தன்னுரை : வாழ்க்கைக்குத் திரும்புதல்
அனைவருக்கும் வணக்கம்,
ஒரு மொழியின் இலக்கியத்தில் எழுதப்படும் சொற்கள் ஒவ்வொன்றும் அச் சமூகத்தின் பண்பாட்டு ஆழ்மனத்தின் நரம்புகளும் குருதியும் போன்றவை.
இலக்கிய மரபின் அடிப்படையில் ஒருவர் எழுத்தில் தன்னை தொகுத்துக் கொண்டு முதலாவது நூலை முன்வைக்கும் பொழுது தன் ஆசிரியர் நிரையை முன்வைப்பது பொருத்தமானது. ஒரு எழுத்தாளருக்கு அவர் என்னவாக ஆகிறார், எதைக் கொண்டு தன் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் வகுத்துக் கொள்கிறார் என்பதன் சிந்தனைத் தொடர்ச்சியை முன்வைப்பது அவரைப் புரிந்து கொள்ள அடிப்படையான திறவு கோல்கள்.
வாழ்க்கை குறித்த ஆன்மீகமான பார்வையை எனது சிந்தனையை விமர்சித்து முரண்பட்டுத் தொகுக்கும் ஆளுமையாக ஓஷோவை முன்வைப்பேன். அவர் என் ஆன்மீகத்திற்கான ஆசிரியர். சிறுவயது முதல் ஆன்மீகம் சார்ந்த புரிதல்களும் கேள்விகளுடனுமே அலைந்தவன் நான். வாழ்க்கை என்றால் என்ன என்பதே என்னைத் தொடையில் வண்டெனத் துளைத்த கேள்வி. அதனுடன் வாழ்ந்த எனக்கு ஆன்மீகம் முதற் பதில்களை அளித்தது. அந்தக் கேள்வியை ஒவ்வொரு மதத்துடனும் ஒவ்வொரு தெய்வத்திடமும் வினவினேன். அனைத்து பதில்களையும் என் மூளை எளிதில் வென்றது. அதன் பின்னர் ஒருநாள் ஓஷோவின் நூல்களையும் பின்னர் காணொலிகளையும் கேட்கத் தொடங்கினேன். இலக்கியங்கள் தத்துவங்கள், மதங்கள் மீதான அவரது பார்வைகளும் விமர்சனங்களும் எனது கேள்வியை நோக்கி எடையின்றி என்னைக் கொண்டு சென்றன. ஒரு மனிதர் அவரளவில் அவரது திறனில் முழுதமைந்து ஒவ்வொரு கணத்தையும் முழுதான வெளிப்பாட்டுடன் வாழ்தலை வாழ்க்கை என எண்ணிக் கொள்ளும் எல்லை வரை அவர் என்னைக் கொணர்ந்தார். அதுவே என் புரிதலை விரிக்கச் செய்தது. வாழ்வை அதனதன் வெளிச்சத்தில் வைத்து நோக்கும் விழிகளை அடைதலே அகமெய்மை.
கைக்குழந்தையிலிருந்து நான் காவப்பட்ட வீடுகளின் மனிதர்களும் அவர்களின் வாழ்க்கை நோக்குகளும் என்னைப் பாதித்தன. செல்வமனோகரன் அண்ணாவின் வீட்டு நூலகம் ஒரு புதையல் சுரங்கத்திலிருந்து தேர்ந்தெடுத்த வைரங்களும் அருமணிகளும் அடுக்கப்பட்டது போல நூல்களால் ஆகியிருந்தது எனது நல்லூழ். அவருடனான எனது உரையாடல்களும் சந்திப்புகளும் பரிமாற்றங்களும் இலக்கியம் எனும் கனவை உருவாக்கி அளித்தன. அவரது இளவயது ஆர்வங்களை இதழ் முயற்சிகளை பதிப்புச் செயற்பாடுகளை எல்லாவற்றிலும் முதன்மையாக இலக்கியத்தில் அவரது ரசனையை என்னிடம் உண்டாக்கினார். அக்கால அவரது ரசனைப் பட்டியல் மிகவும் கடுமையான இலக்கிய அளவுகோல்களைக் கொண்டிருந்தது. ஒரு சிறு கூர்வாள் போல. அதை நானும் எடுத்துக் கொண்டேன்.
பின்னர் வேலணையூர் தாஸ் அண்ணா அவர்களின் அழைப்பில் இலக்கிய அரங்குகளில் பேசுதல், எழுதுதல், இதழ் முயற்சி, இலக்கியம் பேசிக் களித்தல் என இருபது வயதுகள் வாய்த்தன. அவர் சமூகத்திற்கு இளையவர்களின் இணைவை உண்டாக்குவதில் எனக்கு ஆசிரியராக அமைந்தார். அவரது முயற்சிகள் இளம் தலைமுறையில் தேடலுடனும் வாசிப்புடனும் அலைந்தவர்களை ஒன்றிணைத்தது. அத்தகைய ஆளுமைக்கான தேவையை இன்றும் வலுவாக உணர்கிறேன். நம் சமூகத்தில் அரிதாகப் பூக்கும் ஆளுமைகளில் ஒருவர் அவர். இளையவர்களுடன் உரையாடி அவர்களை வளர்த்தெடுக்கும் இதயம் வாய்ப்பது அரிதினும் அரிதானது நம் சூழலில். அதை அவர் கொண்டிருக்கிறார் என்பதே அவரின் முதன்மையான தகுதி எனக் கொள்வேன்.
நிலாந்தன் அண்ணாவுடனான அறிமுகமும் பழக்கமும் அரசியலிலும் இலக்கியத்திலும் இருக்கும் இணைவையும், ஆளுமையாக ஒருவர் தன்னைத் தானே வகுத்தும் தொகுத்தும் கொண்டும் மேலெழுதலையும் எனக்குக் கற்றுக் கொள்ளும் ஊக்கத்தை அளித்தன.
கவிஞர் சுகுமாரன் கவிதைகளில் என்னை மோதிச் சிதறி எரியச் சொல்லித் தந்தார். அவரது சொற்களின் தணலினால் என்னை வழிநடத்தினார்.
நம் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு துறை சார்ந்தும் சமூக வாழ்க்கை சார்ந்தும் ஆசிரியர்களைத் தேடி அடைந்து கொள்வதும் கவனித்துக் கற்றலும் உடனிருந்து கற்றலும் சிந்தனைகளைத் தொடர்தலும் முக்கியமானவை. இன்றிருக்கும் எனக்கு இளையோருக்கு நான் அதனையே பரிந்துரைப்பேன். ஆசிரியர் மாணவர் உறவு முதன்மையான உறவுகளில் ஒன்று. அங்கிருந்தே ஒருவர் தன்னைத் தான் கண்டு கொண்டு வளர இயலும். நம் பழக்கத்தில் உள்ள ஆசிரிய மாணவர் என்ற கல்விப்புலம் சார்ந்த உறவை மட்டுமல்ல, பண்பாட்டு ஆசிரியர்களை அறிதலும் அவர்களை முன்னோடிகளெனக் கொண்டு அவர்களது சிந்தனையுடன் நாம் உரையாடிப் பயில்வதும் ஒவ்வொருவருக்கும் முக்கியமானது. உங்களுடைய ஆசிரியர்களை நீங்கள் கண்டுபிடிக்காத வரை நீங்கள் இங்கிருக்கும் பல்லாயிரக்கணக்கான சராசரிகளில் ஒருவராகவே உண்டு, உடுத்து, பிள்ளைகள் பெற்று, முதுமையடைந்து மாய வேண்டும். அத்தகைய சராசரி வாழ்க்கைக்கு அப்பால் வாழ்வை அறிந்து திகழ இலக்கியம், கலைகள், தத்துவம், ஆன்மீகம் ஆகியன இக்காலத்தில் நம்முன்னுள்ள தெரிவுகள்.
என் ஆசிரியர் நிரையில் இறுதியாகச் சொல்வது என் முதன்மையான பார்வைகளையும் வாழ்விற்கான ஊக்கத்தையும் அளிக்கும் எழுத்தாளர் ஜெயமோகனை. நான் அவரது மாணவன். சீடனில்லை. ஜெயமோகன் தமிழில் நிகழ்ந்திராவிட்டால் இன்று ‘நான்’ என்ற எழுத்தாளன் சரிபாதிக்கும் குறைவான ஒருவனாகவே இருந்திருப்பேன். என் ஆற்றல்களை திரட்டிக் கொள்ள அவர் உதவினார். ஜெயமோகன் எங்கிருந்தோ என்னை முன்னேறிச் செல்லச் சொல்லி ஆணையிடுகிறார். சமரசமின்றிக் களம் காண்க என வாழ்த்துகிறார். ஒரு பிதாமகரைப் போல.
வெண்முரசு நாவலில் ஒரு காட்சி உண்டு. பீஷ்ம பிதாமகர் அம்புப் படுக்கையில் இருப்பார். அப்போது கர்ணன் களம் செல்வதற்கு ஆசிகேட்டு வந்து நிற்பான். பீஷ்மருக்கும் கர்ணனுக்கும் இடையில் நிகழும் உரையாடலில் ஒரு பொற்கணம் உண்டு. சிறுகுழந்தையாக கர்ணன் விளையாடிக் கொண்டிருந்த பொழுது பீஷ்மர் அவனை ஆற்றங்கரையொன்றில் எவருமறியாது அழைத்து விளையாடுவார். கர்ணன் அவரைத் தன்னவர் என அறிந்து பற்றிக் கொள்வான். கர்ணனது தாய் கர்ணனை அழைத்த போது பீஷ்மர் புற்களுக்குள் மறைந்து கொள்வார். அவர் மறைந்த திசையைக் காட்டியபடி கர்ணன் பிதாமகர் எனச் சொல்வான். நண்பர்களே, தமிழ் இலக்கியத்தின் பிதாமகர் அவரே எனக் கர்ணனைப் போலச் சுட்டுகிறேன். அவரது இலக்கியம் சார்ந்த சிந்தனைப் பள்ளியில் என்னை அகத்தால் இணைத்துக் கொண்டிருக்கிறேன்.
ஜெயமோகன் எனக்கு எழுத்தில் அளித்த நம்பிக்கையும் கனவும் ஈடிணையற்றவை. இன்று வரை நான் அவருக்கு ஒரு வாசகர் கடிதம் கூட மின்னஞ்சலில் அனுப்பியதில்லை. அவருக்கு நான் ஒருவன் இருப்பதே தெரியாது. ஆனால் இந்தத் தொகுப்பை தமிழ் நாட்டில் உள்ள எனது நண்பர்கள் ஒரு சிறு மடலுடன் அவருக்கு அனுப்பியிருந்தார்கள். அம்மடலில் நான் அவருக்குச் சொன்னவை இவையே.
“என் ஆசிரியருக்கு,
உளமும் உடலும் அறிந்து தொடரும் ஆசிரியர் தொடர்ச்சிக்கு வெளியே அகம் மட்டுமேயேனத் தொடரும் மரபிலிருந்தொரு சிறு அன்பளிப்பு இந்த நூல்.
என்றோ ஓர் இளமையின் தொடக்க நாட்களில் றமணன் அண்ணா என்ற என் அயலவரின் வீட்டு நூலகத்தின் றாக்கையிலிருந்து இலக்கிய முன்னோடிகள் வரிசைப் புத்தகங்களை எடுத்துத் தந்து இதை வாசிச்சுப் பார் என்ற அக் கணம் உங்களை அறிவதன் தொடக்க நினைவு.
ஓர் ஆசிரியர் பொருட்படுத்தும்படி எதையேனும் செய்த பின் அவரைச் சந்திப்பதே என்னளவில் பொருளுள்ளது.
நீங்கள் இதை வாசிக்கும் இக்கணம், என் தன்னுணர்வு நிறைவு கொள்கிறது. இந்தக் கவிதைகளை நீங்கள் வாசிக்கப்போவதை அறியுந் தோறும் ஒரு குழந்தை தன் தந்தையின் தொடுகையை மனதால் உணர்வது போல் மகிழ்ச்சி குளிர்ந்து ஊடுருவுகிறது நரம்பெலாம்”.
இப்படி அணுகுவதில் ஒரு சிறு துண்டு ஆணவம் உண்டு என்பதை அறிவேன். அந்த ஆணவம் எனக்கு இருந்தாக வேண்டும் என எண்ணிக் கொள்கிறேன். அவர் என்னை அறிய வேண்டியது எளிய மாணவனாக அல்ல. தன் கனவைக் கொண்டு நீட்டப்போகும் பல்லாயிரம் மாணவர்களின் நிரையில் ஒருவராக அல்ல. நான் பொருள் கொள்ளும் படி செயல் புரிபவன் என்பதாக மட்டுமே. அங்கிருந்தே என் ஆசிரியர் என்னை அறிய வேண்டும் என எண்ணுகிறேன். அது என் செயலூக்கத்துக்கு அடிப்படையானது. கொஞ்சம் எளிமையாகவும் கதையாகவும் விளக்க மீண்டும் ஒரு மகாபாரத உதாரணம் ஒன்றைச் சொல்கிறேன்.
களத்தில் பீஷ்ம பிதாமகர் நின்று நோக்கும் பொழுது அந்த யுத்தம் எவருக்கிடையில் நிகழ்கிறது என்பதை அது நிகழும் வடிவிலேயே கண்டு கொள்வார். புழுதிப்பெருக்காகி காற்று தூசால் நிறையும் இடத்தில் பீமனும் துரியோதனனும் மோதிக் கொள்வார்கள். காற்று வெளியில் மின்னல் துண்டுகள் போல அம்புகள் பெருகுமிடம் அர்ஜூனன். இப்படி ஒவ்வொருவரும் அவர்களது திறனால் களத்தில் உண்டாக்கும் காட்சிகளையும் விளைவுகளையும் கொண்டு அவர் அதை அறிவார். என் ஆசிரியர் அங்கனமே என்னையும் அறிய வேண்டுமென விழைகிறேன்.
என் ஆசிரியரின் முன் பணிந்து அவரின் கொடைகளுக்கு ஈடானவற்றை ஆக்குவதை அவருக்கான நன்றியாகக் கொள்கிறேன்.
*
இரண்டாவதாக முன்வைக்க விரும்புவது என் காலகட்டத்தையும் நான் பயிலும் கலையையும் எங்கனம் புரிந்து கொள்கிறேன் என்பதன் சாரமான தொகுப்பை.
நண்பர்களே. ஈழத்தில் முப்பதாண்டுகள் கடுமையான குருதியும் ஓலமும் நிணமும் பெருகியிருக்கிறது. விடுதலை என்ற பெருங்கனவுடன் நாம் நம் உயிர்களையும் வாழ்வையும் முன்வைத்துப் போராடியிருக்கிறோம். இன்று இனப்படுகொலைக்கு நீதி கோருகிறோம். நினைவு கூரல்களுக்குக் கூடுகிறோம். யுத்தம் அளித்த மனவடுக்களுடனும் இழப்புகளுடனும் வாழ்கின்றோம்.
நான் யுத்தம் நிகழ்ந்த நிலத்தின் எழுத்தாளன். இதுவே என் காலம். இக்காலத்தில் நான் கவிஞனாகவும் எழுத்தாளனாகவும் இந்த நிலத்துடனும் மக்களுடனும் என்னை இணைத்துக் கொண்டவன். அது காற்றிலிருந்து அசைவைப் பிரிக்க முடியாததைப் போல.
ஆனால் என் கவிதையும் எழுத்தும் தனியே போருக்கானதும் மக்கள் என்ற திரளுக்கானது மட்டுமல்ல. ஒரு எழுத்தாளர் ஒரு தனி மனிதரின் அந்தராத்மாவுடன் உரையாடுபவர். அதுவே இலக்கியத்தின் முதன்மையான பணியென எண்ணிக் கொள்கிறேன். அன்பு, காதல், நட்பு, தந்தை, தாய், சுற்றம், மானுட உணர்வுகள் ஒவ்வொன்றும் முக்கியமானவை. அவை எனது காலத்தில் என்னவாக ஆக வேண்டுமென்பதை மொழியின் கனவில் சொல்ல வேண்டியவன். ஆகவே நான் என்னை ஒரு அகத்துடன் தனியாக உரையாட விரும்புபவன் என்றோ அல்லது ஒவ்வொரு அகத்துடனும் தனித்தனியாக உரையாட வேண்டியவன் என்றோ கருதுகிறேன். அதுவே நான் அமைந்து கொள்ள விழையும் இடம்.
கவிதை என்ற வடிவத்துடனான எனது நெருக்கத்தையும் விருப்பையும் இந்த நூலின் முன்னுரையில் சற்று விரிவாகவே எழுதியிருக்கிறேன். கடந்த வாரம் எனது இணையத்தளத்தில் இருபகுதிகளாக அதை வெளியிட்டுமிருக்கிறேன். ஆகவே, தனித்து இந்த உரையில் அவை பற்றிக் குறிப்பிடவில்லை.
*
மூன்றாவதாக எனது எதிர்காலக் கனவுகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.
நண்பர்களே, இலக்கியத்திற்கானதும் வாசிப்பிற்குமானதுமான நமது உழைப்பு என்பது பெரும் மலையில் ஏறிச்சொல்வதைப் போல. ஏராளமான நமது நேரத்தைக் கோருவது. ஆனால் ஏறிய பின் அந்த உச்சியிலிருந்து வாழ்வை நோக்குவது அங்கிருந்து முகில்களில் நடந்து செல்வதைப் போன்றது. அது அளிக்கும் இன்பத்தை அறியாதவர் உணர்வது இயலாது. ஒவ்வொருவரும் அவரவர் துறைகளில் திறன்பெற வாசித்தாக வேண்டும். இனி வருங்காலம் சிந்தனைக்கே திறன் மதிப்புண்டு. ஒரு சிறுவனோ சிறுமியோ பள்ளிக்கூடக் கல்வியுடன் இலக்கியம் தத்துவம் மற்றும் கலைகள் சார்ந்த பயிற்சியை அடைவதற்குப் பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். நம் கடந்த காலம் போரினால் இழந்தவையாலும் கற்றவையாலும் ஆனவை. அதை நாம் கடத்துவதற்கும் வரலாற்றுணர்வை நம் பிள்ளைகள் அடைவதற்கும் இலக்கியமே முதன்மையான வாசல் என்பதைச் சுட்டி அதை நோக்கி நம் சந்ததிகளை வழிநடத்த வேண்டும்.
கடந்த காலத்தை ஆண்டது குருதி என்றால் வருங்காலத்தை ஆள்வது பணம். நம் இளையவர்கள் மூன்று முதன்மையான வழிகளில் வாழ்க்கையைப் பொருளின்மையாக்குகிறார்கள். இவை இலக்கியத்தில் தொடர்ந்து சுட்டப்படுபவை. இடம் கருதி அவற்றைச் சுருக்கிச் சொல்கிறேன். வெற்றுக் கேளிக்கை, வெற்று சினிமா, வெற்று அரசியல் ஆகியனவே அம்மூன்று முக்கியமான பாலைத் திரைக்கும் கிருமிகள். இம்மூன்றும் அளிக்கும் சலிப்பை அவர்களால் உணரவியலவில்லை. உணரும் பொழுது காலம் கடந்திருக்கும். ஆகவே அவர்களில் ஒரு சிறு பகுதியாவது வாசிப்பிலும் கலைகளிலும் அரசியலிலும் வரலாற்றிலும் ஆர்வங் கொண்டு அதில் தம் சிந்தனையை வளர்த்துக் கொள்ள என்னால் இயன்றவற்றைச் செய்வது என் கனவுகளில் முதன்மையானது.
அதை நோக்கியே நான் இணையத்தளத்தில் தொடர்ந்து எழுதுகிறேன். இந்த வருடத்தில் மட்டும் ஐம்பதாயிரம் எண்ணிக்கைக்கு அருகில் எனது தளம் வாசிக்கப்பட்டிருக்கிறது. அது எனக்கு நம்பிக்கையளிக்கும் செய்தியை அளிக்கிறது. தொடர்ச்சியாக எனது இணையத் தளத்தில் அன்றாடம் பார்த்துக் கொள்ள சிந்தித்து விவாதிக்க குறிப்புகளையும் கட்டுரைகளையும் இலக்கியத்தையும் பகிர்வது அதன் பொருட்டே. நண்பர்களும் வாசகர்களும் தொடர்ந்து வாசித்து உங்கள் கருத்துக்களையும் கேள்விகளையும் அனுப்புவது என் செயலூக்கத்துக்கு அவசியமானது. ஒரு எழுத்தாளன் என்ற அளவில் என் சமூகப் பாத்திரத்திற்கான இடமென்பது நான் சொல்வதை நீங்கள் கவனிப்பது, கவனிப்பதைச் சிந்திப்பது, உரையாடுவது. இதுவே வருங்காலத்திற்கான எனது கனவுகளினை அடைவதற்கான என் சுருக்கமான வரைபடம்.
*
இறுதியாக ஒரு சிறு ஒப்புமையைச் சொல்லி இந்த உரையை முடிக்க விரும்புகிறேன். இரவில் முழுநிலவு எறிக்கும் நாட்களில் கடலின் கரையால் செல்பவர்கள் நிலவிலிருந்து நீண்டு அவருக்கு மட்டுமேயெனத் தோன்றும் ஒளிப்பாதையொன்றைக் காணலாம். அல்லது விடியலில் அதே கடலில் ஒரு குழந்தையின் சின்ன விரல்கள் போல மடித்த கையை விரித்துக் கொள்ளும் சூரியனிலிருந்தும் அப்படியான ஒளிப்பாதையொன்று தோன்றும். அது காண்பவரின் விழிகளை நோக்கி மட்டுமே நீள்வது. இலக்கியம் என்பது நிலவையும் சூரியனையும் போல உங்கள் தனித்த விழிகளுக்கு மட்டும் தெரியும் ஒளிப்பாதையைக் கொடுப்பது. அதைச் சேர்ந்து பார்ப்பதற்கான அழைப்பையே இந்த நூலின் தலைப்பாகத் தேர்ந்திருந்தேன். வாழ்க்கைக்குத் திரும்புதல்.
நன்றி
(குறிப்பு : 08. 12. 2024 இல் யாழ் பொதுசன நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற எனது முதற் கவிதைத் தொகுப்பான வாழ்க்கைக்குத் திரும்புதலுக்கு ஆற்றிய உரையின் மூல வடிவம். உரையில் சில பகுதிகளை விரித்துப் பேசியிருந்தேன்)
முன்னுரை :