யூமா வாசுகியின் தீராத கணக்கு கவிதையை இன்று திரும்பவும் வாசித்தேன். நண்பரொருவர் முகநூலில் பகிர்ந்திருந்ததாக சொன்னார். எத்தனையோ நாள் இந்தக் கவிதையில் வெளிப்பட்டிருக்கும் சத்தியாவேசம் என்னை நெக்குருகச் செய்திருக்கிறது. நினைவுகளின் மடிப்பில் அவ்வப்போது எழுந்து வந்து தொந்தரவு செய்வதுண்டு. கடைசி வரிகளை திரும்பத் திரும்ப மனது சொல்லிக் கொண்டேயிருக்கும்.
கு. அழகிரிசாமியின் ராஜா வந்திருக்கிறார் கதையின் உச்சமான ஒரு உணர்நிலையின் இன்னொரு வடிவம் இந்தக் கவிதையில் நிகழ்ந்திருக்கிறது என்று நினைத்ததுண்டு. ஆனால் ஒரு உக்கிரமான சன்னதம் போல. திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டிருக்கிறேன். எத்தனை தீவிரமாக மானுடரை நேசித்திருந்தால் இந்தச் சொற்கள் இத்தனை ஆவேசத்துடன் நாவில் உதித்திருக்கும்.
![]()
*
தீராத கணக்கு
எதையோ நினைத்தபடி
எங்கோ சென்றுகொண்டிருக்கும்போது
சட்டென்று உன் குழந்தையுடன் வழிமறித்து
பிச்சை என்று கேட்டாய்.
தெய்வமே அந்தக் குழந்தை
என்னமாய்ச் சிரித்தது…
அதற்கு மாறாக நீ என்
சட்டையைப் பிடித்து உலுக்கியிருக்கலாம்
ஓரிரவில் சாக்கடையோரம்
கொசுக்கள் குதறும் வதையில்
துடித்துப் புரளும் குழந்தையைக் காட்டி
அய்யா என யாசித்தாய்
உறக்க மயக்கத்தில் அழச் சக்தியற்று அது
எவ்வளவு ஈனமாய் சிணுங்கியது…
அதற்குப் பதில் நீ என்னை
அடித்துப் பிடுங்கியிருக்கலாம்
பஸ்ஸுக்குக் காத்திருக்கும் கூட்டத்திடையில்
உன் குழந்தை என் கால்களைத் தொட்டு
கை மலர்த்தும்படிச் செய்தாயே,
ஒ பரிதாபமாய் முகம் காட்ட அது அப்போது
எவ்வளவு பாடுபட்டது…
அதைவிடவும் நீ என்னை
முகத்தில் உமிழ்ந்து கேட்டிருக்கலாம்
இறுகிய முகத்தின் கண்ணீர்த் தடத்துடன்
அனாதைக் குழந்தையை அடக்கம் செய்டயவென்று
இரந்து நிற்கிறாய் இன்று
புவி சுமக்க முடியாத பாரமாக இது
எவ்வளவு அமைதியாகக் கிடக்கிறது…
அய்யோ அய்யோ என்று
பதறி அழிந்தபடியே
ஒவ்வொரு அடியையும் எடுத்துவைத்து
உன்னைக் கடந்து போகின்றேன்
தாயே என்னைக் கொன்று பழி தீர்க்க
ஏன் உனக்குத் தெரியவில்லை.
யூமா வாசுகி

