பித்தம் தெளிய வைத்தல்

நண்பரொருவர் கீழ்க்கண்ட பதிவின் பகுதியை அனுப்பியிருந்தார்.

“இதையேன் இவ்வளவு விபரமாகச் சொல்கின்றேன் என்றால், நேற்று நண்பர் ஒருவரோடு பேசும்போது இன்று ஈழத்திலும், புலம்பெயர்ந்தும் இருந்து வரும் ‘பாவனை’ எழுத்துப் படைப்புக்கள் பற்றிய பேச்சு வந்தது. நண்பர் இன்னொரு தனது நண்பரிடம், அவரில் சமகாலத்தில் எழுதும் படைப்பாளியின் பாதிப்பு அப்பட்டமாகத் தெரிகின்றதே என்றபோது, தனது ‘குருவின்’ பாதிப்பு படைப்பில் இருப்பது தனக்குப் பெருமைதான் என்று மற்றவர் சொல்லியிருக்கின்றார்.
நான் சொன்னேன், காலமான படைப்பாளிகளின் பாதிப்பு இருந்தால் கூட கொஞ்சம் சகித்துக்கொள்ளலாம்; சமகாலத்தில் எழுதும் ஒரு படைப்பாளியின் பாதிப்பு இருந்தால் அதை ஏன் ஒருவர் வாசிக்கப் போகின்றார். அசலாக அதை எழுதும் ‘குரு’ எழுத்தாளர்களே நமக்குப் போதுமே என்றேன்.

“பிதாவே, இவர்களை மன்னியும்; தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்” என்று இயேசு தன்னைச் சிலுவையில் அறையும்போது சொன்னதைக் கூட இவர்களுக்குச் சொல்லமுடியாது. ஏனெனில் இவ்வாறு பாவனை செய்து ‘அதே நடையில்’ எழுதுவதை தெரிந்தே செய்கின்றவர்களுக்கு நாம் எதைச் சொன்னாலும் இந்தப் ‘பித்தம்’ இப்போது தெளியப் போவதில்லை.
ஆனால் அவர்கள் எழுதும்போது ஒன்றைக் கவனத்தில் கொள்ளலாம். உண்மையிலே எழுத்து எனக்கு அந்தரங்கமான மகிழ்வையும் நிறைவையும் இப்படிப் பாவனை/பாதிப்போடு எழுதுகின்றபோது தருகின்றதா, இல்லையா? என்று.
சிலவேளை தங்களுக்குள் ஏதோ ஒரு தருணத்தில் ஆழ்ந்து பார்க்கின்றபோது அவர்களைப் போன்றோர் தமது தனித்துவத்தை எழுத்தில் கண்டடையக்கூடும். அப்படி எழுதுகின்ற எழுத்துக்களே அவர்களை வாசகர்களுக்கு ஞாபகப்படுத்துமே தவிர, பாவனை எழுத்துக்கள் அல்ல”

இளங்கோ டீசே

*

இவர் குறிப்பிடும் எழுத்தாளர் நான் தான். தர்மு பிரசாத்தையும் கூட அப்படிச் சுட்டியிருக்கலாம். எனக்குத் தான் ஆசிரியர் உண்டு. அதை நான் பல காலமாகச் சொல்லி வருகிறேன். ஜெயமோகனின் உரைநடையின் செல்வாக்கு என்னில் உண்டு. அவருக்கு சுந்தர ராமசாமியின் தாக்கம் உண்டு. இருவருக்கும் தம் முன்னோடிகளின் தாக்கமுண்டு. என் உரைநடையில் சங்க காலம் தொடங்கி ஈழத்து நவீன கவிதைகள் வரை அவற்றின் விரிவான செல்வாக்கு உண்டு. நான் என் பொற்சுரங்கத்திலிருந்தே சொற்களை எடுக்கிறேன். அப்படித் தான் எந்த நல்ல எழுத்தாளரும் உருவாகி வர முடியும் என்னும் தரப்பு நான். அது ஜெயமோகனின் தரப்பும் தான்.

இளங்கோவுக்கு கிஞ்சித்தும் தைரியமிருந்ததில்லை என்பதை நீண்டகால அவதானத்திலிருந்து அறிவேன். பெயர் சுட்டி எழுத திராணியற்ற கிசுகிசுக்கு பதிலெழுதக் கூடாதென்றெல்லாம் இல்லை. தமிழ்ச் சிற்றிதழ் மரபிலிருந்து நீண்டு வரும் விமர்சன, விவாத மரபை முகநூல் சராசரி எழுத்தாளரான இளங்கோ அறிய வாய்ப்பில்லை. செய்தியென எங்கேனும் கேள்விப்பட்டிருந்தாலும் கூட தைரியம் என்பதெல்லாம் அடிப்படையில் இருக்க வேண்டிய பண்பு. இடையில் வெட்டி நட முடியாது.

நான் ‘அதே நடையில்’ தெரிந்து எழுதுவதாகவும் அதனால் பித்தம் தெளிய வாய்ப்பில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இலக்கியப் பாமரரான இளங்கோ இதுவரை சொல்லிக் கொள்ளும் படி ஒரு கதை கூட எழுதாதவர் என்பது என் மதிப்பீடு. கதைகள் எப்படி எழுதக் கூடாதெனக் கற்றுக் கொள்வதற்காக நான் வாசிக்கும் பாமரர்களின் பட்டியலில் அவரது பெயரும் உண்டு. அவரது கடைசிக் கதை வரை அவர் அதைத் தான் நிரூபித்து வந்திருக்கிறார்.

அவரது முதன்மையான சிக்கல் அவரால் புனைவென்பதை என்னவென்று புரிந்து கொள்ள முடியவில்லை என்பது தான். அவர் அதை அரசியல் சரிநிலைகளின் கொத்தாகவும் சம்பவங்களை அடுக்கினால் கதையென்றும், சில முதிராக் காதல், காமம் சார்ந்த சிக்கல்களை வாழ்க்கையின் ஆதாரச் சிக்கல்கள் என்றும் கருதுபவர். அதைத் தான் எழுத்தென்று இன்று வரை எழுதுகிறார். வாசிக்கும் படியான உரைநடை கொண்ட ஏதாவது ஒரு கதையாவது எழுதியிருந்தால் அதை யாராவது அனுப்பி வையுங்கள்.

இரண்டாவது சிக்கல், அவர் குறிப்பிடும் பாவனை என்பதன் அசல் உதாரணம் அவரது எழுத்து தான். அவர் தன்னை ஒரு எழுத்தாளன் என அசட்டுத் தனமாக நம்புவது ஒரு உரிமை என எடுக்கலாம். சயந்தன் சொல்வது போல அச்சப்படுவதற்கும் உரிமை இருப்பது போல. அதே உரிமையின் சட்ட ஏற்பாட்டில் தான், சமகாலத்தின் மேம்பட்ட உரைநடையை எழுதக் கூடிய எனக்கு அவர் எழுதுவதை பாவனை எனச் சொல்லும் உரிமை இருக்கிறது. ஒரு நல்ல உவமை, ஒரு நல்ல சித்தரிப்பு, ஒரு நல்ல கண்டடைதல் கொண்ட அவரது ஒரு கதையையாவது அவருக்கென முட்டுக் கொடுக்க வருபவர்கள் காட்டினால் புண்ணியமாய் போகும். நானும் இன்று வரும் நாளை வருமென்று அவர் நல்ல கதை எழுதப் போகும் பொன்னாளுக்கெனக் காத்திருக்கிறேன்.

சரி, அவருக்கு எழுத வராததற்கு நான் என்ன செய்ய முடியும். ஆனால் அவர் சுட்டியிருக்கும் விசயத்தை அண்மையில் கவிஞர் கருணாகரன் கேட்ட பொழுது அவருக்குச் சொல்லியிருந்தேன். ஜெயமோகனின் பாதிப்பு என்னுடைய கதைகளில் தெரிவதாக சொல்லியிருந்தார். அதைச் சற்று விளக்கமாக இங்கே சொல்லி விடுகிறேன்.

அவரது பாதிப்பு என்னில் இருப்பது அடிப்படையானது. முதலாவது காரணம், எந்த ஒரு மொழியிலும் எவரும் முன்னோடிகளினது பாதிப்பற்ற முற்றிலும் புதிதான உரைநடையை எழுதுவதில்லை. அது இயலாது. ஒரு மொழியின் சிறந்த உரைநடையென்பது ஒரு பெருக்கு. தமிழின் மூவாயிரம் வருடப் பெருக்கின் உச்ச உரைநடை ஜெயமோகனில் நிகழ்ந்திருக்கிறது. வெண்முரசு அதன் மகத்தான சான்று. நான் அதன் நீட்சியே. அவர் தன் முன்னோடிகளின் நீட்சியாக இருப்பது போல. வளர்ந்து கொண்டேயிருக்கும் பேரழகின் புத்தாபரணங்கள் போல நாங்கள் எழுதிச் செல்கிறோம். அதன் மேல் எங்கள் சொந்த ரசனையால் மேலும் அழகைக் கூட்டுகிறோம்.

என்னில் வெளிப்படும் நடையில் ஜெயமோகனின் தாக்கம் உண்டு. அதில் எனக்கு மகிழ்ச்சியடையக் காரணம் அது ‘பிரதி’ என்பதால் அல்ல. அது என் அக ஒழுக்காக ஆகியிருப்பதன் மகிழ்ச்சியால். அது அடையக் கடினமானது. தமிழில் எழுதும் எவராவது அவரைப் போன்ற உரைநடையின் வீச்சுக் கொண்ட ஒரு கதையாவது எழுத முடியுமா? அல்லது அவரளவுக்கு சமதையான இன்னொரு நடை? ஷோபா சக்தியிடம் இருப்பது ஆதாரமான பைபிளின் நடை. அது இளங்கோவுக்கு சிக்கலாயிருக்காது, பைபிளை எழுதியவர்கள் தொடக்கம், தமிழில் மொழிபெயர்த்தவர்கள் வரைக்கும் செத்து விட்டார்கள். ஆகவே அதன் தாக்கமிருக்கலாம். செத்தவர்களின் தாக்கமிருந்தால் பரவாயில்லை, உயிரோடு இருப்பவரின் தாக்கம் தேவையற்றது என்பதெல்லாம் எந்த வகை வாதம் என்றே புரியவில்லை. உரைநடையென்பது, கலை நிகழும் உடல். அதில் சாயல்கள் இருக்கலாம். ஒரே குருதியாய் இருந்தாலும் தந்தையும் தனயரும் வேறு வேறு ஆன்மாக்கள். அவர்களது ஒவ்வொரு உள்ளியல்பும் சில கூறுகளில் ஒன்றித்தும் பிறிதில் வேறாகியும் செல்வது. அது உயிரியல்பு. அதுவே மொழியியல்பும். அதை உணரத் தான் இலக்கியத்தில் நுண்ணுணர்வு எனும் அடிப்படையை கோருவதுண்டு. உணர்கொம்புகளை வளர்க்கச் சொல்லி, இலக்கியத்தை தீவிரமாக பயின்று விவாதிக்கச் சொல்லிச் சொல்வதுண்டு. எதிர்க்கருத்துகளை விவாதிக்காமல், தன்னை நிராகரிப்பதாக கருதும் ஒருவருக்கு கண்ணுக்குத் தெரியாத கொம்புகள் ஏதேனும் முளைக்கலாமே ஒழிய உணர்கொம்புகள் அல்ல.

அந்த உணர்கொம்பு எதற்கு அவசியம் என இலக்கியத்தில் தொடர்ந்து சுட்டுகிறார்கள் என்பதை இந்த இடத்தில் சற்று விரிவாக கவனிக்க வேண்டும்.

ஜெயமோகனுக்கும் எனது உரைநடைக்கும் உள்ள செல்வாக்கு/ பாதிப்பு / தாக்கம் என பொதுவாக அதை ஒரு குற்றச்சாட்டாய் சொல்பவர்கள் துல்லியமாக அது எது எனச் சொல்ல முடியுமா? அவரைப் போல வரலாறும் தத்துவமும் இணையும் புனைவு வெளிகளையும் எழுதுகிறேன் என்பதாலா? அல்லது அவருக்கு அடுத்து தமிழில் வாசிக்க கூடிய செவ்வியல் தன்மையும் கவித்துவமும் கொண்ட உரைநடையை சில கதைகளில் எழுதியிருக்கிறேன் என்பதாலா? கருக்களின் தேர்வில் என்ன ஒற்றுமை இருக்கிறது? வாழ்க்கைப் பார்வையில் என்ன ஒற்றுமை இருக்கிறது? கண்டடைதலிலோ தரிசனத்திலோ என்ன ஒத்த இயல்பு இருக்கிறது? ஏதேனும் ஒரு வகையில் இதை ஒரு குற்றச்சாட்டாய் சொல்பவர்கள் அதை விரிவாய் முன் வைக்க வேண்டும். கிசுகிசுவாய் அல்லாமல்.
இல்லாமல் அதுவும் ஒன்று தான் இதுவும் ஒன்று தான் என்று சொன்னால், அவரையும் வாசிக்கவில்லை, என்னையும் வாசிக்கவில்லை. இலக்கியமும் வாசிக்கத் தெரியவில்லை என்று தான் எடுத்துக் கொள்வேன்.

அந்த வேறுபடுத்தலை, நுண்ணுணர்வால் மட்டுமே அளக்க முடியும். உணர்கொம்புகளே கருவிகள். ஒரு உதாரணத்திற்கு மனுஷ்யபுத்திரனின் கவிதை நடையின் தாக்கம் சதீஸ்குமார் சீனிவாசனில் உண்டு. சொற்களின் அசாதாரணமான எளிமை, சொல்லுக்கு பின்னாலிருக்கும் குரலின் ஒழுக்கு, என. ஆனால் சதீஸ்குமார் சீனிவாசன் முற்றிலும் வேறு வேறு கதவுகளால் அந்த கவிதை நடையிலிருந்து வெளியேறுகிறார். மனுஷிடம் வெளிப்படும் நீண்ட அளவளாவும் தன்மை சதீஸில் இல்லை. சதீஸ் உக்கிரமாக நிகழும் இன்னொரு தீ. சதீஸ் சொல்வது போல சதா புதிதான தீ. மனுஷின் ஒழுக்கு செறிவாகி சதீஸில் வேறு வடிவம் கொள்கிறது. வேறு உணர்வு நிலைகளில் மோதி வேறு கூர்மையும் நுண்மையும் சொல்லிணைவும் அடைகிறது. அதன் இசைத்தன்மை வேறு. மனுஷை விட சில இடங்களில் அவர் மேலெழும் இடங்கள் உருவாகி வருகின்றன. அது அப்படித் தான் நிகழ முடியும்.

எந்தத் தாக்கமும் இல்லாமல் ஒரு மொழிச்சூழலில் மேதையென்று உருவான ஒரு எழுத்தாளரையும் நான் அறிந்ததில்லை. அனைத்து மேதமை கொண்ட எழுத்தாளரும் அவரது பண்பாட்டின் அத்தனை செல்வத்தினதும் கூருச்சியிலேயே நிகழ முடியும். ஈழத்தில் ஷோபாவையும் முத்துலிங்கத்தையும் தவிர, இன்று தர்மு பிரசாத்திடம் தனித்த உரைநடை உருவாகியிருக்கிறது. யதார்த்தனிடம் அந்த எத்தனமும் பயில்வும் இருக்கிறது. ப. அ. ஜயகரனிடமும் அந்த எத்தனமிருக்கிறது. அவர்கள் அனைவரிடமும் தம் முன்னோடிகளின் தாக்கம் இருக்கிறது.

இதையெல்லாம் இலக்கியப் பாமரரான இளங்கோ அறிய முடியாமைக்கு ஒரு கடந்த காலத் தீச்சொல் இருக்கிறது. அது மெய்யான அர்த்தத்தில் ஒரு தீச்சொல் இல்லையென்றாலும், அது ஒரு அவதானிப்பே என்ற போதும், பதினாறு வருடங்களுக்கு முன்னர் ஜெயமோகன் சொன்னது இன்றளவும் எவ்வளவு தீர்க்கதரிசனம் மிக்கது எனும் அளவுக்காவது பொருளுள்ளது.

இளங்கோவின் இலக்கியப் புரிதல்களின் அசட்டுத்தனங்களையும் இலக்கியத்திற்கு எதிரான அவரது மனநிலையையும் அன்றே ஜெயமோகன் சொல்லியிருக்கிறார். “டி.செ.தமிழனுக்கும், எனக்கும் பத்து வருடங்கள் முன்னால் சில இணைய விவாதங்கள் நிகழ்ந்துள்ளன. அதை ஒட்டி அவரது புனைவு ஆக்கங்களை நான் வாசித்துப் பார்த்தேன். படைப்பூக்கம் மிக, மிகக் குறைவு என்பதுடன் அந்த மனஎழுச்சிக்கு எதிரான அம்சங்களே அவரிடம் மிகுந்திருப்பதையும் கண்டேன். ஒரு ஆக்கப் பூர்வமான விவாதத்தை நிகழ்த்துவதற்கான மன நிலையிலும் அவர் இருக்கவில்லை. அதன்பின் நான் அவரை கவனிக்கவில்லை. நெடுநாள் கழித்து நீங்கள் சொன்ன பின் சுட்டியைப் படித்தேன், அவரை நினைவு கூர்ந்தேன்” எனத் தொடங்கும் பதில் கடிதத்தில் அவரது இலக்கியப் புரிதல்களையும் அசட்டுத்தனங்களையும் விரிவாகவே ஜெயமோகன் சொல்லியிருக்கிறார். ஆனால் முன்னர் விவாதம் நடந்து பத்தாண்டுகள் என்று சொன்னால், கடிதம் வந்து இப்போது பதினாறு ஆண்டுகள் என்றால், கணக்குப்படி இருப்பத்தாறு ஆண்டுகளாக எழுதியும் இலக்கியம் வராத ஒருவர், தன் அடிப்படைகளை, புரிதல்களை பரிசீலிக்காத ஒருவர் இனியும் எழுத என்ன வாய்ப்பிருக்குமென்று தெரியவில்லை. ஜெயமோகனின் பதிலை முழுமையாக வாசிக்க இந்த இணைப்பை அழுத்தவும்.

ஜெயமோகனின் பதில்

*

இத்தனைக்கும் பிறகு கூட இளங்கோ என்னைச் சுட்டவில்லை எனச் சொன்னால், ஒரே ஒரு உதவியை மட்டும் செய்யச் சொல்லலாம். தனக்கு ஆசிரியர் உண்டென்று சொன்ன இன்னொரு ஈழ எழுத்தாளனை, அவரின் நடை இவரில் வந்திருக்கிறதென சான்று கொண்ட இன்னொரு ஈழ எழுத்தாளனை, எவன் என்று சொல்லட்டும். அல்லது, வழக்கம் போல இதையெல்லாம் நான் கவனிக்க மாட்டேன் பங்கருக்குள் படுத்துக் கொள்வேன் என ஒதுங்கிச் செல்லட்டும். இலக்கியம் என்பது அடிப்படையில் துணிச்சல். அது இல்லாமல் இலக்கியம் கனிந்த எந்த முன்னோடியும் இல்லாத மொழியில் எழுதிக் கொண்டிருப்பதால் குறைந்த பட்சம் நான் அதை எதிர்பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *