எழுத்தாளர் கருணாகரன் புதியதாக இணையத்தளம் உருவாக்கியிருக்கிறார். அதில் அவர் தொடர்ந்து எழுதுவது பல வகையில் முக்கியமானது. முதன்மையாக முகநூல் சில்லறை விவாதங்களுக்கு வெளியே இணையத்தளங்களில் விவாதிப்பது இலக்கியத்தை மட்டுமே முதன்மை நோக்கமாக கொள்ளும் வாசகர்களை உருவாக்கும். என் தளம் ஆரம்பித்து மூன்று வருடங்களில் அதை நன்றாகவே உணர முடிகிறது. முகநூல் ஒரு அரட்டை வெளி. அங்கு தீவிர இலக்கியத்தை விவாதிப்பது போன்ற நேரவிரயம் பிறிதில்லை. தேநீர்க் கடைச் சாக்குப் போல என்ற உவமை நினைவுக்கு வருகிறது.
இரண்டாவது, முகநூல் அல்லது இதழ்கள் இரண்டுக்கும் வேறு வகையான வாசகர்கள், ஆட்கள் இருப்பது போல இணையத்தளத்திற்கு இன்னொரு வாசகர் குழு இரண்டுக்குமிடையிலிருந்து உருவாகி வருகிறது. அங்கும் இருப்பார்கள், இங்கும் கவனிப்பார்கள். அவர்களது கவனத்தின் சுக்கானை முகநூலுக்கு வெளியே திருப்ப இன்னும் நிறைய தளங்கள் உருவாகி வர வேண்டும்.
சொந்த இணையத்தளத்தில் ஒரு ஆக்கமோ, எதிர்வினையோ, விவாதமோ ஒரு இதழில் வெளிவரக் காத்திருக்க வேண்டிய காலப்பொறுமைக்கும் முகநூலில் எழுதுவதிலிருக்கின்ற சழக்கு வழக்கிற்கும் வெளியே இலக்கியத்தை, அதற்கான மொழியில், தீவிரத்துடன் வெளிப்படுக் கொள்ள வாய்ப்பளிக்கும். தளத்திற்கு வருவோர் ஒரு எழுத்தாளரை தொகுப்பாக புரிந்து கொள்ள முடியும். ஈழத்தில் ஷோபா சக்தி, சயந்தன், யதார்த்தன், தர்மு பிரசாத், ஜே கே, இளங்கோ டிசே, அகர முதல்வன் ஆகியோர் தொடர்ச்சியாக தங்கள் தளங்களில் கட்டுரைகள், ஆக்கங்கள், வாசகர் கடிதங்களை வெளியிட்டு வருகின்றனர். அண்மையில் சிவசேகரனும் ஒரு கட்டுரை தன் வலைப்பூவில் போட்டிருந்தார், அனோஜன் பாலகிருஷ்ணனிடமும் சுயாந்தனிடமும் தளமிருக்கிறது. தொடர்ச்சியாக எழுதுவதில்லை. இவை உடனடியாக ஞாபகம் வந்தவை. இன்னும் இருக்கலாம். ஆனால் மற்றவர்களும் முகநூலை ஒரு சிறிய குட்டையாகவே கருத வேண்டும். அங்கேயே இருந்தால் தூண்டில் மீன் தான் பிடிக்கலாம். தளத்திற்கு வருவது கடலுக்குள் நுழைவதைப் போல, இங்கு கருத்துகளை விவாதித்து பல வகைகளில் தன்னையும் சூழலையும் மேம்படுத்தலாம்.
குறிப்பாக ஒருவர் தன் தளத்தில் மட்டுமே எழுதுவேன், முகநூலில் அதைப் பகிர மட்டும் தான் செய்வேன். அங்கேயிருந்து விவாதிக்க மாட்டேன். கேட்கப்படும் கேள்விகளுக்கு மாற்றுத் தரப்புகளுக்கு தளத்தில் தான் பதிலை தொகுத்து எழுதுவேன் ஆகிய நோன்புகளை பேணுவது முக்கியம். அது சொந்தச் சிந்தனையை, கருத்துகளின் கூர்மையை, விவாதத் திறனை, இலக்கியம் உருவாக்க வேண்டிய மொழிச்சாத்தியத்தை மேம்படுத்தும் என்பது சொந்த அனுபவ உண்மை.
இங்கே கட்டுரையை, ஆக்கத்தை எழுதிக் கொண்டு அங்கே பதிலளிப்பது வீண் வேலை. அங்கு ஒரு தொடர்ச்சியான வாசிப்பின்றி போகிற வழியில் ஒரு புதினம் கேட்டுவிட்டுப் போகிறவருக்கெல்லாம் பதிலளிக்கத் தொடங்கினால் தளத்தை உருவாக்கியதன் பயனை அது குறைக்கும். ஜனநாயகத்தின் பெயரிலேயோ கருணையின் பெயரிலேயோ அந்தக் கணக்கை எழுதுவது இறுதியில் நோக்கத்தை சமன்படுத்தாது. இப்பொழுதுள்ள ஈழ இலக்கியச் சூழல் உற்சகாமனது. விவாதங்கள் நிகழத் தொடங்கியிருக்கும் சிறிய ஆனை மணியோசைகள் கேட்கின்றன. இலக்கியமென்ற பெரிய காட்டு யானையை இழுத்து வந்து தெருவில் வைத்து வித்தை காட்டாமல், அதன் வனத்தில் அதைப் பார்க்க வாசகர்களை அழைத்து வரும் பணியை கருணாகரனின் இந்தத் தளமும் செய்யும் என நம்புகின்றேன்.

கூட்டு விவாதம் நிகழாமல் நாம் சமூகமாக முன்னேற முடியாது என்பது ஒருபுறமிருக்க, இலக்கியம் என்பது ஒரு அறிவுத் துறை. கலை. இரண்டினதும் இணைப்பே பண்பாட்டில் முக்கியமானது. இயக்கங்கள், அமைப்புகள் உண்டாக்கும் வெளிகளுக்கு வெளியே தான் ஒரு எழுத்தாளர் இருக்க வேண்டுமென்பது என் நம்பிக்கை. அவர் தன் சொந்த அகச்சான்றுக்கு மட்டுமே உண்மையாயிருக்க வேண்டியவர். கருணாகரனின் தளம் முக்கியமான விளைவுகளை உருவாக்க வேண்டுமென இளையவனாக நின்று வாழ்த்துகிறேன். களத்திற்கு வந்திருக்கும் மூத்தவரை வருக என்று அணைத்துக் கொள்கிறேன். களத்திற்கு வருக.
கருணாகரனின் இணையத்தள இணைப்பு : கருணாகரன்

