மூக்குத்தியின் அலையும் சுடர்

மூக்குத்தியின் அலையும் சுடர்

நவீன தமிழ்க் கவிதையை அடிவயிற்றிலிருந்து இதயம் வரை நகர்த்திய முன்னோடி சுகுமாரன். மொழி ஒரு ராட்சத ஒக்டோபஸ் போலத் தன் அனைத்துக் கரங்களையும் நீரில் துழாவி அசையக்கூடியது. அதன் இருவிழிகளே மொழியின் பிரக்ஞை. அங்கிருந்து தன்னீருலகைப் பார்க்கும் பிரக்ஞையே சுகுமாரனின் மொழியிருப்பு. சுகுமாரன் என்ற தன்னிலை, தான் உருவானதற்குப் பின் இன்றைக்கு முப்பதாண்டுகளுக்கும் மேல் மூன்று தலைமுறைக் கவிஞர்களின் மீது பாதிப்பைச் செலுத்திய மகத்தான ஆளுமை.

சுகுமாரன் தன் அகச்சங்கீதத்தால் தமிழின் மொழியிசையை பெருமழையில் ஆயிரங் கிளைகள்கொண்ட ஒற்றை மின்னெலென ஊடுருவிப் படர்ந்தார். இதயத்தின் வெட்டி எடுத்து வைக்கப்பட்ட சூடாறாத பகுதியைத் தொட்டுணர்வது போல்வது அவரது கவிமொழி. மண்ணிலிருந்து விண்ணேகி வளரும் மாயத் தாவரமொன்றைப் பராமரிக்கும் சிறுவனைப் போல், சுகுமாரன் மொழியை விதானங்களின் மேல் கொண்டு செல்பவர்.

துல்லியமான ஒளிப்படங்களின் காட்சிகளுள்ள அவதானிப்புகளையும் அதே நேரம் காட்சிகளில் அகப்படாத ஆழுலகின் உள்ளுணர்வையும், பிரேத பரிசோதனை மருத்துவரைப் போல கைநுழைத்து அறுத்தெடுப்பவர். கொதிக்கும் கபாலங்களில் இரு தலை முள்ளாய்க் குத்திக் கிழிக்கும் மானுடக் கீழ்மைகளை அவரது கவிதைகள் கண்களில் ததும்ப இல்லாத நீரின் வெறுமையுடன் எதிர்கொள்பவை. வெறுப்பைப் போலவே அன்பும் அற்றதென எழுந்து வந்தவை. பின்னர் வந்த நாட்களில் இனிமையில் குழைந்த நாவென ஊறியவை. பெருங் கசப்பிலிருந்து தொடங்கி நுனி நாக்கில் எஞ்சும் தித்திப்பை, எல்லையில்லாத கடற்கரையில் விளையாடும் புரவியென சுழன்றெழுந்து திரும்பி, வேகங்கொண்டு நகர்பவை அவரது கவியுலகின் காலங்கள்.

மட்டற்ற காதலின் சுடரெனவும் தீராத மெளனம் இருட்டென உடன் வரும் தனிமையும் கொண்ட அவரது கவியுலகில் நெஞ்சம் தணிவதில்லை, மாறாக, தீயுள் விழுந்த பறவையெனச் சடசடத்தெழுவதும் தகதகவென்று எரிந்தாடும் அத்தீயே என நெஞ்சத்தை ஆக்குவதும்.

நான் கவிதை எழுதக் காரணம் அவரது கோடைகாலக் குறிப்புகள். அவரென் தந்தைக்கு நிகரானவர். என் மூப்பர்.

(சுகுமாரன்)

*

கையில் அள்ளிய நீர்

அள்ளி
கைப்பள்ளத்தில் தேக்கிய நீர்
நதிக்கு அந்நியமாச்சு
இது நிச்சலனம்
ஆகாயம் அலை புரளும் அதில்
கை நீரை கவிழ்த்தேன்
போகும் நதியில் எது என் நீர்?

*

உன் பெயர்

உன் பெயர்‍-

கபாலத்தின் உட்கூரையில் கிளைத்து
என் நாளங்களில் மிதக்கும் சங்கீத அதிர்வு
என் தனிமைப் பாலையில் துணை வரும் நிழல்
என் கதவருகில் நின்று தயங்கும் புன்னகை
காணி நிலத்தில் ததும்பும் நிலவின் ஒளி

உன் பெயர்-

இன்று என் உற்சாகங்களை மூடும் வலை
என் காதை அறுத்துத் தரச்சொல்லும் வினோதக் கோரிக்கை*
கொய்யப்பட்ட என் சிரசை ஏந்தும் சலோமியின் தாம்பாளம்**
என் இதயத்தைத் துளைக்கும் அன்பின் விஷம் தடவிய வாள்
நீயே என் ஆனந்தம்,அலைச்சலில் ஆசுவாசம்,குதூகலம்
நீயே என் துக்கம், பிரிவின் வலி

காலம் அறியும்:
உன் பெயர் வெறும் பெயரல்ல எனக்கு

நீயே அறிபவள்
நான் வழியில் எதிர்ப்பட்ட வெறும் பெயரோ உனக்கு?

உன் பெயர்-
இந்த இரவில் காலி அறையில் மாட்டிய கடிகாரம்.

*தனது காதலின் பரிசாகக் காதை அறுத்துத் தந்த வான்கா என்ற ஓவியன்

**யோவானின் தலையை அன்பளிப்பாக வேண்டிய பைபிள் பாத்திரம்

*

தனிமை இரக்கம்

வந்து போகின்றன பருவங்கள் தடம் புரண்டு
வசந்தம் நாட்கணக்கில்
எனினும்
வருடம் முழுதும் இலைகள் உதிர்கின்றன‌
வெற்றுக் கிளைகளாய் நிமிர்ந்து
கபாலத்தைப் பெயர்க்கிறது தனிமை

திசைகளில் விழித்து நிராதரவாய் வெறிக்கின்றன‌
உனது நீர்த்திரைக் கண்கள்
அலைகளின் இடைவேளைகளில் உயிர்த்துத் ததும்புகிறது
உனது சோக முகம்
காலடி மணலின் துகள்கள் பிளந்து அலைகிறது
உனது பெயரின் தொனி

வேட்டை நாய் விரட்டல்,
இளைப்பாறுதலின் சங்கீதம் என
அகல்கிறது நாட்களின் நடை

வெளியில் போகிற எப்போதும்
காயம்படாமல் என் கிளி திரும்பியதில்லை
இதோ உன்னிடமிருந்தும்
ஆனால் அலகில் நீ பரிசளித்த நெற்கதிர்.

*

இசை தரும் படிமங்கள்

1.

விரல்களில் அவிழ்ந்தது தாளம்
புறங்களில் வீசிக் கசிந்தது குரல்

கொடித் துணிகளும்
சுவர்களும் விறைத்துக்கொண்டன‌

ஈரம் சுருங்கிய பிடிமணலாய்ப்
பிளந்தேன்
தொலைவானின் அடியில்
நூலறுந்த பலூன்

யாரோ தட்டக் -‍’ கதவைத் திற’
வெளிக்காற்றில்
மழையும் ஒரு புன்னகையும்.

(ஹரிக்கும் ஸ்ரீ நிவாசனுக்கும்)

2.

புல்லாங்குழல்
சகல மனிதர்களின் சோகங்களையும்
துளைகளில் மோதிற்று

கூரை முகட்டிலிருந்து இறங்கிய நாளங்கள்
ரத்தமாய்ப் பெய்தன‌
அறையெங்கும் இரும்பின் வாசனை

மறு நிமிஷம்
என் உப்புக் கரைந்து எழுந்தது
மல்லிகை மணம்.

(ஹரிபிரசாத் சௌரஸ்யாவுக்கு)

3.

மழை தேக்கிய இலைகள்
அசைந்தது
சொட்டும் ஒளி

கூரையடியில் கொடியில் அமர‌
அலைக்கழியும் குருவி

காலம்-‍ ஒரு கண்ணாடி வெளி

எனக்கு மீந்தன‌
கண்ணீரும் சிறகுகளும்.

(யேசுதாஸுக்கு)

4.

குழம்பியிருந்தது சூரியன் அதுவரை
கரை மீறிய கடல்
என் சுவடுகளைக் கரைத்தது
இசை திரவமாகப் படர்ந்து உருக்க‌
செவியில் மிஞ்சியது உயிர்
திசைகளில் துடித்த தாபம்
சகலத்தையும் பொதிந்துகொள்ள விரிந்தது

அண்ணாந்தால்
கழுவின கதிர்களுடன் வெளியில் சூரியன்.

(ஸாப்ரிகானுக்கு)

*

முதல் பெண்ணுக்குச் சில வரிகள்

இரவின் திரைக்குள் மறையும் திசைகள்
இரண்டு அலைவேளைகளுக்கு இடையில் மௌனம்
அல்லது
இரண்டு மௌனங்களுக்கு இடையில் அலைமீட்டல் என‌
கரையின் புறங்களில் கடலின் முடிவற்ற சங்கீதம்

உனது பிம்பம்
நிலைக்கண்ணாடியிலிருந்து வெளிக்கிளம்பி வந்ததுபோல்
நடந்து மறைந்தாள் எவளோ

இதோ
நீ எதிர்ப்பட்ட அநாதி காலத்தின் ஏதோ ஒரு நொடி
ஆனந்த வெளியாக ஒளி ததும்பி
நிற்கிறது நினைவில்

இதோ
பார்வையில் அகலும் பெண்முகங்களில் எல்லாம்
உனது நீர்த்திரைக் கண்களைத் தேடி அலுக்கிறது
பொழுதின் தனிமை

பரிசுப் பொருட்களுடன் குதூகலமாய் வந்தவர்கள்
மயானம் கலைபவர்களாய்ச் சொல்லாமல் போகிறார்கள்
நட்போ, காதலோ
இப்படித்தான் வாய்க்கின்றன பெண்ணே
எனது உறவுகள்

இப்போதும்
நீ வரலாம் என்று திறந்து வைக்கும் கதவுகளில்
வெறுமையின் தாள ஒலி

இப்போதும்
மறதியின் இருளில் மெல்லச் சரியும் நாட்களின் விளிம்பில்
உனது மூக்குத்தியின் அலையும் சுடர்

உனது நேசப் பெருவெளி பசுமை தீய்ந்து
பனியில் உறைந்தது எப்போது?
உனது அன்புப் பிரவாகம் உலர்ந்து
பாறைகளின் மௌனம் திரண்டது எப்போது?

கானல்கள் உன் பதில்க‌ள்
அறிந்தும்
என்னோடு அலைகின்றன கேள்விகள்

இனி
காத்திருக்கப் பொறுக்காது கடலின் சங்கீதம்

நாளை
நமது நேசத்தை ஒப்படைக்கப் போகிறேன்
காலத்தின் காட்சி சாலையில்

எங்காவது
எப்போதாவது
வழிகள் கலைந்து பிரிகின்றன உறவுகள்

இனி
காற்றில் ஆறும் காயங்கள்
வடுவாக மிஞ்சும் உன் பெயர்

இவ்வளவும் ஏன்
இன்னும் நான் நேசிக்கும் முதல் பெண் நீ…

*

ஸ்தனதாயினி

இனிய வெண்கலப் பழங்கள்
உன் மார்பகங்கள்
உள்ளே
உயிர்தழைக்கப் பெய்யவெனத்
திரண்டிருக்கும் பால்மேகம்.
ஒன்றில்
தாய்மையின் கசிவு
மற்றதில்
காதலின் குழைவு
உன் இடது முலை அருந்துகையில்
என் கண்களில்குழந்தமையின் நிஷ்களங்கம்
அப்போது உன் இடதுமுலை பரிந்து சுரக்கும் ஊற்று
உன் வலதுமுலை அருந்துகையில்
என் கண்களில்காதலின் உற்சவம்
அப்போது உன் வலதுமுலை
நெகிழ்ந்து பெருகும் அருவி
குழந்தைமையும் காதலும் கனிந்தமனவேளையில்
உன் மார்பகங்களின் இடைவெளியில்
உணர்கிறேன்
அமைதிக் கடலாய் ஒரு மூன்றாவது முலை.

*

அறைவனம்

பிறகு விசாரித்தபோது தெரியவந்தது
‘அது கானகப் பறவையும்
அடிக்கடி தென்படாதாம்
அபூர்வமாம்’

எப்படியோ
அறைக்குள் வந்து சிறகு விரித்தது

அலமாரியில் தொற்றி
அது யோசித்தபோது
புத்தகங்கள் மக்கி மரங்கள் தழைத்தன

நீர்ப்பானை மேல் அமர்ந்து
சிறகு உலர்த்தியபோது
ஊற்றுப் பெருகி காட்டாறு புரண்டது

ஜன்னல் திட்டில் இறங்கி
தத்தியபோது
சுவர்கள் கரைந்து காற்றுவெளி படர்ந்தது

நேர்க்கோடாய் எம்பிக்
கொத்தியபோது
கூரையுதிர்ந்து வானம் விரிந்தது

அறையைப் பறவை
அந்நியமாய் உணர்ந்ததோ
பறவையை அறை
ஆக்கிரமிப்பாய் நினைத்ததோ?

என்னவோ நடந்த ஏதோ நொடியில்
வந்த வழியே பறந்தது பறவை
அது
திரும்பிய வழியே திரும்பி போனது
அதுவரை அறைக்குள்
வாழ்ந்தது கானகம்.

TAGS
Share This