
கொழும்பில் இயங்குகின்ற Barefoot gallery யில் அலெக்ஸ் ஸ்டூவெர்ட் எனும் ஓவியரின் கண்காட்சியொன்றை அண்மையில் பார்த்தேன். 1970களில் லண்டனின் கலைச் சூழலில் பணியாற்றிய காலத்தில், அலெக்ஸ் ஸ்டூவெர்ட்க்கும் (பி. 1958), மாயா ரத்வத்தேவுடன் நெருங்கிய நட்பு உருவாகியிருக்கிறது. மாயா ரத்வத்தே கண்டியின் செல்வாக்கு மிக்க குடும்பமொன்றில் பிறந்தவர்.
மாயாவின் நட்பு ஸ்டூவெர்ட்டின் வாழ்க்கையையும் கலைப் பயணத்தையும் இலங்கையுடனும் இந்தத் தீவின் மனிதர்களுடனும் இயற்கையுடனும் பிணைத்தது. மாயாவின் மூலம், அவர் 1980ஆம் ஆண்டு டொமினிக் சன்சோனியைச் சந்தித்தார். பின்னர் இலங்கைக்கு வருமாறு அழைக்கப்பட்ட அவர், 1993ஆம் ஆண்டு கண்டிக்குச் சென்றிருக்கிறார், இத்தீவின் இயற்கை நிலப்பரப்புகள், மக்கள் மற்றும் வண்ணங்களால் ஸ்டூவெர்ட் ஈர்க்கப்பட்டிருக்கிறார். அந்த அனுபவங்கள் அவரது ஓவியங்களில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தின. மாயாவின் குடும்ப இல்லம், பல ஆண்டுகளாக அவர் இலங்கையின் பல பகுதிகளுக்குப் பயணம் மேற்கொண்டபோது அவரது தங்குமிடமாகவும் தளமாகவும் அமைந்தது. பின்னர் அலெக்ஸ் Barefoot gallery யின் முக்கியமான பங்களிப்பாராக ஆனார். இந்தக் கதைகளை அங்கு வாசித்தும் உரையாடியும் தெரிந்து கொண்டேன்.
அவரது ஓவியங்களில் உள்ள உள்ளூர்த்தன்மை என்னை உடனடியாக ஈர்த்தது. அதன் நிறங்களும் கதைகளும் தொன்மங்களும் நாட்டுப்புறமானவை. அவருடைய ஓவியங்களில் உள்ள வண்ணங்கள் மனதிற்கு இதத்தை அளிப்பனவாய் தோன்றின. நன்கு பழகிய உள்ளூர்க் கண்களால் அவர் இந்தத் தீவைப் பார்த்திருக்கிறார். சில ஓவியங்களில் நீண்ட பூ மாலைகளை வரைந்திருந்தார். மனிதர்களின் தோற்றங்கள், அன்றாடங்கள், சுனாமிக்கு பிந்தைய வாழ்க்கையின் ஒரு கீற்று, மலையகத்தின் வாழ்க்கை என பல்வேறு வகையில் அவரது அவதானங்கள் ஓவியங்களில் வெளிப்பட்டிருந்தன.
கதைகளுக்கு நெருக்கமாக அவரது ஓவியங்கள் இருந்தமை என்னை ஈர்த்ததாக இருக்கலாம். கதைகளுக்கு தேவையான ‘தொந்தரவு’ எனும் அடிப்படையான தன்மை அவரில் இருக்கிறது. அந்தத் தொந்தரவிலிருந்து அவர் ஏற்கெனவே சேகரித்துக் கொண்டிருக்கும் உள்ளூர் பற்றிய நுண்மையான அவதானங்களும் இணைந்து வசீகரத்தை உண்டாக்குகின்றது. கோணங்களை மாற்றி அடுக்குகிறார், சட்டகங்களை விரும்பியபடி பாவிக்க விழைகிறார். அவை அவருக்கு ஒரு தனித்த குரலையும் பார்வையும் அளித்திருக்கிறது. பார்வையை பழக்குவது கலையில் முக்கியமானது. அலெக்சிற்கு கூர்மையானதும் கருணை மிக்கதுமான கண்கள் வளர்ந்திருக்கின்றன.
ஓவியக் கட்சி இம்மாதம் 18 ஆம் திகதிவரை Barefoot gallery யில் இடம்பெறுகின்றது. ஆர்வமுள்ளவர்கள் சென்று நேரில் காணலாம்.

இந்தக் குறிப்பை எழுதத் தூண்டிய இன்னொரு அம்சம் விந்தையானது. அவர் 2000 த்தில் வரைந்த ஒரு ஓவியத்தைப் பார்த்தேன். அக்கால பத்திரிகைத் தாள் அச்சடிக்க பயன்படுவது போன்ற சாம்பல் பச்சை வண்ணத்திலான பெரிய தாளொன்றில் ஒரு மனிதர் படுத்திருக்கிறார். அவரது பெரும்பாலான ஓவியங்கள் சிறிய சட்டகங்களில் சிறிய உருக்களாக வரையப்பட்டிருந்தன. இந்த ஒன்று மட்டும் பெரியது. ஒரு A3 தாளை விட சற்றே பெரிய தாளைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அதை செங்குத்து கோணத்தில் பயன்படுத்தியிருக்கிறார். வீட்டில் காற்றோட்டத்திற்கென வைக்கும் பூக்கல்லுக்கான இடைவெளி போன்ற துண்டு ஒன்று மேற்பக்கத்தில் செவ்வக வடிவில் வரையப்பட்டிருந்தது. அதற்குள்ளால் ஒலிபெருக்கிகள் முழங்கிக் கொண்டிருந்தன. கீழே அந்தத் தாளின் மிகுதி 80 விகிதத்தை நிறைத்து பெருத்த கால்களும் கைகளும் கொண்ட மனிதன் ஒருவன் படுத்திருக்கிறான், அல்லது நித்திரை கொள்ள முடியாமல் உழன்று கொண்டிருக்கிறான். வழமையான ஒலிபெருக்கிச் சிக்கலை பிரச்சாரம் செய்யும் ஓவியம் அது எனத் தோன்றவில்லை. அதிகாலையில் ஒரு மனிதன் நீண்ட வேலையின் பின் நித்திரையின்றி தொந்தரவுடன் நெளியும் ஒரு கணம் அங்கு வரையப்பட்டிருக்கிறது. அது அலெக்சின் மனம் இயங்கும் ஆதார நிலை என்று தோன்றுகிறது. அந்த மனிதன் ஒலிபெருக்கிகளாலான அந்தச் சட்டகத்திற்குள் குமைந்து கொண்டிருந்தான்.
அந்த ஓவியத்திலிருந்த தொந்தரவு நம்முடைய குடிமைப் பண்புடன் தொடர்புடையது. மேலும் நம் கலாசாரச் சூழலுடனும் நெருக்கமானது. அன்று இரவு எட்டு மணியளவில் யாழ்ப்பாணம் திரும்புவதற்கு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டோம். முதல் வகுப்பில் டிக்கெட் எடுத்திருந்தோம். நாள் முழுவதும் சந்திப்புகளினாலும் பயணத்தினாலும் உடல் களைத்திருந்தது. புகையிரதத்தில் ஏறியதும் மெல்லிய நித்திரை வந்தது. நாங்களிருந்த பெட்டியில் பத்துப் பேருக்கும் மேலே இளம் சோடிகள் விடுமுறையைக் கழிக்க யாழ்ப்பாணம் செல்வதாக பரிசோதகருடன் கதைத்துக் கொண்டிருந்தார்கள். டிக்கெட் பரிசோதகர் எங்கள் அடையாள அட்டைகளை பரிசோதித்து விட்டு அப்பால் சென்றார். இளம் சோடிகள் உரத்த குரலில் சிரிப்பும் வேடிக்கை கதைகளுமாக உற்சாகமாக இருந்தார்கள். எட்டு மணிக்கு புகையிரதம் புறப்பட்டது. நான் சற்று அயர்ந்தேன். எனக்கு பக்கத்தில் சற்றுத் தள்ளி ஒரு யாழ்ப்பாண வயோதிபர் இருந்தார். நெற்றியில் சந்தனமும் போனில் கோயில் ஒலிபரப்புகளும் கேட்டுக் கொண்டிருந்தார்.
இரவு பத்து மணிக்கு இளம் சோடிகளில் ஆண்கள் கண்ணாடிக் கதவுக்கு அப்பால் குடித்தும் சிகரட் பிடித்தும் கொண்டிருந்தார்கள். பரிசோதகர் எந்த அசுமாத்தமும் இன்றி என் தலை மாட்டில் அமர்ந்திருந்தார். எங்கள் இருக்கை கண்ணாடிக் கதவிலிருந்து ஒரு இருக்கை தள்ளியிருந்தது. சிகரெட் வாடை எரிச்சலூட்டியது. கையில் ஒரு ஸ்பீக்கரை வைத்து பெரிய சத்தத்துடன் பாடல்களை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டனர். இணைந்து பாடிக் கூக்குரலிட்டனர். ஒரு மணி நேரம் கழிய சற்று போதையும் ஏறிய பின்னர் கண்ணாடிக் கதவைத் திறந்து மூடி விளையாடினர். பரிசோதகர் எங்கோ சென்றிருந்தார். யாழ்ப்பாண வயோதிகர் நல்ல உறக்கம். ஏராளம் கோயில் திருவிழக்களின் நடுவிலும் குண்டடி செல்லடியிலும் படுத்துப் பழகியிருப்பார் என நினைத்துச் சிரித்தேன். என் முன்னால் ஒரு குடும்பம் அமர்ந்திருந்தது. அதில் தந்தைக்கு அறுபது வயதுக்கு மேலிருக்கும். சிறிய வட்டத் தொப்பி போட்டிருந்தார். அருகில் அவரது இளம் மகள், முன்னால் பேரப்பிள்ளை, மனைவி என ஒரு சிறு குடும்பம். அவரது முகம் கோணலாகவே இருந்தது. அந்த இளையவர்களின் செயல்கள் என்னைப் போலவே அவருக்கும் எரிச்சலூட்டியது போலிருந்தார்.
பொது இடங்களில் குடிமைப் பண்பு இல்லாமல் நடப்பதில் இலங்கையர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. கலாசார ரீதியாக நம் ஆலயங்கள் இரைச்சலை சாதரணமயமாக்கி விட்டிருக்கின்றன. குடி, சிகரெட் எல்லாம் கொண்டாட்டத்தின் சட்டபூர்வ அனுமதி கொண்டவை. இன்றிருக்கும் இளையவர்களில் ஒரு பகுதியினர், தம் மகிழ்ச்சியை பிறருக்கு முன் நிகழ்த்துவதன் மூலம் மகிழ்ச்சியை மேலும் அதிகப்படுத்திக் கொள்ளும் மனநோய் கொண்டவர்கள். சில மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலிருக்கும் மஜெஸ்ட்டிக் தியேட்டரில் குடும்பத்துடன் படம் பார்த்துக் கொண்டிருந்தோம். பின்னால் நான்கு இளையவர்கள் முழுவெறியில் புலம்பிக் கொண்டும் கால்களை எங்களுக்கு அருகிருந்த இருக்கைகள் மேல் தூக்கிப் போட்டுக் கொண்டுமிருந்தார்கள். அவர்களிடமிருந்தவை, அடிப்படைக் கல்வியொன்று இவர்களுக்கு என்றேனும் அளிக்கப்பட்டதா எனச் சந்தேகம் வருமளவு செயற்பாடுகள்.
ஆனால் இந்த இளம் கும்பல் நன்கு உடையணிந்திருந்தார்கள். சீராக கத்தரித்த சிகையும் தாடிகளும் கொண்டவர்கள். நிச்சயமாக கண்ணியமான பணிகளில் ஈடுபடுகிறார்கள். இனிய நறுமணங்களை பூசியிருந்தார்கள். அதுபோக சிங்களத்தை விட ஆங்கிலத்திலேயே அதிகமாக உரையாடினார்கள். உரையாடினார்கள் என்று சொல்வதை விட கத்தினார்கள். கத்தினார்கள் என்பதை விட தாம் கத்துவதை பிறர் கவனிக்க வேண்டுமெனக் கத்திக் கூப்பாடு போடுவது போல நடந்து கொண்டார்கள். Live in பற்றி பேசினார்கள், காமம் பற்றி கொச்சையான பகிடிகளை சொன்னார்கள். அந்த குடும்பத் தந்தையின் முகம் நெளிந்து ஒரு தழல் காற்றுக்கு ஆடுவதைப் போலிருந்தது. ஒவ்வொருவராகச் சென்று மாறி மாறிப் புகைத்துக் கொண்டிருந்தார்கள். அது உள்ளே இருந்தவர்களுக்கு நித்திய புகையில் வாழ் என்று விட்டு விட்டது போலிருந்தது. பரிசோதகரும் யாழ்ப்பாண வயோதிகரும் தாங்களை மறந்து துயிலில் இருந்தார்கள். பன்னிரண்டு மணிக்கு பிறகாவது ஓய்வார்கள் என நினைத்து அவர்களின் கொண்டாட்டத்தை குழப்பாது பொறுத்திருந்தேன். ஒரு மணி ஆகியது. நிற்கவில்லை. திரும்பி அவர்களைப் பார்த்து என்ன என்பது போல இருகைகளையும் விரித்துக் கேட்டேன். சட்டென்று மெளனமானார்கள். இசையை நிறுத்தி விட்டு உள்ளே சென்று இருக்கையைச் சுற்றிக் கொண்டு நின்று மீண்டும் கத்திக் கூப்பாடு போட்டோர்கள். இடையிடை சாடை மாடையாக என்னையும் சீண்டினார்கள்.
அதில் ஒவ்வொருவர் சிரிப்பும் ஒவ்வொரு வகை. லாண்ட் மாஸ்டர்கள் ஓடுவது போன்று ஒருவன் சிரித்தான். மோசமான பேய்ப் படங்களில் டப்பிங் குடுப்பவள் போல பெண்ணொருத்தி
சிரித்தாள். இன்னொருவன் தவளை கத்துவது போல, அவன் மார்பில் சாய்ந்திருந்த அவன் தோழி அதை ரசித்துப் பார்த்தாள். சரி, ஒவ்வொருவர் ரசனை அவரவருக்கானது. ஆனால் பொது இடங்களில் நடந்து கொள்வது என்றால் என்னவென்று கற்ற இவர்களுக்கும் தான் தெரியவில்லை. நம் மகிழ்ச்சி அடுத்தவரை கெடுக்கக் கூடாது என்பது குடிமைப் பண்பு. ஆனால் நிச்சயமாக அதற்கு நேரெதிராகச் செயற்படுவதே மகிழ்ச்சி என்பது அந்தக் குடிக் கும்பலின் மனநிலையாக இருந்தது.
நான் களைத்துச் சலித்து உறங்க முயன்று கொண்டிருந்தேன். அலெக்சின் சட்டகம் போல அந்தப் புகையிரதப் பெட்டி நீண்டது. பூக்கல்லில் தலை நீட்டும் ஒலிபெருக்கிகளென அந்த குடிக் கும்பலின் கூச்சல்கள். நான் அந்தப் பெட்டியை விட வீங்கிக் கொண்டிருப்பனை எனக்குள் உணர்ந்து கொண்டிருந்தேன். அயர்வதும் துயிலில் விழுந்து எழுவதுமாக யாழ்ப்பாணம் நோக்கி உழன்று கொண்டிருந்த புகையிரதத்தில் அந்த ஓவியத்தில் அவரடைந்த தொந்தரவை அறிந்தேன். அதில் வரையப்பட்ட மனிதனின் உழல்வை அடைந்தேன்.
கலை விந்தையானது. வாழ்க்கை அதை விட.