வணக்கம் அண்ணா
இலக்கிய உலகம் பரபரப்பாக இருக்கிறது போல. முகநூலில் உங்கள் ஆசானை போட்டு பொழக்கிறார்கள். தேவதாசிகள் பற்றி அவர் சொன்னதற்கு அடிக்கிறார்கள். ஆனால் அது எனக்கு விளங்கவில்லை. காலையில் ஒரு போஸ்ட் பார்த்தேன். அதில் ஒருவர் யாரெல்லாம் ஜெயமோகன் பட்டியலில் இல்லையோ அவர்கள் எல்லாம் தான் நல்ல எழுத்தாளர்கள் என்று சொல்லியிருந்தார். அதை எழுதியவரும் ஒரு எழுத்தாளர் என அவரது முகநூலில் பார்த்தேன். காலச்சுவட்டில் புத்தகமெல்லாம் போட்டிருக்கிறார்கள். நிறைய எழுத்தாளர்களும் அப்படி சொல்லியிருக்கிறார்கள். குழப்பமாக இருந்தது. அது தான் எழுதினேன்.
உங்களுடன் கதைக்கும் போது ஜெயமோகன் பெரிய எழுத்தாளர் என்று சொன்னியள். ஆனால் பெரும்பாலான ஆக்கள் அவரை வெறுக்கிறார்கள். என் மாமாவும் ஜெயமோகனை கோமாளி என்று சொன்னார். ஆனால் நீங்களோ அவர் பெரிய மேதை, ஆசான் என பலதரம் சொன்னியள். விளக்கம் தேவை.
கஜன்
*
அன்புள்ள கஜன்,
உங்களுடைய குறுஞ்செய்தியின் நடையை சற்று செம்மைப் படுத்தியிருக்கிறேன். தளத்தில் வெளியிடும் பொழுது ஓரளவுக்கு அதன் அன்றாட உரையாடல் தன்மைக்கு வெளியே கேள்விகளை இலக்கியம் உரையாடுவதற்கான நடையுடன் எழுதிப் பழக வேண்டும் என நாம் நேர்ப்பேச்சில் கதைத்திருந்தோம். எமது சூழலில் வாசகர் – எழுத்தளர் தொடர் உரையாடலில் இருப்பதில்லை. சிந்தனையைத் தொடர்ந்து செல்வதில்லை. எப்பொழுதாவது கண்டு சிரிக்கும் தூரத்து உறவினர்கள் போன்ற பந்தமே இருக்கிறது. அதை மாற்ற வேண்டும் என நினைக்கிறேன். அதற்காகவே ஒவ்வொரு சிறிய நான்கு வரிக் கேள்விக்கும் கூட அதன் பொது முக்கியத்துவம் கருதி விரிவாக பதிலளிக்கிறேன்.
முகநூலில் நடப்பவை விவாதங்கள் அல்ல, அரட்டைகள். விவாதமென்பது கொஞ்சம் எடையுள்ள சொல். அதன் அர்த்தம் புரிந்தவர்கள் முகநூலில் நடப்பவை அபிப்பிராய உதிர்ப்பு என்பதற்கு அப்பால் பெறுமதியற்றவை என்பதை அறிவார்கள். அவற்றுக்கு தொகுத்துச் சொல்லும் நோக்கோ, விரிவான பார்வைகளோ இல்லை. ஒரு வகை தவளைக் கூச்சல்கள். தொற்றிக் கொள்ளக் கூடியவை. கூடி இசைக்கக் கூடியவை. அதனாலேயே அவை ஒரு கருத்தெனவும் அதுதான் உலகமெனவும் ஒரு நம்பிக்கை உருவாகும். பாழிருட்டில் நடுங்கிக் கொண்டிருப்பவர்கள் ஒருவரையொருவர் தொட்டுக் கொண்டு அச்சத்தை நீக்கிக் கொள்ள விழைவதைப் போல அவர்கள் முகநூலில் அணியாகிறார்கள். அவர்களில் சிலருக்கு இலக்கியம் எனும் தெய்வம் சில கணங்கள் மின்னி மறைந்திருக்கும். மீண்டும் அதைக் காணாமல் ஆக்கியது எதுவெனப் புறவயமாக அறியாது தடுப்பது முகநூல் உருவாக்கியிருக்கும் இலக்கிய நுண்ணுணர்வற்ற வெறுப்புச் சுற்றம் என்பதை அறியாதவர்கள். அறிந்தவர்கள் கூட முகநூல் அடிக்சனை கடந்து வரும் வகையறியாதவர்கள். கொஞ்சக் காலத்திற்கு முன்னர் போகன் சங்கர் முகநூலிலிருந்தும் எழுத்திலிருந்தும் விலகுகிறேன் எனப் பதிவிட்டிருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள். முதலில் அவர் எழுத்திலிருந்தே விலகுவதாகச் சொன்ன போது சற்றுக் கவலையாக இருந்தது. எனக்குப் பிடித்தமான கவிஞர் அவர். ஆனால் சில நாட்களுக்கு முன்னர் அவர் மீண்டும் முகநூலிற்கு வந்து விட்டார் எனச் சொன்னார்கள். யதார்த்தன் “அவர் எழுதுவதைக் கூட விட்டுவிடுவார். ஆனால் முகநூலை விட மாட்டார்” என வேடிக்கையாகச் சொன்னார். நிறையப் பேருக்கு அது தான் நிலமை. முகநூலை விட்டு வெளியேறினால் என்ன செய்வதென்பது ஒரு சிக்கலாகவே பலருக்கும் நீடிக்கிறது. இனி அதது அவரவர் ஊழ். செய்வதற்கொன்றுமில்லை.
அவற்றை நாம் பெரிதாக பொருட்படுத்தத் தேவையில்லை. வாழ்க்கை முகநூலுக்கு வெளியே தான் நிகழ்கிறது. ஒரு எழுத்தாளனுக்கு நிகர்வாழ்க்கையும் படைப்பும் தீவிரமான களங்களும் மட்டும் தான் பொருட்டு.
நீங்கள் அனுப்பிய முகநூல் கருத்துகளின் ஸ்கீரின் ஷொட்கள் பார்த்தேன். அதில் இருப்பவர்களில் சிலர் உண்மையாகவே கொஞ்சம் எழுதியிருக்கிறார்கள் தான். ஜெயமோகன் பற்றி பொன்முகலி சொல்லியிருப்பது “நல்ல வேளையாக அவர் உங்கள் படைப்புகளை பாராட்டிவிடவில்லை.
அவர் பாராட்டும் நூல்களையும் நூல் ஆசிரியர்களையும் பார்க்கும்போது அந்தப் பட்டியலில் இருந்து எவன் ஒருவன் தப்பிப் பிழைக்கிறானோ அவனுக்கே இலக்கியவாதியாக இருக்க எல்லா தகுதியும் உண்டு என்று நான் மனதார நம்புகிறேன்” என்று. பொன்முகலியும் எனக்குப் பிடித்தமான கவிஞரே.
இதில் இரண்டு சிக்கல்கள் உண்டு. ஜெயமோகன் முன்வைக்கும் அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள், பல்வேறு தள, அடுக்கு வித்தியாசங்களுடன் முன்வைக்கப்படுகிறார்கள். என் மீதும் யதார்த்தன், தர்மு பிரசாத் மீதும் அவர் வைத்திருப்பது, பெரும்படைப்புகளை எழுதி விடக்கூடும் எனும் நம்பிக்கையைத் தான். எங்கள் படைப்புகளை மதிப்பிட்டு அதை அவர் முன்வைக்கவில்லை. கருத்துகள், மொழிநடை, அழகியல் சார்ந்த பார்வைக்கோணம் ஆகியனவே அவர் சுட்டியிருக்கும் புள்ளிகள். அனோஜன் பாலகிருஷ்ணன், ம. நவீன், ஜி. எஸ். வி. வி. நவீன், சபரிநாதன், வே. நி. சூர்யா, சதீஷ்குமார் சீனிவாசன், சம்யுக்தா மாயா என நீண்டதொரு இளம் எழுத்தாளர்கள் பட்டியல் ஜெயமோகனால் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விதமாக முன்வைக்கப்பட்டிருக்கிறது. அப்படி நம்பிக்கை தரும் இளம் எழுத்தாளர்களை முன்வைப்பது தமிழிலக்கியத்தில் நெடுங்கால மரபு. அவர்கள் தங்கள் அழகியல், அரசியல் பார்வைக் கோணத்திலிருந்து இளையவர்களை முன்வைப்பார்கள்.
இளம் எழுத்தாளர்களுக்கு முன்னவர்களின் பாராட்டு எந்த வகையிலும் ஊக்கமே. பட்டியலில் இருப்பவர்கள் சில நேரம் சாதிக்காமல் போகலாம், பட்டியலில் இடம்பெறாதவர்கள் முற்றிலும் வேறொரு கோணத்தை மொழியில் திறக்கலாம். எல்லா வாய்ப்பும் எல்லோருக்கும் உண்டு. எந்த ஒரு முன்னோடியின் சொல்லும் பிராண்டிங்கோ தீர்ப்போ அல்ல. அது ஒரு நம்பிக்கை, முன்வைப்பு மாத்திரமே. ஒரு எழுத்தாளருக்கான சொல்லாணை அவரது சொந்த உழைப்பாலும் இடையறாத எழுத்தாலும் அடையப்படுகிறதே தவிர முன்னோர் சொல்லால் அல்ல. முன்னோர் சொல் ஒரு ஏற்பையும் நம்பிக்கையையும் அளிக்கிறது. செல்லும் வழியில் ஒரு முதுகுதட்டல். அத்தோடு ஒருவர் அனைத்தையும் அடைந்து விடுவாரா? இல்லை. அதுவொரு ஊக்க வில்லை. அங்கிருந்து அவர் செல்ல வேண்டிய தூரத்தின் அளவும் பொறுப்பும் அதிகரிக்கிறது. நான் அப்படித் தான் ஜெயமோகன் இளம் எழுத்தாளர்கள் மீது வைக்கும் நம்பிக்கையைப் பார்க்கிறேன். அவர் பொறுப்பை அதிகரிக்கிறார்.
ஜெயமோகன் இளம் தலைமுறையை முன்வைக்கும் பார்வைக் கோணத்தை சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். “தீவிர இலக்கியத்தின் மீது நம்பிக்கையுடனும் தாகத்துடனும் வரும் அடுத்த தலைமுறைக்கு சுற்றத்தையும் செயல்களங்களையும் அறிமுகங்களையும் வெளிச்சத்தையும் அளித்தல். அதன் மூலம் அப்போது பிறந்த நாய்க்குட்டிகள் தம் திசையைத் தாமே அறிந்து நகர்வது போல பயணத்தை தொடங்க விசையை ஒரு மூத்தவராக அளித்தல்”. ஆகவே தான் எப்போதும் அவரைப் பிதாமகர் என்று அழைக்கிறேன்.
ஆனால் அதே நேரம் சுரேஷ் பிரதீப், சுனீல் கிருஷ்ணன், செந்தில் ஜெகன்னாதன், அகரமுதல்வன், வாசுமுருகவேல் முதல் அவர் முன்வைக்கும் பலர் மீது மதிப்பீடு சார்ந்து எனக்கும் விமர்சனங்கள் உண்டு. நான் அவதானித்த வரையில் ஜெ தன் முன்னோடிகளையோ சமகாலத்தையோ வரையறுத்ததைப் போல மிகக் கடுமையான விமர்சன அழகியல் பார்வைகளை அடுத்த தலைமுறை மீது வைக்கவில்லை. அவர்களிடமிருக்கு நல்ல அம்சங்களைத் தொட்டு வரையறுத்துக் காட்டுகிறார். கடுமையான விமர்சனம் அடுத்த தலைமுறையின் பொறுப்பெனக் கருதுகிறார். அதுவே நல்லதும் கூட. அவரது சொல்லில் சொன்னால், அவரது கை எடை கூடி விட்டது. அவர் இப்போது ஒருவரைத் தாக்கினால் அவரது இடம் தீவிர இலக்கியத்துக்கு அப்பால் தூக்கி எறியப்பட்டு விடும். அல்லது அது அந்த இளம் படைப்பாளிக்கு அது கசப்பையும் தன்னழிவையும் ஏற்படுத்தி விடக்கூடும். ஆகவே அதில் கவனமாக இருக்கிறார். இளங்கோவிற்கு இலக்கிய நுண்ணுணர்வு வாய்க்கவில்லை என அவர் எழுதியது இளங்கோவின் ஆணவத்தை புண்படுத்தி சீண்டியிருப்பதையே அவருடைய எழுத்துகளில் வாசிக்க முடிகிறது. தன்னை அவர் முன்வைக்காமல் இருப்பதை ஒரு அடைவெனக் கருதுகிறார். தனக்கு அந்த ‘முத்திரை’ வேண்டாம் என நினைக்கிறார். ஜெயமோகன் எப்பொழுதும் தன் அழகியல் கோணம் சார்ந்தவர்களை மட்டும் முன்வைப்பதில்லை. பலதரப்பட்டவர்களும் அவரால் முன்வைக்கப்பட்டிருக்கிறார்கள். மேலே அப்படிச் சொன்ன பொன்முகலி கூட அவரது தளத்தில் முன்வைக்கப்பட்டிருக்கிறார். அப்படி முன்வைத்ததால் அவர் படைப்பாளி இல்லையென ஆகிவிடுவாரா? இல்லை. அல்லது இளங்கோ இப்படிக் கூப்பாடு போட்டு நடுரோட்டில் பிச்சையெடுக்கும் குழந்தை போல அழுது கொண்டு திரிவதால் அவர் படைப்பாளி ஆகிவிடுவாரா? இல்லை. அதற்கு சிலர் ஆறுதல் அளிப்பது போல “நீதான்ராப்பா ராசா எழுத்தாளன், என்ன மானவுணர்ச்சி, என்ன ஒரு திமிர், கெத்து..ப்ளா..ப்ளா..ப்ளா” எனச் சொல்வார்கள். கிடைக்கவே கிடைக்காத ஒன்று கிடைக்காமல் இருப்பதைப் பற்றி சிறு வயதிலேயே ஒரு கதை நமக்குச் சொல்லப்படுவதுண்டு. அவ்வளவு எளிய சிக்கல் இது. சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்!
அதைத்தவிர முகநூலில் இத்தகைய ஜெயமோகன் எதிர்ப்பு மனநிலை, அதிலிருந்து அடையும் கும்பல் கத்தல்கள் வழமையானவை. நீங்கள் அவற்றை புதிதாக அறிவதால் புதினமாக இருக்கும். அவற்றை நீங்கள் கடந்து வர வேண்டும். தமிழ் உருவாக்கிய முதன்மையான எழுத்தாளர் ஜெயமோகன் தான் என்பது நான் நேதி நேதி நேதியென அவரை மறுத்து வந்து கண்டடைந்த மதிப்பீடு. ஏறத்தாழ அவரது பெரும்பாலான படைப்புகளையும் விமர்சனங்களையும் செயற்களப் பங்களிப்புகளையும் ஒட்டுமொத்தமாகத் தொகுத்தே அதை முன்வைக்கிறேன். எவரொருவரையும் ஒற்றை வரிச் செய்திகளுக்கு அப்பால், எதிர்மறை விமர்சனங்களுக்கு அப்பால் புரிந்து கொள்ளும் நுண்திறனை இலக்கியம் அளிக்கும். நீங்கள் ஆய்வு மாணவர். உங்களுக்குரிய கருவிகளைக் கடந்து இலக்கியம் கோரும் நுண்ணுணர்வை வளர்க்க வேண்டியவர்.
தீவிர இலக்கிய வாசிப்பிற்கு வரும் இளையோர் முதன்மையாக எதிர்கொள்வது இத்தகைய முகநூல் மொண்ணைத்தனங்களையே. அதற்கு வெளியே அவர்கள் சென்று நேரடியாகப் படைப்புகளை வாசிப்பதில்லை. வாசித்தாலும் அதை உரையாடும் சுற்றம் அமைவதில்லை. இலக்கியத்தில் சுற்றத்தின் தேவை கருதியே மேலே நீங்கள் சொன்ன தரப்புகளும் முகநூலில் குந்தியிருக்கிறார்கள். அதற்கு வெளியே சுற்றத்தை தீவிரமாக உருவாக்கிக் கொள்ளாதவர்கள் இலக்கியத்தை அறியவோ படைக்கவோ இனி முடியாது என்பதைத் தான் நான் பார்க்கிறேன். இரண்டே தேர்வு தான் இருக்கிறது. ஒன்று, முகநூலில் சல்லியடித்து எதையாவது ஒன்றை ஒப்பேற்றி நானும் இலக்கியவாதி தான் என புட்டம் பொங்கச் சிரித்துக் கொள்ளலாம். இரண்டாவது, முகநூலுக்கு வெளியே சுற்றத்தையும் களங்களையும் உருவாக்கி அதில் விவாதித்து, புண்பட்டு, மேலெழுந்து, தன்னைத் தான் கண்டடைந்து பெரும்படைப்பாளியெனத் தன் கனவை விரித்துக் கொள்ளலாம். இதில் தேர்வு அவரவர் நிலைப்பட்டது.
நாங்கள் ஒரு சிறிய வட்ஸ் அப் குழுவை உருவாக்கியிருக்கிறோம். ஒரு பத்துப் பேர் கொண்ட குழு. பெயர், தீவிர இலக்கியப் படை. அதில் அன்றாடம் எதையாவது தீவிர இலக்கியம் சார்ந்து பகிர்வதும் உரையாடுவதும் நிகழ்கிறது. அடுத்த தலைமுறை ஈழத்தில் உருவாகத் தொடங்கி விட்டது. அவர்களின் வாசிப்புத் தீவிரம் திகைக்க வைப்பது. சொந்தப் பார்வைகளும் கூருணர்வும் கொண்டவர்கள். ஆனால் அது ஒரு அமைப்பல்ல. ஒரு இலக்கியச் சுற்றம் மட்டும் தான். ஏனெனில் இன்று தீவிர இலக்கியத்திற்கு வரும் இளைஞர்களில் பலர் முகநூலில் இல்லை. முகநூலே செல்லாதவர்கள் கூட உண்டு. அவர்களே நம் சுற்றம். அடுத்த தலைமுறை வாசகர்களும் படைப்பாளிகளுமாக மேலெழும் உள உறுதியும் நம்பிக்கையும் கொண்டவர்கள். அத்தகைய பத்துப் பேருக்கே நான் எழுதுகிறேன்.
தர்மு பிரசாத்திடம் இக்குழு பற்றி இக்கடிதத்தில் எழுதி இணைய விரும்புபவர்களை அழைக்கப் போகிறேன் எனச் சொன்னேன். அவர் உடனடியாக “சரி பாஸ். ஆனால் ஒரு எக்ஸாம் வைக்க வேண்டும். தீவிர இலக்கியம் பற்றி பத்துக் கேள்விகள், ஒவ்வொருவருக்கும் தனித்தனிப் பேப்பர். எழுதி Pass என்றால் சேர்ப்போம்” என்றார். கேள்வித் தாளையும் உற்சாகமாகத் தயாரிக்கத் தொடங்கி விட்டார்.
ஆகவே நண்பரே, இலக்கியம் இனி பழங்காலத்தைப் போல எதையாவது ஒப்பேற்றி, நாலு கூட்டம் வைத்து, நாலு மதிப்புரை வந்தால் எழுத்தாளர் எனும் காலம் ஒழிந்து போய்விட்டது. இது ஜெயமோகன் காலம். பெரும்படைப்பாளிகளென தமிழ் இளம் தலைமுறை தன் முன்னவனைப் போல கனவு கொள்ள வேண்டியது. அன்றாடம் அகலாத ஊக்கமும் தீவிரமும் கொண்டது. அதற்கு உங்களை வரவேற்கிறேன். தீவிர இலக்கியப் படையில் இணைய விரும்புபவர்கள் என் வட்ஸ் அப் இலக்கத்திற்கு மெசேஜ் அனுப்புங்கள். பெரும்படைப்பாளி கவனம் கொள்ள வேண்டியது காலங்களைக் கடந்து எழுந்து நிற்கும் இலக்கியம் எனும் பெருந்தெய்வத்தினை மட்டும் தான். அது கோரும் பலியை மட்டும் தான். மிகுதி அத்தனையும் மயிரனைய.
கிரிசாந்
வட்ஸ் அப் இலக்கம் : +94 775889397
*
பித்தம் தெளிய வைத்தல் – கிரிசாந்
முளைத்தலெனும் தொடர் – ஜெயமோகன்
மொழி நடை இன்றைய அறைகூவல் – ஜெயமோகன்
கண்ணாடிக்கு அப்பாலும் இப்பாலும் – கிரிசாந்

