“….இந்த நாவலுக்கு முதலில் வைத்த தலைப்பு நினைவு நதி. ஆனால் எனக்கு இந்த வகையான கவித்துவ, உருவக தலைப்புகளில் ஒருவித ஒவ்வாமை இருக்கிறது. நாவல் மொத்தத்தின் சாரம்சமாக அல்லது அதை விளக்குவது மாதிரியாகத் தலைப்பு இருக்கக் கூடாது என்பது என்னுடைய எண்ணம். அதனால் தொடக்கத்தில் நாவலின் சூடு என்னில் பற்றியெழவில்லை. மந்தமாக களமும், கேள்விகளும் மட்டும் புனைவில் விரிந்து கொண்டிருந்தன. ஆனால் நாவல் ஒரு கட்டத்தில் தன்னுடைய தலைப்பான ‘வண்ணச் சீறடி’யை தானே கண்டு கொண்டது. அதன் பின் நாவலின் எழுத்து வேகமும், களமும் இன்னும் விரிவு கொண்டது. வண்ணச் சீறடி என்ற இந்தச் சொல்லிணைவு தமிழிலக்கியத்தில் அழகிய சிறிய பாதங்கள் என்ற பொருளில் கையாளப்பட்டிருக்கிறது. அதுவே அதன் நேரடி அர்த்தமும் கூட. ஆனால் எனக்கு அக-எழுச்சி மிகுந்த தலைப்பாகத் தோன்றக் காரணம் சிலப்பதிகாரத்தில் அது பயன்படுத்தப்பட்டிருக்கும் இடம். இளங்கோவடிகள் கண்ணகியின் செழிப்பை ஒரு விதத்தில் அவளது சிறுவயது இயல்பைச் செல்லுமிடத்தில் இந்தச் சொல்லைப் பயன்படுத்துகிறார்.
‘என்னொடு போந்த இளங் கொடி நங்கை-தன்
வண்ணச்சீறடி மண்மகள் அறிந்திலள்’

கண்ணகி மண் மகள் அறியாது வளர்ந்த பெதும்பை. பின்னாளில் அந்த அழகிய சிறிய பாதங்களில் தீ பற்றிக் கொள்கிறது. சீற்றம் எழுகிறது. அவளில் கனன்ற தீ வெம்மை போன்றே ஈழத்திலும் பற்றிக் கொண்டது. அந்த வண்ணச்சீறடி நாவலின் ஏதோ ஒரு புள்ளியில் ஈழப்போராட்டத்தின் களமுனையில் வந்து இணைந்து கொண்டது. அழகிய சிறிய பாதங்கள் ஈழ நிலத்தின் இண்டு இடுக்கெல்லாம் வேட்கையுடன் அலைந்து திரிந்தன. சேற்று வயல்களில் இருந்து, காடுகளுக்கும், கள முனைகளுக்கும் பயணித்தன. அப்படியாக பழந்தமிழ்ச் சித்தரிப்பின் உச்சமான ஒரு வாள் வீசுக் கணம் நவீன ஈழ நாவலில் மின்னிச் செல்கிறது. அத்தகைய மின்னற் கணம் நிகழ்ந்ததும் நாவல் உள் விரிவு கொண்டுவிட்டது. தமிழின் அந்த இடையறாத ஒழுக்கின் தொடர்ச்சியில் நானும் ஒண்டிக் கொள்கின்றேன் என்ற எண்ணமே நாவலை எழுதி முடிக்கும் வரையும் என்னை ஆட்கொண்டிருந்தது”.
தர்மு பிரசாத்

