அரசின் விருதுகள்

அரச இலக்கிய விருதுகளை எழுத்தாளர்கள் பெறுவதைப் பற்றி நண்பரொருவர் வேடிக்கையாகச் சொன்னார். அவர் முதன்மையான சிக்கலாகச் சொன்னது “இவங்களே அனுப்பி, அத ஒரு குழு தெரிவு செய்து, வாங்குவாங்களா எண்டு உறுதிப்படுத்தி, பிறகு அறிவிப்பு வெளியாகும் இந்த விருதுகள் தேவையா? எழுத்தாளரெண்டால் ஒரு இது இருக்க வேண்டாமா?” என்ற சாரப்படச் சொன்னார்.

அரச இலக்கிய விருதுகளுக்கும் வாசகர் வட்டங்களினதோ பண்பாட்டு அமைப்புகளினதோ விருதுகளுக்கும் உள்ள இடைவெளியை வெட்டிப் பிரிப்பது முக்கியமானது. வாசகர், அமைப்புகளின் விருதுகள் பண்பாடு உவந்து அளிப்பவை, அரச கட்டமைப்புகள் வழங்கும் விருதுகள் அனேகமாக அனுப்பி, கேட்டுப் பெறுபவை.

அரச விருதுகளைப் பெறுபவர்களுக்கும் அவர்களுடைய இலக்கியத்தின் தன்மைக்கும் ஒரு ஒற்றுமை இருப்பதுண்டு. கேட்டுப் பெறும் அல்லது கொடுத்துப் பெறும் இந்த விருதுகளை வாங்கும் எழுத்தாளர்கள் பெருமளவுக்கு இலக்கியத்தில் முக்கியத்துவமில்லாதவர்கள். அவர்களுடைய இலக்கியத்திற்கு தீவிர இலக்கிய உலகம் கவனம் அளித்திருக்காது. அவர்களை எழுத்தாளர்கள் என்று அவர்களே அறிமுகப்படுத்தினால் சாணியை மிதித்தது போல எழுத்தை அறிந்தவர்கள் முகத்தை வைத்திருப்பதுண்டு. அதனால் அவர்கள் கவனம் தேடி அரச நிறுவன விருதுகளை நோக்கிப் போகிறார்கள். அங்கு இலக்கியமென்றால் சுக்கா மிளகா எனக் கேட்குமொரு குழு அமர்ந்து இவர்களின் இலக்கியத்தில், வந்ததில் கொஞ்சம் தேறுவதை எடுத்து கொடுக்கிறார்கள். இந்தக் கருணை, நிராகரிப்பதிலும் கொடுமையானது. தீவிர இலக்கியச் சூழல் அவர்கள் மேல் காட்டும் அசண்டையீனம் அவர்களை அரச விருதுகளை நோக்கிச் செலுத்துகிறது.

இலங்கை போன்ற ஒரு நாட்டில், இனப்படுகொலை நிகழ்ந்த ஒரு நாட்டில், அதற்குரிய நீதி கிடைப்பதற்கான பொறிமுறைகளில் அரசு மெத்தனம் காட்டும் நாட்டில், காணாமலாக்கப்பட்ட பிள்ளைகளைத் தேடும் அம்மாக்களைத் தார் வீதியில் கிடந்து அழச் செய்யும் நாட்டில், மனிதப்புதை குழிகளைத் தோண்டச் சொல்லி மக்கள் வீதியில் நிற்கும் நாட்டில், இலக்கியவாதிகளையோ பண்பாட்டு ஆளுமைகளையோ வெறும் விருது கொடுத்து வாங்கி விடலாம் என நம்பும் நாட்டில், நான் அத்தகையதொரு அரசின் விருதைத் தொட்டும் பார்க்க மாட்டேன். அது என் அற நிலைப்பாடு. அப்படி வாங்குவது தார்மீகம் அல்ல என நினைக்கிறேன்.

அரசிடம் விருது வாங்கும் ஒரு எழுத்தாளன் அரசுக்கு மறைமுகமாக துண்டுக்கு அடியில் கையைக் கொடுத்துக் கொள்கிறான். இலங்கை போன்றதொரு நாட்டில் அரச விருதை எழுத்தாளர் பெறுவது மக்களுக்குச் செய்யும் அநீதியென நம்புகின்றேன். அது அவர்களுக்கு எழுத்தாளர்கள் அளிக்கும் நற்சான்றிதழ் போன்றது, என்றாலும் இன்னொரு பொது ஒற்றுமை இத்தகைய விருதுகளைப் பெறுபவர்களிடம் உண்டு. அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் அரசுக்கு முன் அதிகாரத்திற்கு முன் வளைந்து நின்றே பழக்கப்பட்டிருப்பார்கள். அந்தத் தன்மையே இந்த விருதுகளுக்கு முன் செல்வதற்கான கூச்சமின்மையை அளிக்கிறது.

நண்பர் கேட்ட அந்த “இது” என்பது எழுத்தாளர் எனும் நிமிர்வு பற்றியது. எழுத்தாளர் முதலில் நிமிர்ந்து நிற்க வேண்டியது, அதிகாரத்தின் முன், அரசின் முன். ஆனால் அந்த நண்பரிடம் கவலைப்பட வேண்டாம் எனச் சொன்னேன், இவர்கள் அரச அமைப்புகளின் ஓராயிரம் விருதுகளைப் பெறும் ஓராயிரம் பேரின் பட்டியல்களிலே ஒரு பெயராக எஞ்சுவார்களே தவிர, இலக்கியத்தில் அல்ல.

மெய்யான கலையென்பது ஈவிரக்கமேயற்ற அறத்தின் தெய்வம். அது கேட்பதை இவர்களால் கனவு கூணக் காண முடியாது.

முகப்பு ஒளிப்படம் – குமணன் கணபதிப்பிள்ளை

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *