‘பித்தம் தெளிய வைத்தல்’ எனும் என் எதிர்வினையில் மொழிநடையில் மூத்த தலைமுறையினரின் செல்வாக்கு பற்றிய என் பார்வைகளை தொகுத்து எழுதியிருந்தேன்.
மொழிநடை மீதான செல்வாக்கு குறித்து ஜெயமோகன் தன் தளத்தில் விரிவாக எழுதியிருக்கும் குறிப்புகளின் இணைப்புகளை கீழே கொடுத்திருக்கிறேன்.
“….இது மிகச் சிக்கலான, மிக மிக நுணுக்கமான ஒரு செயல்பாடு. பல்லாயிரம் கிலோ எடையைத் தூக்குவது போலவோ, மெல்லிய பனித்துளி ஒன்றை சுட்டுவிரல் நகத்தின் மேல் எடுத்துக்கொண்டு வருவது போலவோ, அரிதான ஒன்று. எழுத்தாளர்கள் நூறுமுறை தோற்று, ஒருமுறை வென்று, அந்த வெற்றியிலிருந்து கற்றுக்கொண்டு அடுத்த அடியை வைக்கும் ஒரு பயணம் இது. இதில் பெரும் கனவும், திட்டமிடலும், தொடர்ச்செயல்பாடும் உண்டு. வெற்றியோ தற்செயல் மட்டுமே. தன்னைத்தானே கண்டடையும் தருணங்களின் தொடர் அது.
ஒரு மொழியில் எழுத வரும் படைப்பூக்கம் கொண்ட புதிய எழுத்தாளனுக்கும், அவன் மொழியை அதுவரை கொண்டு வந்து சேர்த்த முந்தைய தலைமுறை எழுத்தாளர்களுக்குமான மிக அந்தரங்கமான ஓர் உரையாடல் இது. அங்கே படைப்பூக்கத்திற்கு எந்த அளவுக்கு இடம் இருக்கிறதோ, அதே அளவுக்கு தனிநபர் அகங்காரத்திற்கும் இடம் உண்டு. ஆழ்ந்த அகவுரையாடல் நிகழும் போதே ஆணவ மோதலும் நிகழ்கிறது. எதை எங்கே நிறுத்துவது, எது எதிலிருந்து முன்னகர்கிறது என்பதைக் கண்டுகொள்வது—இவை அனைத்துமே மிகச் சிக்கலான செயல்பாடுகள்”
இணைப்பு : முளைத்தலெனும் தொடர்

