“எல்லா நிச்சயமின்மைகளுக்கும் அப்பால் இந்த வானத்தின் நிரந்தரம் என்னைத் திகைப்பூட்டிக் கொண்டேயிருக்கிறது”
கருணாகரன்
இவ்வருடத்திற்கான இயல்விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. கவிஞர் கருணாகரனுக்கு கவிதைக்கான விருது வழங்கப்பட்டிருக்கிறது.
ஈழத்து இலக்கியத்தின் விடுதலைப் போராட்டத்தின் பெருநீரோட்டத்தில் கருணாகரனளவுக்கு தவிப்பும் கொந்தளிப்புமான கவிஞனின் குரல் இல்லையெனவே நினைக்கிறேன். விடுதலைப் போராட்டம் நெடுகிலும் அதன் மைய விசையோடு சேர்ந்தியங்கிய களத்தில் இரத்தமும் சதையுமாக நின்றியங்கிய இரண்டு முதன்மையான கவிஞர்கள் கருணாகரனும் நிலாந்தனும். ஈழ விடுதலைப் போராட்டம் உச்சம் பெற்ற காலம் முதல் இன்று வரை படைப்பூக்கத்துடன் இருவரும் இயங்கி வருகிறார்கள். ஒரு நெடுங்கவிதையின் இரண்டு வேறு பகுதிகளாகவே இருவரையும் நான் மதிப்பிட்டு வருகிறேன். இருவரையும் வாசிப்பதென்பது விடுதலைப் போராட்டத்தின் இரண்டு வேறு திசைகளை அறிவது.
நிலாந்தனின் கவிதைகள் பெருமளவு வடக்கு மையமானது. களத்தின் மையம் எப்பொழுதும் வடக்கின் ஆன்மாவைக் கொண்டது. அந்த ஆன்மாவிலிருந்தே அவர் எழுதுகிறார். அவர் யாழ்ப்பாணம் உருவாக்கிய குரல். இருவரதும் அரசியல் புரிதல்களும் அகன்றவை என்றாலும் கிழக்கை நிலாந்தனின் கவிதைகள் எதிர்கொள்ளவில்லை. ஒருவகையில் கருணாகரன் இந்தத் தீவின் நிலத்தில் பெருமளவு பயணப்பட்டவர் என்பது அவரது கவிதைகளின் விரிவுக்கான காரணமாக இருக்கலாம். அவர் நேரடியாக அதிகமும் மனிதர்களுடனும் வாழ்க்கையுடனும் நிலத்துடனும் பிணைந்தவர். நிலாந்தன் அரசியல் கவிதைகளுக்கு அப்பால் கவிதைகளை எழுதாதவர். அவர் ஒரு அரசியல் கவியாகவே தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அதே நேரம் நாடகம், ஓவியம் என்று பிற வடிவங்களிலும் நிலாந்தன் தன்னை வெளிப்படுத்தியவர்.
கருணாகரன் அரசியலுக்கும் அப்பால் அனைத்தைக் குறித்தும் அவரது சொல்லைக் கொதிக்கச் செய்தவர். அவரது மிகச் சிறந்த அம்சமென்பது அவரது பார்வையின் விரிவினால் மட்டுமல்ல, மைய்ய நீரோட்ட அரசியலுக்கும் அப்பால் ஒவ்வொரு மனிதரையும் அவர்களது வாழ்வையும் அதன் கோணங்களையும் அவர் கவிதைக்குள் செரித்திருக்கிறார் என்பதே. அவரது கவியுலகம் விரிவானது. ஒப்பிட சேரனின் கவியுலகை விட அரசியல் ஆழம் கொண்டது, மானுட விரிவு பொருந்தியது. அவர் கணக்கிட்டுக் கவிதை எழுதுவதில்லை. சாட்சியென்றால் சாமானியன், எதிர்ப்பென்றால் எரிதீ, கவிதையென்றால் காதலும் குழந்தையும், மனிதர் என்றால் பரிவும் இரக்கமும் என அவர் விரிந்து கொண்டே செல்பவர்.
அவரது நல்ல அம்சங்கள் அனைத்தும் அவருக்குள் ஆழ உருவாகியிருக்கும் நல்லுணர்வுகளினால் ஆனது. கருணாகரன் அளவுக்கு சனநாயகத்தை வாழ்க்கையில் இவ்வளவு விரிவுடன், என் பார்வையில் மடமையெனும் அளவுக்கே அவர் விரிவாக வாழ்பவர். அதை சனநாயகம் என்று சொல்வது சுருக்குவதாக இருக்குமென்று நினைக்கிறேன். அது மனிதரை நேசிக்கும் பெருங்கனிவினது தித்திப்பின் சுவையறிந்த குழந்தையின் இயல்பு எனவும் கொள்ளலாம். அது கனிவென்றால், அது மடமையென்று நான் கருதுவேனென்றால் அது ஒன்றே அவரைக் கவிஞராகவும் ஆக்க முடியும். கவிஞன் எத்தனை தீவிரமானவனோ அத்தனை மடமையாளனுமாக இருக்க வேண்டியவன். மானுடரின் அனைத்தம்சங்களினாலும் அவர்களை அளவிடுவது புனைவெழுத்தாளனுக்குரியது. ஆனால் கவிஞனுக்கு மட்டும் தான் அந்த மடமை அழகு, அணி.

அனைத்து மனிதர்களுக்கும் விரிந்திருக்கும் முற்றமென ஒருவர் ஆக முடியுமா! ஆனால் அவர் அப்படி ஆகியிருக்கிறார். அப்படி ஒரு அம்சம் ஒரு கவிஞருக்கு நிபந்தனை அல்ல, ஆனால் அப்படி ஒருவர் நிகழ்வது, அதுவும் ஈழம் போன்ற அரசியல், தனிமனித காழ்ப்புகளால், வெறுப்புகளால் நிறைந்த புதைசேற்றில் அவர் அதை மீறித் தண்டெழுந்து இதழவிழ்த்த அருந்தாமரையாக மலர்வது அபூர்வம். அவர் ஒரு சமூகமாக நாம் அடைந்த பண்பாட்டு உச்சங்களில் ஒருவர்.
எது ஒருவருடைய முதன்மையான பலமான அம்சமோ அதுவே அவரது பலவீனமும். அவரது சிறகுகள் அகலிக்க அகலிக்க, அவரது பரிவு விரிய விரிய அவரது மதிப்பீடுகள் கூர்மை மழுங்கியிருக்கிறது. அது பேராளுமைகள் மேல் அடுத்த தலைமுறை எழுந்து வரும் பொழுது வைக்கும் சீற்றமான விமர்சனமாக இருக்கும். வரலாற்றில் அதற்கு விதிவிலக்கான ஆளுமைகளே இல்லை.
அவருடன் ஆயிரம் முரண்கள் எல்லோருக்கும் உண்டு. எனக்கும் உண்டு. அப்படி எல்லோருடனும் எல்லோருக்கும் உண்டு. ஆனால் அத்தனைக்குப் பிறகும் உரிமையுடன் போய் எனக்குச் சோறு போடுங்கள், பசிக்கிறது எனச் சொல்லும் பொழுது அன்னையென நிற்கும் பரிவே கருணாகரன். அதுவே அவரது கவிதைகளின் ஒளிமிக்க வரிகளை எழுதுகிறது. அவர் எல்லோருடைய கண்ணீரையும் எடுத்துச் செல்பவர் என்று தன்னைத் தான் உணரும் கணமென்பது ஈழத்துக் கவிஞர்கள் ஒருகணம் தொல்குடிப் பாணர்களாக ஆகி அறமென்ற குரலாக ஆகும் உச்சம். அவருக்கும் சினமுண்டு, சீற்றமுண்டு. ஆனால் அவர் வெந்து எரிந்த பெருங்காலத்தைக் கடந்து வந்தவர். கால் நோகக் கால் நோக அதன் சாம்பலின் எஞ்சிய ஒவ்வொரு தணலையும் தன் அகப்பாதத்தால் அறிந்தவர். ஆகவே அவர் தன் சொந்தப் புன்னகையை அதற்கு ஈடாக வைத்து விட்டே கண்ணீரை எடுத்துச் செல்பவராக ஆக முடிந்திருக்கிறது. வரலாற்றில் ஒரு பேராளுமை அப்படித் தான் உருவாக முடியும்.
உச்சமான கசப்புகளையும் தன் சூழலின் வெறுப்பையும் சுற்றத்தின் கடுங்கேள்விகளையும் அவர் எதிர்கொண்டிருக்கிறார். அவரது கவிதைகளில் அது ஒவ்வொரு கணமும் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. ஆனால் ஈற்றில் மானுடம் எனும் பெருங்கனவிற்கு தன்னை ஒப்புக் கொடுக்கிறார். ஒருவகையில் அது தன் தலையை வெட்டித் தட்டில் வைத்துக் கொடுப்பது போன்றது. அதனாலேயே அந்தப் பலி அரிதானது. அதனாலேயே அந்தக் குரல் முதன்மையானது.
அவரால் கவிதைகளில் மகத்தான உச்சங்களை அடைய முடிந்ததா என்றால் அது என் மதிப்பீட்டில் சற்றுக் குறைவானதே என்று கருதுகிறேன். ஆனால் அவர் ஒட்டுமொத்தமாக ஈழத்துக் கவிதைகளுக்கு அளித்திருக்கும் அம்சத்தை தொகுத்து இப்படிச் சொல்வேன், அவர் ஈழத்துக் கவிதைகளின் பிரதேசவாத, லட்சியவாத, குறுங்குழுவாத எல்லைகளைத் தவிர்த்து எழும் மானுடம் எனும் பெருக்கில் அனைத்துக் கரையையும் தழுவியோட வேண்டிய பிரக்ஞையை அடைந்திருக்கிறார். ஒவ்வொரு இளையவரையும் கண்டு, தொட்டு, உண்டியளித்து, உறைவிடமளித்து, கனவை நீட்டிக் கொடுத்து, அந்தச் சுடரைத் தன் சிறிய கைகளுக்குள் நூராமல் பாதுகாத்து, கசப்பையும் வெறுப்பையும் குழந்தையின் எச்சிலெனத் துடைத்து, அதை மீண்டும் அரவணைத்து தன் வாழ்நாளெல்லாம் உடனழைத்துச் செல்லும் பேராளுமைக்குரிய விரிந்த அகம் கொண்டவர். இன்று ஒரு இளம் எழுத்தாளராக நான் கற்றுக் கொள்ள இருக்கும் முதன்மைப் பாடங்களை அவர் எனக்கு அளித்திருக்கிறார். அது ஒரு முதன்மையான பண்பாட்டுப் பங்களிப்பு.
நாம் நமது வாழ்க்கை அலைந்த திசைகளிலிருந்து எழுதப்பட்ட கவிதைகளை ஈழப் போராட்டத்திலும் அதற்குப் பிறகும் வாசித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவர் அதன் அசாதாரணமான நுண்மை கொண்ட பல இழைகளையும் கண்டு, உற்று இணைத்திருக்கிறார். கிழக்கு கிழக்காகவும் வடக்கு வடக்காகவும் மலையகம் மலையகமாகவும் அதற்கு வெளியான உலகம் உலகமாகவுமே இன்னும் இருக்கிறது. அது ஒரு மாபெரும் சிலந்தி வலை. போரில் கிளிநொச்சியை இதயபூமியென்று சொல்லும் ஒரு சொல்லுண்டு. அவர் அதன் இதயத்திலிருந்து எழுந்து வந்தவர். திசைகளெங்கும் விரிந்து எப்பொழுதும் துடித்துக் கொண்டும் அதிர்ந்து கொண்டுமிருக்கும் மாபெரும் சிலந்தி வலையில் அவர் ஒரு பனித்துளி. எங்கள் மண்ணில் வேர்விட்டு வானமெழுந்து நிற்கும் பேராளுமைக்கு ஒரு இளையவனாக நெஞ்சு நிறைந்த வாழ்த்துகள்.

நட்சத்திரம்
விடைபெறுகிறேன் உன்னிடமிருந்து
சிறு கூடாரம் வானமல்ல
வானம் சிறு கூடாரமுமல்ல
எப்போதும் வாதிட்டுக் கொண்டிருக்க முடியாது
பொய்யை விடப் பிடிவாதத்தின் கூர்
அதிக காயங்களைத் தரும்.
விடைபெறுகிறேன்
எந்தத் தோல்வியுமில்லை எந்த வஞ்சனையுமில்லை
கழிவிரக்கங்கள் இனியும் வேண்டாம்
இனியும் கத்தியாகவும் கேடயமாகவும் இருக்க முடியாது
ஒரு பயணிக்கு அது அவசியமுமில்லை
கோபங்களில்லாத காடு
தீப்பற்றியெரியாத வெளி
விசமற்ற நீர்ச்சுனை
பொறிகளில்லாத வழி
எங்கேனுமிருக்குமென்று தெரியவில்லை.
குலுக்கும் கரங்களில் பளபளக்கும் நகங்கள்
சினேகத்தின் ஈரத்தையும்
அன்பின் நெருக்கத்தையும் சிதைக்கின்றன.
எல்லாவற்றையும் பிரித்துப் பார்ப்பதில்
அழிய வேண்டுமா பொழுது
எல்லாவற்றுக்கும் பொறி வைப்பதில்
கசங்க வேண்டுமா மூளையின் மலர்?
எதையும் நான் எடுத்துச் செல்லவில்லை
என்னிடமும் எதுவுமில்லை கொண்டு போவதற்கு
ஞாபகங்களும் வேண்டாம்
வலிதரும் நினைவுகளால் புன்னகையும்
அதோ பறவைகள், பூக்கள், மனிதர்கள்
குழந்தைகளும் விரிந்த நிலமும் புன்னகையும்
வழி தவறிய ஆட்டுடன்
ஓரிடையன் தொடர்ந்து அலைய முடியாது
உனது சொற்களிலிருந்தும்
புள்ளியிலிருந்தும் விடைபெறுகிறேன்.
செயலின் முகம் விரிகிறது
இன்னொரு வெளியில்.
*
ஒரு பயணியின் குறிப்புபனி
இரவின் மீது வீழ்கிறது பனி
நிலா ஒரு குழந்தை
வானத்தின் மடியில் இசைகிறது
வெண்ணிலவு எழுதும் பாடலின் வரிகள்
எல்லா முற்றங்களிலும்
புராதன கீதமாய் இசைகிறது
நினைவிழந்த ஞாபகம் நான்.
மாமிசக் கனவும்
நெருப்பின் ஞாபகமும்
இல்லாத காலம் மலரும் நாளை உணருகின்றேன்
கடவுளின் குரலைக் கொன்றவர்களை
மன்னியுங்கள்
சாத்தான்களின் உலகில்
கடவுளின் குரல் மதிப்பிறங்கிய பழைய காகிதம்
பொறிகள் உடைபடத் திறபடும்
வெளியில்
துளிர்க்கும் புன்னகையில்
குழந்தைகளின் பொம்மைகளும் உயிர்க்கின்றன
விரிகிறது காலவெளி.
என்னுடைய புன்னகையைத் தந்துவிட்டு
எல்லோருடைய கண்ணீரையும் எடுத்துச் செல்கிறேன்
மாபெரும் சவப்பெட்டியில்
நிரம்பியிருக்கும் கண்ணீரைப் போக்கி விடுகிறேன்
கள்ளிச்செடிகள் செல்கிறேன்
காற்றுக்கு வேர்களில்லை
ஒளிக்குச் சுவடுகள் இல்லை
எனது புன்னகை
நிலவின் ஒளியாய் இருக்கட்டும்.
கருணாகரனது கவிதைகள் பற்றி முன்னர் எழுதிய சிறுகுறிப்பின் இணைப்பு : கண்ணீர் மிக்க ஒளியுடையது

