அகங்காரன் – கடிதம்

வணக்கம் 

ஜெ. மோ அவர்கள் வெண்முரசு முதலாவது பகுதியில் அகங்காரம், செருக்கு என்பவையே இந்த உலகை இயக்கும் விசைகள் என்கின்றன. ஆனால் நமது அறநூல்கள் மற்றும் பொது வாழ்வு என்பன அகங்காரம், செருக்கு போன்றவற்றை எதிர் மறை சக்திகளாகவே புரிதலை தருகின்றன.

இதற்குடையில் இன்று இளங்கோ அவர்களுக்கு நீங்கள் எழுதிய பதிவில் “எளிய அகங்காரம்” என்ற சொல்லை பாவித்து இருக்கிறீர்கள்.

இந்த நிலையில் “அகங்காரம், செருக்கு ” என்பவற்றை நாம் எப்படி புரிந்து கொள்வது?

இது ஏனெனில் நான் இதனை சொந்த வாழ்விலும் பாவிக்க விரும்புகிறேன்.

காரணம் :பரீட்சித்து மகாராசா இந்த இரண்டு விடயங்களை ஒழிக்க விரும்பி ஆறு நாள் தவமிருந்து 7ஆம் நாள் ஒரு முனிவரிடம் நான் இவற்றை ஒழித்து விட்டிட்டேன் என்று கூறிய வார்த்தைகளே வேறொரு அகங்காரமாகி மகாராஜாவின் இறப்புக்கு காரணமாகியது.

இது எனக்கு நல்லதொரு அற கருத்தாக உள்ளது.

லலித கோபன்

*

அன்புள்ள லலிதகோபன்,

இந்தக் கடிதத்திற்கு மூன்று கிழமையாக பதிலளிக்காமல் வைத்திருந்தேன். அகங்காரம், ஆணவம், திமிர், ஈகோ, சூப்பர் ஈகோவென பல சொற்கள் இலக்கிய விவாதங்களில் இடம்பெறுவதுண்டு. அவை அன்றாட வாழ்வில் எப்படி பொருள்கொள்ளப்படுகின்றன என்பதும் கூர்மையான பிரிவுகளுடனும் அர்த்த வேறுபாடுகளுடனும் இலக்கியத்தில் எப்படிக் கையாளப்படுகின்றன என்பதையும் திரும்ப வாசித்தும் நண்பர்களுடன் விவாதித்தும் பார்த்தேன். 

முதலாவதாக நான் குறிப்பிடும் எழுத்தாளரின் அகங்காரம் அல்லது நிமிர்வு குறித்த என் தனிப்பட்ட பார்வையைத் தொகுத்துச் சொல்கிறேன். ஜெயகாந்தனின் கூற்று, “அற்பத்தனத்தை அகங்காரத்தால் எதிர்கொள்க” எனும் அறைகூவல். ஒரு தமிழ் எழுத்தாளர் இன்று மட்டுமல்ல, நூற்றாண்டுகளாக எதிர்கொண்டு வரும் சிறுமையுணர்ச்சிக்கு எதிரான குரல் அது. 

என் அவதானிப்பில் பொதுச் சராசரிகள் எழுத்தாளரையோ இலக்கியத்தையோ மதிப்பதில்லை. அதன் மதிப்பை அவர்கள் அறிவதுமில்லை. நம் சூழலில் தீவிர இலக்கியம் வாசிப்போரின் எண்ணிக்கையை அனைவரும் அறிவர். ஆனால் இந்தப் பொதுச்சராசரி, தன் அசமந்த அறிவினாலும், பாடசாலைக் கல்வியும் பட்டங்களும் பதவிகளும் அளிக்கும் கொழுப்பினாலும் எழுத்தாளருக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருக்கிறது. கொஞ்சம் விளங்குவது போல எழுது, நான் நம்புவதற்கும் எனக்குத் தெரிந்ததற்கும் அப்பால் நீ மானுடர் குறித்து எழுதுவதெல்லாம் அபத்தம், கொஞ்சம் ஒழுக்கமாக இரு, பரதேசியாய் திரியாதே, கோபப்படாதே, அகங்காரம் கொள்ள நீ யார், ஐம்பது புத்தகங்கள் விற்கும் உனக்கெதற்கு நிமிர்வு, எங்களின் முன்னால் கொஞ்சம் அடக்கி வாசி எனும் மனநிலையே பொதுச்சராசரி கோருகிறது. அவர்கள் ஒரு பெரும் மழைத்தவளைக் கூட்டம். கத்திக் கொண்டேயிருப்பார்கள், அதற்குள் பொதுச்சுரம் ஒன்று உருவாகிவிடுவதால் அதைச் சரியென்றும் எண்ணுவார்கள். அதன் மூலம் அக்கருத்தை தாங்கிப் பிடிக்கும் வேர்களாகவும் விழுதுகளாகவும் தங்களைக் கற்பனை செய்து கொள்கிறார்கள். 

ஒரு எழுத்தாளர் என்பவர் யார்? ஒரு பண்பாட்டில் அவரது பங்களிப்பின் மதிப்பென்ன? என்பதை இந்தப் பொதுச்சராசரிகளின் முன் திரும்பத் திரும்பப் பேசியாக வேண்டியிருக்கிறது. 

ஒரு எழுத்தாளர் என்பவர் தன்னில் பண்பாட்டு நனவிலி விழித்துக் கொண்டு அதன் நுண்ணுணர்வின் முனையாக எழுபவர். அவர் மொத்தச் சமூகத்தினதும் ஆழத்திலும் ஓடிக்கொண்டிருக்கும் காம குரோத லோப மோக  மத மாச்சாரியங்களாகிய ஆறு தீய குணங்களின் அடிப்படைகளையும் தொட்டுத் துழாவி அளைந்து தன்னில் அது படைப்பாக, இன்னொன்றாக வெளிப்படக் கூடியவர். அத்தகைய தீங்குகளை அளைவது போலவே தூய அன்பு, சாந்தம், ஈகை, விவேகம், வினயம், கருணை என மேன்மையான குணங்களையும் அளைகிறார். இருளாற்றில் மூழ்கி ஒளிப்பிரவாகத்தை நோக்கியெழுகிறார். அதற்கெனவே அவருக்கு சில விசேட அனுமதிப்புகள் சமூகத்தில் இருக்கிறது. 

டானியல் நூற்றாண்டு விழாவில் சந்தித்த சில நண்பர்கள், “உங்களின் சொற்களின் கடுமையைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள், மைய நீரோட்டத்திலிருந்து விலக்கப்படுவீர்கள், சச்சரவுகளைக் குறையுங்கள்” எனச் சொன்னார்கள். மூன்று அறிவுரையும் எனக்கு ஏற்புடையதல்ல. சொற்களின் கடுமையோ தொனியோ நான் புறவமயமாகத் தீர்மானிப்பதில்லை. என்னுள் எழுந்து கொள்ளும் என் மரபு சமகாலத்திற்கு எதிர்வினையாற்றுகிறது. சாட்டையுடன் எழும் நாட்டுப்புறத் தெய்வமொன்று உறுமும் விழிகளுடன் விழித்துக் கொள்கிறது. அதை நானே கூட அஞ்சுவேன். என்ன எழுகிறதோ, அதை அப்படியே அனுமதிப்பதும் வெளியிடுவதும் என் வழமை. அப்படி மனதில் தோன்றும் எண்ணங்களை தொகுத்தும் உணர்ச்சிகரமாகவும் முன் வைப்பது ஒருவகை எழுத்தாளர்களின் பண்பு. நான் அவ்வகை. அது என் ஆதார இயல்பிலிருந்து தோன்றுவது. 

இரண்டாவது, மைய நீரோட்டத்திலிருந்து விலத்தப்படுவது எனும் நிலை. அதைக் குறித்து எனக்கு எந்த அக்கறையும் கிடையாது. என்னளவில் நானும் என் தரப்புமே இன்று மைய நீரோட்டமாகிக் கொண்டிருப்பதை, மைய விசையாக ஆகிக் கொண்டிருப்பதை சூழலைக் கொஞ்சம் அவதானிப்பவர்கள் விளங்கிக் கொள்ளலாம். எனக்கு ஒரு நம்பிக்கை உண்டு, கடந்த காலத்தவர்களை எக்காலமும் இனி மாற்றவோ, திருத்தவோ, விவாதிக்கவோ இயலாது. அவர்கள் ஒரு பனிப்பாறைக்குள் அகப்பட்ட எறும்புகள். அவர்களது காலம் முடிந்து விட்டது. இனி என் தரப்பே ஈழத்தின் மைய விசை. தூய அழகியல்வாதமென அதைச் சுட்டலாம். அதை நான் நிறுவியாக வேண்டும். அதற்கே இலக்கியச் சூழலுக்கு எதிர்வினையாற்றுகிறேன். அவர்கள் இலக்கல்ல, முகாந்திரம் மட்டுமே. அடுத்து வரவிருக்கும் இளம் வாசகர்களையும் எழுத்தாளர்களையும் நோக்கியே நான் எழுதுகிறேன். புதுமைப்பித்தனைப் போலவே. 

மூன்றாவது, சர்ச்சைகள். அவை விவாதங்கள் என்பதே சரியானது. சர்ச்சையாவதும் விடுவதும் நம் கையில் இல்லை. எந்தக் கருத்தையும் சர்ச்சை நோக்கம் கருதி எழுதும் ஊக்கம் என்னிடமில்லை. நான் எதிர்வினையாற்றும் நிகழ்வுகளையோ கருத்துகளையோ நான் கொக்குத் தவத்திலிருந்து தேர்ந்தெடுப்பதில்லை. போகிற போக்கில் ஒரு வீச்சு. அதை விட்டாலும், நான் சர்ச்சையே புரிவதாயிருந்தாலும் அதற்கு ஒரு எழுத்தாளருக்கு சமூகத்தில் அனுமதி உண்டு. அவர்களுக்கொரு உதாரணம் சொன்னேன், நம் மரபில் அன்றாட நிகழ்வுகளிலும் இருவர் சண்டையிட்டு உரத்த தொனியில் பேசிக் கொள்ளும் பொழுது, புலவர்களே சண்டை வேண்டாம், சாந்தமாக உரையாடுங்கள் எனச் சொல்வதுண்டு. குயவர்களே சாந்தமாக உரையாடுங்கள் என்றோ அரசர்களே சண்டையிடாதீர்கள் என்றோ சொல்வதில்லை. புலமையும் சண்டையும் இணைந்தே பிறந்தது. ஏனெனில் அது பேரகங்காரங்கள் மோதிக் கொள்ளும் துறை. புலவர்களின் சண்டையும் சச்சரவும் கூடக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பை அளிப்பது, அலாதியானது, பண்பாட்டின் உச்ச முனைகள் ஒன்றையொன்று மோதி தன் தரப்பை நிறுவிக் கொள்ள வேண்டியது. அது இல்லையேல், சமரசம் உலாவும் இடமே எனப் பாடிக் கொண்டு அனைத்தையும் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருக்க வேண்டியது தான். 

ஒரு பண்பாட்டின் உழு முனையும் தரையும் கொள்ளும் உறவே எழுத்தாளரும் சமூகமும் கொண்டிருப்பது. ஆகவே தான் எழுத்தாளர்களின் சர்ச்சை முக்கியமானது. அதில் வெளிப்படும் உச்ச கணங்கள் கூட பண்பாட்டால் பின்னர் கதைகளாக சொல்லப்படுகிறது. 

ஆகவே தான் எழுத்தாளர் எனும் பாத்திரத்தின் இயல்பையும் குணங்குறிகளையும் மீளத் தொகுத்து முன்வைத்துக் கொண்டிருக்கிறேன். நம் முன்னாலுள்ள தலைமுறையளவுக்கு நுண்ணுணர்வு கொண்ட தலைமுறை இதற்கு முன் இருந்ததில்லை. அதே போலவே பொதுச்சராசரிகளின் காலமும் இது போல இருந்ததில்லை. இந்தச் சராசரிகளை எதிர்கொள்ளவே அகங்காரம் எனும் ஆற்றலை பயன்படுத்துகிறேன். அது ஒரு ஆற்றலின் வெளிப்பாடு என நினைக்கிறேன். 

ஷோபாசக்தியுடன் இதையொட்டி மூன்று நாட்கள் விவாதித்தேன். எழுத்தாளர்களுக்கு அகங்காரமென்பது படுகுழிக்குள் விழுத்தும் என்பது அவரது தரப்பு. ஜெயகாந்தன் இறுதியில் சென்று சேர்ந்த இடம் அகங்காரத்தினால் கொண்டு செலுத்தப்பட்ட இடமா எனக் கேட்டார். அய்யன் வள்ளுவன் சொற்களை உதாரணம் காட்டினார். அவரிடம் அதற்கு மாற்றான விசை எதுவெனக் கேட்டேன். “தன்னம்பிக்கை” என்றார். எந்த இலக்கிய விவாதத்திலும் தன் கருத்தின் மீதிருக்கும் தெளிவிலிருந்து கிடைக்கும் தன்னம்பிக்கையிலிருந்தே தான் உரையாட முடியும் என்றார். இது ஒரு வகை. நான் மூன்று நாட்களும் திரும்பத் திரும்ப என் தரப்பையே வாதிட்டேன். அகங்காரம் தேவையெனச் சொன்னேன். 

இப்பொழுது இப்படித் தொகுத்துச் சொல்கிறேன், தன்னம்பிக்கை கொண்ட ஒருவர் பெரும்படைப்பாளி ஆகுவது இயல்வதல்ல என்பதல்ல என் பார்வை, அது அரிதானது என நினைக்கிறேன். ஆனால் அகங்காரம் மிகப்பெரிய உயிர் விசை. தனக்குத் தான் பெருஞ்சவால்களை விதித்துக் கொண்ட ஒருவர் தன்னம்பிக்கையால் மட்டுமே எழுந்து வர இயலாது. அகங்காரம் ஒரு ஆதார ஆற்றல். அதை முறைப்படுத்தி பயன்படுத்தினால் பெரும்படைப்புகளுக்கான உள்விசையை பெருக்கிக் கொள்ள முடியும். ஷோபா தன்னம்பிக்கை என்று சொல்வது போல இளங்கோ டிசே சாமானியனாக இருக்கிறேன், எழுதுகிறேன் எனச் சொல்வது போல, அகங்காரம் கொள்க, நிமிர்வு கொள்க என்பதும் ஒரு தரப்பு. ஜெயகாந்தன் முதல் ஜெயமோகன் கடந்து அடுத்த தலைமுறை வரை நீளும் தரப்பு அது. ஷோபாவின் படைப்புகள் அகன்ற தளத்தில் விரிவான புனைவுப் பின்னணியுடன் நிகழாமல் இருப்பதற்கு அகங்காரத்தை அவர் அணுகும் முறையும் ஒரு காரணமோ என்று தோன்றுகிறது. அகங்காரம் சீண்டப்பட்டு ஆயிரம் பக்கத்தில் ஒரு நாவலை எழுதி வென்றமைதல் என்பது ஒரு ஊக்க விசை மாத்திரமே. தன்னம்பிக்கையும் அதை அளிக்குமென்றால் அது சரி தான். ஆனால் ஜெயமோகனின் பேராணவமே வெண்முரசென மொழியின் மீது முளைத்து நிற்கிறது. நான் ஜெயமோகனின் பாதையையே தேர்ந்தெடுத்திருக்கிறேன். எனக்கு விரிவும் பிரம்மாண்டமும் உவப்பானவை. அதை அகங்காரம் எனும் எண்ணையூற்றி அணையாது பாதுகாக்கிறேன். எனக்கு நானே பெருஞ்சவால்களை ஊட்டிக் கொள்கிறேன். 

வாசகர்கள் அதில் தங்கள் தரப்பை பின் தொடரலாம். அதுவும் அவரவர் இயல்புக்கு ஏற்றதே. மொத்தச் சித்திரமென்பது பெரியது. அதில் பல தரப்புகள் இலக்கியத்தில் உண்டு. நான் முன்வைப்பது ஒரு தரப்பை. அந்த மரபின் நீட்சியான எழுத்தாளர் எனும் பாத்திரத்தில் இருந்தே நான் பேசுகிறேன். என் சொற்களில் வெளிப்படும் அகங்காரமென்பது சிறுமைக்கு எதிரானது. பிறரைச் சிறுமைப்படுத்தவல்ல. அன்றாட வாழ்வில் அந்த அகங்காரத்தின் ஒரு பகுதி என் ஆளுமையிலும் இருப்பதை பலரும் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். அது குழப்பமானது, நானே கூட அதை முழுமையாக விளக்க முடியாது.

பணிவே முதன்மையானது, எழுத்தாளராய் இருந்தால் பணிவாயிரு என்று எழும் குரலைக் கேட்டதும் சன்னதம் வந்து விடுகிறது. உன் மொத்த வாழ்நாளை விடவும் ஒரு எழுத்தாளனின் ஒரு நாள் மேலானது. முக்கியமானது, அப்பாலே போடா சராசரி மந்தனே எனத் தான் வாய் வருகிறது. இயன்றவரை என் நாவைக் கட்டுப்படுத்திக் கொள்வேன். பொருள் கொள்ளும் படி எதையும் ஆற்றாத அற்பர்களின் அறிவுரையை சாட்டையால் அடித்தே விரட்ட வேண்டியிருக்கிறது. மேய்ச்சல் மாடு இலையானை விரட்ட வாலை ஆட்டிக் கொண்டேயிருப்பதைப் போல இவர்களை விரட்டிக் கொண்டே தான் பணியை ஆற்ற வேண்டியிருக்கிறது. இது ஒரு காலகட்டம் மாத்திரமே. எழுத்தாளரின் சமூகப் பாத்திரம் தெளிவாகி, படைப்பை மதிக்கும் முறை பொதுச்சமூகத்தில் முன்னேறினால் எனது குரலுக்கான சீற்றம் தேவையில்லாமல் ஆகிவிடும். அப்போது அது உதிர்ந்து விடும். வேறொரு தொனியை அடையும். அதுவரை இக்குரலே தொடரும். 

‘எளிய அகங்காரம்’ என இளங்கோ குறித்துச் சொன்னது வேறொரு கோணத்தில். அகங்காரமே ஒருவரின் அடிப்படை ஆளுமையென ஆகிறது. அதுவே நம்மைச் சுட்டியெழும் எதிர்க்கருத்துகளால் புண்படுவது. இளங்கோவின் எதிர்வினை அத்தனை விரிவாக எழுதப்பட்டது புண்பட்ட அவரின் அகங்காரத்தின் குரலாலேயே சாத்தியமானது. ஒரு படி மேலே போய், நானோ தர்மு பிரசாத்தோ ஆற்றிய எதிர்வினைகளை தான் கண்டுகொள்ளவில்லை எனவும், அவர்களின் ஆசானே வந்து மோதுவதால் எதிர்வினையாற்றுகிறேன் என பாவனை செய்ததும் எத்தனை பெரிய ஆணவம். ஆனால் அவர் தன்னை ஆணவமற்ற அப்பழுக்கற்ற பிராணியாக முன்வைக்கிறார். அது ஒரு போலி முகமூடி. எழுத்தில் கொப்பளித்திருப்பது சீண்டப்பட்ட ஆணவத்தின் சீழ். அவர் பொருட்படுத்தும் படி படைப்புகளை ஆக்கியிருக்காதவர். ஆகவே அவருக்கு அந்த அகங்காரம் இன்னமும் வலிமையாகவே இருக்கும். அதையே எளிய அகங்காரம் அல்லது வெற்றாணவம் எனச் சொல்கிறேன். அவரைப் போலவே தான், எந்த சாமானியரும் அகங்காரம் அற்றவர் அல்ல. ஒரு படி செயல் புரிபவர்களை விடவும் அதிகாரமும் அகங்காரமும் கொண்டவர்கள். அந்த அகங்காரம் படைப்பாக மாறாதது. படைப்பாக வெளிப்படாதவரின் அகங்காரம் அன்றாடத்தில் பூசல்களையும் முரண்பாடுகளையும் அழிவையுமே உருவாக்கும். ஆகவே அது ஆபத்தானது. சாமானியர் பணியும் ஒன்று இல்லையென்றால் அவர்கள் பேரழிவை தம் விருப்பு வெறுப்பின் பெயரில் நிகழ்த்துவார்கள். கும்பலின் அகங்காரம் போல அஞ்ச வைக்கக் கூடியது எதுவுமல்ல. 

ஒரு ஈழ உதாரணம் சொன்னால், சிங்களவரும் தமிழரும் இஸ்லாமியரும் சமூக வலைத்தளங்களில் தங்கள் இன மேன்மையின் பொருட்டும் மத மேன்மையின் பொருட்டும் மோதிக் கொள்ளும் கருத்துகளை பாருங்கள். அவரவர் அங்கங்கு பிறந்ததினாலேயே வாதிடுகிறார்கள், மோதுகிறார்கள். கருத்துகளையும் நம்பிக்கைகளையும் எடுத்து விட்டால் கூட இப்படியொரு அகங்கார மோதல் களம் எதன் பொருட்டென்றாலும் நிகழ்ந்து கொண்டேயிருக்கும். ஒரு போருக்கான ஊக்கம் மனிதருக்குள் இருந்து கொண்டேயிருக்கிறது. அவர்களுடைய வெற்றாணவ பேச்சுகள் அன்றாட வாழ்வை பாதிக்கின்றன. அவர்களை அதட்ட எழுத்தாளரின் குரல் எழுந்தாக வேண்டியிருக்கிறது. இணைய மந்தர்கள், சராசரிகள் எனச் சுட்ட வேண்டியிருக்கிறது. கொஞ்சமாவது வாசியுங்கள் எனக் கூப்பாடு போட வேண்டியிருக்கிறது. அவர்கள் அறிந்ததெல்லாம் கட்சி கட்டிக் கொண்டு தாக்குவது, தன்னிரக்கம் கோரி அழுவது இரண்டும் தான். சினிமா, விளையாட்டு, அரசியல், கொசிப் என்பவற்றுக்கு மேல் எதுவுமே தெரியாத பாமரக் கூட்டம். அவர்களைப் பாமரர் எனச் சொல்வது அநீதியெனச் சொல்லும் தரப்பும் இலக்கியத்தில் உண்டு. வேண்டுமென்றால் பண்பாட்டுத் தற்குறிகள் என வினயமாகச் சொல்லலாம். 

இத்தகைய தன்மைகளைத் தொகுத்துச் சொல்வது எழுத்தாளரின் கடமையென கருதும் மரபைச் சேர்ந்தவன் நான். ஆகவே நான் இந்தக் கும்பலை என் திரட்டப்பட்ட அகங்காரத்தினால் சீண்டுகிறேன். அவர்கள் புண்படுகிறார்கள். காலம் அதைக் கணக்கிட்டு வகை சொல்லும். 

அன்றாட வாழ்வில் அகங்காரத்தை இந்தக் கோணங்களுடன் அணுகக் கூடாதென்று நினைக்கிறேன். அங்கு ஆக்குவதெற்கு ஒன்றுமில்லை. பண்பாட்டுத் தளத்தில் நிகழும் சீண்டலின் பெறுமானம் வேறு. அதுவே வாழ்க்கையில் நிகழ்ந்தால் முறிவுகளும் கசப்புகளும் ஆபத்துகளும் நிகழக் கூடும். அங்கு நிமிர்வுடன் தன் கருத்தை முன் வைத்தாலே போதுமானது. இவை என் சிந்தனைகள் மட்டும் தான். பெரும்பாலனவர்கள் கற்றவர்கள் பணிவுடன் இருக்க வேண்டுமென அறிவுரை கூறுவார்கள். பணிவு வேறு, நசிவு வேறு. எனக்கு நசியத் தெரியாது. தலையைக் கொண்டு போய் பாறையில் மோதவே தெரியும். யாருக்கு முன் பணிய வேண்டுமென்பதும் தெரியும். அதை நாம் வாழ்ந்தும் கற்றுமே தேறித் தெளிய முடியும். 

ஆணவத்தின் உச்சியில் மடமை கூட முழுமையாக நிகழக் கூடும். பாரதியின் வாழ்வில் சொல்லப்படும் கதையொன்று உண்டு. புதுவையில் நிகழ்ந்த சர்க்கஸ் நிகழ்வொன்றிற்கு கொண்டு வரப்பட்டிருந்த சிங்கத்தின் முன்னே நின்று வனராஜனே நான் கவிராஜன் வந்திருக்கிறேன் என பாரதி சொல்வான். மனைவி செல்லம்மாள் அக்காட்சியைப் பார்த்து, அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுக் கூவியிருக்கிறார். 

பாரதியின் செயல் முழு மடமை. முழு அகங்காரம். அப்படி முற்றாணவம் இல்லாதவன் இப்படியொரு கிறுக்குத்தனத்தை செய்ய முடியாது. ஆனால் சொன்னவன் பாரதி. பெருங்கவிஞன். தன் ஆணவத்தின் உச்சியில் நின்றே “கேளடா மானுடா” என கொஞ்சமும் தயக்கமில்லாமல் சமூகத்தை நோக்கி பேசியவன். அவனுக்கு அந்த அனுமதி உண்டு. பாமரருக்கு அது இல்லை. 

மேலதிக வாசிப்பிற்கு – எனது ஆணவம் – ஜெயமோகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *