கம்பாட்டமும் தூவக்காளியும்

ஜெயமோகனின் சிறுகதையான தூவக்காளியை இடைக்கிடை திரும்பத் திரும்ப வாசிப்பதுண்டு. ஒரு தூவக்காளி ஆட்டக்காரரான அப்பா குடும்பத்தின் வறுமை நிலை காரணமாக தன் மகன் ஆட்டத்துக்கு செல்ல தயங்கி, விருப்பமின்றி இருக்கும் பொழுது அவனுக்கு அதைப் பற்றிச் சொல்லி, அதன் மூலமந்திரத்தையும் கொடுக்கிறார். அவன் நம்பிக்கையின்றி ஒரு வீட்டிற்கு ஆட்டத்திற்குச் செல்கிறான். அங்குள்ள பெண்ணின் முன் புல்பிள்ளயை வைத்து சடங்குகளைச் செய்கிறான். அறியாத ஒரு கணத்தில் அவனுள் எழும் தூவக்காளியை கண்டு கொள்கிறான். அது எழுந்து ஆடி பின்னர், அவனும் அதுவும் பிறிதாக நின்று, நிலவொளி புற்களின் மேல் அலையடிக்கும் பரப்பைப் பார்த்துக் கொண்டிருக்கும் இடத்தில் கதை முடிகிறது. வாசிக்கும் பொழுது எனக்கு உச்சமான உணர்வெழுச்சியை அளிக்கும் கதையது. நான் எழுதும் பொழுதும் என் உடலையும் எனக்குள் எழும் எழுத்தாளனையும் தூவக் காளியின் ஆவேசமான இருப்பைப் போல உணர்வதுண்டு. அதுவும் அக்கதையை நான் வாசிப்பதற்கான காரணம்.

கவிஞர் சதீஷ்குமார் சீனிவாசனிடம் அண்மையில் கதைத்த பொழுது சில எழுத்தாளர்களின் கதைகளைப் பற்றி நன்றாகச் சொன்னார். அவர்களுடைய சிறுகதைகளுக்கான இணைப்புகளையும் அனுப்பியிருந்தார். அதில் ஜெயன் கோபாலகிருஷ்ணன் என்பவர் எழுதிய கம்பாட்டம் கதையை வாசித்தேன். தூவக் காளி எனக்கு அளித்த வாசிப்பின் பரவசத்தையும் மொழியில் கவித்துவமான ஒழுக்கையும் மீண்டும் அடைந்தேன். அற்புதமான கதை. தூவக்காளியை போன்ற எளிமையான ஒரு சட்டகம், இக்கதையில் ஒரு தாத்தா சொல்லும் கதை, ஆனால் கதை நிகழும் முறையாலும், மொழி அடைந்த கவித்துவ சாத்தியத்தின் விரிவாலும், கதையில் நிகழும் முடிச்சு அளிக்கும் உள எழுச்சியாலும் முக்கியமான கதையாகியிருக்கிறது.

(ஜெயன் கோபாலகிருஷ்ணன்)

2021 இல் கதை வெளியாகியிருக்கிறது. அக்காலத்தில் தான் ஜெவும் தூவக் காளியை எழுதியிருந்தார். அதன் தாக்கமாகவும் கூட இந்தக் கதை இருக்கலாம். ஜெயின் நுண்மை தூவக்காளி கதையை மேலும் உச்சமான கதையாக, வடிவமாக சென்றடைந்திருக்கிறது.  ஆனால் எங்கோ தற்செயலாக சுந்தர ராமசாமியை வாசித்து விட்டு இலக்கியத்திற்கு வந்த ஜெயன் கோபாலகிருஷ்ணன், தன் நான்காவது கதையில் இப்படி ஒரு சாத்தியத்தை அடைவது என்பது அசாத்தியமானது. அவரைப் பற்றி இணையத்தில் தேடினேன். முதல் தொகுப்பு 2023 இல் வந்திருக்கிறது. தமிழ் விக்கியில் அவர் பற்றிய குறிப்பு இருக்கிறது. 

ஜெயன் கோபாலகிருஷ்ணன்

நண்பர்கள் கதையை வாசித்துப் பாருங்கள்.

இணைப்பு : கம்பாட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *