Skip to content

Kirishanth

Blog

Menu
Menu

சலாங்கையா – சிறுகதை

Posted on July 11, 2026 by Kiri santh

மலைப் பாறையின் இடையில் சிக்கிக் கொண்டது போல என் வலக்கை விரல்கள் அவரது கையால் உறுதியாகப் பிடிக்கப்பட்டிருக்க, தோளில் மறுகையைப் போட்டுக் கொண்டு “எங்கள ஏத்துக்குங்கன்னு சொல்லல. புரிஞ்சுக்குங்கன்னு தான் சொல்லுறன்” என்றார். நடுக்கமற்ற உடுக்கொலி போன்ற கார்வை கொண்ட குரல். குமிழ் விளக்கின் மஞ்சள் ஒளி அவரில் விளாசிக் கொண்டிருந்தது. கரிய பாறையில் நீர்மினுக்கம் போல. மின்னும் மூக்குக் கண்ணாடிக்குப் பின்னால் பருத்த மீன்கள் போன்ற கண்களில் சுருக்கமான கூர்மணிகள் மினுங்கின. எனக்கு என்ன சொல்வதென்றே பிடிபடவில்லை. என்னை விடச் சிறிய உருவம். அவரது காலப் பாணியில் முழுக்கைச் சேர்ட், இடுப்பு வரை உயர்ந்த துணி ஜீன்ஸ் அணிந்து, வெண்ணை நிற நரைமுடியை சீராக வாரிப் படியவிட்டு கன்ன உச்சி பிரித்திருந்தார். எனக்கு அதுவரை இருந்த உற்சாகம் ஒருகணத்தில் வடிந்து விட்டது. மெல்லிய பதட்டமும் நடுக்கமும் உடலில் பரவத் தொடங்கின. கோணலாகச் சிரித்தேன். இரண்டு முறை என் தோளில் தட்டி பற்றியிருந்த கையைக் குலுக்கி விட்டு முன்னம் பற்கள் ஒளிரச் சிரித்தார். பிறகு தலையை ஆட்டி விட்டு மெல்ல நகர்ந்து கூட்டத்திற்குள் சென்றார். அங்கிருந்தவர்களில் சிலர் அவரை மொய்த்துக் கொள்ள சிரித்துக் கொண்டே கதைத்தபடி போனார்.

அவர் சென்று மறையும் வரை என் கால்கள் நகரவில்லை. தொண்டையில் விக்கல் போல சொற்கள் எழுந்து கொண்டிருந்தன. அனைத்தையும் என்னால் மறுத்துப் பேசியிருக்க முடியும். மலையகத்தில் இலக்கியமே இல்லையென எல்லா அளவு கோல்களாலும் அறுத்துக் கொட்டித் தூசாக்கியிருக்க இயலும். ஆணவத்தைச் சீண்டுவது போல எழுத்தாளனுக்கு முதன்மை விசை எது. உள்ளம் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

படிக்கட்டுகளால் இறங்கி மண்டபத்தைக் கடந்து சத்துருக்கொண்டானின் அமைதியான நீர்ப்பரப்பை பார்த்தேன். சிகரட்டை எடுத்து பற்ற வைத்து உள்ளத்தை இயல்பாக்க விழைந்தேன். வாவியின் நீரலைகளுக்கு அடியில் சுழித்தோடும் மீன்களும் முதலைகளும் எனக்குள் துடித்துக் கொண்டிருந்தன. மாலை படிந்து பனியிறங்கிக் கொண்டிருந்தது.

எல்லோருக்கும் முன்னால் வைத்து நான் சொல்லி விட்டேன். “உங்களுக்கு யாழ்ப்பாணத்தானும் உதவ மாட்டான் கிழக்கும் உதவாது. மலையக இலக்கியத்தை நீங்கள் தான் இலக்கியத் தகுதியுடன் உருவாக்க வேண்டும். உங்களின் இலக்கியம் இவர்கள் எவராலும் மறுக்க முடியாதபடி எழுந்து நிற்பதன் மூலமே நீங்கள் மலையக இலக்கியத்தை உருவாக்க முடியும்.

இலக்கிய இடமோ தகுதியோ இரந்து பெறுவதல்ல. சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிப்பது”

இன்னும் என்னென்னவெல்லாமோ சொன்னேன். மலையகத்தில் கலைத்தகுதி கொண்ட இலக்கியங்கள் இல்லை என்பதே என் உறுதியான நம்பிக்கை. எளிமையான போர்க்கதைகளை வைத்துக் கொண்டு சல்லியடிக்கும் வடக்கின் எழுத்தாளர்களைப் போல லயமும் தேயிலையும் அட்டையும் இரத்தமும் என்று புலம்பல் இலக்கியம் தான் அங்கிருகிறது.

ஆனால் இந்தக் கிழவன் நான் சொன்னதை ஆணவத்துடன் எதிர்கொண்டு இங்கே பாரடா, இதெல்லாம் எங்கள் மகத்தான இலக்கியங்கள். உன் எந்த முன்னோடிக்கும் சளைக்காதது என்று வாதத்திற்கு வந்திருந்தால் நான் எதிர்கொண்டிருப்பேன். தேயிலைச் செடிகளில் கொழுந்துகளைப் பிடுங்கி அநாயசமாக கூடைக்குள் எறிவதைப் போல அந்த இலக்கியங்களை தலை கொய்திருப்பேன். ஆனால் கிழவன் சொல்லியவை இரண்டே வரிகள். நான் சொன்னதின் அடியில் ஓடிய நாரை எடுத்து கையில் பிடித்து தூக்கி எறிந்து விட்டு ஒரு பூவைக் கொடுப்பது போல போய்விட்டான். யாரிவன் என மீண்டும் மீண்டும் உளம் கொந்தளித்து நூராமல் எரிந்து கொண்டேயிருந்தது.

*

அடுத்து சில வருடங்களில் மலையகத்தில் இலக்கியச் சந்திப்பு. 2017 ஆம் ஆண்டு. யாழ்ப்பாணத்து இளம் எழுத்தாளர்கள் கையில் கத்தி பொல்லுகளுடன் கிளம்பினோம். இலக்கியம் என்றால் நிமிர்வு. எதற்கும் அஞ்சாமை. என் கருத்தே ஊன்றத்தக்க தண்டம் போன்ற மகத்தான கருத்துகளை உரையாடிக் கொண்டே பாதாளக் கிணற்றில் சுழலும் மோட்டார் சைக்கிள் போல ஓடும் பஸ்ஸில் கொட்டகல போய்ச் சேர்ந்தோம்.
குளிர்ந்து இறுகிய மலைகளுக்குள் நுழைந்து இருட்டில் சென்று எங்கள் அறைகளில் படுத்துக் கொண்டோம். விழிப்பிலும் உறக்கத்திலும் கனவிலும் பின்பு மீண்டும் விழிப்பதிலும் இலக்கியம் தான். இலக்கியம் மட்டும் தான்.

விடிந்த போது யன்னலைத் திறந்தேன். உறக்கம் கலையாத கண்களால் எங்கள் அறைக்கு வெளியே விரிந்திருந்த மலைச்சரிவைப் பார்த்தேன். தேயிலைச் செடிகள் சீராக வெட்டப்பட்டிருந்தன. வாரிப்படிய இழுத்த கிழவனின் முகம் நினைவில் வந்து போனது. திரும்பி சிகரட்டை எடுத்து மூட்டிப் புகைத்தேன். வெளியே சிறு வராண்டாவின் வழி நடந்து அரங்கு நடக்கப் போகும் மண்டபத்தைப் பார்த்தேன். மூத்தவர்கள் புன்னகையுடன் கை குலுக்கியபடி கதைத்துக் கொண்டிருந்தார்கள். கட்டிப் பிடித்தார்கள். திலகரின் கார் வந்து நின்றது. அப்போது அவர் எம்பியாக இருந்தார். அவரும் மூத்தவர்களைக் கண்டு ஓடிச் சென்று கை குலுக்கினார்.

மோகனும் வந்து சிகரட்டை மூட்டினான். குளித்து முடித்து கழுத்தில் ஸ்டைலாக ஒரு கார்ப் கட்டியிருந்தான். நாங்கள் தங்கியிருந்தது ஒரு கிறிஸ்த்தவ மிசனரிக்குச் சொந்தமான இடம்.
அதன் பாதிரியார் மேலிருந்து வரும் போது சிரித்த புனித முகத்துடன் வந்து கொண்டிருந்தார். பணியாளர்கள் வளாகத்தை கிறிஸ்த்தவ தூய்மையுடன் ஒருக்கிக் கொண்டிருந்தார்கள். எங்களின் பக்கத்தில் காதில் மயிர்கள் முளைத்துப் பரவிய ஒரு வயதான பணியாளர் தும்புத்தடியால் வராண்டவைக் கூட்டிக் கொண்டு வந்தார். நான் புகைத்து ஊதிய சிகரட்டின் நாற்றத்தை மூக்கில் உணர்ந்ததும் பாதிரியாரின் யேசு கோலம் கலைந்தது. கோபமாக முகத்தை வைத்தபடி “இங்கெ சீக்கிரட் பிடிக்க கூடா. ஒங்கலுக்குத் தெரியாதா” என்றார். அவரது குரலில் மெல்லிய நடுக்கமிருந்தது.

நான் எந்தச் சலனமுமில்லாமல் புகையை இழுத்து ஊதியபடி அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். மதத்திற்கும் மன்னனிற்கும் பாதிரிக்கும் பிராமணருக்கும் அரசுக்கும் யாருக்கும் எதுக்குமே எழுத்தாளன் கட்டுப்பட்டவனில்லை என்பது பாதிரியாருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் கோபமாகத் திரும்பி திலகரைக் கூப்பிட்டார். திலகர் அதற்குள் மேலேறிச் சென்றுவிட கையைக் கசக்கிக் கொண்டே திரும்பி வந்து எங்களைப் பார்த்தார். நான் புகையை வட்டமாக ஊத முயன்று கொண்டிருந்தேன். கூட்டிக் கொண்டிருந்தவர் பாதிரியாருக்கு அருகே போய் “அவங்க யாப்பாணம் பாதர்” என்று மெல்லிய குரலில் சொன்னார். பாதிரியார் சட்டென்று திரும்பி கைகளை விரித்து விசையுடன் அசைத்துக் கொண்டு போனார். நான் சிரித்தேன். அந்தப் பணியாளரின் பெயர் சொலமன். தலையில் குளிர்த்தொப்பி போட்டிருந்தார். மோகனைப் போலவே ஒரு ஸ்டைலான சாம்பல் நிற ஸ்கார்ப். அது எத்தனை ஆண்டுகளாக சொலமனின் கழுத்தில் உக்கிய வாழைத்தடல் போன்று தூங்குகிறதென விசாரித்து அறிந்து கொண்டேன்.

குளித்து விட்டு வேட்டியைக் கட்டினேன். எழுத்தாளனுக்குக் குளிரெல்லாம் ஒரு பொருட்டா. சண்டிக்கட்டை மடித்துக் கட்டியபடி ஈழத்தின் அடுத்த தலைமுறையின் படையுடன் சாப்பாட்டு அறைக்கு மேலேறிச் சென்றேன். நாங்கள் ஏறிவருவதை அங்கிருந்த மூத்தோர் புதினமாகப் பார்த்தார்கள். நான் சண்டிக்கட்டை அவிழ்த்து வலக்கையால் வேட்டி நுனியைப் பிடித்துக் கொண்டு நண்பர்களுடன் கதைத்துக் கொண்டிருந்தேன். என்னைத் தொட்டு விலகும் பார்வைகளை ஒரு அங்கீகாரம் போல ஏற்றுக் கொண்டேன். மிதப்பாய் இருந்தது.

சாப்பிட்டுவிட்டு அரங்குக்கு போனோம். நிகழ்வுகளின் பட்டியலைப் பார்த்துச் சலித்து விட்டு “போவம் மச்சான். இவங்கள் என்னடா கதைக்கப் போறானுகள். இலக்கியம் தெரியாத மந்தக் கூட்டம்” என மோகனிடம் சொன்னேன். இருவரும் வெளிக்கிட பின்னால் எங்கள் படையும் புறப்பட்டது. மலைச்சரிவில் நின்று புகைப்படம் எடுத்தோம். தேயிலைச் செடியைத் தொட்டு ஆராய்ச்சி செய்தோம். பிற்காலத்தில் புனைவுகளில் நாங்களே தானே இந்த மண்ணையும் எழுதியெடுக்க வேண்டும். கொஞ்சத் தூரம் நடந்து போய் சிறு கடையொன்றில் வெத்திலைச் சரையொன்றை வாங்கினேன். வெட்டுப் பாக்குக் கேட்டேன். என்னவென்று தெரியாமல் முழித்த கடைப்பெண் “பச்சப் பாக்குத் தான் இருக்குங்க” என்றார். வாங்கி வெற்றிலையைக் கிழித்து பச்சைப் பாக்கை இரண்டாக்கி புகையிலையுடன் சேர்த்துப் போட்டேன். சுண்ணாம்பு வெள்ளை நிறத்திலிருந்தது. சவசவவென்று மென்று துப்பினேன். வெறும் பச்சைச் சளி போல தாம்பூலம் விழுந்தது.

அரங்குகள் முடியும் வரை அங்குமிங்கும் டூரிஸ்ட்கள் போல அலைந்து விட்டு மாலையில் என்னைச் சந்திக்க வருவதாகச் சொன்ன மலையக வாசகரைப் பார்க்க வெளிக்கிட்டேன்.
மதன் ஒரு கையில் வெற்றிலைப் பையுடனும் மறுகையில் ஒரு சொப்பிங் பை நிறைய தோரா பீடிக்கட்டுகளுடனும் வந்தார். போனில் கதைக்கும் பொழுதே பத்து விநாடிக்கு ஒருமுறை சரிங்க கிரிஷாந்.. சரிங்க கிரிஷாந்.. என்று குழையும் பவ்வியக் குரல் கொண்டவர். பூட் சிட்டியொன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். முகநூலில் கவிதைகளும் கம்யூனிஸ்ட் வாசகங்களும் போடுவார். எழுத முயன்று கொண்டிருந்தார். அவர் தான் நாங்கள் நடாத்திய புதிய சொல் இதழினை மலையகத்தில் விநியோகம் செய்து கொண்டிருந்தார்.

அதே பவ்வியமும் இனிமையும் கலந்த குரலில் அறைக்குள் அவரது நண்பருடன் வந்தமர்ந்தார். கட்டிலில் அமர்ந்து கைகளைக் குறுக்கே கட்டி இறுக்கிப் பிடித்தபடி நான் உதிர்த்துக் கொண்டிருந்த ஒவ்வொரு இலக்கியச் சிந்தனைக்கும் “சரிங்க கிரிஷாந்.. சரிங்க கிரிஷாந்” என்று சொல்லி தலையையும் ஆட்டியாட்டி ஒத்துக் கொண்டிருந்தார். “நீங்களே ஒரு இலக்கிய இதழ் நடத்துங்க.. விரிவா எழுதுங்க.. கூட்டம் போடுங்க” என்று அடுக்கிக் கொண்டிருந்தேன்.

“நேரமெங்க இருக்குங்க.. பூட்சிட்டி வேலை முடியவே இருட்டிரும். நாளும் பொழுதும் வேல தான்” என்றார்.

“இலக்கியத்துல ஜெயிலில இருந்தும் எழுதுறாங்கள்.. தூக்கு மேடைக்கு முன்னால இருந்தும் எழுதுறாங்க.. சாட்டெல்லாம் பொருட்டே இல்ல மதன். நீங்க எழுதேல்ல எண்டா யாரும் வந்து அழப்போறதில்ல. நீங்களே எழுதினாத் தான் உங்கட இலக்கியம் வளரும்” என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.

மூத்த வெளிநாட்டு எழுத்தாளர் ஒருவர் போத்தலுடன் அறைக்கு வந்தார். உடைத்துக் குடிக்கத் தொடங்கினார்கள். நான் மதனையும் அவரது நண்பரையும் கூட்டிக் கொண்டு வராண்டாவின் வழியாக இருட்டு மெல்ல ஒளிர்ந்து கொண்டிருக்க தோள்களைத் தொட்டு “எந்த கஸ்ட்டமும் இல்லாமல் இந்த மலைய பொன்னாக்கியிருக்க மாட்டினம். எல்லாமே உழைப்புத் தான். எதுக்கு மினக்கெடுறம் எண்டது தான் வித்தியாசம்” என்றேன். மேலே போய் மோட்டர் சைக்கிளில் ஏறும் வரை “சரிங்க கிரிஷாந்.. சரிங்க கிரிஷாந்..” என்று எந்த மறுப்பும் இல்லாமல் ஒரு மந்திர முணுமுணுப்புப் போலச் சொல்லிக் கொண்டேயிருந்தார். அவரது முகம் இருட்டில் மறையும் வரை பார்த்துக் கொண்டு நின்றேன். எத்தனை இனிய மனிதன் என நினைத்த போது கிழவனின் குரல் மலையின் உச்சியிலிருந்து பிளவை நோக்கி எதிரொலித்தது.

காமன் கூத்து நடக்கப் போகிறது. மைம்மலாக ரெண்டு ஷொட் போட்டு விட்டுப் போனால் நன்றாயிருக்குமென்று தோன்றியது. அறைக்குள் மூத்தோரும் இளையோரும் மைம்மலாக இருந்தார்கள். எஞ்சியிருந்த ஷொட்களை ஊற்றிக் கொண்டு சண்டிக்கட்டைக் கட்டி தோரா பீடியை மூட்டிப் புகைத்தபடி காமன் கூத்துப் பார்க்க புறப்பட்டேன். வராண்டாவில் கதிரையில் நித்திரையாய் இருந்த சொலமனை எழுப்பி ஒரு ஷொட்டும் ஒரு கட்டு தோரா பீடியும் கொடுத்தேன். கிறிஸ்த்துவாகச் சிரித்தார். மோகனும் சதீஸும் இன்னும் இருவரும் கூத்தைப் பார்க்க இணைந்து கொண்டார்கள்.

நாங்கள் மூச்சிரைக்க மேலேறி கூத்து நிகழும் இடத்திற்குப் போன போது சடை விரிந்து உயர்ந்து பறப்பது போல முதுகில் கட்டியிருந்த நீண்ட கம்பி நுனிகள் தோகை போல விரிந்திருக்க அதன் உச்சிகளில் பந்தங்கள் முழாசி எரிய வீரபத்திரன் ஆடிக் கொண்டிருந்தான். அவனது மட்டைக் கிரீடம் சிவப்பு வண்ணத்தில் எரிவது போலிருந்தது. ஒரு கையில் மட்டையில் செய்த வாள் மடங்கி மடங்கிச் சுழன்று கொண்டிருந்தது. மறுகையில் திரிசூலம். வயிறு வரை நீளும் ரப்பர் நாக்கு சிவந்து தூங்கியது. இரு தோள்களிலும் பச்சை நிற ஒளிக்கற்கள் பதித்த நாகாபரணங்கள் மினுங்கின. கழுத்தில் தக்கனின் தலைகளெனத் தூங்கிய கபால மாலை. மலைகளில் எதிரொலிக்கும் வெண்கலக் குரலில் எவரோ பாடிக் கொண்டிருந்தார்கள். நுழைய முடியாத புதர்களிலும் மலையின் ஆழங்களிலும் மூலைகளிலும் முடுக்குகளிலும் காலிடைகளாலும் பறையொலி அதிர்ந்து சுழன்று பரவியது. மெல்லிய மைம்மலில் என் கால்கள் அந்தத் தாளத்துக்கு அடவெடுத்தன. காமன் மலர்க்கணைகள் தொடுக்க வீரபத்திரன் உக்கிரமான முகத்துடன் அவன் முன் ஆடுகிறார். பச்சைப் பசுமையான காமன் உக்கிரச் சிவப்பான பத்திரன் முன் ஆடும் ஆட்டம். அடவுகள் கால்களில் துள்ளின.

சுற்றிலும் சனங்களும் இலக்கியவாதிகளும் நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். எங்கும் எவ்விடத்திலும் எழுத்தாளன் எழுத்தாளனே. நான் புகைத்துத் தள்ளியபடி கூத்தைப் பார்த்தேன். கூச்சலும் சிரிப்பொலிகளும் கலைந்து கிடந்தன. பெரிய விளக்குகள் பாய்ச்சிய அவ்விடத்தில் முகங்களைப் பார்த்தேன். மெலிந்தவை. வறியவை. சுருக்கம் படர்ந்தவை. இளமை மினுக்கம் கொண்டவை. சிறுவர்கள், குழந்தைகள், இளம் பெண்கள் என எல்லோர் முகங்களிலும் சிரிப்புப் பரவியிருந்தது.
அங்கு நிகழ்ந்து கொண்டிருந்த உக்கிரமான ஒரு கோரத் தாண்டவத்தை பொருட்டே இல்லாமல் நடப்பது போலப் பார்த்துச் சிரிப்பது போலிருந்தது.
எனக்கருகே குந்தியிருந்த ஒரு முதிய பெண்ணின் கைவிரல்களைக் கூர்ந்து பார்த்தேன். விரல்களில் பித்தவெடிப்பைப் போலக் கோடுகள். அவர் கைகளைக் கூப்பியபடி மெய்மறந்திருந்தார். அக்கூத்தில் தன் சடையை விரித்து உதிர்த்து எழுந்த சிவனை அவர் கண்டு கொண்டிருந்தார் என நினைத்தேன்.

கிழவனின் சிறுகதைகளில் தோன்றும் சாமானியர்கள் இவர்கள் தான். பெருங்கனவும் உக்கிரமும் தீவிரமும் பித்தும் அற்றவர்கள். இருநூற்றுச் சொச்சம் ஆண்டுகள் இந்த மலையை மத்தாக்கிச் சுற்றிய குருதியினர். அடிமைகள், கள்ளத் தோணிகள், தோட்டக் காட்டார்கள் என வரலாற்றின் பக்கங்களில் கடைசியாக கொத்தாக அள்ளப்பட்டு வந்தவர்கள். பிள்ளை குட்டிகள் குமருகள் பாட்டன்கள் பாட்டிகள் என்று கூட்டமாக தங்களது பலிமேடையை வெட்டிச் செதுக்கியவர்கள். குருதியுண்ணும் அட்டைகள் பலிமேடையின் நாக்குகளென மண்மேல் புரண்டு கொண்டிருக்கும் நிலத்தினர். காலில் சிலம்பென அட்டைகள் உறிஞ்சிக் கொண்டிருக்கும் பெண்ணின் காலைக் கிழவன் எங்கோ சித்தரித்திருப்பான். அந்தக் காட்சித் துண்டு கண்களில் தோன்ற வயிற்றைப் பிரட்டிக் கொண்டு ஓங்காளிப்பு வந்தது.

நான் கூட்டத்திலிருந்து பார்வையை விலக்கிக் கொண்டு கூத்து நிகழ்ந்த இடத்திலிருந்து கொஞ்சத் தூரம் நடந்து சென்று மறைவாகச் சிறுநீர் கழித்துக் கொண்டே மலைகளைப் பார்த்தேன்.
வயிற்றுப் பிரட்டல் அடங்கியது. மலையில் குகை போல நீண்ட சிறிய வீட்டின் வாசலில் ஒரு பெடியன் அமர்ந்திருந்தான். அவனிடம் தண்ணீர் கேட்டேன். அழுக்குச் சிவப்பு நிறத்தில் ஸ்வெட்டர் போட்டிருந்தான். தலையில் குஞ்சம் வைத்த குளிர்த்தொப்பி. பிளாஸ்ட்டிக் போத்தலில் தண்ணீர் தந்தான்.

“என்ன மாமா அங்கின நடக்கிது?” எனக் கேட்டான்.

“காமன் கூத்து. உனக்குத் தெரியாதா?”

“அது தெரியாதா எனக்கு.. அங்கன மிசனரி மண்டபத்துல. ஏதோ புத்தவெமெல்லாம் என்னு பேச்சு. கவர்மண்டு குடுக்கதா.. இல்ல தொரைமார் குடுக்கதா?”

நான் கொஞ்ச நேரம் எடுத்துக் கொண்டேன். வாசலில் அவனுடன் அமர்ந்தேன். அங்கிருந்து பார்க்கும் பொழுது துல்லியமான கண்ணாடியில் தோன்றுவது போல கூத்தரங்கு தெரிந்தது. சுற்றிலும் அடர்ந்த குளிர்.

“நீங்க சேர்மாரா?”

“இல்ல. எழுத்தாளன்”

“அப்பிடின்னா என்ன தொழிலு? எவ்ளோ சம்பளம் கெடைக்கும்?”

“சம்பளமெல்லாம் இல்ல. சும்மா தான். கதை, கவிதை, கட்டுரையெண்டு எழுதிறது. புத்தகம் போடுறது. சஞ்சிகை நடத்துறது” என்று சொல்லி விட்டு ஒரு கணம் தயங்கி “மானுடத்தை முன்னகர்த்துவதுக்காக” என்றேன்.

அவன் முழித்தான். சட்டென்று பொறி மின்ன “நீங்க தொண்டமான் தொரைக்கு செய்யிறியளா.. திகாம்பரம் தொரைக்கு செய்யிறியளா” எனக் கேட்டான்.

“தம்பி இது பாரதியார் செய்த வேலை” என்றேன்.

“இஸ்கூல் புக்கில பாட்டெழுதிற வேலையா.. அய்யே.. எவ்வளவு கூலி குடுப்பாங்க”

“கூலியெல்லாம் இல்ல.. சும்மா ஒரு இதுக்குத் தான். வரலாற்றில பெயர் நிக்க வேணும் இல்லையா.. இந்த மலையளப் போல” எனக் கையை விரித்துக் காட்டினேன். எங்கோ ஒரு திப்பிலி மரத்தின் உச்சிக் கொப்பிலிருந்து வெளவாலைப் போல தூங்கியபடி கிழவன் சிரிப்பது கேட்கிறது.

பெடியன் என்னைத் தேற்றுவது போல முகத்தை வைத்துக் கொண்டு “பரவாயில்ல. ஒங்களுக்கும் ஒரு நாள் கூலி ஒசத்திக் குடுப்பாங்க” என்றான்.

நல்லது என்று தலையாட்டிச் சிரித்தேன்.
வானில் பொன்னீல ஒளியுடன் மினுங்கும் நட்சத்திரங்களை பார்த்து விட்டு திரும்பி கூத்து நடக்கும் பகுதியைப் பார்த்தேன். நூற்றுக்கணக்கானவர்கள் கூடியிருந்தார்கள். உக்கிரமான கூத்தும் பாட்டும் பறையும் ஒலித்துக் கொண்டிருந்தது. அவர்களுக்குப் பின்னால் எங்கும் சூழ்ந்திருந்த இருளுக்குள் சுவர்கள் போல மலைகள் ஓசையின்றி இருள் கொண்டிருந்தன. நெடிய மரங்கள் காற்றில் ஆடின. அதற்கும் அப்பால் கரிய வானில் நட்சத்திரங்கள். சில மேகத்திரள்களின் ஓட்டமும் நடையும். அதற்கும் அப்பால் அகண்ட பிரபஞ்சத்தின் கூத்தரங்கு.

இரண்டாம் நாள் விடிந்தது. எழுந்து அறை யன்னலைத் திறந்தேன். பழகியவை போல தேயிலைச் செடிகள் தளிர்த்து நின்றன. வாசலில் சதீஸ் கதவை மோதித் திறந்து கொண்டு வந்தார். நெற்றியில் கையைப் பொத்தியிருந்தார். விரலிடுக்குகளால் இரத்தம் சீறிச் சிந்திக் கொண்டிருந்தது.

“இடிச்சுப் போட்டனடா.. ஹொஸ்பிட்டல் போக வேணும்” எனக் கத்தினார்.

நான் அவரைப் பிடித்துக் கொண்டு சேர்ட்டைப் போட்டபடி மேலே ஏறி ஓடினேன். திலகரின் வெள்ளைக் கார் நின்றது. முன்னால் எம்பியென்று ஒரு பதாகையும் கண்ணாடிக்குள் இருந்தது. திலகர் உடனே தன் ட்ரைவரை அழைத்து ஹொஸ்பிட்டல் போங்க என்று அனுப்பினார். மலைப் பாதையில் வழுக்கிச் செல்வதைப் போல கார் மிரண்டு கொண்டு சென்றது. நன்கு பழகிய கைகள் என நம்புவதைத் தவிர எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஹொஸ்ப்பிட்டல் வாசலைக் கடந்து உள்ளே நுழைந்தது கார்.

எளிமையான நீள வீடு போன்ற ஹொஸ்பிட்டல். மரக்கதிரைகளும் பச்சைக் கூரையுமாக வெள்ளைக்காரர் காலத்தில் கட்டியதாய் இருக்க வேண்டும். முன்னால் அழகிய பூந்தோட்டம் அமைத்திருந்தார்கள்.
கார் வந்து நின்ற வேகத்தில் முன்னால் இருக்கையில் அமர்ந்திருந்த இரண்டொருபேர் எழுந்து நின்றனர். ஒரு வயதான பெண் கண்களைச் சுருக்கி என்னைப் பார்த்தார். சதீசை உள்ளே கூட்டிக் கொண்டு போனார்கள்.

நீளமான வெண்ணிற மரக்கதிரையில் அமர்ந்தேன். இனிப் பிரச்சினையில்லை என மனம் அடங்கியது. இனிய குளிரும் அழகும் கொண்ட இடம். சிறிய சாடிகளில் மலர்ச்செடிகளைத் தூங்க விட்டிருந்த முன் வராண்டாவில் நோயாளிகள் அமர்ந்திருந்தனர். முன்னால் மலையின் மேலே விலகாத பனி. அதனுள் கசிந்து கொண்டிருக்கும் சூரியப் பொன்னொளி.

“நீங்க மந்திரியா மாத்தையா?” என்றொரு குரல் கேட்கவும் திரும்பிப் பார்த்தேன். முதிய பெண் சுருங்கிய கண்களை விலக்காமல் பார்த்துக் கொண்டே மெல்லிய கூனலுடன் கேட்டார்.

“இல்ல” என்றேன்.

“அப்ப அவர் தான் மந்திரியா” என்றார்.

“இல்ல. இது திலகற்ற கார். நாங்கள் எழுத்தாளர்கள். இலக்கியச் சந்திப்புக்கு வந்தம். யாப்பாணம்” என்றேன்.

“அப்ப அவரா இப்ப மந்திரி” எனத் திரும்பவும் கேட்டார்.

“இல்ல அவர் எம்பி தான்” என்றேன்.

“ஓ” என்று விட்டு “நீங்க யாப்பாணமா, எங்க இஸ்கூல்ல ஒரு வாத்தியாரைய்யா இருந்தவரு. யாப்பாணம் தான். சுருட்டுப் புடிப்பாரு. நல்லெ மனுசன். எங்க புள்ளைங்க அவருக்கிட்ட படிச்சாங்க.. இப்ப கொழுந்து பறிக்கிறாங்க” என்று சொல்லிக் கொண்டே போனார். எல்லா ஊரிலும் கிழவிகளுக்கு இது தான் வழமையென எண்ணினேன். அவர் என் முன்னால் நின்று கொண்டிருந்தது சட்டென்று உறுத்தவும் “இருங்க அம்மா” என்றேன்.

“இல்லீங்க… நீங்க படிச்சவங்க.. நா இப்பிடியே இங்க நின்னுக்கெறன்” என்றார்.

ஒரு எழுத்தாளன் சாமானியனை மதிக்க வேண்டியவன். அதிலும் பெண்களை கண்டிப்பாக மரியாதையுடன் நடத்த வேண்டியவன். கருணை கூர வேண்டியவன். அவரை வற்புறுத்தி அமரச் செய்தேன்.

“எங்க மவன் வீடு கெட்டி மேல பேயிட்டான். நா இன்னு லயத்தெல தான் கெடக்கிறன். அவரும் போயிட்டாரு. கொழுந்தெடுக்கப் போவணும். என்னையப் பாத்திட்டு விட்டுப்புட்டாங்கன்னா போயிடலாம். நீங்க கொஞ்சம் சொல்லப்புடாதா” என்றார்.

“சொல்லுறன் இருங்கோ” என்று விட்டு எழுந்து போய்ப் பார்த்தேன். சதீஸிற்கு தையல் போட்டபடி இருந்தார்கள்.

முடிந்து வெளியே வந்ததும் அவரைத் திரும்பிப் பார்த்தேன். நானொருவன் வந்து, நின்று, செல்வதையே அறியாதவர் போல மலையை வெறித்துப் பார்த்தபடி சுருங்கிய கண்களுடன் அமர்ந்திருந்தார். நேர்ஸ் வந்து “செல்லாயீ..” எனப் பெயர் சொல்லிக் கூப்பிட்டதும் குதித்து எழுந்து போனார். கார் திரும்பவும் மலையேற்றம் கண்டது. அங்கிருந்து கீழே பார்த்த போது எல்லாம் சிறியதாய்த் தெரிந்தன. சிறிய வீடுகள். சிறிய பாதைகள். புள்ளியாய் நகரும் மனிதர்கள். வாகனங்கள். தேயிலைத் தோட்டங்கள் மட்டும் மலைகளை நிறைத்துப் பரந்திருந்தன. எழ முடியாத முதிய ராட்சதப் பறவையொன்றின் இறக்கையைப் போல.

இலக்கியச் சந்திப்பு முடிந்து விடைபெற்றுக் கொண்டிருந்தார்கள். பஸ்ஸைப் பிடிக்க வேண்டும். எல்லோரும் அவசரமாக பயணப்பைகளை எடுத்துக் கொண்டு கார்ப்பெட் வீதிக்கு ஏறினோம். மலைகளின் பின்னால் சூரியன் அணைந்து கொண்டிருந்தது. நாங்களிருந்த விடுதி அறைகளைப் பார்த்தேன். வராண்டாவின் விளிம்பில் காதில் மயிர்கள் சுருண்டிருக்க சொலமன் நாங்கள் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தார். இரண்டு நாட்களுமே புன்னகை மாறாமல் இருந்த ஒரே சீவன் அவர் தான். என்னை அவரது கண்கள் கண்டு புன்னகைத்தன. கையை ஆட்டினேன். அவரும் திரும்ப ஆட்டினார். பையை மோகனிடம் கொடுத்து விட்டு இறங்கி ஓடினேன். “அடேய் பஸ் வரப் போகுதடா” என்ற கூவல் பின்னால் கேட்டது. சரிந்து ஓடி அவரை நெருங்கினேன். நூறு ரூபாய்த் தாளை எடுத்து பொக்கெற்றுக்குள் வைத்து விட்டுப் “போயிற்று வாறன் அய்யா.. பிறகு பாப்பம்” என்றேன். முகமெல்லாம் சிரிப்பாகத் தலையாட்டியவர் நெடுங்காலம் பழகிய பழக்கம் போல வலக்கையை சல்யூட் அடிப்பது போல நெற்றியில் வைத்து “சலாங்கையா” என்றார். சிரித்துக் கொண்டே மேலே ஏறி பஸ்ஸைப் பிடிக்க ஓடினேன்.

*

மலையகத்தின் மாபெரும் கலைஞன் தெளிவத்தை ஜோசப் மறைந்தார் என்ற தகவலை திலகர் முகநூலில் போட்டிருந்தார். நான் கிழவரை வெகுகாலம் மறந்திருந்தேன். கொழும்பு பெரிய ஆஸ்பத்திரியில் அரசமரத்தின் கீழ் நானும் அப்பாவும் அமர்ந்திருந்தோம். தம்பியின் காலில் ஏற்பட்ட கான்சரினால் அவனது வலக்காலை முழங்காலுக்கு மேற்பகுதியுடன் துண்டிப்பதற்கான சத்திரசிகிச்சை நாளை. கையில் கோயில் நூல்களும் வீபூதியும் கட்டிய பேப்பர் சரையொன்றை பிடித்தபடி அப்பா வழிந்தோடும் சாக்கடை வழியைப் பார்த்துக் கொண்டிருந்தார். முகம் சற்று அதைத்தது போலிருந்தது.

“ஒரு நாள் அனுப்புவம். காலோடையே காப்பாத்தலாம்” என்றார்.

“மந்திரம் தந்திரமெல்லாம் ஏலுமெண்டால் ஏனிங்க வைச்சிருக்கிறம். விடுங்கோ” என்றேன்.

“இல்லையடா.. இவ்வளவு தூரம் வந்திட்டம். காலில்லாமல் என்ன செய்யிறது. ஒருக்கா?”

“இல்லை.. நீங்கள் என்ன சொன்னாலும் அது ஏலாது. எனக்கு ரெண்டு நாளில போகணும். லீவு பிரேக் பண்ண வேணும்”

“ம்ம். தங்கச்சின்ர பிரண்டின்ற அப்பா வந்து நிப்பார் எண்டு சொன்னாள். இங்க பேக்கரியில நிக்கிறாராம். போன மாசமும் அவர் தான் நிண்டவர். இவனுக்கும் அவரைப் பிடிச்சிருக்கு”

“ம்ம்..”

அமைதியாக இருந்தோம். கறுத்த உரமேறிய உடலுடனும் முகம் நிறையச் சிரிப்புடனும் சுடலை மாடன் வந்தார்.

“நாந்தாங்க சொடலை மாடன்” என்றார்.

காதில் சுருள் மயிர்கள் நீண்டிருந்தன. சொலமனின் ஏதோ ஓர் அம்சம் அவரிலிருந்தது. முகமா சிரிப்பா தெரியவில்லை.

“அப்பா.. கவலைப் படாதீங்க. புள்ளயக் காப்பாத்திபுடலாம்” என்றார்.

“என்ன செய்ய. அது தான் அவன்ர காலமெண்டா நாங்க என்ன செய்யேலும்”

நான் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரே போல சறமும் சேர்ட்டும் முகங்களும். அண்ணனும் தம்பியும் போல.

“நீங்க வேலைக்கு இப்ப கொஞ்ச காலம் தான் போறீங்கன்னு தங்கச்சி சொல்லினா. அப்பாக்கிட்டையும் போறதில்லையாம். ஏதோ புக் எழுதிறீங்களாம் எண்டு மக சொன்னா. புக்கு காசு வருமா தம்பீ.. வேலைக்கு போய் ஒழச்சாத் தானே குடும்பம் வெலங்கும்.

நான் சொல்லப்புடாது தான்.. ஆனா நீங்களும் எனக்கு ஒரு மவன் மாதிரித் தான்.. தம்பியப் பாத்தீங்கல்ல. என்ன சொல்லுறதுன்னே தெரியல்ல.. அருமையான புள்ள. அவனுக்கு போய் உப்பிடி ஆயிருச்சே”

“ம்ம்” என்றேன்.

சத்திரசிகிச்சை நடந்து கொண்டிருந்தது. வாசலில் அமர்ந்திருந்தோம். கையில் சாப்பாட்டுப் பார்சல்களுடன் சுடலை மாடன் வந்து கொண்டிருந்தார். போறணை வெக்கையில் கசங்கிய சேர்ட்டும் நீலச் சறமும்.

“தம்பீ.. நீங்க கொஞ்சம் ஒறங்குங்க. அந்திக்கு வாங்க. நா அதுவர நின்னுக்கெறன்”

வைத்தியசாலை வராண்டாவில் கூட்டமில்லை. சாப்பாட்டை எடுத்து அப்பாவும் நானும் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். சுடலை மாடன் ரகசியமாக வெற்றிலையை மடித்துப் போட்டார். சாப்பிட்ட பின் அப்பாவுக்கும் கொடுத்தார். இருவரும் சப்பிக் கொண்டே கதைத்துக் கொண்டிருந்தார்கள். தெய்வமும் காலமும் ஆடும் நடனத்தை இரண்டு சாமானியர்கள் நடித்துக் கொண்டிருப்பதைப் போல.

அப்பா கொஞ்சம் படுக்கப் போறன் என்று சொல்லி விட்டு உடுப்புப் பையைத் தலையணையாக்கி நீண்ட மரக்கதிரையில் படுத்து விட்டார். நான் வாசலுக்கும் வராண்டாவிற்குமாக நடந்து கொண்டிருந்தேன். தங்கச்சியும் அவரது மகளும் வர எழுந்து சென்று கதைத்தார். தங்கச்சியை “கவலப்படாதீங்க புள்ள.. தெய்வமொண்டிருக்கு” என்றார். அவள் கோணலாகச் சிரித்தாள்.

மூன்று மணித்தியாலங்கள் கடந்தன. தம்பியை வெளியே கொணர்ந்தார்கள். காலில்லாத அவனது முகத்தைப் பார்த்தேன். வாயில் செயற்கை சுவாசக் குழாய் பூட்டியிருந்தார்கள். சுடலை மாடன் ஓடி வந்து அவனைப் பார்த்துச் சிரித்தார். “எப்பிடி மகன் சொகம்” என்று பகிடி விட்டபடி கண்ணைச் சிமிட்டினார். அவன் அவரைப் பார்த்து வெற்றியென்பது போல கைச்சைகை காட்டினான். அவரும் திருப்பிக் காட்டி “சொன்னனில்லையா புள்ள. மனுசன் எப்புடியெல்லாமோ வாழுறான். அவனுக்கென்ன கொறை. நாங்கெல்லாம் இருக்கமில்லையா” என்றார். தங்கச்சி சிரித்தாள்.

அவனை வார்ட்டிற்கு மாற்றினார்கள். நானும் அவரும் அரசமரத்தின் கீழ் அமர்ந்திருந்தோம். அப்பாவும் தங்கச்சியும் தொட்டலங்காவிலிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பிற்கு திரும்பி விட்டார்கள். குப்பைகள் மலை போலக் குவிந்து கிடக்கும் காட்சிக் கோணத்திலமைந்த அடுக்கு மாடி வீடு. கொட்டகலவின் வைத்தியசாலையை நினைத்துக் கொண்டேன். வெள்ளைக்காரன் இயற்கையின் ஒரு பகுதியாக கட்டடங்களை கற்பனைச் செய்கிறான். நாங்கள் ஒரு குப்பை மலையை தேர்ந்தெடுக்கிறோம்.

வெற்றிலையை வாங்கிப் போட்டபடி “எத்தனை வருசமா தம்பி நீங்கள் புக் எழுதிறீங்க”

“இப்ப தான் கொஞ்சம் எழுதியிருக்கிறன்”

“ஜோசப் அய்யான்னு ஒருத்தர் தெரியுமா ஒங்களுக்கு”

“தெரியும். அவரைச் சந்திச்சிருக்கிறன்”

“அய்யாவின்ர கதை மாதிரி இருக்குமா ஒங்களது? அவரு சனத்திண்ட கஸ்ரத்த எழுதுவாரு. நான் கொஞ்சம் கதையள் பேப்பரில வாசிச்சிருக்கிறன். எங்கட ஊர்ப்பக்கம் தான்”

“ம்ம். அவற்ற எந்தக் கதை உங்களுக்குப் பிடிக்கும்?”

“பெயரெல்லாம் தெரியாது தம்பி.. ஒரு கதையில அம்மா பத்தி எழுதியிருந்தார். அப்பிடியே எங்கம்மா மாதிரி இருக்கும். மனுசி சீவன் போகேக்கையும் ஒழைச்சுக்கிட்டு தானிருந்தா.. நம்ம புள்ளைங்களாவது படிச்சு வரட்டும்”

“ம்ம்.. வேற”

“இன்னொரு கதையில தீவாளிக்கு போறது பத்தி.. அப்பெறம் படிக்கட்டை எண்ணி எண்ணி நடக்கிறது பத்தி.. தேயிலைக் குச்சியால பல்லுத் தேய்க்கிறது.. பிச்சைக்காரனுக்கு ஒத்த ருவா போடுறது.. பஸ் கதை.. எல்லாம் நம்ம பாத்த மாதிரி கண்ணுல வரும். வாழ்ந்த வாழ்க்கையில்ல.. எப்புடி மறந்து போகும்”

“அவர் நேற்றுத் தான் செத்தவர்” என்றேன்.

டக்கென்று எழுந்து கொண்டார். முன்னும் பின்னும் நடந்தார். ஓடிப்போய் விகாரையின் முன் கிடந்த நீல அல்லியொன்றை எடுத்து புத்தருக்குச் சாற்றினார். கும்பிட்டார். திரும்பி வந்து அமர்ந்தார்.

“அவரை அவ்வளவு பிடிக்குமா” என்றேன்.

“நம்மளப் போல அவரும் அப்பாவியாத் தான் இருப்பாரு. அவரு கதையில இருக்கிறது நாந்தான். அப்பிடியே கண்ணாடியப் பிடிச்சு வைக்கிற மாதிரி. அவரு தொடர் கதையொன்னு படிச்சேன். அதில ஒருத்தன நாலாம் மாடிக்கு கொண்டு போயிட்டாங்க.. அவன் படுற பாட்டை எழுதியிருப்பாரு. எல்லாக் கவலையிலெயும் நமக்கொரு சிரிப்பு வேண்டியிருக்கு. அவரு அப்புடி எழுதுவாரு. இப்ப தம்பிய பாத்தீங்க தானே. அவனுக்கு என்ன வேதனையா இருக்கும். மருந்து போடப் போட காயம் ஆறுற வரைக்கும் அந்த நோவில்லாம ஒரு எரவு தாண்டுவானா.. ஆனா சிரிச்சான் பாத்தீங்களா. அது மனுசனுக்கு உள்ள இருக்கிறது. சத்தியமாவே ஒருத்தனுக்கு வலிச்சுதுன்னா அவனுக்கு ஒரு சிரிப்பு வருமே. அது தான் நமக்குள்ள இருக்கிற மருந்து. வலிக்கெறத பழகிற மாதிரித் தான் சிரிக்கிறது பழகிறதும். அய்யாவின்ர எழுத்தில இருக்கிற சிரிப்பு அது தான். வலிக்கெறவன் சிரிப்பு… இன்னுஞ் சொன்னா.. அந்த வலிய அவனால கடக்கவும் ஏலா.. அத வேணாம்னு தடுக்கவும் ஏலா.. அதான் வாழ்க்கை எண்டு முடிச்சு விட்ட எங்களெ மாதிரி மனுசருக்கு சிரிச்சுக் கொண்டே சாகத் தெரியும். அது தான் தம்பி எங்கெ கத. நீங்க அத எழுதணும். பாவப்பட்ட மனுசர்மாரின்ர கதைய எழுதிறது ஒரு கொடுப்பினை. எழுத்து எல்லாருக்கும் வராது தம்பி. அது ஒரு கெறக்கம். அதிலையே கெடக்கனும். அதிலையே எரியணும். அய்யாவ நான் பாத்ததில்ல. ஆனா அவரு எழுத்தில அவரப் பாத்திருக்கன். அது அப்பிடித் தான். அதிலையே கெடந்து அதிலையே எரிஞ்சா வாறது.

ஒங்களுக்கு அவர எப்புடி பழக்கம்”

“ஒரு கூட்டத்தில சந்திச்சனான். மலையக மக்களைப் பற்றி ஒரு விவாதம்”

“என்ன சொன்னாரு”

“எங்களெ ஏத்துக்கிட வேணாம். புரிஞ்சுக்கங்கன்னு சொன்னார்”

சுடலை மாடன் உற்சாகமாக கையைத் தட்டி “ஆ.. பாத்தீங்கல்ல. திருக்குரல் மாதிரி ரெண்டே வரியில சொல்லிப்புட்டாரு. சரஸ்வதி சும்மா வந்து ஒருத்தன் நாக்குல குந்த மாட்டா. அவனுக்கு நாக்கு வெள்ள தாமரைப் பூ மாதிரி இருக்கெனும்”

“ம்ம்.. சரி தான்”

அன்று விடியும் வரை அவரெழுதிய மிச்சக் கதைகளைப் பற்றியும் அவருடைய இலக்கிய இடத்தைப் பற்றியும் சுடலை மாடனுக்குச் சொல்லிக் கொண்டிருந்தேன்.
இரவு நேர்ஸ் வந்து சத்தம் போடாதீர்கள் எனக் கூச்சலிட்டார்.

“சலாங்கம்மா..” எனச் சொல்லி நேர்ஸைப் பார்த்து சல்யூட் அடித்தார் சுடலை மாடன்.

நேர்ஸ் கோபமாக முகத்தை வைத்துக் கொண்டு திரும்பிச் சென்றார்.

“அய்யான்ர கதைகளில வாசிச்சுத் தான் சலாங்கையா எண்டால் என்னெண்டு தெரிஞ்சது” என்றேன்.

“என்ன நெனக்கிறீங்க நீங்க. இந்தக் கையால எத்தன மொற சலாம் போட்டிருக்கிறன் தெரியுமா? சலாம் போடாட்டி ஒரு மலைநாட்டு மம்புழு இந்தப் பாம்புகளோட வாழ ஏலுமா?”

“அது உங்களுக்கு அவமானமா இல்லையா?”

“அது ஒரு வணக்கம் தானே தம்பீ.. ஒரு அன்பு.. மரியாத.. ஆனா நமக்கு திருப்பி அது கெடைக்காது. வைக்கிறதோட சரி. பூவத் திருப்பி சாமி நமக்கு நீட்டாது மாதிரி. அவனுக நம்மள ஆண்டு பழகிட்டானுக. நாம சலாம் போட்டு பழகிட்டம். இப்ப அது ஒரு பகிடிக் கதெ. ஆனா ஒண்ணு தம்பி.. இன்னிக்கு வரையிலும் எவனும் எனக்கு சலாம் போட்டதில்ல. நாளைக்கு எம்மக கோர்ட்டுக்குப் போகேக்க பொலிஸ்காரனுகள் சலாம் வைக்கனும். அவ ஒரு நாள் ஜட்ஜ் ஆகி எல்லாரையும் சலாம் போட வைக்கணும். அதுக்குத் தான் நானும் இப்ப சலாம் போட்டு பழகிறன்”

“நல்ல ஆசை தான்”

“இருக்காத பின்ன.. எத்தன தலமொற காத்துக்கிட்டிருக்கெறது. லயத்துக் கோழி மலெக்கு மேலே பறக்காதுன்னு சொன்னவனுக முன்னாடி ஒரு புள்ளயாவது எழுந்திருச்சு நிக்க வேணாமா”

“இருக்கட்டும். நானும் அவாக்கு ஒரு சலாம் போடுறன். சலாங்கம்மா” என்று சொல்லி சல்யூட் அடித்துக் காட்டினேன். அவர் கெக்கட்டம் போட்டு சிரித்தார். பிறகு அயர்ந்து உறங்கிப் போனார்.

நான்கு நாட்கள் நானும் சுடலை மாடனும் தங்கச்சியின் வீட்டுக்குப் போய் குளித்து முடித்து திரும்பி வருவதை வாடிக்கையாக்கியிருந்தோம். அவர் நள்ளிரவில் எழுந்து பேக்கரிக்கு போய் விட்டு மதியம் திரும்புவார். மல் பாண் கொண்டு வந்து தம்பிக்குக் கொடுப்பார். அவன் ஆசைக்கு ஒரு கடி கடித்து விட்டு வைப்பான். புள்ள சாப்பிட்டான் என்று வார்ட்டில் இருந்தவர்களுக்கு சொல்லிக் கொண்டு போவார். ஒரு வாரத்தில் வீட்டுக்குப் போனோம்.

தொட்டலங்காவிலும் அவருக்கு சினேகிதங்கள் உண்டாகின. பதினெட்டாவது மாடியில் எங்கள் வீடு. இருநூறு வீடுகளாவது ஒரு தொகுதியில் இருக்கும். லிப்டிற்கும் சுடலை மாடனுக்கும் தினமும் போர் தான். இளம் பச்சை முட்டாக்கு போட்ட பர்மீனா தான் அவருக்கு உதவுவாள். இரிங்க மாமா என்று சொல்லி நம்பரை அழுத்தி விடுவாள். கீழிருந்து மேலே ஜம்மென்று பறந்து வருவார் சுடலை. மேலே இருந்த மல்லிகா ஆச்சியுடன் பாக்குத் தோழரானார்.

“ஒனக்கு கருப்பு தாண்டீ பர்மீனா அழகு. பெரிசா வந்தப்புறம் உந்த கிரீமெல்லாம் ஒனக்கு தேவைப்படாது”

“வளந்தாப் பிறகு நான் உன்னைய மாதிரி கருப்பு பூதம் போல ஆயிருவனா மாமா..” எனச் சொல்லி சிணுங்கிக் கொண்டிருந்தாள்.

நான் வருவதைக் காட்டி “அந்தா அவரப் பாத்தியா நீயீ.. பெரிய எழுத்தாளர். அவருக்கிட்ட கேப்பமா” என்றார்.

அவள் துள்ளிக் குதித்து மறுத்தாள்.

“ஏங்க தம்பீ.. இவ அழகு தானே” என்றார்.

நான் தலையைச் சரித்து யோசித்து “வடிவு தான்” என்றேன்.

“பாத்தியா.. சிந்திச்சு சொன்னாலும் உன்னழக கொறக்க முடியா” என்றார்.

பர்மீனா சிரித்து கொண்டே ஓடினாள். தொட்டலங்காவின் உயர்ந்த பகுதியில் நின்று குப்பை மேடுகளைப் பார்த்தேன். சட்டென ஒரு பார்வையில் மலைகள் போலவே தோன்றுபவை. அடுக்குமாடி மக்கள் தான் அங்கு வேலை பார்ப்பவர்கள். குப்பையில் புழுக்களைப் போல.

இரவும் வீட்டுக்குள் அனல் காய்ந்தது. இரண்டு சிறகுகளில் சீலிங் விசிறி சாய்ந்தாடிக் கொண்டிருந்தது. மல்லிகா ஆச்சியும் சுடலை மாடனும் தம்பியுடன் கதைத்துக் கொண்டிருந்தனர். கொஞ்ச நேரத்தில் ஆச்சி வீட்டுக்குப் போனார். தம்பி உறங்கி விட்டான். சுடலை மாடன் வெளியே வந்து நின்று என்னைப் பார்த்தார்.

“குப்ப மலன்னு ஒரு கதை எழுதுங்க” என்று சொல்லிச் சிரித்தார்.

“எனக்கு கனவில மலை உச்சிக்கு மேல ஆடுற காமனும் பத்திரனும் தான் வருகினம்” என்றேன். மிகுதியையும் சொல்லி முடி என்பதைப் போலக் காத்திருந்தார்.

“ஜோசப் ஐயாவின்ர கதைகளில ரெண்டும் இருக்கு. சீண்டலும் அழகுமா பச்சையா வாற காமன். அநீதிக்கு எதிரான கோபமா பத்திரனா வாறது இன்னொன்று. அது ரெண்டுமா அவர் மலைக்கு மேலே நிண்டு ஆடுறார். ஜீன்ஸும் சேர்ட்டும் போட்டு, நீள நாக்கும் அம்பும் வைச்சுக் கொண்டு. சலங்கை துள்ள.. தலைமயிர் சிலம்ப”

“நல்ல கற்பனை ஒங்களுக்கு. அவர நான் நெறய படிச்சது கெடயாது. ஆனா நீங்க சொல்லுறது சரியாத் தானிருக்கும். அவரு அது ரெண்டு பேரு மட்டுங் கெடையாது. அவரு ஆடுற மலையும் அவரு தான்.

போறணையில நிக்கேக்க ஊரு குளிர தான் நினெச்சுப் பாப்பன். ஆனா போறணையில நிக்கேக்க நான் பாண் மட்டுமில்ல. அதில எரியிற நெருப்பும் நான் தான். அப்ப புள்ளங்கள தான் நெனச்சுப்பன். அதுக சொகமா ஒரு வாழ்க்கை வாழ்ந்தா செரின்னு”

“ம்ம்ம்…”

தம்பியின் அறைக்கு போய் பார்த்து விட்டு வந்தவர். “நா வெளிய போணும். போய்ட்டு வந்திடெறன்” என்று சொல்லி விட்டு லிப்டை நோக்கிப் போனார். நம்பரை அழுத்தி விட்டேன். கேபிள்கள் உரசுமொலியுடன் லிப்ட் கீழே போனது. சுடலை மாடன் நடந்து போவது தெரிந்தது. வீதி விளக்குகள் ஒளி பாய்ச்சிக் கொண்டிருந்தன. அருகே குப்பை மலை. வளைந்து ஆறு போலக் கடந்து செல்லும் பாதையால் அவரைப் பார்த்தேன்.

அந்தக் குப்பை மலைகளின் மேலே கிழவரை நினைத்துப் பார்த்தேன். ஆத்திரமும் வெறியுமாக அந்தக் குப்பை மலையை எரித்துக் கொண்டு பாய்ந்து வரும் முதுபன்றியாக.. கட்டிலை எரித்த அன்னையின் புதல்வனாக.. கட்டித் தலைகீழாகத் தூங்கும் மனிதரின் குருதியை அள்ளிப் பூசியவனாக.. அப்பாவியாக அந்தக் குப்பை மலையில் எரிந்து கருகும் ஒரு பிரேதமாக.. வெட்டிய மீனுக்குள்ளிருந்து பிசுங்கி விழும் ஒற்றை விரலைக் கண்டு அலறும் மகளாக.. கிழவர் மலைகளை எரித்தபடி வளர்ந்து கொண்டிருந்தார்.

திரும்பி வந்து என் கதையொன்றைத் திருத்திக் கொண்டிருந்தேன். கதவு தட்டலோசை கேட்டது. சுடலை திரும்பியிருந்தார்.

“வேலைக்கு போகேல்லையா?” என்றேன்.

“போவணும். இந்த காத்தாடிய மாட்டி விட்டுட்டு போலாம்னு வந்தன். என்ன வெக்கை காயுது உள்ள.. போறண மாதிரி.. அவனுக்கு ஒறக்கம் புடிக்குமா.. வாங்க மாட்டிரலாம்”

அவரே கதிரையில் ஏறி நின்று மின்விசிறியைக் கழற்றினார். தம்பி அவரைப் பார்த்துக் கொண்டிருந்தான். கன்னத்தில் வழிந்த வியர்வையை துடைத்துக் கொண்டு புதிய மின்விசிறியைக் கொழுவினார். சுவிச்சைப் போட்டு அது சுழல்வதைப் பார்த்ததும் சிரித்தார். தம்பி கண்களை மூடிக் கொண்டிருந்தான். விழிமணிகளில் அருட்டலிருந்தது. சுடலை மாடன் தன் பையை எடுத்தார். வெளியே வந்து லிப்டினை நோக்கிச் சென்றார். பர்மீனாவின் பச்சை முக்காடு கம்பியில் காய வைக்கப்பட்டிருந்தது. லிப்டினில் திரும்பி நின்று கொண்டு நம்பரை அழுத்தினார். கதவு மூடுவதும் திறப்பதுமாக அவருக்கு விளையாட்டுக் காட்டியது. அவர் மீண்டும் இரண்டு முறை நன்றாக அழுத்தினார். கதவு இம்முறை மூடத் தொடங்கியது. நான் ஒளியில் முகத்தைக் காட்டி அவரைப் பார்த்தேன். சிரித்தபடி கையசைத்தார். வலக்கையை நெற்றியில் வைத்து “சலாங்கையா” என உதடுகள் முணுமுணுக்க ஒரு சல்யூட் அடித்தேன். அவர் பூரிப்பாகச் சிரிப்பது பாதியாகத் தெரிய லிப்ட் மூடிக் கொண்டது.

நன்றி – தளம்

வாசித்தவர்கள் : 41

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு

வாசிக்க

  • அஞ்சலி : நன்மிளிர் (2,148)
  • சுரண்டலெனும் கலை: எதிர்வினையும் பதிலும் (1,991)
  • காதலின் முன் பருவம் (1,965)
  • சராசரிகளுடன் உரையாடுதல் (1,897)
  • விடுதலையில் கவிதை (1,876)
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு
©2026 Kirishanth | Design: Newspaperly WordPress Theme