நிழல் புற்று
இந்த நிழல் ஒரு புற்று
இருள் கூடி இருள் கூடித் தணியும்
வெளிச்சப் பரல்கள்
அந்திகளின் வழக்கத்தில்
வழி தவறினேன்
இன்னாரில்லை சென்றுசேர
மனம் தவறி உடைகின்றன பொருட்கள்
உடனிருந்தாலும் அன்பில்லை
தூரத்தில் ததும்புகிறது
கானல் உலகு
நிழல் புற்று படிகிறது சொற்களில்
நேர்மையிழந்த சொற்கள்
யாருக்கு என்ன விலை
எதற்கு எந்த விலை
பாலங்கள் முடிந்தாக
வேண்டிய நிர்பந்தங்கள்
வீடுபோய் சேர வேண்டும்
மயங்கள் தீர வேண்டும்
காட்சிப் புலனில் நீந்துகிற புழுக்கள்
நனவிலியின் வண்ணத்துப்பூச்சிகள்
காட்சி மாறுகிறது
நிழல் மலைகள் சாய்கின்றன
இன்னொரு மலையின் ஸ்தூலத்தில்
பறவைகள் அஞ்சுகின்றன
விலங்குகள் மருள்கின்றன
யாரோ ஏற்றிய தீபம்
அணையவா என நடுங்குகிறது
நிழல் புற்றில் ஔிநாகம் எழுகிறது
அது செல்லும் வழியெங்கும்
துர்க்கனவு
அழிவு
புற்கள் எரிகிற வெம்மை
மந்திரங்கள் தோற்கின்றன
வழிமுறைகள் குழம்புகின்றன
ஔி நாகம் மெல்ல மறைகிறது
இன்னொரு இருளில்.
சதீஷ்குமார் சீனிவாசன்
*

சதீஷின் இந்தக் கவிதையை ஒருவித பித்தின் சொல்லரற்றல் எனச் சொல்லலாம். கவிஞர்கள் சொற்களை கொண்டு கூர்மையான தரிசனம் மிக்க வரிகளை எழுதுவதுண்டு. அது ஒரு வகை. வள்ளுவன் போல. நுணுக்கமும் நாடகீயமும் கலந்தது சங்கமும் கம்பனும் இளங்கோவும் போல.
நவீன கவிதைகளுக்கு நுணுக்கமும் நாடகீயமும் தரிசனமும் இணைவதைப் போலவே அது தன்னளவில் வெளிப்படுத்திக் கொள்ளும் முக்கியமான அம்சம் அரற்றலில் அடையும் உச்சங்கள். அரவிந்தர் ‘Supreme poetic utterance’ எனச் சொல்வதை அதனுடன் இணைத்து வாசிக்கலாம். உச்சகட்டத்தில் கவிதையில் நிகழும் அரற்றல் ஒரு கணம் ஆன்மீகமான ஒன்றை, தானறியாத ஒன்றைத் தொட்டு மீளக் கூடியது. சொல்லில் ஏறிச் சென்று உச்சத்தில் அங்கிருந்து பறந்து சென்றுவிடக் கவிதையை விடுவது.
சதீஷ்குமார் சீனிவாசனின் கவிதைகளில் வெளிப்படும் கொந்தளிப்புகள் ஆன்மீகமான எல்லையை நோக்கி எழுந்து அலையலைத்து ஓடும் கீற்று இந்த நிழல் புற்றில் இருக்கிறது. நிழல் புற்று – ஒளிநாகம் எனும் இரு சொல்லிணைவுகளும் படிமங்களும் உருவாக்கும் அகக்காட்சி ஆன்மீகமானது. முதல் வரிகளில் ‘இந்த நிழல் ஒரு புற்று
இருள் கூடி இருள் கூடித் தணியும்
வெளிச்சப் பரல்கள்’ எனத் தொடங்கும் பொழுது சொற்களில் ஒலிக்கும் உள்ளோட்டச் சந்தம் போன்ற தொனி, அரற்றல் தன்மையும் கொண்டது. இருள் கூடித் தணியும் வெளிச்சப் பரல்கள் என்பதற்கும், இருள் கூடி இருள் கூடியென எழும் இன்னொன்றின் சேர்க்கையும் அளிக்கும் தன்மையை அப்படிச் சுட்டுகிறேன்.
மெல்ல மெல்லக் கவிதை அரற்றுகிறது, வழமையாக சதீஷின் கவிதைகளில் வரும் வழிதவற வைக்கும் அந்திகள் வருகின்றன. இன்னாரில்லை சென்று சேர என முறையிடுகின்றன, அன்பை பற்றி, கானல் உலகைப் பற்றி அரற்றுகின்றன. காட்சிகள் மாறுகின்றன, மாயங்கள் தீர வேண்டுமெனக் கோரிக் கொண்டு எழுகின்றன. நனவிலியின் வண்ணத்துப் பூச்சிகளை பார்க்கின்றன. அணையவா என நடுங்கும் தீபத்தைப் பார்த்ததும் அங்கிருந்து இன்னொரு சொல், அவரை மீறியெழும் இன்னொன்று நிழல் புற்றிலிருந்து எழுகிறது. ஓளியென்றேயான நாகம், ஒளிப் பத்தி விரித்து ஒளி நாச்சீற அது நிழல் புற்றிலிருந்து வெளிப்படும் கணத்தில் இக்கவிதை தன்னை தன் அரற்றலிலிருந்து விடுவித்துக் கொண்டு உச்சமான இரண்டு படிமங்களின் கொந்தளிப்புக்கிடையிலான தொடுகணங்களைத் தொட்டெடுக்கிறது.

சதீஷின் கவிதைகளில் நம் மொழியின் முன்னோடிக் கவிஞர்களில் எழும் சாமியொவ்வொன்றும் வேறு வேறு தருணத்தில் தோன்றி வெளிப்படுகிறது என்ற எண்ணம் எனக்கு வருவதுண்டு. அப்படி பாரதி முதல் மனுஷ்யபுத்திரன் வரை அவருக்குள் செரித்துச் செரித்து வளர்கிறார்கள். இக்கவிதையில் சட்டென்று ஒருகணம் பிரமிள் எனத் தோன்றியது. எதனால் என்று தெரியவில்லை. இளம் பிரமிள் எழுதியிருக்கக் கூடிய கவிதையில் வெளிப்படும் சில சொல்லிணைவுகளும் தீவிரமும் அப்படித் தோன்றச் செய்திருக்கலாம். அல்லது சதீசும் பிரமிளும் கலந்து மொழியெனும் நிழல் புற்றிலிருந்து கவிதையின் ஒளிநாகம் எழுந்து மந்திரங்களைத் தோற்கடித்தபடி சரசரத்தெழுந்து செல்வதை பார்த்துக் கொண்டிருப்பதைப் போல நான் கற்பனை செய்து கொள்வதாலும் கூட இருக்கலாம்.
அகழ் இதழில் வெளியாகியிருக்கும் அவரது கவிதைகளுக்கான இணைப்பு : நிழல் புற்று

