||பிழைப்புவாதத்திற்கும் விருது
ரியாஸ் குரானா
படைப்பாளிகள் என்பவர்கள் சமூகத்தின் மனச்சாட்சியாக இருக்க வேண்டும் என்று இன்னமும் நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். ஈழத் தமிழ் இலக்கியப் பரப்பில், ஆளும் வர்க்கத்தின் ஏவலாட்களாகச் செயல்படும் அறிவுத்துறைத் துரோகத்தின் ஆகச்சிறந்த அடையாளம் கவிஞர் கருணாகரன்.
இது வெறும் பிழைப்புவாதத்தைக் கடந்த ஒரு கருத்தியல் வக்கிரம். தனது துரோகங்களையும் அரசியல் சமரசங்களையும் தந்திரமாக மூடிமறைக்க அவர் அரங்கேற்றும் நாடகங்கள் எந்தவொரு முதலாளித்துவத் தந்திரசாலியையும் மிஞ்சக் கூடியவை.
மக்களின் விடுதலைக்காகப் போராடப் புறப்படுவதாகக் கூறி ஈரோஸ் அமைப்பில் இணைந்தவர் இவர். பின்பு சக இயக்கங்களை அழித்தொழித்த அமைப்பின் நிழலில் எவ்விதக் குற்றவுணர்ச்சியுமின்றித் தஞ்சம் புகுந்தார். அதிகாரம் எங்குள்ளதோ அங்கே எப்படி நுழைந்துவிடுவது என்பதற்கான அனைத்து ராஜதந்திரங்களையும் பயன்படுத்தக் கூடியவர் என்றே தெரிகிறது.
எங்கு அதிகாரம் இருக்கிறதோ, அங்குத் தனது மேலாதிக்கச் சித்தாந்தக் குடையை விரிப்பதோடு, அந்த அதிகார மையங்களுக்குத் துதிபாடும் வித்தையிலும் இவருக்கு நிகர் இவரே.
2009-க்குப் பிறகு முள்வேலி முகாம்களில் சக போராளிகளும் சாமானியர்களும் சித்திரவதைகளை அனுபவித்த போது, இவருக்கு மட்டும் சலுகை எலும்புத்துண்டு வீசப்பட்டது. ஆளும் பேரினவாத அரசுக்கு இவர் காட்டிய விசுவாசமே அந்தப் புனர்வாழ்வு விலக்குக்குக் காரணம் என்ற கதைகள் பிரசித்தமானவை.
நேற்றைய ஒடுக்குமுறையாளர்களோடு நின்றவரால், இன்று அவர்களை அழித்த அரசோடும் அதன் கைக்கூலி அமைப்புகளோடும் எவ்விதத் தயக்கமுமின்றி வால்பிடித்துக் கைகோர்க்க முடிகிறது. தன் மீதான விமர்சனங்களைத் திசைதிருப்ப, தன்னை ஒரு சூழ்நிலைக் கைதியாகப் பரிதாபமாகச் சித்தரித்துக்கொள்ளும் இவரின் தந்திரம் பெருமளவில் அருவருப்பைத் தருகிறது.
அதிகாரத்தின் மடியில் சொகுசாக அமர்ந்துகொண்டே ‘நடுநிலை’ என்னும் ஆபத்தில்லாத மனிதநேய முகமூடியை அணிந்துகொள்வது ஒருபுறமிருக்க; சிறு குழுவொன்றைக் கட்டமைத்துக்கொண்டு ‘பரஸ்பர முதுகுசொறிதல்’ மூலம் தமது பிம்பத்தை ஊதிப் பெரிதாக்க இலக்கிய நிகழ்வுகளைக் கேடயமாகப் பயன்படுத்தும் வித்தை இவருடைய ஆகச்சிறந்த பிழைப்புவாத உத்தியாகும்.
தன் அரசியல் துரோகத்தின் நாற்றத்தை மறைக்க இவர் பயன்படுத்தும் ஆகச்சிறந்த ‘வாசனைத் திரவியம்’ இவருடைய கவிதைகள்தாம். எந்த அதிகார எஜமானர்களின் காலடியில் விசுவாசமாக வால்பிடித்துக் கிடக்கிறாரோ, அதே அரசால் ஒடுக்கப்படும் மக்களின் கண்ணீரைப் பிடித்துக் கவிதை வடிக்கும் வித்தை ஈடு இணையற்றது.
மற்றவர்களின் வலியைப் பாதுகாப்பான தூரத்திலிருந்து ரசிக்கும் இந்தச் சுரண்டல் மனநிலைக்கு, ஈழ மக்களின் மரணங்களும் இடப்பெயர்வுகளும் வெறும் ‘கச்சாப் பொருட்கள்’. இந்த ரத்தத்தில் மை தொட்டு எழுதப்படும் கவிதைகளே, இவரின் பிழைப்புவாதத்தை மறைக்கும் புனிதத் திரையாகவும், விருதுகளை அறுவடை செய்யும் வியாபாரமாகவும் உருமாறுகின்றன.
தன்னுடைய இந்தத் துரோகங்களையும் பிழைப்புவாதச் செயல்பாடுகளையும் பாதுகாத்துக்கொள்ள இவர் கையாளும் இன்னொரு நுட்பமான தந்திரமும் உண்டு. புலம்பெயர் எழுத்தாளர்களுக்கும், புகழ்பெற்ற இலக்கியவாதிகளுக்கும் எடுபிடியாகச் செயல்படுவதுதான் அந்தப் புதிய உத்தி.
அவர்களுக்கான உள்ளூர் வேலைகளைச் செய்து கொடுப்பதனூடாகவும், அவர்களைத் தனிப்பட்ட முறையில் வால்பிடித்துத் துதிபாடுவதனூடாகவும் தனக்கான இலக்கிய எதிர் வினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ளும் பாதுகாப்பு அரணை மிக லாவகமாகக் கட்டமைத்துக் கொள்கிறார். இந்த எடுபிடி வேலையின் மூலமாக, தம்மீதான அறக் கேள்விகளை மிக எளிதாக இலக்கிய முகமூடி போட்டு மறைத்துவிடுகிறார்.
தன்னுடைய கடந்தகாலப் பிழைப்புவாதச் செயல்பாடுகளை இந்தத் தந்திரங்களினூடாக அவர் எப்படி மிக நுட்பமாகக் கையாண்டாரோ, அதற்குப் பிரதியுபகாரமாகக் கிடைக்கும் கைமாறுதான், இலக்கியம் சார்ந்து இவர் பெற்றுக்கொள்ளும் சலுகைகள்.
அதிகாரத்தின் எச்சிலிலைகளை நக்கிக்கொண்டே, ஒடுக்கப்பட்டவர்களுக்காகக் கண்ணீர் வடிக்கும் இவர்களின் பாசாங்கிற்கு மகுடம் சூட்டும் அந்த நிறுவனங்களுக்கு நமது மனமார்ந்த வாழ்த்துகள்!
அறத்தின் சவக்குழியில் நின்று பாடப்படும் இந்தப் பாசாங்குப் பாடல்களுக்கு இன்னும் சில விருதுகளை நீங்கள் தாராளமாக வீசி எறியுங்கள். பிழைப்புவாதமும், வால்பிடித்தலும் எல்லாத்துறைகளிலும் இன்னும் செழிப்போடு கம்பீரமாகத் தலை நிமிர்ந்துதான் நிற்கிறது. இந்தக் கேவலமான உத்தி எப்போதும் வீழ்ச்சியடைந்துவிடுவதில்லை!
பிழைப்புவாதத்தை கச்சிதமாக பயன்படுத்தி, விருதுபெறும் கருணாகரனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் பணி தொடரட்டும்”.||
*
மேலே உள்ள குறிப்பை நண்பரொருவர் அனுப்பியிருந்தார். ரியாஸ் குரானாவின் இந்தக் குறிப்பில் இருப்பது இலக்கியப் பாமரத்தனம். அதைச் சற்று விளக்கமாகவே எழுத வேண்டும்.
முதலாவது பாமரத்தனம், படைப்பாளிகள் சமூகத்தின் மனசாட்சி என்ற பார்வையைக் கொண்டு ஒரு படைப்பாளியை அணுகுவது. படைப்பாளி ஒரு சமூகத்தின் கூட்டு நனவிலியின் ஒரு வெளிப்பாடு மட்டும் தான். அவரது அறமோ சீற்றமோ கீழ்மையோ இருட்டோ கூட அவருடையது மட்டுமல்ல. அவரது சமூகத்தின் ஒரு பகுதி தான். ரியாஸின் சிக்கலென்பது இந்த அறமோ தார்மீகமோ அல்ல. அவரது இந்தக் கால இடமென்பது சுருங்கிச் சுருங்கி அவரது புட்டத்தை விடச் சிறியதாக ஆகி விட்டதன் நோய்மை. இத்தகைய நோய்மை பலருக்கும் வருவது தான்.
இத்தகையவர்கள், நான் ஒரு மேதை, காலங்கடந்து என் எழுத்துகள் வாசிக்கப்படும் என்ற பகல் கனவில் வாழ்ந்து மறைவார்கள். அப்படியொரு பகுதி இலக்கியத்தில் என்றுமே உள்ளது. புதுமைப்பித்தன் சொல்லலாம், வாழையடி வாழையாக வரும் என் வாசகர்கள் வந்து வாசிப்பார்கள் என்று. அதற்காக அதே வாக்கியத்துடனான வாழ்க்கை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அதற்கு ஒருவர் இலக்கியத்தை எழுத வேண்டும். அதன் கனலினால் தரிசனத்தால் தன் சமகாலத்தால் புரிந்து கொள்ளப்பட முடியாமல் போகலாம். ஆனால் அத்தகைய கனவும் தீவிரமும் பற்றிக் கொள்ளும் மரபுத் தொடர்ச்சி நம் மொழிக்கு உண்டு. அதன் மீது நம்பிக்கை வைத்தே அத்தகைய மேதைகள் அப்படிச் சொல்கிறார்கள்.
ரியாஸ் ஒரு காலகட்டத்தில் பின் நவீனத்துவம், வன்முறை, கட்டவிழ்ப்பு, கவிதை ரீமேக் என்று ஒரு ட்ரெண்டாய் இருந்தார். அதன் சரக்குகள் உடனடியாகக் காலவதியாகின. அவர் உருவாக்கியது மலைத் தேனையல்ல. மல் பாணை. வெறும் பாண் கூட அடுத்த நாள் காலை வரை தாக்குப் பிடிக்கும். மல் பாண் அப்படியல்ல. மதியம் தாண்ட முடியாது. அவரது ஆரம்ப கால இலக்கிய பார்வைகளால் நானும் கவரப்பட்டிருந்தேன். ஆனால் அந்த பார்வைகளை நிறுவ ஒரு சில படைப்புகள் நம் சூழலில் உருவாகி வந்தனவே ஒழிய யாரும் சீந்தவில்லை. அதற்கு முதன்மைக்காரணம் அவர் ஆரம்பம் முதலே இலக்கியத்தை ஒரு தொழிற்சாலை உற்பத்திப் பொருளாகக் கருதி வந்தமை தான். மூளையின் நெசவுத் தொழிற்சாலையில் கவிதை வராது. மூளையின் எரிமலையிலிருந்து வருவது என்பது எனக்குத் தெரிந்த போது அவரது பார்வைகள் சட்டென்று உலர்ந்து கரைந்து போவது தெரிந்தது. அவருக்கு இலக்கியத்தின் அடிப்படைகளோ, கவிதையோ இன்று வரை வராததற்கு அவருடைய இலக்கிய மூட நம்பிக்கைகள் ஒரு அடிப்படைக் காரணம்.
நினைவில் நிற்கும் ஒரு வரியைக் கூட இன்று வரை அவரால் எழுத முடியாதது அந்த அடிப்படைப் போதாமைகளால் வருவது. இன்று அவரைச் சுற்றியிருந்த சிறு நண்பர்கள் கூட்டம் கூட உதிர்ந்து அகன்று போய் விட்டது. அவர் தன்னை ஒரு மேதை என நினைத்துக் கொள்வதில் தவறில்லைத் தான். தமிழ்ச்சமூகத்தில் அப்படி ஒருவர் தன்னைக் கற்பனை செய்து கொள்ளாமல் இயங்க முடியாது. அந்த நிமிர்வு தேவை. ஆனால் ரியாஸின் மேற்குறித்த பதிவில் வெளிப்படுவது அசட்டுத்தனம். பள்ளிக்கூட பிள்ளைக்கு அறநெறி வகுப்பை போல அவர் இலக்கியத்தை எதிர்பார்க்கிறார். அல்லது அப்படி ஒரு வாதம் கருணாகரன் மீதான தாக்குதலுக்கு வசதியாக இருக்கிறது என்பதால் எடுத்து வந்திருக்கிறார்.
கருணாகரன் மட்டுமல்ல, எந்த ஒரு எழுத்தாளரும் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை, அரசியல் பார்வைகளால் மதிப்பிடப்படுவதில்லை. அப்படியென்றால் தாசி வீட்டுத் திண்ணைகளில் திரிந்த கம்பனை நம் மொழியின் மகத்தான பெருங்கவிஞனாக கொள்ள முடியாது. இந்திய ராணுவம் இலங்கையில் எந்த தவறும் இழைக்கவில்லை என்று சொன்னதற்காக ஜெயகாந்தனை நிராகரிப்பதில்லை. கருணாகரன் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு அரசியல் தரப்புகளுடன் இருந்திருக்கிறார் என்பது வெளிப்படையானது. அவர் ஈரோஸில் இருந்தார், புலிகளில் இருந்தார், பிறகு அவர் புலி எதிர்ப்பாளர்களுடன் இருந்தார் எனக் காலத்திற்குக் காலம் அவரது அரசியல் சார்பு நிலைகள் பலராலும் விமர்சிக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் அதனால் எல்லாம் அவரது வாழ்வும் படைப்பும் மதிப்பிடப்படுவதில்லை.
அவர் எல்லாக் காலத்திலும் தன் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கத்திற்கென குன்றாது செயலாற்றியவர். அது அவரது ஆளுமையின் ஒரு பகுதி. எளிய கிராமத்து வீட்டின் குடிசையிலிருந்து அவர் இன்று ஒரு கல்வீட்டுக்கு செல்வதற்கு இடையில் ஒரு நீண்ட வாழ்க்கை இருக்கிறது. அதன் ஏற்ற இறக்கங்கள், அச்சங்கள், நிர்க்கதிகள் இருக்கின்றன. அவற்றுக்கெல்லாம் இந்தச் சமூகம் அவருக்கு பல தடவைகள் துரோகிப் பட்டம் கொடுத்திருக்கிறது. ஆனால் பண்பாட்டுத் தளத்தில் கருணாகரனின் பங்களிப்பில் எவரும் அவரைத் துரோகியெனச் சொன்னதில்லை.
நிலாந்தனின் யுகபுராணத்தில் வரும் ஒரு பகுதியில் கொல்லப்பட்டவரெல்லாம் பாக்கியசாலிகள். துரோகிப் பட்டம் அவர்களுக்கு இல்லையென்று எழுதியிருப்பார். உயிருடன் அவர்கள் இறுதிப் போரிலிருந்து வெளியே வந்ததையே துரோகத்தனம், நின்று செத்துப் போ எனச் சொல்ல எந்த அசடனுக்கும் உரிமையில்லை. அதன் பின்னரான அவர்களது வாழ்க்கை நெருக்கடிகளை அவர்கள் எங்கும் எழுதி இரக்கம் கோரியதில்லை. அவர்கள் கைவிடப்பட்டே இந்தச் சமூகத்தில் இன்றும் இருக்கிறார்கள். ஆனால் பண்பாட்டுத் தளம் அத்தகையவர்களைக் கைவிடாது. அவர்களுடைய மொத்த வாழ்வின் பங்களிப்பின் மீது வைத்தே அவர்களது இடம் உருவாகி வரும்.
கருணாகரனின் அரசியல் நிலைப்பாடுகள் ஒரு எழுத்தாளனாக எனக்கு அவசியமில்லை. அவர் என்ன எழுதியிருக்கிறார், அதற்கு ஏதும் மதிப்பிருக்கிறதா என்பதே முக்கியமானது. அவரது கவிதைகள் பற்றிய மதிபீட்டை குறிப்பிடாத ரியாஸ் குரானா அவரது அறம், தார்மீகம் குறித்து கொந்தளிக்கிறார். வீட்டில் படுத்து கூரை முகட்டைப் பார்த்துச் சிந்திப்பதற்கு எந்தத் துணிச்சலும் தேவையில்லை. ரிஸ்க் எடுக்காதவர்களின் பேச்சுக்கு உண்டான மதிப்பைப் பற்றி நிலாந்தன் குறிப்பிடுவதுண்டு. தன் முன்னிருக்கும் காலத்தை மாற்றுவதற்காக, தன் பண்பாட்டை உருவாக்குவதற்காக அவர்கள் எடுக்கும் ரிஸ்க் உயிராபத்தானதாகக் கடந்த காலத்தில் இருந்திருக்கிறது. ரியாஸ் இதுவரை என்ன வெங்காயத்தை உரித்திருக்கிறார். ரியாஸ் இதுவரையிலான தன் வாழ்க்கையில் எங்காவது மக்கள் பிரச்சினையிலோ அல்லது போராட்டத்திலோ நின்றிருக்கிறாரா? களப்பணி ஆற்றினாரா? பெரு விசையுடன் சுழலும் பண்பாட்டின் ஆற்றை தன் ஆன்ம பலத்தால் கட்டி நிறுத்தி மடை மாற்றியிருக்கிறாரா? ஒரு சுக்கும் இல்லை. எந்தச் சமூகத்தின் மனசாட்சி அவர்? குறைந்தபட்சம் அவருக்காவது மனசாட்சி இருக்கிறதா!
கனடா தமிழ் இலக்கியத் தோட்ட கவிதைக்கான விருதே கருணாகரனுக்குக் கிடைத்திருப்பது. இதற்கு முன் கரைச்சி பிரதேச சபை ஒரு விருது கொடுத்திருக்கிறது. ஆக மொத்தம் இந்த நெடிய வாழ்வில் கருணாகரன் பெற்றிருப்பது இரண்டே விருதுகள் தான். ரியாஸ் சொல்வது போல கருணாகரன் முதல் தர பிழைப்புவாதி என்றால் குறைந்தது ஆண்டுக்கொரு விருதாவது வாங்கியிருக்க வேண்டும். என் மதிப்பீட்டில் கருணாகரனுக்கு இயல் விருது பெறவே தகுதி உண்டு. ஆனால் இன்னமும் கொடுக்கவில்லை. எதிர்காலத்தில் கொடுக்கப்படலாம். கொடுக்க வேண்டும் என்பது அடுத்த தலைமுறையின் படைப்பாளியாக என் பரிந்துரை.
ஒருவர் எத்தனை பெரிய உத்தமன் தெரியுமா என்பதற்காக ஒரு விருது கொடுத்தால் ரியாஸ் இப்படி அறக்கேள்விகளுடன் தன் எலிப்பொந்திற்குள்ளிருந்து வரலாம். ஆனால் அப்படி உத்தமர்களுக்கு இலக்கியத்தில் விருது கொடுப்பதில்லை. அப்படி உத்தமர்கள் இலக்கியத்தில் இருப்பதுமில்லை. வாழ்வின் எல்லா அந்தங்களும் கொண்டவரே மகத்தான படைப்பாளியாக முடியும்.
கருணாகரனின் கவிதையில் உள்ள சிறப்புகள், போதாமைகள் பற்றி உரையாடுவது, விரிவாக விமர்சிப்பது குழப்பமில்லை. அது செய்யப்பட வேண்டும். அது தான் மரபு. ஆனால் ரியாஸின் சிக்கல் படைப்போ, விருதோ அல்ல. அவருடைய சொந்த படைப்பு வறுமையிலிருந்தும் சலிப்பிலிருந்தும் பீறிடும் போலி அறக் கூச்சல். பிழைப்புவாதம் என அவர் சுட்டும் அனைத்தும் ஒருவரின் பண்பாட்டுச் செயல்பாட்டின் அடிப்படை செயற்பாடுகள் என அறியாத பண்பாட்டுப் பாமரத்தனம்.
வெளிநாட்டுக்காரருக்கு கருணாகரன் உள்ளூரில் புத்தக நிகழ்வுகளை ஒருங்கிணைக்கிறார் என்று சொல்கிறார். அது உண்மை தான். ஆனால் அவர் உள்ளூர் எழுத்தாளர்களுக்கும் மூன்று தசாப்தங்களாக எத்தனை அரிய பணியை ஆற்றியிருக்கிறார் என்பது பண்பாட்டை அவதானிப்பவர்களுக்கு தெரியும். அடுத்த தலைமுறையைத் தன் சொந்தப் பிள்ளைகள் போல அரவணைக்கும் இன்னொருவர் நம் பண்பாட்டில் அரிது. அவர் அவர்களது கனவை நீட்டிக்க தன் எல்லைகளை மீறியும் கை கொடுத்திருக்கிறார் என்பதே வரலாறு. தனி மனித விருப்பு வெறுப்புகளால் ஒருவரின் பண்பாட்டு பங்களிப்பை சுருக்கி, முத்திரையிட்டு அளிப்பது கயமை.
கருணாகரன் ஈரோஸிற்கு போனதை ஏதோ பார்லிமெண்டுக்கு போனது போல வசதியானதாகச் சொல்கிறார். ‘போராடப் புறப்படுவதாகக் கூறி’ என சந்தேகம் கற்பிக்கிறார். இப்பொழுதென்ன ரியாஸ் வீட்டு முற்றத்தில் விறகு போட்டு தணலெடுத்து தீ மிதித்து கற்பை நிரூபிக்க வேண்டுமா? புலிகளோடு இருக்கையில் எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லாமல் இருந்தாரா? அதற்கும் இன்னொரு தீமிதிப்பு தேவையா? சரி, அவர் தான் போராடப் போனார், ஒடுங்கினார். இயக்கம் மாறினார். புத்தகம் வெளியிட்டார். கூட்டம் நடத்தினார் என சொல்வதற்கு ஒரு பெரிய கதையே இருக்கிறது. ரியாஸ் தான் உத்தம புத்திரன் ஆயிற்றே அவருடைய வாழ்க்கையில் என்ன கற்க இருக்கிறது? என்ன மாற்றம் இருக்கிறது? என்ன போராட்டம், மக்கள், மேன்மை, கீழ்மை! ஒன்றும் இல்லை. கேள்வி கேட்பதற்கான தகுதியோ நிபந்தனையோ அல்ல நான் சுட்டுபவை. அப்படியென்றால் என்னவென்றே தெரியாதவர் ரியாஸ். அதன் ஆழமும் அகலமும் புரியாத பாமரர். அவரது இலக்கிய சிந்தனைகள் எத்தனை வேளைக்கு நமத்துப் போனதோ, அதை விட வேளைக்கு இத்தகைய பாமரத்தனங்களும் அகன்று போய் விடும்.

கருணாகரனைப் பார்த்து வாய் பொத்தி சிரிப்பது போன்ற ஒரு AI படத்தை அவர் தனது முகநூலில் பகிர்ந்திருக்கிறார். நானும் அவருக்கு பதில் சொல்ல ஒரு குட்டு வைத்திருக்கிறேன். ஆனால் என்ன, ரியாஸிற்கு உறைக்காது. அவரது பில்லி, சூனிய, ஏவல் பொம்மைகள் எதையேனும் ஏவிப் பார்க்கலாம். அறச் சீற்றத்துடன் சமூகத்தை கேள்வி கேட்கும் உத்தமரான அவர் அதையெல்லாம் செய்து என்னை தாக்காது அத்தனை தெய்வங்களும் துணை நிற்பதாக.

