பிரியத்துக்குரிய பெண்ணுக்கு: கடிதம்
ஒரு போராட்டம் செய்யப்பட்டு இருக்கிறது இதற்குள்ளே. ஒரு யதார்த்தம் இருக்கிறது. அதேநேரம் புரட்சி இருக்கிறது. என் ஆண்மையின் அத்தனை விறைப்புத் தனங்களுக்குள்ளும் உள்ளே மரத்துபோன உணர்சி மிக்க பரம ரகசியமாக நீள நினைக்கும் காமத் தீயின் கட்டுக்கடங்காத ஆர்வத்தில் வரும் கோளாறுகளை எழுதும் அந்தத் துணிவு அதிர்கிறது.
ஆரம்பத்தில் தூண்டி பின்னர் எல்லை தாண்டி இறுதியில் வாசகனை மனச்சிறையில் அடைக்கிறாய். என்னை போன்ற ஒரு ஆணுக்கு கிடைத்த ஒரு தண்டனை இது.. ஆனாலும் அதைப் பற்றி எப்படி எழுதுவது, எப்படியாவது எழுதுவது என்பது தான் எனக்கும் இருந்தது. இது நோயா தெரியாது ஆனால் எனக்கு உண்டு.. ஆணாதிக்க ஆணிவேர்களின் அடியில் தான் இருக்கிறேன். இந்தக் கவிதை பெண்ணுக்குச் சற்றுச் சுதந்திரம் கொடுக்க வைக்கிறது… என்ன என் காதலியும் கஞ்சாக்காரிகள் போல் சிறைப்படுவதை விரும்புகிறாளே.
Rtr kirishanth
*
வணக்கம் கிரி,
ஆணுலகின் பாலியல் பற்றிய அதீதமான கற்பனைகள், அது உண்டாக்கும் விளைவுகள் பற்றி எங்களது சமூகத்தில் உரையாடல்கள் மிக அரிது. பாலியல் உறவு பற்றிய எங்களது அறிதல்கள் எவ்விதம் சிறு வயதிலிருந்து உருவாகி வருகின்றன என்பதை அவதானிக்க வேண்டும். முறையான கற்றலோ, இன்னொரு உடலையும் மனதையும் எவ்விதம் அணுக வேண்டுமென்பதோ காமம் எப்படி ஒரு உயிரியல்போ அதேயளவு அது அந்தந்தப் பண்பாடுகளால் உருக்கொள்வதும் என்பவை தீவிரமாகக் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படுவதில்லை.
எங்களுக்கு காமம் ஒரு Taboo. விலக்கப்பட்ட கனி போல. பெற்றோரோ ஆசிரியரோ அல்லது காமத்தை அறியவென அதன் நடைமுறை அனுபவம் கொண்ட யாருமே பதின்ம வயதில் எங்களுக்கு வாய்ப்பதில்லை. உடலுறுப்புகள் பற்றிப் படங் கீறி விளங்கப்படுத்துவதே எங்கள் காலத்தில் புரட்சிகரமான செயலாக இருந்து வருகிறது. அது மிக மிக அடிப்படையான விடயம்.
கற்பிக்கப்படாத உரையாடப்படாத காமம், பாலியல் உணர்வுகள் பற்றிய அறிதல்கள் எங்களுக்கு சக வயது நண்பர்கள் மூலமாக அதீத பாலியல் கற்பனை கொண்ட கதைகளாகக், கிளர்ச்சி பொங்கப் பரவுகின்றது. பெரும்பாலான பெண்களுக்கு இது தலைகீழாக, காமம் உரையாட அஞ்சும், கூச்சப்படும் ஒன்றாக இருந்து வருகிறது. அடுத்தது போர்னோகிராபி, நாங்கள் காமத்தை கண்டு, கேட்டு, உற்று, கற்பனை செய்வதே போர்னோகிராபி மூலம் தான். இவையிரண்டும் உதாரணங்கள். ஆண்கள் மேலும் எங்களது ஆணுலகின் ஆதீத பாலியல் கற்பனைகள் பற்றி விவாதிக்க வேண்டும். பெண்கள் காமத்தை எவ்விதம் கற்பனை செய்கிறார்கள் என்பதும் உரையாடப்பட வேண்டும். ஆண்கள் அதீதம் கொள்ள, பெண்கள் கற்பனையே செய்யாத ஆண் மனதின் பாலியல் புனைவுகளில் ஒரு பாத்திரமாக வாழ்வதென்பது எத்தகைய நிலை?
இளவயதில் இத்தகைய அதீதங்கள் மிகைப்படுத்தப்பட்டு, அதன் பின்னர் காமத்தை அனுபவிக்கும் போது அதீதக் கதைகளும் போர்னோகிராபியும் அங்கு நிகழ்வதில்லை. இவளோ/ இவன் ஏன் போர்னோகிராபி காதநாயகி / கதாநாயகன் போலோ இல்லை என்றாகி மனம் சலித்து விடுகிறது. அது ஒரு மிகை என்று தெரிந்த இந்தக் காலத்திலும் இதுவே பெரும்பாலன இடங்களில் நடைமுறை. பெரும்பாலான ஆண்கள் அந்த ஆணுடன் சேராதே, நேரத்துக்கு வீட்ட வா, பேஸ்புக்கில் அவனுக்கேன் லைக் போட்டாய் என்பவற்றில் தொடங்கி பெண்களுக்கு வகுத்தளிக்கும் கட்டுப்பாடுகளின் பின் தன் மூளைக்குள் இருப்பதின் இன்னொரு நிழல் தான் இன்னொரு ஆண் என்ற தொடர்ச்சி இருக்கிறது.
காமத்தையும் பாலியலையும் அதனுள்ளே ஆணுக்கும் பெண்ணுக்குமான இடைவெளிகளும் உரையாடி பரஸ்பரம் அறியப்படாமல் விட்டால், நாங்கள் எங்கள் அக நஞ்சுக்குப் பலியாகிக் கொண்டேயிருப்போம். காமம் கொண்டாட்டமானது. வாழ்வின் ஆதார உணர்ச்சிகளில் ஒன்று. அதை இருவரும் வாழ்ந்து அனுபவித்துக் கொண்டாட நாங்கள் இத்தகைய உரையாடல்களைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.
இணைப்பு:
பிரியத்துக்குரிய பெண்ணுக்கு https://kirishanth.com/archives/507
பொருள் கொள்ளுதலும் எதிர் கொள்ளுதலும் https://kirishanth.com/archives/513