Skip to content

Kirishanth

Blog

Menu
Menu

புஞ்சி மல்லி – சிறுகதை

Posted on July 8, 2026 by Kiri santh

“யானைக்கு உன் குரல் தெரிந்து விட்டால் அது தான் அங்குசம்” என அப்பா சொல்லியது காதுக்குள் கேட்டுக் கொண்டிருந்தது. தென்னையோலைகளை அடித்துச் சுழற்றிக் காற்று வீசியது. பெரிய தும்பிக்கையிலிருந்து நீர் பிசிறுவது போல ஓசையுடன் ஓலைகள் துள்ளின.

“கந்துல… கந்துல.. இங்கே வா..” எனக் கூவினேன். தொண்டை நரம்புகள் வறண்டு ஊசி குத்துவது போல வலியெழுந்தது.

“கந்துல ஒரு குட்டி அற்புதம். அவன் உனக்கு வரலாற்றில் ஒரு மகத்தான வாய்ப்பை கொண்டு வந்திருக்கிறான்” என ஆர்னே சொல்லியது நீரலைகளில் தெறித்து ஓடுவதைப் பார்க்கிறேன்.

நிலவொளி தென்னை மரங்களிலும் புற்செறிவிலும் தளதளத்துக் கொண்டிருந்தது. மஹா ஓயா ஆற்றின் கரிய நீர்ச்சுழிப்பும் ஹோவென்ற ஓசையும் என் நினைவுகளை அடித்துப் பாறைகளில் மோதியெழுந்து நுரைக்கச் செய்தது.

கந்துலவின் வாசனையை மூக்கினால் நுகர்ந்து பார்த்தேன். எந்தத் திசையில் ஒளிந்து கொண்டிருக்கிறாய் என் புஞ்சி மல்லி.. அப்பாவிற்குத் தெரிந்தால் முகத்தை இறுக்கி தேங்காய் பொச்சைப் போல வைத்திருப்பார். அவரது மீசையும் தாடியுமில்லாத மழித்த முகத்தில் தெரியும் ஏக்கம் என்னால் அகலும் என நினைத்திருப்பார். பண்டாரவும் விஜேயவும் என்ன சொல்வார்கள். அப்பா அவர்களுக்கு முன் சண்டை செய்து கத்தியதையெல்லாம் நான் வீணாக்கி விட்டு இப்போது அழுது கொண்டிருக்கிறேன். 2006 ஆம் ஆண்டு அப்பாவை ஆர்னே வந்து சந்தித்த போது எனக்குப் பன்னிரண்டு வயது. காலம் எத்தனை விரைவாக மழையில் பொங்கியோடும் மஹா ஓயாவின் பெருக்கைப் போல நினைவுகளைக் கொட்டிப் பாய்கிறது. இப்பொழுது மூன்று வருடங்கள் ஆகப் போகின்றது. ஆர்னேயும் அவரது குழுவும் படத்தினை எடுப்பதற்காக கண்டிக்குச் செல்வதற்கு முன் ஆர்னே என் தலையில் தொட்டு “இது தான் நான் பார்க்கக் காத்திருந்த தருணம் துவே” என்றார். என்னை விட உயர்ந்திருக்கும் ஆற்றங்கரைப் புற்செறிவில் நடக்கும் பொழுது உடலைச் சிலிர்க்கச் செய்யும் தீண்டலைப் போன்ற சொற்கள் அவை.

நாளைக்கு நானும் நீயும் கண்டிக்குப் புறப்பட வேண்டும். எங்கே இருக்கிறாய் கந்துல.. புற்களைத் திறந்து தும்பிக்கையைச் சுழற்றிக் கொண்டு என்னிடம் ஓடி வா… ஆற்றின் கரிய போர்வையை உதறிக் கொண்டு எழுந்து வா.. பாறையாக நடித்தது போதும்.. நின்று உன் தும்பிக்கையைத் தூக்கி ஓங்கிச் சத்தமிடு. உன் கழுத்திலிருக்கும் சங்கு நிலவொளியில் முத்தைப் போல எரிவதை நான் பார்க்க வேண்டும்.. வாயில் வந்த சொற்களை ஒரு பைத்தியத்தைப் போல சொல்லிக் கொண்டே இருந்தேன். கால்கள் தளர்ந்து நடுங்கின. யாரும் அருகில் இல்லை என்ற எண்ணம் பயத்தை தரவில்லை. ஆனால் கந்துலவின் கண்களைப் பார்த்து விட்டால் போதும். பாக்குப் போன்ற சின்னக் கண்கள். ஓடி வா கந்துல என ஆற்றுக்கு மேலாகப் பிளிறினேன்.

பாம்புகள் கூட்டமாக வழுக்கிச் செல்வது போல பாறைகளை தழுவிப் பாய்ந்து மஹா ஓயா சென்று கொண்டிருந்தது. இனி நீ வரமாட்டாயா? கித்துல் தண்டுகளைக் கரும்பைப் போல வெட்டி உனக்குத் தருவேன். சங்கிலியைச் சரியாக இறுக்கி கமுகுடன் சேர்த்துக் கட்டுவேன். ஆணிகளை ஒழுங்காகப் பூட்டினேனா என மும்முறை சரி பார்ப்பேன். அப்பா சொல்லிய ஒன்றும் என் மூளையிலிருந்து போகாது. மறந்து விட மாட்டேன். நான் சின்னப் பெண் அல்ல.

மொகமட் நான்கு மாதங்களாக உடவெலவின் சரணாலயத்தில் எனக்காக சிந்திய வியர்வையையும் உழைப்பையும் வீணாக்கி விட்டதை நினைக்கும் பொழுது வட்டத் தொப்பியும் பெரிய தோல் சப்பாத்துகளும் அணிந்து “நங்கி.. பயப்படாதே.. அவை காட்டில் இப்படித் தான் விளையாடும்” எனக் காட்டிய ஒவ்வொரு கணமும் நினைவில் மேலெழுகிறது. அவரது சிறிய மீசை வைத்த முகத்தில் யானைகளின் சாந்தமிருக்கும். கண்களில் தேர்ந்த பாகனின் அங்குசக் கூர்மை.

என் கந்துல.. உன்னை நான் அழைக்கிறேன்.. வா.. உன்னை ஆற்றில் படுக்க வைத்து நீரை அள்ளி நீயே உன் மேலே வீசி விளையாடிய செம்மண்ணை களியாக்குவேன். பொச்சு மட்டையால் உனது தோலின் சொரசொரப்பையும் கோடுகளையும் உரஞ்சிக் கொண்டே அப்பாவுடன் கதைப்பேன். அப்பா தன் கதையைச் சொல்வார்.

என் அப்பாவை விட யானையை அறிந்த இன்னொரு மஹோத் இலங்கையில் எங்கும் இல்லை கந்துல. அவரே பெரிய தந்தங்களுள்ள குறும்பான முதிய யானை தான். எங்களின் காப்பகத்தில் எண்பது வயது கொண்ட ராஜா என்ற யானை இருக்கிறது. நிறைய வயதாகி விட்டதால் கண்ணை இழந்து விட்டான். அப்பா தான் அவனைக் குளிப்பாட்டுவார். அவனைக் குளிப்பாட்டும் பொழுது அதன் தோலில் இந்தக் காட்டினதும் காலத்தினதும் முழுக் கதையும் வரி வரியாகப் படிந்திருக்கிறது எனச் சொல்வார். நான் அவன் மேல் ஏறி நின்று கொண்டு உரஞ்சுவேன். என் சிறிய கைகளுக்கு அவன் மெல்ல அணைந்து கொள்வது போல உணர்ச்சியொன்று உடலில் பரவும். மலைகளுக்கு மேலே நிலவொளி வீசி, பால் போல படிந்து வருவதைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போல.

ஆவணி மாதத்து நிலவு மந்தமான மஞ்சளில் ஒளிர்ந்து கொண்டிருந்தது.
ஆற்றில் பாய்ந்து நடந்தேன். நீரின் விசை என்னை தள்ளியது. படுத்தபடியே நீருக்குள் முதலையைப் போல கைகளையும் கால்களையும் அசைத்து பாறைகளைப் பிடித்தபடி கரையேறினேன். பாவாடையைக் கழற்றி உட்காற்சட்டையுடன் நின்று பிழிந்து உதறினேன். வீசியடித்த காற்றில் என் உடல் நடுங்கிக் கொண்டேயிருந்தது. குளிரின் மேலே மேலும் குளிரலைகளை விசிறியது மலைத் தொடர்களின் பெரிய விசிறிகள். பாவாடையை அணிந்து கொண்டு இருகை விரல்களாலும் கோர்த்து உடம்பை உரஞ்சிக் கொண்டேன். கன்னங்களில் வைத்துச் சூடேற்றினேன். என் ஒற்றைப் பின்னல் நுனியிலிருந்த குஞ்சத்தை குலைத்து கூந்தலை பிரித்து விட்டு உயர்ந்த கரும்பாறையில் குந்தி கால்களை மடித்து நெஞ்சுடன் கோர்த்துக் கொண்டு காத்திருந்தேன்.

அப்பாவும் நானும் மேட்டிலிருந்து தொலைவில் தெரியும் மலைமுகடுகளிற்குள் சரிந்து பின்னால் ஒளிந்து கொள்ளும் சூரியனைப் பார்ப்போம். அப்படியொரு நாள் தான் அவர் என்னிடம் சொன்னார் “சந்தனி துவே, எனக்கு வயது ஏறி வருகிறது. நினைவாற்றலில் நான் யானை இல்லை. எனக்கிருக்கும் அறிவு என் இரத்தத்தில் ஒருவருக்கு கொடுக்கப்பட வேண்டும். இல்லையென்றால் அது என்னுடனே அழியும். சுது துவே, நீ கந்துலவை வளர்த்துக் காட்டி அவனை மயக்கி விட்டால் போதும். உன்னை இவர்களை ஏற்கச் செய்து விடுவேன். எங்கள் வம்சத்தில் என்றல்ல. இந்தத் தீவின் முழு வரலாற்றிலும் கதையிலும் கூட ஒரு பெண் மஹோத் இருந்ததில்லை.

உன்னை உன் அம்மா வயிற்றில் சுமக்கிறேன் எனச் சொல்லிய நாளில் நீயொரு குட்டி யானையாக அவளின் வயிற்றில் புரண்டு படுப்பதைக் கனவில் கண்டேன். ஆனால் கந்துலவைப் பார்த்த போதே தெரிந்தது. அவனைத் தான் நான் அன்று கனவில் கண்டேன். என் வாழ் நாள் முழுவதும் யானைகளுடன் வாழ்கிறேன். அவற்றைப் போன்ற கருணை கொண்ட குழந்தைகள் மனிதர்களிலும் பிறப்பதில்லை. ஆனால் சுது துவே, நீ வளர்ந்த போது அந்த எண்ணத்தை மாற்றி விட்டாய். உன்னால் அங்குசமில்லாமலேயே அந்தப் பெரிய விலங்கை கட்டுப்படுத்த முடியும். நான் கதைகளில் கேட்டபடி என் அப்பாவும் அவரின் அப்பாவும் சொன்னபடி ஒரு நல்ல பாகனின் குரல் தான் மஹோத்துக்கும் யானைக்கும் இடையில் இருக்கும் அங்குசம்.

கையில் அங்குசத்துடன் வருபவர்கள் யானையைக் கண்டு பயப்படுகிறார்கள். அது அவைக்கு சைகையைச் சொல்லும் ஒரு கை மட்டும் தானென்பதை அவர்கள் உணர்வதில்லை. அது ஒரு ஆயுதமில்லை. பண்டாரவும் விஜேயவும் வெளியே சொல்லி விட்டார்கள். ஒரு பெண், அதிலும் சிறுமியொருத்தி மஹோத் ஆவது அவர்களால் ஏற்க முடியாது. உனக்கு உடல் வலிமையில்லை என்று சொன்னார்கள். உங்களில் யார் ஒரு யானையை வெல்லும் உடல் வலிமை கொண்டவர்கள் என்று கேட்டேன். விஜய சொன்னான், யானையை அடக்குவதற்கு எங்கள் மனங்களில் ஒரு வனத்து விலங்கு வேண்டும். ஒரு பெண்ணுக்குள் அந்த விலங்கு இல்லை என்றான். என் துவே உங்கள் மனங்களை விட வலிமையானவள், ஒரு யானையை அவளால் தும்பியைப் போலப் பறக்கச் செய்ய முடியும் என்று சொன்னேன். யானையிடம் உள்ள கருணை மனிதர்களிடம் இல்லை துவே. நீ யானைகளைப் பயில வேண்டும். வென்று அமர்ந்தே ஆக வேண்டும். உன்னை நான் நம்புகிறேன்.

கண்களாலும் தொடுவதாலும் தான் உன்னை நீ யானைக்கு அறிமுகப்படுத்த வேண்டும். கண்களை இழந்த பின்னும் கூட ராஜா என் தொடுகையை உணர்வான். அப்பொழுது எனக்கு இந்த உயர்ந்த மலைகளை விரலால் தொட்டு விளையாடுவது போல இருக்கும். யானையை நாம் வணங்குகிறோம். அவை எங்களுடன் வாழ்கின்றன. நாங்கள் அவற்றின் இன்னொரு குடும்பம். ஜயநாயக்கவை வணங்குபவர்கள் பாகர்கள். காட்டிற்குள் நுழையும் பொழுது ஒரு கிளையை ஒடித்து கயிற்றில் கட்டி விடுவோம். ஜயநாயக்க ஆண் பாகர்களின் தெய்வம். ஆனால் உன்னை நான் எப்போதும் பத்தினி தெய்யோவாகத் தான் என் கனவுகளில் காண்கிறேன் துவே. அவள் தான் பெண்களின் தெய்வம்.

என் அப்பாவின் அப்பாவும் அதற்கு முன்னருமான எங்கள் பரம்பரைக் கதைகளில் மஹோத்கள் யானை வேட்டையில் ஈடுபட்டவர்கள். வெள்ளைக்காரருக்கு யானைகளை வேட்டையாட கிராமம் கிராமமாகப் பாகர்கள் சென்றிருக்கிறார்கள். அம்மச்சி சொல்வார், யானை வேட்டை முடிந்து புதிதாக வந்திருக்கும் யானைகளைப் பார்க்கத் தான் பெண்களும் சிறுவர்களும் குழந்தைகளும் கைகளில் மாலைகளுடன் வருவார்கள். கொண்டாட்டமான இரவுகள் நடக்கும். ஆனால் அதுவே பிரச்சினை, எங்கள் வனங்களில் குடியிருந்த ஆயிரக்கணக்கான யானைகளை நாங்கள் பலி கொடுத்து விட்டோம். இன்று எனதும் உனதும் காலத்தில் அவை மீண்டும் தெய்வங்களாக எழுந்திருக்கின்றன. வேட்டையாடப்பட்ட ஒரு இனத்தில் எஞ்சியிருப்பவை. காட்டில் அனாதையாகத் திரியும் காயம்பட்ட அல்லது கூட்டத்தால் கைவிடப்பட்ட யானைகளைத் தான் நாங்கள் காப்பகத்தில் வளர்க்கிறோம். அது ஒரு நிவர்த்தி போல. முன்னர் எங்கள் தலைமுறைகள் செய்த பாவங்களைக் குளிர்விப்பது போல.

முதன்முதலாக இந்தக் காப்பகத்தில் ஐந்து யானைக் குட்டிகளைக் காப்பாற்றி வளர்த்தோம். அப்பொழுது நான் இரவும் பகலும் அவர்களுடனேயே இருப்பேன். யானைக் குட்டிகளின் குறும்பைப் பார்த்துத் தான் எனக்குத் திருமணம் செய்யும் ஆசையே வந்தது. தென்னை மரங்களின் நிழலில்.. மஹா ஓயாவின் பெருக்கில்.. புற்செறிவுகளில்.. நாங்கள் ஓடி விளையாடுவோம். மனிதர்களுடன் யானைகள் எளிதில் நெருக்கமாகி விடுபவை. ஒரு சாதுவைப் போல உள்ளம் கொண்டவை. யானையைத் தொட்டு குளிப்பாட்டி நடை பயிற்றுவித்து முன்னும் பின்னும் நடக்கச் சொல்ல வைத்து நாம் அவர்களை எங்களில் ஒருவராகவே மாற்ற முடியும். ஆனால் யானை வனங்களின் தெய்வம். அவை அங்கு திரும்பிச் சென்றே ஆக வேண்டும்.

எமது பரம்பரையின் ஓலைச்சுவடிகளில் உள்ள மருத்துவக் குறிப்புகள் உனக்கு உதவக் கூடும். இன்றிருக்கும் மருத்துவமும் இணைந்தே யானைகளை விரைவில் காப்பாற்ற முடியும். ஆனால் உனக்கு பரம்பரையாக அளிக்கப்படும் புத்தியை நீ கற்றுக் கொள்ள வேண்டும்.

ரேஞ்சர் மொகமட்டை நீ நம்பலாம். அவனது குடும்பமும் மஹோத்கள் தான். அவனிலும் யானையின் கருணையுண்டு. கந்துலவை நீ பழக்கி விட்டால் அதன் பிறகு அவனும் காட்டுக்கே போக வேண்டியவன். கந்துல உனக்குக் கிடைத்திருக்கும் ஒரே ஒரு வாய்ப்பு. அவனை நீ உன் குரலால் கட்டுப்படுத்தி விட்டால் இந்த ஊரே பார்க்க நானும் நீயும் அவனைப் பெரஹெராவில் ஊர்வலம் கூட்டிச் செல்வோம். அது நடப்பதையும் என் கனவில் கண்டேன்” என்றார்.

அன்று அப்பா சொல்லச் சொல்ல என் மனம் அத்தனை உவகையுடன் துள்ளிக் கொண்டிருந்தது. அப்பா யானைகளுடன் எங்களை சிறு வயது முதலே நெருக்கமாக வளர்த்திருந்தார். அந்தப் பெரிய யானை எனக்கு எப்போதும் குட்டியாகத் தான் தெரியும். கந்துல, உன்னை முதன் முறையாக நான் நெற்றியில் தொட்ட போது தும்பிக்கையால் ஒரு கரும்பைப் பிடிப்பதைப் போல என் கையைப் பிடித்தாய். உன்னை ராஸ்கல் என்று தானே அழைப்பேன். குழப்படியும் சுட்டியுமான புஞ்சி மல்லி. என் தங்கைகளும் உனக்கு வாழைப்பழங்களைக் கொடுப்பார்கள். நீ வந்து முதல் முறையாக மரத்தை முறித்து தப்பித்த போது நான் பள்ளிக்கூடம் போயிருந்தேன்.

கொடியில் காய்ந்து கொண்டிருந்த என் சீருடையையும் தங்கைகளின் சட்டைகளையும் சுழற்றி வீசி விட்டு வீட்டைச் சுற்றி அலைந்து கொண்டிருந்தாய். அப்பா தான் உன்னைக் கண்டு கட்டி வைத்தார். இன்று அப்படியில்லை. இன்னும் மூன்று நாட்களில் பெரஹரா நடக்கவிருக்கிறது. நான் உன்னைக் கூட்டிக் கொண்டு போயே ஆக வேண்டும்.

மதியம் உன்னுடன் புட்போல் விளையாடி விட்டு கமுகமரத்தில் கட்டினேன். சின்னத் தங்கை வாயில் கையைக் கொண்டு போன போது தட்டி விட்டாய். அவள் விழுந்ததும் எங்கிருந்தென்று அறியாமல் எனக்கு ஆத்திரம் வந்தது. நான் செய்தது தவறு தான் கந்துல. நான் உன்னை அப்படி ஏசியிருக்கக் கூடாது. அவளது கையில் காயங்களைக் கண்டதும் என்னை அறியாமல் கோபம் வந்து விட்டது. காட்டுக்கே போ மோட்டு அளியா என்று உன்னை ஏசியது தவறு தான். உனக்கு அறிவே இல்லையென்று நான் சொல்லியதை இப்பொழுது நினைக்க அழுகை வருகிறது. உன் தும்பிக்கையை நீட்டி அவளைத் தொடப் போக நான் தட்டி விட்டேன். அதன் பிறகு நீ அமைதியாய் ஒரு சிலை போல நின்று விட்டாய். உன்னை நான் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.

நான் தங்கையைக் கூட்டிக் கொண்டு மருந்து கட்டப் போனேன். திரும்பி வந்து உன்னிடம் காட்டலாம் என எண்ணிக் கொண்டு வந்தேன். உனக்கு வயிறு நிறைய பழங்கள் தர விரும்பினேன். என் கந்துல.. உன்னை நான் எப்படி வெறுப்பேன் என் புஞ்சி மல்லி. எங்கள் குடும்பத்தில் நீ தான் முதல் மகன். நாங்கள் எல்லோரும் உனக்கு சகோதரிகள். நீ வந்த அன்று உன்னை அப்படித் தான் அழைத்தோம். புஞ்சி மல்லி. என் இனிய குட்டித் தம்பி.

பாறையில் நின்று தென்னை மரங்களுக்கும் அப்பால் தொலைவில் தெரியும் மலைவிளிம்புகளைப் பார்த்தேன். கூட்டமாகச் செல்லும் யானைகளின் முதுகுகள் போலத் தெரிந்தன. நிலவு முழுமையாக ஒளி பொங்கி மஹா ஓயாவின் கரிய நீர்ப்பரப்பு வெள்ளிப் பனியில் பொன்னால் இழைத்த சேலை போல நனைந்து மின்னுகிறது.

அப்பா வந்து கொண்டிருந்தார். மரங்களுக்குள் அவர் மறைந்தும் தோன்றியும் வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். “துவே.. துவே” என அவர் கூச்சலிடுவது கேட்கிறது. எனக்குச் சட்டென்று கால்கள் சூடாகி கோபம் உச்சிக்கு ஏறியது. கூந்தலை ஒதுக்கி கொண்டையாய் முடிந்து கொண்டு புற்செறிவை விலத்தியபடி காட்டை நோக்கி ஓடினேன். “கந்துல.. கந்துல.. ஓடி வா.. தஹா.. தஹா” கத்தினேன்.

புற்செறிவு முடிந்து தென்னங்காடு என் முன்னால் விரிந்து கிடந்தது. கால்கள் துள்ளிக் கொண்டு விசை தாங்காது மிதப்பவை போல எழுந்தெழுந்து கந்துலவைத் தேடினேன். புற்செறிவிற்குள் அப்பாவின் குரல் கேட்டது. “துவே.. நில்.. ஓடாதே.. இங்கே வா”.

நான் ஓடினேன். விழுந்திருந்த தென்னங்குற்றியைத் தாவப் பாய்ந்த பொழுது இடக்கால் விரல்கள் குற்றியில் பட்டு உரஞ்சியபடி விழுந்தேன். நெஞ்சில் அடி. வலித்துக் கொண்டு அழுகை வந்தது. அப்படியே புற்களைப் பற்றி இழுத்து விறாண்டியபடி குலுங்கியபடி அழுதேன். என் முதுகு துடிப்பது புதிதாக தோன்றியது. கண்களில் தளர்வுடன் வலி பரவியது. நீர்ப்படலம் மினுங்கும் கண்களால் உலகம் குழம்பித் தெரிந்தது. நிமிர்ந்து படுத்து வானத்தைப் பார்த்தேன்.

மஞ்சள் பூசிய நிலவு பூரணமாகச் சிந்திக் கொண்டிருந்தது. அதன் வட்டப் பீங்கானில் நானும் நீயும் நடக்கின்றோம். நான் கையில் ஒரு அங்குசத்தைப் பிடித்துக் கொண்டு சிவப்பு நிற முகபாடத்துணி அணிந்த உன் செவியின் பின்புறத்தை தடவி விடுகிறேன். உன் தேகமெங்கும் மின்விளக்குகள் ஒளிர்கின்றன. வீதியெங்கும் ஒளிவிளக்குகள் சுழல்கின்றன. மக்கள் கூடியிருந்து பார்த்து எங்களைக் கைகாட்டியபடி கதைக்கிறார்கள். சிறுமிகள் உன்னைத் தொட வந்து நிற்கிறார்கள். நான் அவர்களது கையைப் பிடித்து உன் முகத்தில் வைத்துத் தடவ விடுகிறேன். என் புஞ்சி மல்லி கந்துல என அறிமுகப்படுத்துகிறேன். அவர்கள் வெட்கப்பட்டுச் சிரிக்கிறார்கள். உன்னை அடக்கி நிற்கும் என்னைப் பார்க்கும் கண்களில் வியப்பு மின்னுவது எனக்கு உவகையாய் இருக்கிறது. கால்மயிர்கள் கூசி நிமிர்ந்து கொள்கின்றன. நெஞ்சில் கித்துல் பாகு ஊறி வருகிறது. பத்தினி தெய்யோ என எண்ணிய போது கண்களில் நீர் வழிந்து புற்களில் சிந்துகிறது.

தீப்பந்தங்ளைச் சுற்றியாடுபவர்கள் என் முன்னே சுழல்கிறார்கள். கந்துல, பார். இது தான் பெரஹரா என உனக்குக் காட்டுகிறேன். என் புஞ்சி மல்லி அதோ குரங்குகளின் முகமூடியணிந்தவர்கள் ஆடுவதைப் பார். கையில் வேலுடன் கத்தர கம தெய்யோவின் ஆடலைப் பார். மத்தளச் சத்தங்கள் உன்னைப் பயமுறுத்துகிறதா என உன்னைத் தொட்டுப் பார்க்கிறேன். குட்டி ராஸ்கல் கொண்டாட்டமாக தலையை ஆட்டுவதைப் பார்த்துச் சிரிக்கிறேன். என் புஞ்சி மல்லி.. நானும் நீயும் வரலாற்றில் முதல் முறையாக இப்படி நிற்கிறோம். அதை உனக்குச் சொல்லி கண்ணீர் சிந்திச் சிரிக்கிறேன். அப்பா விஜேயவுக்கும் பண்டாரவுக்கும் எங்களைக் காட்டிச் சிரிக்கிறார். அவரது கைகளில் அங்குசம் குத்தி நிமிர்ந்திருக்கிறது. முகம் தாங்காமல் ததும்பி நிலவு மறைந்து அவர் பெருகிச் சிந்துகிறார்.

“துவே… துவே..” எனக் கூவியபடி என்னை வந்து தூக்குகிறார். ஒரு வைக்கோல் கற்றையைப் போல அப்பாவின் முதுகில் தூங்குகிறேன். கண்ணீர் அவரது புறங்காலில் உதிர்கிறது. ஒளித் தும்பிக்கை நீண்டு செல்வது போல டோர்ச்சை அடித்தபடி மொகமட் தென்னந்தோப்பில் அலைவது தெரிகிறது. புற்செறிவைக் கடந்து மஹா ஓயாவின் கரிய பாறையொன்றில் அப்பா என்னை வளர்த்தினார். அமர்ந்து கொண்டு அவரின் மடியில் சரிந்து படுத்தேன். அவரது சாறத்தை என் கண்ணீர் நனைத்தது. என் தலையைக் கோதியபடி சொன்னார், “துவே, நீ அழாதே. அவன் உன்னை விட்டுப் போக மாட்டான். கோபப்பட்டிருக்கிறான். வந்து விடுவான்”. அரை மணித்தியாலமாவது ஆகியிருக்கும். அப்படியே நித்திரையாகி விட்டேன்.

மொகமட்டின் குரல் கணீரென்று சங்கு முழங்குவது போலக் கேட்டது “சந்தனி.. சந்தனி.. இதோ உன் புஞ்சி மல்லி.. இங்கே ஒளிந்திருக்கிறான்”. துள்ளி எழுந்து புற்செறிவைப் பார்த்தேன். தும்பிக்கையைச் சுழற்றித் தூக்கியபடி பிளிறலுடன் கண்களில் நீர் வழிந்து புற்களில் சிந்த கந்துல ஓடி வந்து கொண்டிருந்தான். மொகமட்டின் டோர்ச் வெளிச்சத்தில் அவன் மிதந்து பறப்பது போலத் தோன்றியது. என் கை கால்களெல்லாம் பறப்பது போலச் சிறகு விரிந்தது. உடம்பெல்லாம் புல் போல ஆடியது. “கந்துல.. கந்துல.. மல்லி.. மகே மல்லி..” யென கூவிக் கொண்டு பாறையிலிருந்து புற்தரையில் குதித்தேன். அவன் ஒருகணம் அதிர்ந்தது போல நின்று முன்காலைத் தூக்கி தும்பிக்கையை உயர்த்தினான். மறுகணம் எதையும் யோசிக்காமல் முட்ட வருபவனைப் போல மூர்க்கமாக கால்களால் பாய்ந்து வெறியுடன் ஓடி வந்து கொண்டிருந்தான். மஹா ஓயாவின் அலையொலி கரைகளில் படிந்து பாறைகளில் மோதி அடித்துச் சிரித்தது. சந்தனம் பூசிய நிலவொளி சாந்தமாக எங்களின் மேலே விழுந்து கொண்டிருந்தது. அருகில் வந்ததும் எங்களுக்குள் உடல்கள் தடையாய் எழுந்தன. பாறையை நீரலை தழுவிக் கொள்வது போல அவனைப் பாய்ந்து தழுவினேன். தும்பிக்கையைப் பிடித்து வழுக்கிக் கொண்டே நுனியைப் பிடித்து அளைந்தேன். கூச்சம் பொறுக்காமல் தூக்கி என் தலையைத் தொட்டான். அவன் நெற்றியில் என் நெற்றியை வைத்து அழுத்தினேன். அலையும் பாறையும் காலம் முழுவதும் மோதிக்கொண்டு நிற்பதைப் போல நின்று கொண்டேயிருந்தோம். எங்கள் தலைகள் ஒன்றில் ஒன்று கலந்து செய்த சிற்பம் போல ஒட்டியிருந்தன. அப்பா மொகமட்டின் தோளில் தட்டிச் சிரித்துக் கொண்டு கதைப்பது கேட்டது. “பார்த்தீர்களா ரேஞ்சர், என் பத்தினி தெய்யோ. அவள் கண்ணீரில் அங்குசம் வைத்திருக்கிறாள். இனி அவன் அவளின் கைவிரல் அசைவுக்கு மிதந்து வருவான்”.

 

நன்றி : உயிர்மை

வாசித்தவர்கள் : 35

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு

வாசிக்க

  • அஞ்சலி : நன்மிளிர் (2,143)
  • சுரண்டலெனும் கலை: எதிர்வினையும் பதிலும் (1,986)
  • காதலின் முன் பருவம் (1,959)
  • சராசரிகளுடன் உரையாடுதல் (1,890)
  • விடுதலையில் கவிதை (1,871)
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு
©2026 Kirishanth | Design: Newspaperly WordPress Theme