ஸலாம் அலைக் – ஒரு விருது

பிரெஞ்சில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள  சிறந்த ஆசிய நாவலுக்கான  Prix Émile Guimet – 2026 விருது ஷோபா சக்தியின் நாவலான ஸலாம் அலைக்கின் மொழிபெயர்ப்பிற்கு கிடைத்திருக்கிறது. மூத்தோனுக்கு வாழ்த்துகள். 

“நிகழ்வில், விருதளிப்புக் குழுவைச் சேர்ந்த Laure Adler “பிரெஞ்சு நாவல்களின் எதிர்காலம் ஸலாம் அலைக்கில் உள்ளது” எனவும், விருதுக் குழுவின் நடுவர் “ஸலாம் அலைக் நமக்குத் தமிழ் இலக்கியத்தைக் கற்பிக்கவில்லை, மாறாக நம்முடைய சொந்த இலக்கியத்தைப் பற்றிச் சிந்திக்க வைத்திருக்கிறது” என்றும் தெரிவித்திருக்கிறார்கள்” என்று ஷோபா குறிப்பிட்டிருந்தார்.

ஷோபா தான் ஈழ இலக்கியத்தின் உச்ச முனை நிகழ்ந்த குரல். இதுவரையிலான ஈழ இலக்கியத்தில் ஷோபாவே அதை கலைப் பெறுமானங்களை நோக்கியும் வாழ்வின் நுண் அடுக்குகள் நோக்கியும் இழுத்து வந்திருக்கிறார், அந்தக் குரும்பட்டித் தேரை கொஞ்சம் கொஞ்சமாக ஈர்க்குக் கழற்றி மரமடித்து, செதுக்கி வளர்த்தெடுத்திருக்கிறார்.  ஷோபாவை தமிழ்ச் சிறுகதைகளில் மாஸ்ட்டர்களில் ஒருவர் எனத் தயக்கமின்றிச் சொல்வேன். அவரது நாவல்களில் கலையமைதியும் ஒருங்குணர்வும் உண்டு. 

முதன்மையாக ஷோபாவின் அரசியல் குரல் சமரசமின்றி சாமானியரின் வாழ்வுரிமைக்கானது. அது உலகின் எந்த திசைக்கும் சொந்தமானது. இரண்டாவது அதன் துயரக் கேலி. மூன்றாவது அவரின் மொழி, சிந்தனைக் கூர்மை. நான்காவது, ஷோபாவின் உலகளாவிய தன்மை. அத்தனைக்கும் மேலே அவர் ஒரு அசல் கலைஞன். வாழ்வே அதுவாகத் திகழ்ந்துவரும் நம் முன்னோடி. 

நம் தலைமகனின் குரல் திக்கெட்டும் ஒலிக்கட்டும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *