்பது என்ன என்பதை
நடு இரவில் இந்த நகரில் நடக்க நேர்கிற
கறுப்புத் தோல் மனிதர்களிடமும்
பெண்களிடமும். மோகம் முப்பது நாள்கள்தானா
என்பதை மூக்குத்தி அணிந்த காதலர்களிடம்.
முழுநிலவில் பாலத்தின்கீழ் உறைந்த பாற்கடலின்
பாடும் மீன்கள் எங்கே போய்விட்டன
என்பதைக் கார்காலத்திடம். மொழியின்
தனிமையிலிருந்து பிறப்பது என்ன என்பதைத்
திசை தொலையப் புலம்பெயர்நதவர்களிடம்.
துயரத்தின் சாறு பிழிந்த தனிமை எப்படியிருக்கும்
என்பதை என் பனிப்பாறையுள் நெருப்பின்
உயிர்ச் சுவட்டை எறிந்தவனிடம், அவளிடம்
இவளிடம். இரவின் கடைசி ரயிலும் போய்வி்ட்ட
பிற்பாடு ஒற்றைச் சிறகுடன் கையில் ஒற்றைப்
பூவுடன் காத்திருப்பது எப்படி என்பதை
என்னிடம்
கேள்.