இளங்கோ டிசே தன் எதிர்வினையை முடித்திருக்கிறார். “ஜெயமோகனை எதிர்கொள்ளல்“. அந்த மூவர் எனச் சுட்டி என்னையும் தர்மு பிரசாத்தையும் யதார்த்தனையும் சொல்கிறார். எங்கள் பெயர்களை எழுதவே அவரின் கை கூசுகிறது எனத் தோன்றுகிறது. இத்தனை நஞ்சு ஒருவரை உள்ளிருந்தே அழிக்குமொன்று. எந்த விபாசனாவிலும் அதைக் கரைக்க முடியாது.
நாணல்களும் சில புயல்களைத் தாண்டி நிற்கும் தான். ஆனால் ஆலமரங்களோ காலங்களின் பெருக்கைத் தாண்டி நிற்கும். ஏதோ ஒரு புயலில் அழிந்தே போனாலும், மனித நினைவில் எஞ்சும். பூமியில் புல்லும் கூட அழிவற்றது தான். ஆனால் புல்லை புல் என்று சுட்டித் தான் சொல்ல முடியும். குழிமுயலுக்கு எய்யும் அம்பை விட யானை பிழைத்த வேலாய் இருப்பது மேல் என நம்பும் மரபைச் சேர்ந்தவன் நான். தன்னைப் பற்றி உரையாடுவதே அகங்காரம் என்று நம்பும் இளங்கோவிற்கு புண்பட்டதே அந்த அகங்காரம் தான். அதன் சீழொழுகும் வரிகளைத் தான் வாசித்தேன். எத்தனை கசப்பிருந்தால் ஒருவரால் இத்தனை கீழிறங்கி அனைத்தையும் பார்க்க முடியும். அவரது சாமானியன் என்ற தோற்றம் பாவனையே என்பதன் விளைவே இந்தக் குறிப்புகள். அவரது புனைவுலகத்தைப் போலவே அபுனைவு உலகமும் மட்டமான கற்பனைகளால் நிரம்பியிருக்கிறது. அதைத் தாண்டி அவரால் வளர முடியாது. நாணல் தன்னை ஒரு ஆலமரமாக மாற்றிக் கொள்ள இயலாது.
இலக்கியத்தைப் பொறுத்த வரையில் வெற்றியைப் போலவே தோல்வியும் முக்கியமானது. இலக்கியம் அளிக்கும் பெருஞ்சவாலை ஒருவர் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது அவரது சொந்த வாழ்க்கை நோக்கும் இலக்கிய நோக்கும் சார்ந்தது. என்னளவில் இலக்கியமோ கலையோ காலத்தின் சுருக்கத்திற்கெதிரான கற்பனையின் அறைகூவல் தான். ஆணவத்தின் வெளிப்பாடு தான். உளச்சோர்வு அல்ல, வெற்றியும் நிறைவுணர்வும் திகழ்தலுமே முக்கியமானவை.
சாமானியர்கள் என்றோ இலக்கியப் பாமரர் என்றோ சுட்டும் பொழுது அது ஒரு பண்புச் சுட்டுப் பெயர். எக்கணமும் ஒருவர் தீவிர இலக்கியத்திற்குள் நுழையாலாம். அப்படியொரு வழியிருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில், அந்தப் பக்கம் போகாதே சோம்பேறிகள் அதிகம். அந்த நோக்கு அடிப்படையில் பொதுப்போக்கு உருவாக்கியிருக்கும் சோர்வையும் ஊக்கமின்மையையும் அளிக்குமெனச் சொல்ல வேண்டியும் இருக்கிறது. அந்த நோக்கு இலக்கியத்தில் இருக்கும் ஒரு கருத்து மட்டுமல்ல, பண்பாட்டில் அது ஒரு நம்பிக்கையையும் முன் வைக்கிறது. ஆகவே அதற்கெதிரான வாதங்களையும் அதன் போதாமைகளையும் குறித்து என் தரப்பை தொடர்ந்து விரிவாக எழுதி வருகிறேன்.
இளங்கோவின் எதிர்வினையின் முடிவில் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் மூன்று அம்சங்களைச் சொல்லலாம்.
அவர் இலக்கியத்தில் சாமானியர்களின் இலக்கியம் ஒன்றை முன் வைக்கிறார். நான் தீவிர இலக்கியமென்று ஒன்றை வரையறுக்கிறேன். அவருடைய எழுத்துகள் ஒரு சிலருக்காவது பிடிக்கலாம், தான் அவர்களுக்காகவே எழுதுகிறேன் என நம்புகிறார். பெருந்திரளை நோக்கி நானும் தான் எழுதவில்லை. எந்தப் பெரிய மேதைக்கும் கூட அவரது சமகாலத்தில் தமிழில் பெரும் அங்கீகாரங்களுக்கான சாத்தியம் குறைவு தான். எண்ணிக்கையை அல்ல இங்கே நம்புவது, ரசனை, கலையின் தரம், மதிப்பீடு, தீவிரம் ஆகியவையே முக்கியமானது. நான் செல்லும் பாதைக்கு நேரெதிரான திசையில் இளங்கோ செல்லலாம். ஆனால் அவர் செல்லும் திசையின் குறைகளை இலக்கிய விவாதக் களங்களில் சொல்லியாக வேண்டும்.
இரண்டாவது அம்சம், இளங்கோ சதிக்கோட்பாடுகளைச் சிந்திக்கிறார். ஜெயமோகனுக்கு புனை பெயர்களில் கடிதமனுப்பி இளங்கோ எழுதும் எதிர்வினைகளை காட்டுகிறோம் என நினைக்கிறார். இப்பொழுது கற்பை எப்படி நிரூபிப்பது. இது தான் முகநூல் உருவாக்கியிருக்கும் நச்சு மனநிலை. சில நாட்களுக்கு முன் நட்சுவும் இதே போலொரு நச்சு வேலையைப் பார்த்திருந்தார். செல்மனோகரன் கிரிசாந்திற்கு இறுதி எச்சரிக்கையென ஒரு போலியான செய்தியைப் பரப்பினார். அவரும் இலக்கியத்தையோ எதிர்வினைகளையோ ஒரு கணக்காக, எளிய அகங்காரத்திற்கு அப்பால் எந்த நோக்கமுமற்றதாக கருதுகிறார். அவருக்கும் இளங்கோவிற்கும் ஒவ்வொரு செயலும் அடைவும் சதியாகத் தோன்றுவதில் ஆச்சரியமில்லை. அது தான் அவர்களின் அடிப்படைச் சிக்கல். சதிகளின்றி ஒன்று உருவாகி வர முடியும் என்று அவர்களால் நம்ப முடியவில்லை. கணக்கின்றி ஆற்றப்படும் செயல்களை அவர்கள் புரிந்ததில்லை. ஆகவே நம்பக் கடினமாக இருக்கலாம்.
மூன்றாவது அம்சம், அவர் விவாதத்தை மறுத்து, உரையாடலையே விரும்புபவர் எனச் சொல்லியிருக்கிறார். அவர் அந்த வடிவத்தை ஜனநாயகமானதாகவோ பணிவானதாகவோ கூச்சல் குழப்பங்கள் புறங்கழுத்தடிகள் அற்றதாகவோ ஆக்கிக் கொள்ள விழையலாம். அதுவும் ஒரு தேர்வு. ஆனால் சூழலுக்குச் சொல்ல வேண்டியது, அழகியல், இலக்கியம் குறித்த பார்வைகளை உரையாடுவதில் உள்ள பயனைப் போலவே விவாதிப்பதிலும் உள்ளது. வாளைச் சாணைக்கல்லில் தேய்ப்பது போன்றது உரையாடல் அளிக்கும் கூர்மையென்றால், இரண்டு வாள்கள் மோதிக் கொள்வது போன்ற பயிற்சியையும் கவனக் கூர்மையையும், தொகுப்புத் திறனையும், சிந்திக்கும் சாத்தியங்களையும் விவாதம் மேம்படுத்தும். வெளியே நடக்கும் மோதல் அல்ல இங்கே முக்கியமானது. வாளை வீசிக் கொள்ளும் போதே நம் கூர்மையும் விழித்துக் கொள்ளும். நம் அகம் அடையும் கூர்மைக்காகவே மோதுகிறோமே ஒழிய ஒருவரை ஒருவர் புறவயமாகத் தாக்கிக் கொள்வதற்காக அல்ல.
நானோ தர்மு பிரசாத்தோ யதார்த்தனோ புற்றீசல்கள் போல எழுதித் குவிக்கிறோம் எனவும் குறைபட்டிருந்தார். ஒரு பெரிய ராட்சசனை ஆசிரியராகக் கொண்டவர்கள், எவ்வளவு சிறியவர்களாயிருந்தாலும், ராட்சசர்களாகத் தானிருக்க முடியும்.
நலம் திகழ்க.

