புத்தகங்கள் மீதான தடை

இலங்கை அரசின் தமிழ் புத்தகத் தடைக்கு எதிரான கண்டனமும் கூட்டு அறிக்கையும்

“ஒரு புத்தகத்தைத் தடை செய்வது என்பது ஒரு  எழுத்தாளரின் ஒற்றைக் குரலை மட்டும் ஒடுக்குவதல்ல, மக்களின் நினைவுகளையும் அறியும் உரிமைகளையும் அழிப்பதாகும்”

இலங்கை அரசு தொடர்ச்சியாக தமிழ்ப் புத்தகங்களைத் தடை செய்து வருகிறது. சுங்கத் திணைக்களம் மற்றும் பாதுகாப்பு  அமைச்சு ஆகியன பொறுப்பற்ற முறையிலும், தெளிவான காரணங்களின்றியும் தமிழ்ப் புத்தகங்களைத் தடுத்து வருகின்றன. இந்தத் தடைகள் சுதந்திரமான குரல்களை மூர்க்கமாக அடக்கும் முயற்சியாகும். இது அடிப்படையான கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது.

இத்தகைய நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் சுதந்திரமான சிந்தனை, பேச்சு மற்றும் எழுத்துரிமை மறுக்கப்படுகிறது. எங்கு புத்தகங்கள் தடை செய்யப்படுகின்றனவோ அங்கு மக்களின் அடிப்படை உரிமைகள் — பேசும் உரிமை, கருத்து தெரிவிக்கும் உரிமை, மேலும் வாழ்வதற்கான சுதந்திரம் கூட — மறுக்கப்படுகின்றது. இத்தகைய தடைகள் சனநாயகத்தின் இருண்ட முகத்தையே வெளிப்படுத்துகின்றது. கடந்தகால இனவாத அரசுகள் போலவே, புதிய ‘தேசிய மக்கள் சக்தி’ அரசும் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கிறது. சட்டத்தின் மூலமோ அல்லது நீதித்துறை மூலமாகவோ அல்லாமல் சுங்கத்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அதிகார வர்க்கம் மூலம் இது நடைமுறைப்படுத்துகிறது. அதாவது,  சட்டபூர்வமற்ற தடை.  புத்தகங்கள் வலிந்து காணாமலாக்கப்படுகின்றன. இது எதேச்சதிகாரச் செயல்.

எனவே, அரசின் இத்தகைய  அநீதிகளை நாம் கண்டிக்கவும் எதிர்க்கவும் வேண்டும். அதற்காக நாம் ஒன்றிணைய வேண்டும். எங்கள் குரல்கள் ஒரே வலுவான குரலாக எழுந்து, அரசின் எதேச்சாதிகாரத்தையும் பாரபட்சத்தையும் மறுதலிக்க  வேண்டும். அந்தக் கூட்டுக் குரல் அரசை பொறுப்புணர்ச்சியுடன் செயற்படத் தூண்ட வேண்டும்.

சமீபத்தில் எழுத்தாளர் தீபச்செல்வனின் புத்தகங்கள் இலங்கை அரசால் தடை செய்யப்பட்டுள்ளன. இந்தத் தடை முதல் தடவையல்ல. ஆனால் இந்தத் தடைக்கு எதிராகப் பல தரப்பினரிடமிருந்து கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. தமிழ் மற்றும் சிங்கள எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகத்துறையினர், மனித உரிமைவாதிகள், வாசகர்கள், செயற்பாட்டளர்கள், கார்டூனிஸ்ட்கள் தொடர்ந்தும் அரசுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாகவே இந்தக் கண்டனப் போராட்டம் ஏற்பாடு செய்யப்படுகிறது.

தடை செய்யப்பட்டதாக அறியப்படும் சில புத்தகங்கள்:

தீபச்செல்வனின் ‘எழுத்தால் நான்  யுத்தம் செய்கிறேன்’ ,

‘இப்போதும் இங்கே இரண்டு தேசங்கள்தான்’, 

ஷோபாசக்தியின் ‘1990 லைடன் தீவு மண்டைதீவு  படுகொலைகளும் புதைகுழிகளும்’,

டிலுக்சன் மோகனின் ‘படுபட்சி’ , இராயாகரனின்

‘அரசியல் அநாதைகள்’, ம. மதிவண்ணனின் ‘நெரிந்து’  ஆகியவை. 

இவை தவிர மேலும் பல புத்தகங்கள் தொடர்பான தகவல்கள் பொதுவில் வெளியிடப்படாமல் உள்ளன. அவற்றையும் வெளிக்கொண்டு வந்து எதிர்க்க வேண்டிய அவசியம் உள்ளது.

இலங்கைச் சுங்கத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் புத்தகத் தடைகளில் பல குழப்பங்களும் தெளிவின்மைகளும் உள்ளன. சுங்கத்தால் புத்தகங்களைத் தடை செய்வது மிகவும் கேள்விக்குரியது. இதற்கான சட்ட அதிகாரம் என்ன? எந்த அளவுகோல்களின் அடிப்படையில் இந்த முடிவுகள் எடுக்கப்படுகின்றன? அதற்காக தமிழ் நூல்களை வாசிப்பதற்கு எந்தவையான முறைமைகளை அரசு கொண்டிருக்கிறது? இவை தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

மேலும், தடை செய்யப்பட்ட புத்தகங்களை மீட்க எந்தவொரு வழிமுறையும் தெளிவாக வழங்கப்படவில்லை. இத்தகைய தெளிவின்மைகள் நீதியற்ற சூழலை உருவாக்குகின்றன. இது உண்மையில் “தடை” தானா அல்லது “தற்காலிக தடுத்துவைப்பு” தானா என்ற கேள்விகளும் எழுகின்றன. தற்காலிக தடுத்து வைப்பு என்றால் அதனுடைய கால எல்லை எவ்வளவு? இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவிதமான அறிவிப்புகளும் தரப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள நூல்கள் உள்ளன.  ஆகவே, அரசு இதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

முக்கியமாக, வெளிநாடுகளில் இருந்து வரும் புத்தகங்களுக்கே இந்தத் தடைகள் விதிக்கப்படுகின்றன. ஆனால் அதே உள்ளடக்கங்கள் இலங்கையில் அச்சடிக்கப்படும் போது எந்தத் தடையும் இல்லாத நிலை காணப்படுகிறது. இது முற்றிலும் முரண்பாடானதும் அபத்தமானதுமான நடைமுறையாகும்.

கூடவே கடந்த அரசாங்கங்கள் சிறுகதை எழுதியதற்காகவும், கவிதை எழுதியதற்காகவும் எழுத்தாளர்களைக் கைது செய்து சிறையிலடைத்திருக்கிறார்கள். அத்தகைய போக்கிலேயே இலங்கையில் புத்தகத் தடை, மற்றும் கருத்துச் சுதந்திர மறுப்பு அரசாங்கத்தால் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருவதை ஒரு எச்சரிக்கை சமிஞ்சையாகவே கொள்ள முடியும்.  

எனவே, இந்த இனப்பாரபட்சமான மற்றும் அநீதியான நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். மக்களின் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்க அரசு வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

எழுதுவதற்கான சுதந்திரத்தைப் பாதுகாப்பது என்பது வாசிப்பதற்கான சுதந்திரத்தைப் பாதுகாப்பதே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *