புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த ஜப்பானியச் சிறுகதையொன்றை நண்பரொருவர் அனுப்பியிருந்தார். மணியோசை எனும் தொகுப்பில் உள்ள மணியோசை எனும் கதையது. அக்கதை, மானுட சுபாவம் குறித்தான மையச் சிக்கலொன்றை தெறிப்புப் போலச் சென்றடைகிறது.
எளிமையான ஒரு பேய்க்கதை. ஒரு சாமுராய் வீரன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் தன் மனைவிக்கு ஒரு வாக்களிக்கிறான். அவளது மரணத்துக்குப் பின் யாரையும் திருமணம் செய்ய மாட்டேன் என உளமார்ந்து சொல்கிறான். அவள் தான் இறந்த பிறகு எங்கள் வீட்டுத் தோட்டத்திலேயே எனக்குக் கல்லறை கட்டுங்கள் என்று சொல்கிறாள். அதற்குள் புத்த பிட்சுக்கள் வைத்திருப்பது போன்ற மணியையும் வைத்து என்னை அடக்கம் செய்யுங்கள் என்கிறாள். அப்படியே ஆயிற்று.
சாமுராய் வீரனுக்கு வாரிசு வேண்டுமென்றும் பித்ருக்களுக்கு கடன் செய்ய வேண்டுமென்றும் இன்னொரு திருமணத்தை ஓராண்டுக்குள் ஊரார் கூடி முடித்து வைத்தார்கள். திருமணமாகி கணவன் இரவு வீட்டிலிருந்த முதல் ஏழு நாளும் ஒரு குழப்பமும் நேரவில்லை. சாமுராய் கணவன் இரவுக் காவலுக்குச் சென்ற முதல் நாள் மணியோசை நெருங்கி வர மனைவி அலறி விழித்தாள். பயம் நெருட அடுத்த நாள் அதைப் பற்றி ஒருவரிடமும் சொல்லவில்லை. இரண்டாவது நாள் இறந்த மனைவியின் ஆவி அவளை வந்து பயமுறுத்தும், நீ இங்கிருந்து போய் விடு. இது என் இடமென சொல்லும். அவள் அடுத்த நாள், “நான் போய் விடுகிறேன்” எனக் கணவனிடம் நடந்ததைச் சொல்லி மன்றாடுவாள். அவன் சற்றே திடுக்கிட்டாலும் பேய்க்கதையை மறுத்து இரண்டு வீரர்களை அவளுக்குக் காவலுக்குப் போட்டு விட்டு அவனது காவல் பணிக்குச் சென்று விட்டான்.
காலையில் அவன் வந்த பொழுது அவள் தலை கொய்யப்பட்டு இரத்த உடலாகக் கிடந்தாள். வீரர்கள் அரண்டு போயிருந்தனர். தோட்டத்தை நோக்கி ஓடினான். அங்கே கல்லறையின் மீதமர்ந்து ஒரு கையில் மணியுடனும் மறுகையில் கொய்யப்பட்ட தலையுமாக மனைவியின் ஆவி அமர்ந்திருந்தது. அதை ஒரு வீரான் தாக்கி அழிப்பான். எலும்புகள் பொடியாகி உதிர்ந்த பின்னும் கொய்யப்பட்ட இளம் மனைவியின் தலையில் இறந்த மனைவியின் விரல்கள் சதையைப் பிடித்திருக்கும் நண்டைப் போல எஞ்சியிருக்கும்.
இக்கதையை ஒருவர் இன்னொருவருக்குச் சொல்லிக்கொண்டிருப்பார். அவர் கதையைச் சொன்னவரிடம் “இது கொடுமையான கதை. செத்தவர்கள் இருப்பவர்களிடம் வஞ்சம் தீர்ப்பது சரியானால், இக்கதையில் ஆண் மகன் தானே ஜவாப்தாரி(பொறுப்புடையவன்)” என்பார்.
கதையைச் சொல்லிக்கொண்டிருந்தவர் “ஆண்கள் இப்படி நினைக்கிறார்கள். ஆனால் பெண்களின் மனசு வேறு விதம்” எனச் சொல்வார். கதையின் கடைசி வரி “அவர் சொன்னது வாஸ்த்தவம்” என முடியும்.
இது பெண் எனும் மொத்த ஆளுமையின் நடுநரம்புச் சிக்கலை துல்லியமாக தைக்கும் ஒரு கதை. பெண்களின் உடமையுணர்வே அவர்களை ஆண்களிலிருந்து விலக்கும் முக்கியமான அம்சம். ஆண்கள் பெரும்பாலும் கற்பனையிலேயே வாழ்கிறார்கள். பெண்கள் தான் லெளகீகத்தை உருவாக்குகிறார்கள், அதில் வாழ்வது அவர்களே. கற்பனைக்கும் தூலத்திற்கும் இருக்கும் பெருவிசை கொண்ட போராட்டமே ஆணென்றும் பெண்ணென்றும் மண்ணில் நிகழ்கிறது.
ஒரு சிறு உதாரணம், இலக்கியச் சூழலில் தமிழில் பெரும்படைப்பாளிகளாகப் பெண்கள் உருவாகி வரவில்லை எனும் சிக்கலில் இருப்பது தனியே பெண்ணிய உரிமை சார் சிக்கல்களினைக் கொண்டு மூடிவிட முடியாதது. பெண்கள் லெளகீகமானவர்கள், கனவு வேறு, கற்பனை வேறு. பெண்கள் எவ்வளவு தான் கனவு கண்டாலும் கற்பனையில் வாழ்வை விரித்துக் கொண்டாலும் அவர்கள் லெளகீகத்திற்கே அனைத்தையும் புரிகிறார்கள். அதன் பொருட்டே அது.
ஆண்கள் வேறு விதமாக வாழ்க்கையை உருவாக்கிக் கொள்கிறார்கள். அவர்களது லெளகீகம் அத்தனையும் பெருமளவுக்கு அவர்களது கற்பனையை தாக்காதவாறு ஒரு கவசத்தை உருவாக்கவே செலவழிக்கிறார்கள். அந்தக் கற்பனையை வாழவே புறவுலகை வடிவமைக்கிறார்கள். பெண்கள் புறவுலகை வாழவே கற்பனையை பயன்படுத்துகிறார்கள். இந்த ஆடலின் ஒரு நடுநரம்பை ஒரு ஜப்பானிய எழுத்தாளர் ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன்னர் ஒரு பேய்க்கதையில் எழுதியிருக்கிறார். எளிமையான ஒரு கதை அதன் இறுதி வரிகளில் வெளிப்படும் ஒரு வாழ்க்கைப் பார்வையின் அவதானிப்பினால் முக்கியமான கதையாக ஆகிவிடுகிறது. நம் தலைமகன் புதுமைப்பித்தன் இக்கதையை மொழிபெயர்த்திருக்கிறார்.
ஒரு கதை, கால தேச வர்த்தமானங்களைக் கடந்து மானுடம் தழுவிய ஒன்றைச் சென்று தொட முடியுமென்றால், மிகச் சரியாகத் தைக்குமென்றால், அதற்காகவே கதை நிகழ்கிறது, அத்தகைய கதைகளே காலங்களைக் கடந்து கேட்கும் மணியோசை. இன்று இந்தக் கதையை மூன்று ஆண்களிடம் சொன்னேன். முதலில் திகைத்து, கொஞ்சம் மெளனமாகி, பின்னர் சிரித்தார்கள். வாஸ்த்தவம் தான்.

