மலர்தலின் எந்த அமைதியுமின்றி

தர்மு பிரசாத்திடம் சுகுமாரனின் கவிதைகளைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்த போது ஒரு அவதானத்தைச் சொன்னேன். இன்றளவும் சுகுமாரனின் முதற் கவிதை நூலான கோடை காலக் குறிப்புகள் தமிழ் வாசிப்புச் சூழலால் தொடர்ந்து நினைவு கூரப்படுகிறது. அவர் அந்தத் தொகுதியின் கவிதைகளில் வெளிப்பட்ட சீற்றமும் கொந்தளிப்புமான இளங் கவியாகவே இன்றளவும் முதன்மையாக மதிக்கப்படுகிறார். அது ஒரு வகையில் எதிர்மறையானது. அவரது நீண்ட நெடிய இன்றளவான எழுத்துகள் மீது மீண்டும் சிறிய வட்டமே கவனத்தை கொண்டிருக்கிறது. ஒரு புத்தகத்திலிருந்து வெளியேற முடியாது இருப்பது போல துயரம் வேறில்லை. ஆனால் அந்த ஒரு புத்தகம் மூன்று தலைமுறைக் கவிஞர்களின் மொழி நடையை தீவிரத்தை கவிதைக்கான சத்தியாவேசத்தைக் காத்திருக்கிறது. நானும் கூட கோடை காலக் குறிப்புகளை வாசித்த தீவிரத்திலேயே கவிதைகளை எழுதும் விசையைப் பெற்றவன். ஒரு மொழிச்சூழலின் உச்ச விசையாக அவரது முதல் தொகுப்பில் அவர் முழுமையாக திகழ்ந்திருக்கிறார். அது ஒரு அபூர்வம். அது ஒரு துர் அதிர்ஷ்டமும் என்று சொன்னேன்.

ஏன் எனக் கேட்ட தர்மு பிரசாத்துக்கு அதன் மையச் சிக்கலை என் அவதானத்தில் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது சதீஷ்குமார் சீனிவாசனின் கவிதைகளின் இன்றைய தன்மையைப் பற்றிச் சொன்னேன்.

சதீஷின் கவிதைகளில் எண்பதுகளில் வெளிப்பட்ட சுகுமாரனின் உக்கிரமிருக்கிறது. நேரடியான வாழ்வின் உக்கிரமான நெருப்பை முகத்துக்கு அருகில் எதிர்கொண்டு சினக்கும் ஆங்காரமான இளம் மனம். அதுவே சுகுமாரனின் மொழியை உருக்கியெடுத்தது. சுகுமாரனின் சொற்கள் ஐஸ்கட்டிகள் போன்ற அடர்த்தி கொண்டவை. ஆனால் சதீஷில் வெளிப்படும் சொற்கள் நீரிலுருகுபவை போன்றவை. அதற்கு முதன்மைக் காரணம், சதீஷின் கவிதை நடைக்கான பாதிப்பு பாரதியிலிருந்து நீளும் மனுஷ்ய புத்திரனிலிருந்து நுரைத்தோடும் இன்னொரு பேராற்றின் புதுவெள்ளம் போன்றது. காவிரி நீர் திறக்கையில் அதை வணங்கக் காத்திருக்கும் மக்கள் அந்தப் புதுவெள்ளத்தை தொட்டு வணங்குவதை வீடியோக்களில் பார்த்திருக்கிறேன். என்றுமுள்ள நீர் தான். ஆனால் உலர்ந்து கிடக்கும் வண்டலில் முன்னேறிப் பாய்ந்து சீறி வருகையில் வணங்கிக் கொண்டாடி மலரிடத்தக்கது.

சுகுமாரனின் அறசீற்றமும் காலத்தை எதிர்கொண்ட சினமும் இன்று தீவிரமாக வெளிப்படுவது சதீஷில் என்பது என் மதிப்பீடு. சொல்லிணைவுகளில் சதீஷில் இளங்கவிஞனின் பித்தும் அநாயசமும் கூடி வருகிறது. நம் கண் முன்னுள்ள காலம் எதையெல்லாம் உத்தரிக்கிறதோ அதுவெல்லாம் சதீஷின் மீது படிகிறது. அவரது கவிதைகளில் வெளிப்படும் ஆவேசம் அவரது ஆன்மாவிலிருந்து ஒலிப்பது. அது ஒரு முக்கியமான தகுதி. அதுவே சுகுமாரன் எனும் எரிமலையை தகிக்கத் தகிக்க உருக வைத்தது. அதுவே இன்று சதீஷிலும் பெருகுகிறது. அது இன்னும் ஆழ்ந்து செல்லுகையில் நமது மொழியில் புதிய சாத்தியங்கள் திறக்கப்படலாம். ஆனால் அதன் பொருட்டு அவர் எதிர்கொள்ளக் கூடிய வாழ்க்கை தீவிரமான எதிர்விசைகளால் ஆனதாக இருக்கலாம். அவரது தீவிரமே அவருடைய வசீகரமாகவும் அதுவே அவருக்கு எதிரானதாகவும் இருக்கலாம். மேன்மையையும் கீழ்மையையும் தொட்டுத் திரும்பலாம். ஆனால் அவர் அந்த அடிப்படை விசையை, தான் யார் என்பதை விடாப்பிடியாக பிடித்துக் கொள்ள வேண்டும். எதன் பொருட்டும் உள்ளார்ந்த நேர்விசையை இழக்கக் கூடாது. உக்கிரம் ஆதி இயற்கை. அது பகலுக்கு வெய்யில் போன்றது. வாழ்வைத் துலங்கச் செய்வது அதுவே. அதை ஒருவர் ஈட்டிக் கொள்ள முடியாது. அவரிலிருந்து அது பிறந்து வரும்.

கவிஞனுக்கான மன அமைப்பு புனைவெழுத்தாளனில் இருந்து நேரெதிரானது என இப்போது உணர்கிறேன். நிகர் கணத்தில் எதிர்ப்படும் பொறிக்கு எரியக் கத்திருக்கும் கற்பூரம் போன்றது கவிதை மனம். புனைவுகளோ சொக்கப்பனை கொழுத்துவது போல. நீறாகி எஞ்சுவதும் புனைவில் வேண்டும். கவிதைக்கு அது எரியும் கணத்தின் ஒளி.

சதீஷின் வாழ்வு கேட்கப் போகும் பலிகளே அவரை எழுதச் செய்யுமென்று தோன்றுகிறது. அதுவே அவரது மீட்பும் சாபமுமாக இருக்கலாம். சுகுமாரனின் பின்னரான காலங்களின் கவிதைகளில் அவர் உருவாக்கிய மொழி ஓடுகளின் மேல் பாதம் வழுக்காமல் நடக்கப் பழகியிருப்பது போன்ற தன்மை இருக்கிறது. அதை ஒருவரால் மீற முடியாமல் ஆகலாம் என முதலில் தோன்றியது. சதீஷிற்கும் அதுவே கூட நிகழலாம். அதுவரை இல்லாத ஒன்றை முழுமையாக ஆக்கி எடுத்த பின்னர் அதைக் கைவிடமுடியாது போவதைப் போல. அது ஒரு காலச் சுழற்சி என்று தர்மு பிரசாத் சொன்னார்.

சதீஷ்குமார் சீனிவாசனின் சில கவிதைகள்,

*

உன்னை விரும்பினேன்
என்பதற்கு
என்னிடம் எந்த சாட்சியமும் இல்லை

நிரூபிப்பதில்
ஆயிரம் சங்கடங்கள்
அப்போது
எதைச் செய்தாலும்
அதில்
பிழைகளின் அற்புதம்

*

நகரத்தின் ஒரு ஓரத்தில் மிஞ்சிவிட்டது
அறுகம்புற்கள் வளர்ந்த
ஒரு துண்டு நிலம்
அவை காற்றில் ஆடுகின்றன

மான்கள் மேய்ந்த
நூற்றாண்டுகளின் மீது
மிச்சங்களின் மீது
புழுதி படிகிறது

மிஞ்சுவதன் துயரம்
புழுதி படிவது
ஞாபகம் வைத்திருப்பது
சாட்சியமிருப்பது
அழியக் காத்திருப்பது

*

போலி நாய்கள்

நாங்களொரு
நாய்க்கூட்டமாகத்தான் இருந்தோம்
அன்பும் குலவலுமாய்
நக்குதலும் முகர்தலுமாய்
ஆனந்தம் ஆனந்தம் என்ற பாட்டோடு

சட்டென உடனிருந்த சில நாய்களுக்கு
நாய் என்பதைத் தவிர வேறு அடையாளங்கள் தேவைப்பட்டன

வன்மமும் குயுக்தியும்
வால்போல அவற்றிடம் சுழன்றன
குழப்பம் மேலிடவே
எல்லா நாயும் சொன்னன
உன் வாழ்க்கை நான் பிச்சை போட்டதென

நாய் என்பதைத் தவிர வேறு அடையாளங்களை
விரும்பாத நாய்கள் அதிர்ச்சியடைந்தன
அவையும் தன் நன்னடைத்தைகளை இழந்தன
கூட்டத்தின் எல்லா நாய்களுக்கும்
வன்மம் வால்போல சுழன்றது

அண்டை நாய்களிடம் ஒருநாய்
இவனை உனக்குத் தெரியாதா
இவனுக்கு ஊத்திக்கொடுத்த உத்தமனே நான்தான் என்றது

இன்னொரு நாய்
பரஸ்பரம் நண்பர்களாக இருந்த நாயிடம்
இவனைத் தெரியாதா
இவனது மூளையே கிடையாது
நான்தான் இவனது மர்ம உருப்பிலிருந்து
செயல்படும் மூளை என்றது

அந்த நண்ப நாயும்
ஆமாம்
எனக்குத் தெரியும்
எனக்குத் தெரியும் என்றது

இந்தக் கூட்டத்திற்கு
ஒரு தலைமை நாயுண்டு
அது கவிதை எழுதுகிறது
பதிப்பகமும் நடத்துகிறது
அந்த நாய்க்குத் தெரியும்
தன் சகநாய்களின் நேர்மைப்பற்றி
தந்திரமான நகர்வுகளைப்பற்றி

அவை சகநாய்களைப்பற்றி தன்னிடம் சொன்ன
கண்ணியமற்ற சொற்களைத் தெரியும்
அருவருப்பான வருணனைகளைத் தெரியும்
பின்பு வெட்கமின்றி
அவர்கள் பிட்டத்தை அது முகர்ந்ததுபற்றியும்
அதற்குத் தெரியும்

அதே சமயம்
தான் இல்லாவிட்டால்
இவை வெறுமனே நாயென்ற அடையாளம்கூட இல்லாத நாய்கள்தான் என்றும் தெரியும்

இதெல்லாம் தெரிந்துதான்
அவற்றுடன் உணவைப் பகிர்ந்துகொண்டது
அந்த சகநாய்களுக்கு உதவி செய்தது
உதவியைப் பெற்றுக்கொண்டது
அவற்றின் கபடங்களை பார்த்து பல்லிளித்தது

முன்பு உடனிருந்த
எந்த நாயும் இல்லாத அந்தியில்
கவிதை எழுதுகிற தலைமை நாய்
ஒரு மலைப்பதையில்
சாலையோர மரத்தினருகில்
காலைத்தூக்கி
சிறுநீர் கழித்தபடி சிகரெட் ஒன்றை
பற்ற வைக்கிறது
“போலி நாய்களுடன் இருப்பதைவிட
தனியே இருப்பது ஆனந்தம் ஆனந்தம்” என பாடுகிறது

*

இன்னும் காலமிருக்கிறது

என் நெற்றியொரு
யோசனையின் கனவா என்ன

நரைகூட இன்னும் நாள் இருக்கிறது
சமரசம் செய்ய இன்னும் காலமிருக்கிறது
வாழவிடு எனக் கேட்க ஒரு தெய்வமில்லை

இரைச்சலின் நடுவே
நான் பாடுகிறேன்
அமைதி அமைதி என்கிறார்கள்
கூடாது கூடாது என்கிறார்கள்

எந்தக் குருதியும் இல்லாத
என் வாள் உடனிருக்கிறது

நம்பும்வரை எதுவும் கனவில்லை
இருக்கும்வரை
எதுவும் வீணில்லை

அந்தியில் மினுங்கும் இலைகளின் நடுவே
ஓர் உலகக் குழப்பம்

*

ஓர் அந்தியின் அழகு

அது தன்னை
யாரிடமும் பார் என்பதில்லை

அது தன்னை
யாரிடமும் விற்கவும் இல்லை

பழக்கப்பட்ட
மலைகளின் நடுவே மறைந்து இருளாகிறது

*

காற்றுக்கு தெரிந்திருக்கிறது நெருப்பை

காலில் நசுக்க
தரையிலிட்ட பாதி சிகரெட்
கங்குடன் காற்றில் பறக்கிறது

ஒரு நடனம்போல
ஒரு விடுதலைபோல
போதும் என்பதுபோல அது

*

நான் சொன்னதில்
பிழைகள் இருந்திருக்கலாம்

என் பதற்றம்
என் திக்குவாய்
நான் இன்று பார்க்க நேர்ந்த சூரியன்
என் அண்டை வீட்டான்
தெருவோரத்து இலையுதிர் மரம்

ஆனால்
எனதல்லாததை நான் சொன்னதில்லை
நான் சொன்னதில் பிழைகள் இருந்தாலும்

*

தும்பிகளின் படபடப்பில்

ஒரு காட்சிப் பிறழ்வில்
மனிதர்கள்
வாகனங்கள்
கட்டடங்கள் எல்லாமே
தும்பிகளாகி பறக்கின்றன
மழைக்காலத்தின் தொடக்கம்
உயிரின் துன்பம்போல ஒரு மௌனம் மிதந்தது
என் கண்களுக்கருகில்

மழை பெய்வதற்குள் வீடுபோக வேண்டும்
இந்தப் பருவம் தீர்வதற்குள் மலர வேண்டும்

மழை பெய்வதற்கு முன்
இந்தப் பருவம் தீர்வதற்குள்
இந்தப் பூமி தும்பியாகிப் படபடக்கிறது
கொஞ்சமும் அமைதியின்றி

மலர்தலின் எந்த அமைதியுமின்றி

*

இந்த சாயல்

இந்த மலை ஒரு தியானம் போல
இந்த மழை ஒரு பிரார்த்தனை போல
இந்த குளிர் ஒரு நினைவு போல

விழித்த பகலில்
எழுந்த உலகு
என் சாயல்போல

*

செக்ஸ் சாட் தோழிக்கு சியர்ஸ்

காசுக்காக செக்ஸ் சாட் செய்வதில்
தேர்ச்சி பெற்ற
என் தோழியை சமீபமாகக் காணவில்லை

நேற்றுதான் அறிந்தேன்
அவளது இன்னொரு தோழி சொன்னாள்
அவள் காதலில் விழுந்துவிட்டாளாம்
எவ்வளவோ குழப்பங்கள்
எந்த முறைப்படி திருமணம்
பையனின் சாதி என்ன
இவனை நம்பலாமா
தனக்கு பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா
என்ன பெயர் வைக்கலாம்
இவனைவிட ஒரு நல்ல தேர்வுக்கு
காத்திருக்கலாமா வேண்டாமா

தடுமாறும் பட்டாம்பூச்சிகளின் பறத்தல்
விட்டில்களின் உள்ளுணர்வு
உடைந்து சிதறும் மதுக்கோப்பைகள்
தன்னிலை கடந்த வாக்குறுதிகள்

நான் புரிந்து கொள்கிறேன்
ஒரு வியாபாரம் எவ்வளவோ நேர்மையானது
அலுப்பூட்டும் தந்திர விளையாட்டுகள்
நிரூபிக்க வேண்டிய சங்கடங்கள் அதில் இல்லை

நான் அவளுக்கு இன்றோரு சியர்ஸ் சொன்னேன்

உடையாத கோப்பைகள் தத்தளித்தன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *