Skip to content

Kirishanth

Blog

Menu
Menu

கோயிலில் வைக்காத மல்லிகை

Posted on August 9, 2026August 9, 2026 by Kiri santh

“Dear children sincerely” எனும் நாடக ஆற்றுகை இன்று திருமறைக் கலாமன்றத்தில் stages நாடகக் குழுவினரால் நிகழ்த்தப்பட்டிருந்தது.

இந்த நாடகம் இலங்கையின் ஏழு தசாப்தங்களில் நிகழ்ந்த அரசியல் திருப்பங்களினூடாக சிறுவர்களை நோக்கி வரலாற்றை பேசுவதாக உருவாக்கப்பட்டிருக்கிறது. நாடகத்தின் அனுபவமாக அதன் நடிகர்கள், ஒளியமைப்புகள், கதையை வெளிப்படுத்த கையாண்ட உத்திகள் என்பன சிறப்பாக இருந்தது. 

மையச்சிக்கலாக எனக்கு இருந்தது தமிழ் மக்களின் பிரச்சனையை எவ்வளவு எளிமையாக காட்சிப்படுத்தியிருந்தனர் என்பது தான். அரசியலை மையப்படுத்திய இலக்கியங்களும் சரி பிற கலைவடிவங்களும் அதன் சராசரி அன்றாடத் தன்மைக்கும் எளிய கண்டறிதல்களுக்குள்ளும் சிக்கிவிடக் கூடியது என்பதற்கு இந்த நாடகமும் ஒரு சான்று. தமிழ் மக்களின் பிரச்சனையைத் தவறாக சித்தரிக்கும் நோக்கம் அவர்களுக்கு இருந்திருக்கும் என நினைக்கவில்லை. ஆனால் தமிழ் மக்களை எவ்வளவு தூரம் பண்பாட்டு ரீதியாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதில் தான் அடிப்படைச் சிக்கல்கள் இருக்கின்றன.

பிரேமதாசாவின் கணக்கிலும் பிரபாகரன் கணக்கிலும் நாடுகளின் கணக்கிலும் எல்லாவற்றையும் எழுத முடியாது. சிங்கள மக்களுக்கு இங்கு என்ன நிகழ்ந்தது எனத் தெரியாது என்று சொல்ல முடியாது. அதனால் தான் போர் நிகழ்ந்தது எனக் கொள்ள முடியாது. ஒருவருக்கு சிவில் யுத்தமாக இருப்பது, இன்னொருவருக்கு விடுதலைப் போராட்டம். நாம் எங்கிருந்து பார்க்கிறோம் என்பது அரசியல் சுழலில் முக்கியமானது. ஆகவே தான் வெறும் அரசியல் நிகழ்வுகளுக்கு அப்பால் வாழ்வின் கோணத்திலிருந்து கலை அணுகப்பட வேண்டும் என நினைக்கிறேன். 

இலக்கியத்திலும் இதே சிக்கல் தானிருக்கிறது. நம் வாழ்க்கையைத் தீர்மானிப்பது வெறும் அரசியல் நிகழ்வுகள் அல்ல. மனிதர்களின் இயற்கையையும் சுபாவங்களையும் அவர்கள் வடிவமைக்கப்பட்டு வந்த வரலாற்று ஓட்டத்தையும் கருத்திலெடுக்காத நோக்கிருப்பவர்களால் எளிய அரசியல் நிகழ்வுகளினால் அனைத்தும் நிகழ்ந்ததாக நம்பிக் கொள்ள முடியும். அதை மாற்றி விடலாம் என எண்ணத் தோன்றும். ஆனால் அது அப்படியல்ல. இன்று செம்மணியில் தோண்டியெடுக்கப்பட்ட எலும்புக்கூடு சுயமைதூனம் செய்தபடி இறந்திருக்கிறது எனச் சொல்லும் நாவு தெற்கில் இருக்கிறது. யுத்தம் முடிந்து பதினேழு வருடங்கள்,  இப்பொழுது யுத்தம் நிகழ்ந்து கொண்டிருப்பது சமூக வலைத்தளங்களில். அவர்களையும் கணக்கிலெடுத்தே சிந்திக்க வேண்டியிருக்கிறது. அத்தகையவர்கள் தான் இருபுறமும் அமர்ந்து தீயைப் பற்ற வைப்பவர்கள். அவர்கள் உண்மையாகவே அக்கறையுடன் தான் எதிர்வினையற்றுகிறார்களா? அல்லது மனிதர்கள் என்றும் போர் விரும்பிகளாகத் தானிருக்கிறார்களா? போன்ற கேள்விகளை நோக்கி நாம் அடுத்த அடுக்குகளை நோக்கிச் செல்லவில்லை. மேற்பரப்பினால் அல்ல, எத்தனை காலங்களை கணக்கிலெடுத்தோம் என்பதினால் அல்ல. எத்தனை ஆழமானது என்பதினாலேயே கலை சக்தி வாய்ந்ததாக மாறமுடியும்.  

இன்றைய ஆற்றுகையில் ஜே வி பியின் தொடக்கம் பற்றிய பகுதி உக்கிரமானது. அவர்களின் பாடுகளை சுருக்கமாகவும் செறிவாகவும் காட்சிப்படுத்தியிருந்தார்கள். ஆனால் தமிழ் மக்கள் தொடர்பில் கருப்பு ஜூலைக் காட்சிகளும் அதன் பின்னர் தொண்ணூறுகளில் விடுதலைப் புலிகளும் மட்டுமே எடுத்தாளப்பட்டிருக்கிறார்கள். தமிழர்களின் பிரச்சனையும் கல்வியின் கனவிலேயே கூர் கொண்டது. அதன் தொடக்கம் மிக அவசியமானது. நாடகத்திற்குள் ஒரு கணக்கு சீராகப் போடப்பட்டு வந்தது. தமிழ் மக்கள் பக்கம் கணக்கு சமனாகவில்லை என்பது தான் குறை. 

போருக்கும் விடுதலைப் போராட்டத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. அதை உணராமல் நாம் கிளர்ச்சிகளையும் போராட்டத்தையும் சமப்படுத்த முடியாது. ஜூலைப் படுகொலைகளை அரசு எப்படி திட்டமிட்டு உருவாக்கியது, அதை எப்படி ஒரு நாடகமாக ஆக்கியது என்பதைச் சிறப்பாகவே காட்டியிருந்தார்கள். ஆனால் கதைக்கோர்ப்பில் இருக்கும் முக்கியமான இணைப்புகளின் நொய்மை அதை பலமாக உருவாக்கவில்லை. இறுதிக் காட்சியில் வரும் மெனிக் பார்ம் சித்தரிப்பும் மிக மிக எளியது. ஆற்றுகைப் பிரதியை உருவாக்கியவர்களின் பார்வைக் குறைபாடுகள், இடைவெளிகள், போதாமை அனைத்தும் வெளிப்படையாக இருந்தன. அந்தப் பகுதி சிறப்பாகவும் உருவாகவில்லை. அதற்கு முதன்மைக் காரணம் தமிழ் மக்களின் பிரச்சனை தொடர்பான புரிதலின்மை என்பதாகவே கருதுகிறேன். பிரதி முழுவதும் அது விரவியிருக்கிறது. 

அவர்களின் பண்பாட்டு புரிதலில் இருந்தே அவர்களின் இடைவெளியை விளங்கிக் கொள்கிறேன். இறுதிக் காட்சிகளில் கோயில்களில் நாம் வைத்து கும்பிட்ட மல்லிகை மணம் வீசியது என வரியொன்று மீள மீள எடுத்தாளப்பட்டிருக்கிறது. அதன் இன்னொரு அர்த்த நீட்சியாக முகாம்களில் பெண்ணொருத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி வெளி வருகையில் அந்த மல்லிகை கசங்கியது என்பதாகவும் காட்டியிருந்தார்கள். ஒரு கவித்துவ உருவகமாக நறு வாசம் வீசக் கூடியது மல்லிகை என அவர்கள் வைத்திருக்கலாம். ஆனால் நாங்கள் மல்லிகையை தெய்வத்துக்கு வைக்கும் வழக்கமற்றவர்கள். மல்லிகை இரவில் மலரும் மலர். கோயிலுக்கு செல்லும் பெண்கள் சரம் தொடுத்து தலையில் அணிவதுண்டு. தெய்வத்துக்கு சாற்றுவதில்லை. காலையில் மலரும் மலர்களையே நாம் தெய்வங்களுக்கு சூடுவதுண்டு. நித்திய கல்யாணி, செவ்வரத்தை, பொன்னொச்சி போன்ற நறுவாசமற்ற மலர்களை வைத்தே சாமியைக் கும்பிடுகிறார்கள். நம் கவிதைகளில் செவ்வரத்தம் பூக்களே படிமங்களாகியிருக்கிறது. அ. யேசுராசாவின் கவிதை வரியொன்றில் செவ்வரத்தம் பூ, செவ்விரத்தம் பூவாக எழுதப்பட்டிருக்கும். 

இந்த அடிப்படை வேறுபாடு, பண்பாட்டு புரிதலின்மையிலிருந்து என்ன செய்ய முடியும்? கலையில் ஒருவர் பிறனை எழுதுவது அரசியல் பிழையல்ல. ஆனால் புரிந்து கொள்ள என்ன செய்கிறோம் என்பது முக்கியமானது தான். கோயிலுக்கு மல்லிகை வைக்க மாட்டோம் என இன்னுமா ஒருவரும் அவர்களுக்குச் சொல்லவில்லை. ஏற்கெனவே வேறு இடங்களில் நாடகம் நிகழ்ந்திருக்கிறது. வடக்கில் முதல் முறை. நாளையும் இருக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் சென்று பார்க்கலாம். நாடக அனுபவமாக சிறப்பாக இருந்தது. 

நாடகம் முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த பொழுது ஒரு பழைய உவமை திடீரென்று மின்னியது. தமிழர்களும் சிங்களவர்களும் புட்டும் தேங்கய்ப்பூவும் போல இருந்தவர்கள் என்று ஒரு நூறு முறையாவது எவராவது சொல்லிக் கேட்டிருப்பேன். அவ்வளவு எளிமையான சிக்கலற்றவையல்ல நம் பண்பாட்டு உடல்கள். இந்த எளிமையான புரிதல்கள் ஆழமான மாற்றங்கள் தேவைப்படும் இடங்களில் சிறிய அரசியல் துளைகள் வழி பார்க்க அழைக்கின்றது. ஆனால் போர்கள் நிகழ்வதை இவற்றால் தடுக்க முடியாது. நம் சிறுவர்கள் அறிந்து கொள்ள வரலாற்று நோக்குக் கொண்ட சிறந்த பிரதியாக நாடகம் உருவாகவில்லை. முயற்சி என்பதற்காக மதிக்கலாம். கலைஞர்களின் திறனை பாராட்டலாம். ஆனால் கலையின் ஆழத்தை வெற்று அரசியல் நிகழ்வுகளால் தொட முடியாது. அதற்கு மண்ணைத் துளைத்து வேர் விட்டு நிற்க வேண்டும். நாடகப் பிரதியை எழுதியவர்களுக்கு சொல்லக் கூடியது ஒன்று தான் “Dear artist sincerely!”.

வாசித்தவர்கள் : 25

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு

வாசிக்க

  • அஞ்சலி : நன்மிளிர் (2,176)
  • சுரண்டலெனும் கலை: எதிர்வினையும் பதிலும் (2,011)
  • காதலின் முன் பருவம் (2,002)
  • சராசரிகளுடன் உரையாடுதல் (1,912)
  • விடுதலையில் கவிதை (1,902)
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு
©2026 Kirishanth | Design: Newspaperly WordPress Theme