பட்டு நூல் – கடிதம்

வணக்கம் கிரி,

பட்டுநூல் கதை வாசித்து முடிக்கும்போது நிறைவில் கண்கள் குளமாகிவிட்டன. நீண்ட நாட்களாக எனக்கு இருந்த எங்கள் பண்பாட்டு தனித்துவம் என்ன என்ற கேள்விக்கு பதில் கிடைத்தது. 

சிலைக்கு கண் திறக்கும் செயல் கலையாக மாறுமிடம், குருபாவா முகைதீன் பற்றிய தரவுகள், கதையில் யாழ்ப்பாண சித்தர் வரும் தருணம் போன்றவை கதைக்குச்சிறப்பான வாசிப்பனுபவத்தை அளித்தது. நன்றி.

அன்புடன்

மாக்கி

*

சிலைக்கு கண் திறப்பது போலத் தான் பகுத்தறிவும் ஆன்மீகமும் இணையும் இடம் நுண்மையானது. பண்பாட்டின் வேரில் நாம் நம்மை இணைத்துக் கொள்வது ஒருவகையில் பழமைவாதமாக பார்க்கப்படும் சூழலிலிருக்கிறது. ஆனால் குருபாவா மாதிரியான நான் அல்லாவுக்கும் முருகனுக்கும் பிறந்த குழந்தை நான் எனச் சொல்லும் சூபி ஞானிகள் இந்த மண்ணில் நடந்து சென்றிருக்கிறார்கள் என்பதே எனக்கு வியப்பை அளித்தது. அப்படியொருவர் இங்கிருந்தார் சென்றார் என்பதே நம் தலைமுறைகளுக்கு தெரியாது. வரலாற்றின் பரபரப்பான புற்கள் அவர் மேலெழுந்து மூடி விரைந்து கொண்டிருந்தது. கதையை எழுதிக் கொண்டு செல்லும் பொழுது ஏதோ ஓர் அழைப்பு வரலாற்றில் ஞானத்துக்கும் கலைக்கும் உண்டு என உணர்ந்தேன்.

நம் சித்தர் மரபு சுவாரசியமான பல அம்சங்களை இன்றளவும் கொண்டிருப்பது. எளிமையாக ‘பக்தி’ என்பதற்கு அப்பால் வரலாற்றிலும் தத்துவத்திலும் வைத்து நோக்குவதே அவர்களை மேலும் நெருங்கியறிய வழி. நம் பட்டு நூல் அதுவே.

கிரி

கதைக்கான இணைப்பு : பட்டு நூல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *