அரசின் விருதுகள் – எதிர்வினை

நேற்று நான் எழுதிய அரசின் விருதுகள் குறிப்புத் தொடர்பில் காலையிலேயே ஓரிரு வசைகளுடன் ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது. முழுவியலம் அமங்கலமாக இருப்பது ஒருவகையில் நேற்றின் தொடர்ச்சி தான். ஆற்றப்படும் அனைத்து செயல்களுக்கும் வினைகளுக்கும் எப்படியோ எப்பொழுதோ எதிர்விசைகள், பழிநிகர்கள் நிகழ்வது இயற்கையே.

ஆனால் அந்த குறுஞ்செய்தியை அனுப்பியவர் நான் அந்தக் குறிப்பை சோ. பத்மநாதனை அவமதிப்பதற்காக எழுதியதாகக் கருதியே கடுமையாக ஏசியிருக்கிறார். அவருக்கு யாரோ வட்ஸப்பில் அனுப்பியிருக்கிறார்கள். அரச இலக்கிய விருதுகளை பெறுபவர்களை நான் வளைந்து கூனுபவர்கள் எனச் சொல்லியிருக்கிறேன். ஆகவே நான் விருதுப்பட்டியலில் இருப்பவர்கள் உட்பட சோ. பவையும் அவமதிப்பதாக சொல்லியிருந்தார்.

நான் எழுதியதை மீண்டும் வாசித்துப் பார்த்தேன். சற்றுக் கடுமையான தொனியில் தான் எழுதியிருக்கிறேன். எனக்கு எழுத்து அகல் விளக்கின் ஒளிச்சுடரல்ல. அது காட்டெரி. என்னியல்புக்கு ஆவேசமாக முகத்திலறைவது போலவே கேள்விகள் கேட்க வரும். ஆனாலும் அதில் விருதுப் பட்டியலில் இருப்பவர்களில் சிலர் மீது எனக்கு மதிப்பிருக்கிறது. சோ. பத்மநாதனின் பண்பாட்டு பங்களிப்பின் மீதும் மதிப்பிருக்கிறது.

இதைச் சற்று விரிவாகவே எழுதி விடுகிறேன். நான் ஏன் அரச இலக்கிய விருதுகளை எழுத்தாளர்கள் புறக்கணிக்க வேண்டுமெனக் கருதுகிறேன்?

இலங்கை போன்றதொரு நாட்டில் அரச நிறுவனம் – அரசாங்கம் இரண்டுக்குமிடையில் உள்ள வித்தியாசத்தை நாம் இங்கு குழப்பிக் கொள்வதுண்டு. அல்லது அதை ஒரு கவசமாக்கி பதுங்கிக் கொள்வதுண்டு. ஒருவர் ஓர் அரச ஊழியர் என்பதற்கும் ஒரு எழுத்தாளருக்கு மைய அரசின் இலக்கிய அமைப்பு விருது வழங்குவதற்கும் நேரெதிர் வேறுபாடுகளுண்டு. இந்த வசதியான தர்க்கத்தில் ஒளிந்து கொண்டே கல்விப்புலம் சார்ந்தவர்களும் சில சோட்டா எழுத்தாளர்களும் அரசிடம் விருது வாங்குவதை நியாயப்படுத்துவதுண்டு.

ஓர் அரச ஊழியர் அரசாங்கத்திடம் வாங்கும் சம்பளத்தின் மூலம் அரசின் கண்ணியத்தையோ, ஏற்பையோ, அங்கீராத்தையோ பங்கிடுபவர் அல்ல. அவர் ஒரு பணிக்காக ஊழியம் பெறுபவர். அவர் அரசிடமிருந்து ஊதியம் பெறுகிறார். அரசை நிர்வகிப்பதே அரசாங்கம், அவர்களுக்கு ஒருவர் ஊழியராக இல்லை, அரசாங்கத்தைப் போலவே அரச உத்தியோகத்தரும் மக்களுக்கு சேவையாற்றுபவரே. ஆனால் கலையும் எழுத்தும் இதற்கு முற்றிலும் மாறானது. ஒரு எழுத்தாளர் எந்த அரசாங்கத்தினதும் அமைப்பிற்கும் நிறுவனத்திற்கும் உட்பட்டு சிந்திக்கவோ, எழுதவோ, அங்கீகாரம் கோரவோ, பெறவோ கூடாது. அவரது கண்ணியத்தை, அகச்சான்றை தன் நெஞ்சறிந்த உண்மைக்கு மட்டுமே கொடுக்க வேண்டும். அரச இலக்கிய விருதுக்குச் செல்லுமொருவர் ஜனாதிபதியின் முன்னால் தான் விருது வழங்கப்படப் போகிறார். உயரிய விருதுகளை ஜனாதிபதி தான் கொடுக்கப் போகிறார். அல்லது அரசாங்கத்தின் ஏதாவது அமைச்சர்கள். இருவரும் சிரித்தபடி கைகுலுக்கிக் கொள்வார்கள். அது நாகரீகம் என்றாலும் ஒரு ஊழியர் நியமனக் கடிதம் வாங்குவதற்கும் ஒரு எழுத்தாளர் அரச விருதை வாங்குவதற்கும் இடையில் வித்தியாசமில்லை என வாதிடுபவர்களுக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை. இனி அவரவர் மனசாட்சி, நீதியுணர்ச்சி, வரலாற்றுணர்வு தொடர்பானது அது.

சிலர் NPP அரசு நல்ல அரசு, அனுர ஒரு நல்ல ஜனாதிபதி என்று நினைத்துக் கொண்டுமிருக்கலாம். ஒப்பீட்டளவில் கடந்த அரசாங்களை விட சிறப்பாகாவே அரசாங்கம் இருப்பதாக காட்டிக் கொண்டாலும் அடிப்படையான அரசியல் சிக்கல்களில், அதிகாரப் பகிர்வில், இனப்படுகொலைக்கான நீதி கோரலில், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் தொடர்பில் இந்த அரசு அதை ஒரு நிர்வாகச் சிக்கல் போலவே அணுகுகிறது என்பது என் பார்வை. அது அந்தக் கட்சியெங்கும் பரவியிருக்கும் சிந்தனை. அல்லது மனப்பாங்கு. இத்தகைய சூழலில் ஒரு அறியப்பட்ட எழுத்தாளர் அல்லது கலைஞர், அல்லது ஒரு இளைஞர் இந்த அரச விருதுகளை மறுப்பது என்பது அரசாங்கங்கள் கலைஞர்கள், எழுத்தாளர்களின் பண்பாட்டு இடத்திற்கு முன் அரசாங்கம் எத்தனை சிறிய அமைப்பு என்பதை உணர்த்துவது தேவையானது. எந்த ஒரு மெய்யான படைப்பாளிக்கும் முன் அரசு என்பது சிற்றெறும்பு. அரசின் அங்கீகாரம் பொருட்படுத்தவே தேவையில்லாதது. அரச கட்டமைப்பை நிர்வகிக்கும் அரசாங்கம் தன் மீதான நல்லெண்ணத்தை இத்தகைய நாடகங்களின் மூலம் நிகழ்த்தும். இந்த எந்தப் படைப்பாளியாவது அரசை இடித்துரைத்து அந்த மேடைகளில் பேசி விட முடியுமா? அல்லது வேறு எங்கேனும் இடத்தில் பேசுகிறார்களா? இல்லை. ஆகவே தான் அரச இலக்கிய விருது போன்ற பெறுமதியற்ற ஒரு நாடகத்தில் பண்பாட்டு பங்களிப்போர் விருதைப் பெறுவதன் ஆபத்தைச் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது. குறைந்த பட்சம் இத்தகைய சொல் எழவில்லை என்ற அவப்பெயராவது வருந்தலைமுறைகளிடமிருந்து எனக்கு நேரக்கூடாது என்பதற்காக நான் இதை எழுதியாக வேண்டியிருக்கிறது.

சோ. பத்மநாதனுக்கு இலங்கையின் அதி உயர் விருதான சாகித்ய ரத்னா விருது வழங்கப்பட்டிருக்கிறது. நான் அறிந்த வரை, இவ்விருது விண்ணப்பித்து பெறும் விருது அல்ல. ஆகவே தான் நேற்று எழுதிய குறிப்பில் சோ. பவுக்கு அவ்விருது வழங்கப்பட்டது குறித்த படங்களைப் பகிரவில்லை. அதை அரச இலக்கிய குழுவின் நடுவர் குழு தேர்வு செய்கிறது. ஒட்டுமொத்த வாழ்நாள் பங்களிப்புக்காக வழங்கப்படும் இந்த விருதை ஒருவர் விண்ணப்பித்து பெற முடியாது. ஆக்க இலக்கியங்களுக்கும் ஏனைய நூல்களுக்குமே எழுத்தாளரினாலேயோ பதிப்பகங்களினாலேயோ விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படும். அதையே நான் கோரிப் பெறும் விருதுகள் எனச் சொல்லியிருந்தேன்.

சாகித்ய ரத்னாவை தமிழில் வருடந்தோறும் எவராவது பெறத்தான் வேண்டும். அது ஒரு சடங்கு, ஒருவரில்லை என்றால் இன்னொருவர் வாங்கப் போகிறார். ஒரு எளிய சலுகை. அங்கீகாரம். அதனால் எந்த ஒரு செய்தியும் வரலாற்றுக்கோ காலத்திற்கோ சொல்லப்படுவதில்லை. ஒரு எழுத்தாளரின் வாழ்க்கை மக்களுக்கு ஒரு செய்தி. அவருடைய ஏற்ற இறக்கங்கள், அரசியல் நிலைப்பாடுகளின் சரிவுகள், ஒழுக்க மீறல்கள், அற மீறல்கள் எல்லாமே அப்படித் தான். அண்மையில் கருணாகரனுக்கு கனடா இலக்கியத் தோட்டத்தின் கவிதைக்கான விருது கிடைத்த பொழுதும் அத்தகைய அரசியல் நிலைப்பாடுகள், தார்மீகம் சார்ந்த விமர்சனங்கள் எழுந்தது. அதன் போது நான் அவ்விருதை அவர் ஏற்க வேண்டுமென வாழ்த்தினேன். கனடா இலக்கியத் தோட்டமென்பது ஒரு பண்பாட்டு அமைப்பு. ஆகவே அதனிடம் ஒருவர் விருது பெறும் பொழுது எந்தத் திறனுக்காக அல்லது தகுதிக்காகப் பெறுகிறாரோ அதையே முதன்மையாக கொண்டு அவ்விருது அளிக்கப்பட வேண்டும். அவ்வகையிலே அவ்விருதை கருணாகரன் பெற்றுக் கொண்டதில் நான் எதிர்நிலைப்பாட்டை முன் வைக்கவில்லை.

இங்கு உள்ள சிக்கல், இலங்கை அரசின் ஜனாதிபதியின் கையால் ஒரு எழுத்தாளர் விருது வாங்குவதென்பது மக்கள் எனும் கூட்டுத் திரளின் முன் நிமிர்வுடன் நின்று அவர்களை பண்படுத்த வேண்டிய ஒருவர் அரசிடம் எச்சில் இலையைப் பெறுவதைப் போன்றது. அதனால் சமூகத்திற்கு எந்தப் பயனும் இல்லை. நாம் அப்படி வாழ்நாள் சாதனை பெறத்தக்கவர் எனக் கருதுபவர்களுக்கு இன்னும் புதிய விருதுகளை உருவாக்க வேண்டும், பண்பாட்டு அமைப்புகளை வளர்த்தெடுக்க வேண்டும். எழுத்தாளர் என்றால் நிமிர்வு என்பதை மக்களுக்கு முன் வாழ்ந்து காட்ட வேண்டும். இத்தகைய சிறு செயல்களாலும் தான் மக்கள் எழுத்தாளர்களை மதிப்பதில்லை.

சோ. பவின் பண்பாட்டு பங்களிப்பை சுருக்கமாக இப்படி வரையறுக்கிறேன். சோ. பவின் மரபு இலக்கியத்தின் அறிவையும் பாண்டித்தியத்தையும் சமூகம் மதிக்கிறது. அதே நேரம் நவீன இலக்கிய வாசிப்பும் கொண்டவர். அவரது மேடைப் பேச்சுகளுக்கும் கவியரங்களிற்கும் வெகுசனத் தரப்பில் பெரும் ஈர்ப்பும் மரியாதையும் இருக்கிறது. பல தடவைகள் யாரேனும் ஒருவர் “சோ. ப ஒரு மேடையில் இப்படிச் சொன்னார்..” என கதைகளையோ பகிடிகளையோ கவிதைகளையோ சுட்டிக் காட்டி உரையாடுவதைப் பார்த்திருக்கிறேன். அப்படி செங்கை ஆழியனின் நூல்களைப் பற்றி மட்டும் தான் வெகுசனத் தளத்தில் இவ்வளவு பரவலான அறிமுகம் இருப்பதையும் அவதானித்திருக்கிறேன். ஒருவகையில் அத்தகைய வெகுசன நரம்பையும் நவீன இலக்கியத்தையும் இணைக்கும் கண்ணியாக இருக்கும் மூத்த ஆளுமை அவர். ஈழத்துச் சூழலில் மூத்தவர் எனும் இடத்திற்கு மேலும் அவரது புலமையாலும் நன்கறியப்பட்டவர். அவரது மொழிபெயர்ப்புகள் சிறப்பானவை. கவிதைகள், கட்டுரைகளை அவரால் துல்லியமாகவே மொழிபெயர்க்க முடியும். அவை பொது வாசிப்புக்கு மட்டுமல்ல, தீவிர வாசிப்பிற்குமே கூட உரியவை.

மரபில் புலமையும் நவீனத்துவத்துடன் இணைப்பையும் கொண்டு அவர் மேடைப்பேச்சிலும் மொழிபெயர்ப்பிலும் சிறந்து விளங்கி வருபவர். அவரது இலக்கிய இடமென்பது வெகுசனத்தளத்தின் பாற்பட்டது. அது மிக அவசியமான சமூகப் பாத்திரம். தீவிர இலக்கியத்தில் அவரது கவிதைகளுக்கு மதிப்பில்லை. ஒரு கூட்டத்தில் நேரடியாகவே அவரது கவிதையொன்றைக் கவிதை இல்லை என வாதிட்டும் இருக்கிறேன். அவர் எழுந்து சென்று விட்டார். இன்றைக்கு அதை நினைக்க வருத்தமாய் இருக்கிறது. அவருடன் எப்போதும் ஒரு நல்ல சொல், அன்பு வார்த்தையை இன்று வரை பேசியதில்லை. முதன் முறையாக பல வருடங்களுக்கு முன் யதார்த்தனுடன் சேர்ந்து அவரை ஒரு பேட்டி எடுக்கச் சென்றிருக்கிறேன். அதில் கூட சொல்லும்படி ஒரு நினைவும் இல்லை. வெகுசனத் தளத்தில் அல்லது இடைநிலை இலக்கியம் மீது எனக்கு இளவயதில் கொஞ்சம் இழிவான பார்வை இருந்தது. தீவிர இலக்கியமே உயர்ந்தது எனும் பார்வையும் கூடவே. இப்பொழுது அது ஒரு ஏணியின் அடுக்கு என விளங்கிக் கொள்கிறேன். பல படிகளாக முன்னேறியே ஒருவர் தீவிர இலக்கியம், அல்லது மெய்யான இலக்கியத்திற்குள் நுழைய முடியும்.

இன்று அவரது இடத்தில் இன்று வேறெந்த ஆளுமைகள் இருக்கிறார்கள் என எண்ணிப் பார்க்கிறேன். உடனடியாக நினைவில் எழும் முகமில்லை. அது ஒன்றே அவரது பங்களிப்பு மதிக்கப்பட்டாக வேண்டுமென்ற இடத்தை அளிக்கிறது. மேலும் தனிப்பட்ட முறையில் அவர் செல்வமனோகரனின் ஆசிரியரும் வழிகாட்டியும். செல்வமனோகரனின் மரபு பற்றிய ஆர்வத்தினதும் அறிவினதும் வழிகாட்டி, செல்வமனோகரனிலிருந்தே எனக்கு அதன் ஊட்டமும் அறிமுகமும் கிடைத்தது. ஆகவே துல்லியமாகச் சொன்னால், அவர் என் ஆசிரியரின் ஆசிரியர். அவரது அறிவின் ஒரு பகுதி என்னிலும் செரிக்கிறது. ஆகவே நானும் அவரது மாணவன் தான். அவரால் ஏற்றுக் கொள்ளப்பட முடியவன் என்றாலும், அவரை எதிர்விசையுடனேயே அணுகியவன் என்றாலும் அவர் இந்தப் பண்பாட்டிற்குக் கொடையெனக் கொடுத்தது எதுவோ அது என்னிலும் இருக்கிறது என்ற தன்னுணர்வும் நன்றியுணர்ச்சியும் எனக்கிருக்கிறது.

அவரது பண்பாட்டு பங்களிப்பிற்காக அவரை வாழ்த்தவோ, முன்வைக்கவோ விரும்புபவர்கள் நம் பண்பாட்டு அமைப்புகள், கல்வி நிறுவனங்களின் ஊடாக அதை நிகழ்த்துவதே மதிப்பானது. செல்வமனோகரனின் தூண்டி அமைப்பு ஏற்கெனவே சில வருடங்களுக்கு முன் அப்படியொரு நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தது. மேலும் மேலும் அவரது இருப்பு கொண்டாடப்படவும் அவரது நயமும் கூருணர்வும் மரபின் செழுமையான அறிவும் பகிரப்பட வேண்டும். அவரை முன் வைப்போர் அவரை முழுப்பெறுமதியுடனும் முன் வைப்பதே அரசுகள் கொடுக்கும் எந்த துக்கடா விருதுகளையும் விட பெறுமதியானது, ஆழமானது. ஒரு மூத்த படைப்பாளியை விருதளித்து கெளரவிக்க நம்மிடமிருக்கும் அமைப்புகளின் எண்ணிக்கையைப் பார்த்தால் வருத்தம் தான் எஞ்சும். அதற்காக நம் மூத்தோரை அரசிடம் விருது பெறும் நிலைக்கு நாம் வைக்கக் கூடாது என்பது என் வலிமையான தரப்பு. ஏனென்றால் இலங்கை அரசு ஒரு நிறுவனம் அல்ல, அது இனப்படுகொலைக்கான நீதியை, தமிழ் மக்களிற்கான அதிகாரப் பகிர்வை தாமதப்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு அரசாங்கத்தின் முகம்.

மீண்டும் உறுதியாகவே சொல்கிறேன், வரலாற்றுணர்வு, நீதியுணர்ச்சி, மனச்சாட்சி இது மூன்றையும் ஒரு எழுத்தாளரோ கலைஞரோ யாரிடமும் ஈடு வைக்கக் கூடாது. அது மூன்றினோடும் நாம் திரும்பி இந்தப் பண்பாட்டுக்கு எதை ஆற்றினோமோ அதில் நிறைவுணர்வை அடைவது எந்த விருதையும் விட மிகப் பெரியது. இன்றைய நாளில் அப்படி நிமிர்வுடனிருந்த பேராளுமையான குழந்தை ம. சண்முகலிங்கனை நினைத்துக் கொள்கிறேன். அவர் விருதுகளையோ புகழ் மொழிகளையோ பொருட்படுத்தாதவர். கல்வி நிறுவனங்களையும் பண்பாட்டு அமைப்புகளையுமே மதித்தவர். அது ஒரு மகத்தான முன்னுதாரணம், வழிகாட்டியாக ஒரு வாழ்க்கை.

சோ. பத்மநாதனையோ விருது பெறவிருப்பவர்களையோ புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. அதன் பொருட்டு அவர்கள் சங்கடமடைவதும் கூட உள்ளபடியே வருத்தமளிப்பது. ஆனால் நான் சொல்ல வேண்டியதை நான் சொல்லியே ஆக வேண்டும். அது என் வழியாக எழும் வரலாற்றுணர்வின் வழி உருவான நீதியுணர்ச்சியின் மனசாட்சியின் ஒரு குரலாக இந்த மந்தத்தனத்தின் முன் எழுந்தே ஆக வேண்டியது. வருங்காலத்திற்கு அது முக்கியமானது. மறதிக்கு எதிராகச் சொல்லப்பட்டுக் கொண்டேயிருக்க வேண்டியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *