நான் ஒரு கவிஞன் என்ற ஆணவம் அளிக்கும் நிமிர்விலும் செளகரியத்திலும் நெடுங்காலம் ஆழ்ந்திருந்தேன். என் முதலாவது கவிதைத் தொகுப்பான ‘வாழ்க்கைக்குத் திரும்புதல்’ வெளிவந்த பின்னர் அது மெல்ல மெல்ல மாறியது. தொகுத்து அளிக்கப்படும் பொழுது சுருங்கிக் கட்டியாகி சிறிய கூழாங்கல் போலாகியது. கவிதையின் உச்ச கணங்கள் அளிக்கும் நிறைவுணர்வு சட்டென்று அகன்று விடுவது. மிச்ச நேரமென்பது மூளையின் நெசவுத்தறிகள் குறுக்கும் நெடுக்குமாகப் பாய கொந்தளிப்புடன் இருப்பது என்பதாகி விட்டது. கவிதையைப் பற்றி தொடர்ந்து என் இணையத்தளத்தில் எழுதினேன். அடங்கவில்லை.
என் மனைவி பிரிந்தா தொடர்ந்து என்னைப் பெருங்கனவுகளை நோக்கிச் செல்ல உரையாடிக் கொண்டிருந்தார். வடிவத்தின் சிறைக்குள் அகப்பட்ட ஒரு ராட்சத மூளையைக் கிள்ளி விடுவது போல. எந்த ஒரு முக்கியத்துவமுமில்லாத சாதாரணமான நாளில் ஒரு குறுநாவலை எழுதத் தொடங்கினேன். பயிற்சியாக இருக்கலாம் என நினைத்தேன். முதல் வரைவும் அதன் பின்னர் எழுத்தாளர்கள் தர்மு பிரசாத், யதார்த்தன் ஆகியோரின் செம்மையாக்கம் தொடர்பான கருத்துகளும் என் முதற் குறுநாவலான கொடிறோசை அதன் இறுதி வடிவத்தை அடைய உதவின. கொடிறோசின் எழுத்து முறையும் புனைவுகளில் வாழ்வதும் எனக்குப் பிடித்துப் போனது. எனக்குள்ளிருந்த நாவலாசிரியரை என் முப்பதாவது வயதில் கண்டுகொண்டேன்.
கவிதையை வாசிப்பதிலும் எழுதுவதிலும் இருந்த பயிற்சியும் நாவல்களுடன் இருந்த நெடுங்காலத் தீவிர உறவும் எனது கனவுகளை இன்று மலர்ந்ததெனக் கிளர்த்தின. ஜெயமோகனை என் இலக்கிய ஆசிரியராக கண்டடைந்ததன் விளைவே இன்று என் எழுத்து என சுருக்கமாக வகுத்துவிடலாம். அவரது சொற்களும் படைப்புகளும் அளித்த உத்வேகம் தான் என்னை எழுதச் செய்யும் ஆழ்விசை. ஒரு பெருஞ்சவாலை ஒவ்வொரு இளம் படைப்பாளியும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற அவரது ஆணை என்னுடன் எப்பொழுதுமிருந்தது.
கொடிறோசில் ஒரு காட்சியில் எங்கள் வீட்டிற்கு அருகிலிருக்கும் வைரவர் கோயிலில் இருக்கும் கம்பளி வைரவரை அக்கதையின் மையக்கதாபாத்திரம் சென்று பார்க்கும். நட்சத்திரங்கள் கோடி கோடியாய்க் கொட்டிக் கிடக்கும் ஒரு குளிர் இரவில் வைரவர் கோயிலின் சற்சதுரக் கிணற்றின் ஆழத்தை அவன் பார்ப்பான். நீர்ப்பரப்பில் நிலவு விழுந்திருக்கும். ஒரு திரைச்சீலையில் ஒளிக்கீலம் அசைவது போல ஒரு கரிய நாகம் நீரில் நெளிந்து அப்புறம் செல்லும். அருகில் நிமிர்ந்து பார்க்கும் போது வேப்பமரத்தின் அடியில் யோக அமர்வில் கம்பளி வைரவர் அமர்ந்திருப்பார். அவருக்கும் முன்னே சிறிய விளக்கு ஏற்றப்பட்டிருக்கும்.

இது என் இளவயது நினைவுகளில் ஒன்று. நினைக்கும் பொழுதுகளில் அலையடிக்கும் ஒரு மின்னலை உடலில் உணர முடியும். எனது ஆன்மீகமான தேடல்கள் என்னை புறவுலகிலிருந்து விரித்தெடுத்திருந்த காலமது. இன்று நினைக்கையில் அதுவோர் அரிய அனுபவம். நானும் தெய்வமொன்றும் காலமின்மையில் அமர்ந்திருப்பதைப் போன்றது.
கம்பளி வைரவரை நெடுங்காலம் கழித்து குறுநாவலை முடித்த பின்னர் சென்று பார்த்தேன். அம்மா இறந்த பின்னர் அந்த ஊருக்கும் ஒழுங்கைக்கும் செல்லாமல் விலகியே இருந்தேன். கம்பளி வைரவரைப் பார்த்தேன், சுற்றிலும் சுவர்கள் கட்டப்பட்டு, அருகே பண்டகசாலையும் கட்டப்பட்டிருந்தது. கிணற்றை உயர்த்திக் கட்டி சீமெந்து பூசியிருந்தார்கள். கால்களின் அறுகம்புற்கள் குளிர நின்றிருக்கும் தரையைச் சீமெந்து பூசி மெழுகியிருந்தார்கள். ஒரு இரவு நேரக் காவலாளி போல கம்பளி வைரவர் சலிப்புடன் அருகில் அமர்ந்திருந்தார். புதிய நிறப்பூச்சுகள் அவரை அமைதியிழக்கச் செய்திருந்தன. திகைத்தவர் போல விழிகள் மாறியிருந்தன.
திருநெல்வேலிச் சந்திக்குச் சென்று பார்த்தேன். கசட்கள் வாடகைக்கு விடும் கடையைத் தவிர பெரும்பாலானவை இடம்மாறியிருந்தன. சிலது அழிந்து போயிருந்தன. அதன் மேல் பல புதியவை முளைத்திருந்தன. கொடிறோசிற்குள் உள்ள அந்த அரைநகரமென்பது இப்பொழுது முற்றிலும் புனைவு நகரம். வீதிகளை எடுத்து விட்டால் அனைத்தும் மாறிவிடும். ஆனால் கம்பளி வைரவர் அங்கேயே அமர்ந்திருந்தார். அவர் மேல் பூசப்பட்ட பூச்சுகளுக்குள் அமர்ந்திருக்கும் அந்த ஊரின் ஒரு தொன்மையான நினைவென. அவரின் கதையை எழுத விரும்பினேன்.

எனது இளவயதில் எனக்கு இலக்கியத்தின் அரிச்சுவடிகளை எழுத்துக் கூட்டிச் சொல்லிய தி. செல்வமனோகனிடம் கம்பளி வைரவர் பற்றிக் கேட்டேன். நாட்டார் தெய்வங்களைப் பற்றி அவர் ஒரு ஆய்வுத் தொடரை எழுநா இதழில் எழுதி வருகிறார். அதிலும் கம்பளி வைரவர் பற்றிய கதை வரவில்லை. ஏன் எனக் கேட்டேன். கம்பளி வைரவரின் தோற்றம் பற்றி அறிந்தவர்கள் எவரும் இப்போது இல்லை. இந்தியாவிலிருந்து வந்த ஒரு துறவி சமாதியடைந்த இடம் எனவும் ஒரு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் துல்லியமான கதையாக எவரிடமும் இல்லை. கேணியடி ஞானவைரவர் கோயிலின் உப தெய்வம் போல இருக்கும் அவரது உருவமும் உக்கிரமான விழிகளும் எனக்குள் படிந்து விட்டவை. அவரது சிலைக்கு கீழே ஓர் ஆணும் பெண்ணும் நிர்வாணமாக நிற்கும் காவற்சிலைகளும் இருப்பதை செல்வமனோகரன் சுட்டிக் காட்டினார். அத்தனை காலத்தில் அவரின் அருகில் இருக்கும் கருநாயும் சுட்டி விளக்கும் நினைவில் நின்ற அளவிற்கு அந்த இரு சிலைகளும் நினைவில் பதியாததைக் கண்டு துணுக்குற்றேன்.
ஊக்கமும் நிறைவும் எதற்கென்று இல்லாமல் தோன்றிய ஒரு நாளில் நித்திரைக்கு கிடந்து உழன்று கொண்டிருந்தேன். வேப்பமரத்தின் பல்லாயிரம் இலைச் சிலிர்ப்புகளும் துடிதுடிக்க காற்று வீசிக் கொண்டிருந்தது. அதனடியில் அமர்ந்திருந்த தத்வமசியைப் பார்த்தேன். அந்தச் சித்திரத்தை எழுதிய போது நாவலுக்கான நடை அமைந்தது. முதல் அத்தியாயத்தை எழுதி முடித்து விட்டு புலரியில் நித்திரையானேன்.
நாவலில் அந்தக் காட்சியைத் தவிர எதுவும் அதுவரை புலனாகவில்லை. டச்சுக்காரரின் காலத்தில் வழிபாடுகள் ஒடுக்கப்பட்ட முறை தொடர்பில் கேள்விப்பட்டிருக்கிறேன். அக்காலகட்டத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கிய போது போல்தேயசைக் கண்டடைந்தேன். என்றோ கனிதரும் மரத்திற்கென விழுந்த விதை போல அவரைப் பல வருடங்களாக நான் நெருக்கமாக அறிவேன். பிரிந்தா தான் அவரது பெயரை என்னுலகிற்குள் கொண்டு வந்தார். யாழ்ப்பாணம் பற்றிய முதல் சித்திரம் மிக விரிவாக இருப்பது போல்தேயசின் குறிப்புகளில் என அறிமுகப்படுத்தினார். பருத்தித்துறையில் இருந்த மாபெரும் புளியமரத்தின் கீழ் அவர் பிரசங்கம் ஆற்றும் ஓவியம் எனக்குள் படிந்திருந்தது.
பிரிந்தாவின் ஆய்வுக்கென அவருடன் உதவியாக ஊர்காவற்றுறை செல்வதுண்டு. காலனிய காலக் கட்டங்கள் பற்றியது அவரது ஆய்வு. அப்பொழுது அந்த நகரத்தின் காலனித்துவ காலம் கண்முன் நிகர்வாழ்வென உருவாகி வந்ததைப் பார்த்தேன். அல்பிரட் மாஸ்ட்டர் சொல்லிய கதைகள் முக்கியமானவை. ஒரு நகரம் எப்படி உருமாறிவரும் என்பதை கட்டடங்களுக்கு ஊடாக பிரிந்தா வாசிக்கச் சொல்லித் தந்தார். இடுகாடுகளைச் சுற்றி அலைந்தோம், தேவாலயங்களில் அமர்ந்து கடல் பார்த்தோம். குடிகளின் கதைகளின் வழி அந்தக் காலகட்டம் எழுந்து வந்து நிறைந்து கொண்டது. சங்குமாலும் மாட்டுக்காலையும் உயிர்ப்புடன் எச்சங்களாக இன்றும் இருப்பவை.
பிரிந்தாவின் ஆய்வு பின்னர் நூலாக வெளிவந்தது. அதன் தொகுப்புத்தன்மை எனது வாசிப்பை மேலும் கூராக்கியது. பருத்தித்துறை நகரச் சந்தைக் கட்டடத்தில் போல்தேயஸ் பிரசங்கம் ஆற்றும் சித்திரத்தை வரையும் எண்ணக்கருவை அளிக்க அது தான் எங்களை உந்தியது. காலனித்துவ காலகட்டம் தான் இன்றிருக்கும் நவீன யாழ்ப்பாணத்தை உருவாக்கிய உலைக்களன். நாவலுக்காக போல்தேயசை மீண்டும் வாசித்தேன். காலகட்டம் துலங்கி வந்தது. பிறகு கிட்டத்தட்ட முன்னரும் பின்னருமாக இருநூறாண்டுகால வரலாற்றை வாசித்திருப்பேன். அருங்காட்சியகங்களை லயித்துப் போய் பார்த்துக் கொண்டிருப்பேன்.
நாவலின் முதல் பந்தியிலேயே என் கனவின் விரிவு தெரிந்தது. தத்வமசி என்ற சொல் தானாகவே அங்கு முளைத்து எழுந்தது. நாவலைச் செம்மைப்படுத்த தர்மு பிரசாத்தும் யதார்த்தனும் உதவினார்கள். ஒரு நாவலை எழுதும் பொழுது நாவல் எங்களைப் பண்படுத்தும் என்பதை இப்போது முற்றிலுமாக உணர்கிறேன். கோரும் பலியைக் கொடுத்தால் மட்டுமே அருளும் தொல்தெய்வங்களைப் போல.

இந்த நாவலை என் இளவயது ஆசிரியர்களான நிலாந்தனுக்கும் தி. செல்வமனோகரனுக்கும் சமர்ப்பிக்கிறேன். சைவசிந்தாந்தம் தி. செல்வமனோகரனின் துறை. மெய்யியல் என்ற விரிந்த தளத்தை அவரே எனக்கு முதன் முறையாகச் சொல்லிக் கொடுத்தார். திருவாசகமும் தேவாரமும் கவிதையெனச் சொல்லித் தந்தார். நாவில் உமிழூறச் சொல்லியும் காட்டுவார். நிலாந்தனின் நெடுங்கவிதைகள் வரலாற்று நோக்கில் ஒரு காலட்டத்தின் தொடர்ச்சிக் கண்ணிகளை இணைத்து ஒரு தொகுத்த சித்திரத்தை அளிக்க முயலும் வடிவங்கள் கொண்டவை. அந்தத் தொகுப்புத் தன்மை ஈழத்தில் நாவல்களில் கூட நிகழாத அபூர்வம். இருவரிடமும் அருகமர்ந்து கற்றிருக்கிறேன். இருவரும் என் மீது சினந்து கொள்ளும் உரிமை கொண்டவர்கள். என் ஆசிரியர் நிரையை வகுத்துச் சொல்வதன் மூலம் இந்த சமூகத்தின் நெசவை நெய்யும் கரங்களை தொட்டுக் காட்டலாம் என நினைக்கிறேன். என் இரு ஆசிரியர்களுக்கும் இந்த நாவல் ஒரு சிறு அன்பளிப்பு.
எனது இளமைக்கால வீட்டின் சிறிய ஒழுங்கையின் கரையில் அமர்ந்திருக்கும் கம்பளி வைரவருக்கென ஒரு கதையை எழுத ஆரம்பித்தேன். ஒரு பெருங் காய்ச்சலைப் போல அது என்னை அடித்துச் சென்று விட்டது. என் ஆதாரமான கேள்விகளை வரலாற்றின் சட்டகத்தில் நிகழும் நாடகீயமான தருணங்களைக் கொண்டு நடித்துப் பார்த்திருக்கிறேன். நாவலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சித்தர் பாடல்கள் சிவவாக்கியருடையவை. ரிக் வேதப் பாடலின் மொழிபெயர்ப்பு ஜெயமோகனுடையது. Noolaham.Org எனும் ஈழத்தின் நூல்களையும் ஆவணங்களையும் பத்திரிகைகளையும் இதழ்களையும் சேகரிக்கும் மெய்நிகர் நூலகம் இல்லாமல் இந்த நூலிற்கென செய்த வாசிப்பை விரைவாகவும் துல்லியமாகவும் செய்திருக்க இயலாது. அரிதான ஆவணங்களை அவர்கள் தொகுத்திருக்கிறார்கள். மாபெரும் பண்பாட்டு பங்களிப்பை செய்து வரும் அந்த நிறுவனத்தின் உழைப்பை இந்த இடத்திலும் நன்றியுடன் எண்ணிக் கொள்கிறேன்.
இப்பொழுது நாவலை முடித்த நெடுங்காலத்தின் பின்பு தோன்றுகிறது, இருளில் எனது சிறிய ஒழுங்கைக்குள் சலங்கை ஒலியுடன் வந்து சென்றது எவராயும் இருக்கலாம், இல்லையா?
கிரிசாந்
யாழ்ப்பாணம்


One Comment on “ஒரு தெய்வத்தை எழுப்புதல் : முன்னுரை”