பன்றியுமாய் அன்னமுமாய் சோதியுமாய்

 

தமிழ் நாட்டிலிருந்து வெளிவரும் தமிழ்பல்லவி எனும் இதழ் தனது நாற்பதாவது இதழினை ஈழத்துச் சிறப்பிதழாக வெளியிட்டிருக்கிறது. அவ்விதழில் எழுத்தாளர் கருணாகரனின் நேர்காணல் ஒன்றும் வெளியாகியிருக்கிறது. போருக்கு பிந்தைய வாழ்க்கை, இலக்கியச் சூழல் பற்றியே கேள்விகள் மையங் கொண்டிருக்கின்றன.

அதில் ஒரு கேள்விக்கான பதிலின் ஒரு பகுதியில் கருணாகரன் இப்படி பதிலளிக்கிறார், “இன்னொரு தரப்பினர் போர் உண்டாக்கிய அனுபவங்களின் நிலைநின்று பேச விளைகிறார்கள்.
குறிப்பாகப் போரையும் அது உண்டாக்கிய பாதிப்பையும்
அதற்குக் காரணமான இரு தரப்பினரையும் விமர்சிக்கின்றனர். குறிப்பாகப் பலரும் பேசத்தயங்குகின்ற விடுதலைப்புலிகள்
தரப்பின் தவறுகளையும் பிற இயக்கங்களின் குற்றங்களையும் இவை பேசுகின்றன. இந்தவகை எழுத்தில் தமிழ்க்கவி,
ஷோபாசக்தி, நிலாந்தன், சயந்தன்,
தேவகாந்தன், நடேசன், ப.தெய்வீகன், கிரிசாந், தமிழினி, தில்லை, மு.பொ, சி.சிவசேகரம், இராகவன், யோ.கர்ணன், நவமகன், யதார்த்தன் போன்றோரைக் குறிப்பிடலாம். ஓரளவுக்கு இவை போர் மறுப்பு இலக்கியத்துக்கு நெருக்கமானவை எனலாம்.

(தமிழ் பல்லவி, 40 வது இதழ், நேர்காணலின் பகுதி, கருணாகரன்)

ஆனாலும் இவையும் இன்னும்
நெடுந்தூரம் பயணிக்க வேண்டியவை. குற்றம் சுமத்துவது, எதிர்ப்பது என்ற எளிய சூத்திரத்துக்கு அப்பால் அகத்தைத் திறப்பது, பொறுப்புணர்த்துவது, புதிதாகச் சிந்திக்க
வைப்பது என்ற இலக்கியப் பண்புகளை நோக்கி நகர வேண்டும். எப்படியென்றால், தமிழ் மக்களின் நியாயமான அரசியல்
நியாயப்பாடுகளையும், போரினால் அனுபவித்த வலிகளையும் சிங்கள மக்களும் சர்வதேச சமூகமும் புரிந்துகொள்ளக்கூடிய, ஏற்கக் கூடிய, தமிழ் மக்களுக்கு ஆதரவான உளமாற்றத்துக்கான தமிழ் இலக்கியங்களே போருக்குப் பிந்திய இன்றைய சூழலில் முக்கிய தேவை. முந்திய இரண்டு தரப்பிலும் புதியவை என்று அதிகமில்லை. போருக்கு முன்பும் போர் நடந்தபோதும் இவ்வாறான எழுத்துகள் தாராளமாக வந்துவிட்டன. போருக்குப்
பிந்தியவற்றில் சில போரின்போது என்ன நடந்தது என்பதைச் சொல்வதாக ஆவண விவரிப்பாக உள்ளன. அவற்றுக்கு ஒரு
முக்கியத்துவம் உண்டுதான்.
இலங்கை அரசாங்கத்தையும் சிங்கள பௌத்த இனவாதத்தையும் எதிர்க்கவும் விமர்சிக்கவும் வேண்டியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அதை நாம் ஒரே விதமான
வாய்பாட்டுத்தனமாக எழுதுவது
வாசகர்களுக்குப் புதிய உணர்வையோ சேதியையோ தராது. அரசும் சிங்கள பௌத்த
இனவாதமும் ஒடுக்குமுறை இயந்திரமாக இயங்குவதற்கான உள்ளார்ந்த காரணங்கள்
என்ன? அவற்றை மீறி அவற்றினால் சிந்திக்க முடியாதிருப்பது ஏன்? அதற்கான சமூக, வரலாற்று, அரசியற் பின்புலம் என்ன? இனவாதத்தினால் உண்டாகும் பாதிப்புகள் இலங்கைச் சமூகங்களை எப்படிப்
பாதிக்கின்றன? இதற்கான மாற்றுக்கள் எவை? சமாதானத்தையோ இனவாதமற்ற
சூழலையோ உருவாக்க முடியாமலிருக்கும்
தோல்வி, வெட்டக்கேடானதில்லையா?
என்ற வகையிலான – புதிய முறையிலான – எழுத்துகள் வர வேண்டும்”.

(கருணாகரன்)

*

அண்மையில் கலாமோகனின் நூல் வெளியீட்டில் உரையாடல் நேரத்தில் அ. யேசுராசாவுடன் நான் முன்னர் கேட்ட கேள்வியொன்றுக்கான உரையாடலில் ஈடுபட்டிருந்தேன்.  எனது முன்னைய கேள்வி தமிழ்த்தேசிய சார்பு நிலை கொண்ட எழுத்துகள் என்று சொல்லிக் கொள்ளும் படைப்புகள் மீது அவர் வைக்கும் விமர்சனங்களில் எதிர்த்தரப்பிடம் கேட்கும் கேள்விகளைக் கேட்பதில்லை என்பதை அழுத்தமாகவே மீண்டும் சொல்லியிருந்தேன். (தமிழ்த்தேசிய அழகியல் விமர்சனம்)   அதாவது ஆதரவு நிலைக்கு வெளியே இலக்கியங்கள் வரும் பொழுது அவற்றின் மீது மொத்த வரலாற்றுப் பார்வையில் வைத்து பார்க்கக் கேட்குமவர் அத்தகைய பார்வைகள் இல்லாத தமிழ்த்தேசிய சார்பு எனும் அடையாளத்துடன் வரும் எழுத்துகளை அப்படி விமர்சிப்பதில்லை, அல்லது விமர்சிக்கும் பொழுது நீங்கள் ஏன் அதைப் பேசவில்லை, இதைக் கருத்திலெடுக்கவில்லை எனக் கேட்டபதில்லை எனச் சுட்டினேன். அவர் அதற்கு தானும் அழகியல் விமர்சன மரபைச் சேர்ந்தவர் என்றே குறிப்பிட்டார். தமிழ்த்தேசிய சார்பு என்பதாலேயே தான் கலைக்குறைபாடுகளை சொல்லாமல் விடுவதில்லை என்றும் பெருமளவுக்கு அப்படியானவர்களின் நாவல்களில் சிலவற்றையே வாசித்திருப்பதாகவும் சொல்லியிருந்தார்.

அவருடைய கருத்துகளில் எழுத்தாளர் என்பவருடைய சொந்த அனுபவங்கள் என்பதற்கு அழுத்தம் கொடுத்தும் பேச்சு இருந்தது. எந்த ஒரு எழுத்தாளருக்கும் அனுபவம் என்பதன் எல்லை சிறியதே. எத்தனை அரிய, தீவிர அனுபவங்கள் இருந்தாலும் அனுபவம் என்பது ஒரு அளவு கோலாகவோ, இலக்கிய தகுதியை தீர்மானிக்கும் அம்சமாகவோ கருத இயலாது என்று நான் நினைக்கிறேன். புனைவெழுத்தாளரின் தனிப்பட்ட அனுபவங்களின் அளவு அல்ல அதன் தரத்தையோ ஆழத்தையோ தீர்மானிப்பது. அகத்தில் அவரது பார்வையின் ஆழமும் வாழ்க்கையை பற்றிய பார்வைகளின் விசாரணையுமே புனைவுகளை ஆழப்படுத்துகிறது. மனித இயற்கை பற்றிய எழுத்தாளரின் நுண் அவதானிப்புகள், வரலாறு, தத்துவம் குறித்த அவர்களின் நோக்குகளே அவற்றின் தரத்தை, ஆழத்தை தீர்மானிக்கின்றன. அதற்கு மேலும் அவரது புனைவு வாசிப்பின் அகலம், கற்பனையின் விசாலம் போன்றவையும். ஜெயமோகன் சொல்வது போல, இவையெல்லாம் இருந்தாலும் கூட அவற்றுக்கும் மேலே மேலதிகமாக ஒன்று நிகழ்பவரே கலையை நிகழ்த்துகிறார். அது ஒரு தற்செயல்.

(அ. யேசுராசா)

இங்கு மேலே நேர்காணலில் உள்ள கருணாகரனின் பார்வை இலக்கியத்துக்கான அரசியல் திட்டம் போலிருக்கிறது. இது இன்னொரு வகையான யேசுராசாவின் பார்வையே. கருணாகரன் அதை தமிழ்த்தேசியம் என்பதற்கு பதில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகள், அரசியல் வரலாற்று ஓட்டம், சமாதானம் என்னும் இன்னொரு அரசியல் சாடியில் சுருக்குகிறார். நான் இவற்றிலிருந்து மூன்றாவது பக்கத்தையே இலக்கியம் என்று முன்வைக்கிறேன். இலக்கியம் வாழ்க்கை எனும் விரிந்த அலகை மட்டுமே தன் பரப்பாக கொள்ள வேண்டியது. வரலாறு மட்டுமல்ல, தத்துவமும் சமதையான சிறகே.

நான் என்னையே அவர் முன்வைத்திருக்கும் பட்டியலில் வைத்துப் பார்த்தால் குழப்பமாக இருக்கிறது. அது அவரது ரசனை அடிப்படையிலான தேர்வுகள் என்றாலும் கூட அவை ஒரு பெட்டிக்குள் அடைக்கும் செயற்பாடும் என்பதால் என் மறுதரப்பை முன் வைக்கிறேன். அந்தப் பட்டியலின் முதன்மை அம்சத்தின் சிக்கல் போர் மறுப்பு எனும் இலக்கிய வகைமையாக என்னைச் சுட்டுவது. அதில் மட்டுமே சுருக்குவது. நான் தந்தையின் வீடு போன்ற கவிதையையும் எழுதியிருக்கிறேன்,மாவீரர் தினத்தின் விளக்கெரிப்பதற்கான தடையையும் எதிர்த்து எழுதியிருக்கிறேன், போரில் கொல்லப்பட்டவர்களுக்கும் எழுதியிருக்கிறேன். அவை சிலவே. என் பெரும்பான்மையான கவிதைகள் வாழ்க்கை என்ற பெரும்பரப்புக்குள் நிகழ்ந்தவை. அடுத்து கொடிறோஸில் என்ன போர் மறுப்பு இருக்கிறது, போர் ஒரு பின்னணி மட்டும் தான். அதில் வருகின்ற காலகட்டச் சித்தரிப்புகள் வேறொன்றிற்காகவே நிகழ்ந்திருக்கின்றன. கல்விரலை போருக்கு பிந்தைய கிராமமொன்றின் கதையொன்றாக வாசித்தாலும் கூட அதில் அரசியலுக்கு அப்பால் நிகழும் மானுட நாடகமும் இயற்கையுமே முக்கியமாக கவனம் கொள்ளப்பட்டிருக்கிறது. அதற்கு பிறகு இது வரை பத்து சிறுகதைகள் வந்திருக்கின்றன. அவற்றிலும் போர் எங்கிருக்கிறதென்று தெரியவில்லை. பண்பாட்டின் பல்வேறு அடுக்குகள், காலங்கள் கவனம் கொள்ளப்பட்டிருக்கின்றன. பெருங்காவியத்தை கூட அத்தனை எளிமைப்படுத்த முடியாது. அது சிவரமணியின் வாழ்விலிருந்து இந்த நிலத்தின் தொடக்கம் முதல் இன்று வரையான வாழ்வின் முழுமையான சித்திரம் காவியமாக்கப்படுதலைப் பற்றிய கேள்வியை இணைப்பது. அதன் கண்டடைதல் எளிய அரசியல் தொப்பிகளை அணிந்து கொள்ளக் கூடிய அளவுக்கு சிறியவையல்ல. என்னை ஒரு சில புனைவுகளுக்கும் கவிதைகளுக்கும் அப்பால் எந்த வகையிலும் போர் சார்ந்த குரூப்களுடன் இணைக்க முடியாது. அவர்களை விட என் புனைவுகளும் கவிதைகளும் வேறு பாடுபொருட்கள், இலக்கிய நுட்பங்கள், அடிப்படைகள் கொண்டவை.

சயந்தனை போரினதும் அதன் விளைவுகளினதும் வாழ்வை பெருமளவு எழுதியவராகச் சொல்லலாம், யதார்த்தனின் இது வரையான புனைவுகள் கூட அதிகம் போரின் காலகட்டத்தை விரிவாகக் கொண்டிருப்பது. போர் என்பது ஒரு பாடுபொருளாக மட்டுமே கணக்கிலிருப்பது. நிலாந்தன் புனைவெழுத்தாளர் அல்ல. அவர் ஒரு கவிஞர் மட்டுமே. அவரும் பட்டியலில் இருக்கிறார். தேவகந்தனிடன் பல்வேறு வகையான பாடுபொருட்களும் அக அம்சங்களும் எடுத்தளப்பட்டிருக்கின்றன. ஆனால் அவரிடம் இலக்கிய நுண்ணுணர்வு பெரிதளவில் படைப்புகளில் வெளிப்படவில்லை. ஆனால் கவனிக்கத்தக்கவர்.  தமிழ்க்கவிக்கு அவர் எழுதியளித்திருக்கும் வாழ்க்கையின் நுண்தகவல்கள், காலகட்டத்தின் வாழ்க்கை சார்ந்த அவதானிப்புகள் முக்கியமென்று தர்மு பிரசாத் குறிப்பிடுவதுண்டு.

தெய்வீகனுக்கும் இத்தகைய பட்டியலில் இடமிருப்பது ஆச்சரியம் தான். அவர் என்ன எழுதி விட்டார்?, எழுத முயற்சிக்கிறார் என்பதற்கு அப்பால் ஏதாவது முக்கியமான ஆக்கத்தை எழுதியிருக்கிறாரா? இளங்கோவையும் சேர்த்திருந்தால் இருவரையும் குருடனும் முடவனுமாய் அந்தப் பட்டியலில் சேர்த்திருக்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாம்.

ஷோபாவின் புனைவுலகம் போர் சார்ந்த விளைவுகள், உலகம் என விரிந்திருந்தாலும் அதற்கு அப்பாலும் நிகழும் வாழ்க்கையைத் தொடும் நுண்மை நிகழ்ந்த பல முக்கியமான கதைகளை அவர் எழுதியிருக்கிறார். அவரை நான் ஒரு எழுத்தாளர் என்று சொல்வேன். மிச்சம் பேரெல்லாம் கருணாகரனின் ரசனைக் கோட்டாவில் பட்டியலில் குந்தியிருப்போர். வேடிக்கையான தொப்பிகளை அணிந்தபடி.

கருணாகரனின் பட்டியலுக்கு அடுத்த பகுதியில் அவரளிக்கும் அரசியல் திட்டங்கள் தான் இன்னும் பலவீனமானவை. இலக்கியத்தில் போரை எழுதக் கூடாதென்பதில்லை. அது ஒரு மையமான சிக்கலாக, தொந்தரவாக தன் வாழ்க்கைக்கு இருப்பவராக கருதுபவர் அதை எழுதலாம். அதில் கருணாகரன் சொல்லும் ஒரு அம்சத்தை நானும் முக்கியமெனக் கருதுகிறேன். குற்றம் சுமத்துவது, எதிர்ப்பது என்பதற்கு அப்பால் அகத்தை திறப்பது என்பது முக்கியம். ஆனால் அதற்கு பிறகு வரும் பகுதிகளில் கருணாகரன் இலக்கியத்தை விட்டுவிட்டு இயக்கக் கூடாராத்தில் வகுப்பெடுக்க ஆரம்பித்து விடுகிறார். இலக்கியத்தின் கருத்து நிலைகள் இலக்கியத்தில் ஒரு அம்சம், பாடுபொருட்கள் இன்னொரு அம்சம், இவை ஒரு எழுத்தாளரின் சொந்த தொந்தரவின் பாற்பட்டது. கெண்டெண்ட் நல்லாயிருக்கிறதென்று இந்தக் கால யூட்டியூபர்கள் போல போரை எழுதபவர்களை நாம் பொருட்படுத்த தேவையில்லை. நல்ல வேளை தீபச்செல்வன், வாசுமுருகவேல், அகரமுதல்வன் போன்ற மாமனிதர்களைப் பட்டியலில் காணவில்லை. இருந்திருந்தால் வாசிப்பவர்களுக்கு குப்பென்று வியர்த்திருக்கும். ஆனால் அவர்கள் போன்றவர்களே கருணாகரனின் இலக்கியத் திட்டத்திற்குத் தோதுப்படுவார்கள்.

மேலும் அடிப்படையான வேறுபாடு ஒன்று எனது இலக்கியத்தில் வெளிப்படுபவற்றுக்கு உண்டு. நான் போருக்கு முந்தைய தலைமுறையினரின் நீட்சி. சு. வில்வரத்தினமும் சண்முகம் சிவலிங்கமும் என் முன்னோடிகள். அவர்கள் போரில் பல்வேறு அம்சங்களை எழுதியிருந்தாலும் அதற்குமப்பால் விரிந்த வாழ்வின் பல்வேறு பாடுபொருட்களை கலையாக நிகழ்த்தியிருக்கிறார்கள். பாடுபொருட்களை வேறுபடுத்தி யார் வேண்டுமானாலும் எழுதிக் குவிக்கலாம். அதனால் ஒருவர் எழுத்தாளர் ஆகி விட முடியாது. அவற்றின் கலை மதிப்பு என்ன என்பதே முக்கியமானது.

இன்று இன்னும் சற்று விரிந்த தளத்தில் இலக்கியம் அணுகப்படுகிறது. வரலாற்று நோக்கென்பது கடந்த நாற்பது அல்லது ஐம்பது ஆண்டுகளின் அரசியல் நிகழ்வுகளை புரிந்து கொள்வது அல்ல. மானுட வரலாற்றில் வைத்து வாழ்க்கையை புரிந்து கொள்வதே வரலாற்று நோக்கு. இந்த நிலத்தின் மூவாயிரம் ஆயிரமாண்டுகால வரலாற்றின் திரண்ட ஒன்றே அண்மைய போரிலும் நிகழ்ந்திருக்கிறது. வரலாற்றில் போர் ஒரு திருப்பு முனை, அல்லது யுகசந்தி மட்டும் தான். அதற்கு முன்னும் பின்னும் நீண்ட காலமிருக்கிறது. மலைப்பாம்பின் வயிற்றில் இருக்கும் மான் போன்றது போர் என்றால் முன்னால் நீளும் தலையும் பின்னால் நீளும் வாலும் கணக்கிலெடுத்துக் கொண்டாலே முழுமையான சித்திரம் கிடைக்கும். அது ஜே ஆர் ஜெயவர்த்தனாவோ பிரபாகரனோ மட்டுமில்லை என்பது தெரியும். அவர்கள் தங்கள் காலகட்டத்தின் விசைகளால் உருவான கருவிகள் மாத்திரம் தான். உபயோகம் அகன்றதும் காலத்தின் அடியில் வீசப்படுவார்கள். ஆனால் இலக்கியம் என்றுமுள்ள வாழ்க்கையின் மீது அனைத்தையும் புரிந்து கொள்ள முயல வேண்டியது. அதற்கு அரசியலைப் போல உதவத்த ஒன்றை பொருட்படுத்தக் கூடாது.

தர்மு பிரசாத்தின் சிறகை குறுநாவலும் போரின் நடுவே நிகழ்வது தான். ஆனால் அது ஒட்டுமொத்த வாழ்வின் ஒளியிலேயே அதை அணுகுகிறது. சிறகையில் வரும் முதுபாட்டன்கள் கள்ளுக் குடித்தபடி கடற்கரையில் உலவும் சித்திரம் போன்ற ஒரு தருணத்தை எவராவது போருக்குள் எழுதியிருக்கிறார்களா? அது வேறொரு ஆழத்தை போருக்கு அளித்து பிறிதொரு கோணத்திலிருந்து அதைப் பார்க்கிறது. இன்னொரு பூதக் கண்ணாடியைப் பின்னால் வைத்ததும் பார்க்கப்படுவது நெருங்கி வருவதைப் போன்றது அது. அவரது வரவிருக்கும் நாவலில் அது மேலும் விரிவாக ஆகியிருக்கிறது.

வரலாற்றின் அடுக்குகளை பன்றியைப் போலாகி ஆழங்களைத் துளைத்தபடியும் தத்துவமெனும் அன்னமாகி மேலும் மேலும் உயர்ந்து செல்வதையும் கொண்டே இலக்கியமெனும் அலகிலாத சோதி அளவிடப்பட வேண்டும். அது எனக்கு முக்கியமானது, எனது எழுத்துக்களை வாசகர் புரிந்து கொள்ள, இலக்கியத்தின் ஒற்றை வகைமையைக் கடந்து வெளியே வந்து வாசிப்பையும் சிந்தனையையும் விரிவாக்க அது அவசியமானது. அதை எங்கிருந்தோ பார்க்குமொருவர் ஒரு ஒளிப்புள்ளியென நினைக்கக் கூடும். இலக்கிமென்பது அகத்திற்கான கலை. அதை வாழ்க்கைக்கு அருகில் வைத்தே அளக்க வேண்டும். 

நம் பெரும்பாலான போர்க்கால இலக்கியங்கள் வரலாற்று அடிப்படையில் ஒரு சில அடைவுகளைக் கொண்டிருந்தாலும், விரிந்தவை அல்ல. என் புனைவுகள் மீது சூழலில் இருக்கும் கவனயீனம் என்பது அத்தகைய போர்ப் பாவனைகள் எதுவுமில்லை என்பது தான். நான் கல்விரல் போன்ற ஒரு நாவலை எழுதியிருந்தாலும் அதில் இருப்பது வரலாற்று ஓட்டங்களின் பின்னணி மட்டும் தான். அதற்குள் இருப்பது கம்யூனிஸ்ட்டின் வரலாறு அல்ல. வரலாற்றில் நிகழும் கம்யூனிஸ்ட்டின் கதை. போகிற போக்கில் அசட்டுக் குப்பைகளையெல்லாம் கூட பொருட்படுத்தி உரையாடும் இடதுசாரிக் கலை இலக்கியக் கூட்டங்கள் கூட கல்விரலை பொருட்படுத்தவில்லை. அது அவர்களது போராட்டத்தை வரலாற்றின் இன்னொரு விடுதலைப் போராட்டத்தின் விசை முறிவுடன் இணைத்து வாழ்க்கையின் மனித சுபாவங்களின் முன்னே நிகழ்த்திப் பார்க்கிறது. ஆகவே அவர்களுக்கு அதன் இடம் சிக்கலை அளித்திருக்கும். தமிழ்த்தேசியவாதிகளுக்கும் அது பிடிபடாது, மறுப்பவர்களும் அதை மதிக்கவில்லை. இதன் அடிப்படை சிக்கல் அரசியலை மட்டுமே அடிப்படையாக கொண்ட நம் இலக்கிய உரையாடல் தான். நாம் இன்னமும் இயக்க வகுப்புகளிலிருந்து வெளியே வரவில்லை. அங்கிருந்து கொண்டு வகுப்பை சற்று அகலப்படுத்தி வருகிறோம். இலக்கியம் தொடர்பான கருணாகரனின் இந்த நேர்காணல் ஏன் ஒரு சனநாயக, கோட்டா அடிப்படையிலான பார்வைகளை கொண்டிருக்கின்றது?. சொற்களில் எங்காவது இலக்கிய வாசமடிக்கிறதா? இத்தகைய போக்குத் தான் அ. யேசுராசாவின் சிக்கலும், இடதுசாரிகளும் அப்படியே. சில அம்சங்களில் உடன்படக் கூடிய புள்ளிகள் இவர்கள் அனைவரில் இருந்தாலும் அடிப்படையில் பெரிய இடைவெளியும் எனக்கும் அவர்களுக்கும் இருக்கிறது.

ஆகவே தான் எந்த மறுவினையும் எவரும் புரியாவிட்டாலும் கூட நான், எனது தரப்பை விரிவாகத் தொடர்ந்து முன் வைத்து எழுதி வருகிறேன். இங்கு இலக்கியம் முன்னப் பின்னப் பழக்கமே இல்லாத காரியம். ஒரு வகையான அரசியல் இலக்கியம் எழுதியிருக்கிறோம். போருக்கு முன் செழுமையான மரபின் தொடக்கமிருக்கிறது. இப்போது மீண்டும் அதையும் இதையும் இழுத்துக் கட்ட முயல்கிறேன். வரலாற்றின் போக்கில் நாற்பது வருடமெல்லாம் ஒரு கணக்கே இல்லை. நூற்றாண்டுகளும் பேரழிவுகளுமே கூடக் காணாமல் போய்விடும். நிகழ்வுகளுக்கு எந்த மதிப்புமில்லை. மெய்யான கலையே எதையும் காலத்தில் ஊன்றும். ஆயிரம் அரசர்கள் பிறந்து மடிந்தலும் ராமனும் ராவணனும் இலக்கியத்தால் வாழ்வது போல, பாண்டவரும் கெளரவரும் நம் வாழ்வின் அன்றாடத்துடன் கலந்து விட்டிருப்பது போல, ஒரு வணிகனின் மனைவி கொற்வையாகிக் கண்ணகியாகி ஆலயங்களில் அமர்ந்து அருள் பாலிப்பதைப் போல ஒன்றை ஆக்க இலக்கியத்தால் மட்டுமே இயலும். அது வெறும் வரலாறல்ல. வரலாறும் தத்துவமும் இணைந்து உருவாக்கும் புனைகளம்.

இவர்களுடன் சில்லறைக் கதைகள் எழுதி, அரசியல் பூசல்களில் ஈடுபட்டு வாழ்ந்து மடிவதல்ல இனி ஒரு எழுத்தாளரின் பயணம். அது பெரியது. வரலாறும் தத்துவமும் கொண்டு, மானுட வாழ்வின் விரிவான களங்கள் எழுதப்பட்டு, உணர்ச்சிகள் நுண்மையால் தொடப்பட்டு ஆழ்ந்து பயின்று, அமர்ந்து தீவிரத்துடன் எழுதி, அதில் தோற்று, தோற்றதில் உணர்ந்து, உணர்ந்ததை கலையில் விசாரணை செய்து, அறிந்ததிலிருந்து அறியமுடியாமையை நோக்கி தன் தரிசனத்தை விரிப்பவருக்கே இனி இலக்கியம். அவரே இனி எழுத்தாளர். அவர் ஒரே கணத்தில் பன்றியும் அன்னமும் சோதியுமாய்த் தன்னை உணர்பவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *