வினாத்தாள் கசிவா?

தீவிர இலக்கியப் படையில் இளம் எழுத்தாளர்களையும் வாசகர்களையும் இணைப்பதற்கான தேர்வு வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் கசிந்திருப்பதாக நண்பரொருவர் அனுப்பியிருந்தார். இந்தச் சமூகம் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை, இப்படி ஒரு பம்பாய் வெங்காயத்தை வினாத்தாளென இலக்கியத்தின் அரிவரி மாணவர் கூட எழுத மாட்டார்கள். கண்ணைத் திறந்து வைத்துக் காட்டினாலும் உலகைப் பார்க்க மாட்டேன் எனும் மடமை கொண்டிருந்தால் மாத்திரமே இப்படி ஒரு வினாத்தாளை உருவாக்க முடியும். கொஞ்சமாவது சென்சிபிலிட்டி இருக்க வேண்டும். 

அதிலும் குறிப்பாக இந்த வினாத்தாளை எழுதியிருப்பவர். ஒரு போலிப் பெண்ணியவாதி + முகநூல் இடதுசாரி. இப்படியொரு கொமினேசனில் எந்த மொழியிலாவது அறிவுபூர்வமான குரலொன்று எழுந்து பார்த்திருக்கிறீர்களா? இவ்வளவு பாமரத்தனம் வளர ஒருவர் முகநூலிலேயே தீக்கோழி தலையையென நுழைத்துக் கொண்டிருந்தால் மாத்திரமே சாத்தியம். சின்னச் சின்னப் பிள்ளைகளே இலக்கியம், சினிமா, வரலாறு, தத்துவம், செயற்களங்களென சாதனைகள் புரியத் தொடங்கி விட்டார்கள். முகநூல் சழக்கர்களுக்கோ அதன் அடியும் நுனியும் புரிவதில்லை. அதுசரி, மாமாங்கமாக இலக்கியம் எழுதுகிறேன் பேர்வழியென அலையும் நம் எழுத்தாளர்களின் இலக்கியப் புரிதலின் லட்சணமே சந்தி சிரிக்கிறது. 

அனேகமாக முற்போக்கு இலக்கியம், நவீனத்துவ இலக்கியம், பின் நவீனத்துவ இலக்கியம் என்ற சொற்களுடன் சேர்த்து ஈழத்து இலக்கியம் தமிழுக்குக் கொடுத்த கொடைகளாக எஸ். பொவின் நற்போக்கு இலக்கியத்திற்கு அடுத்த படியாக எஸ். பொவின் மாணவனெனச் சொல்லும் இளங்கோவும் பின்னர் சயந்தனும் சும்மா போக்கு இலக்கியமென ஒன்றை அளித்திருக்கிறார்கள். இலக்கியம் எனும் மலையின் அடிவாரத்தில் படுத்திருந்து வானத்தைப் பார்த்துக் கொண்டே அவ்வழியால் போவோர் வருவோருக்கு இலக்கியம் எழுதுவது சும்மா போக்கு இலக்கியம் எனப்படும். அவ்வகையில் ஈழத்து சும்மா போக்கு இலக்கியவாதிகள் மோகனதர்சினி எழுதி வெளியிட்டிருக்கும் வினாத்தாளினை பயிலலாம். 

நாங்கள் அழகியல் பள்ளியொன்றை துவக்கும் வேளையில், ஒழுங்காய் படிப்பு வராமல் வீட்டிலிருக்கும் பெண்ணொருத்தி குடிசைக் கைத்தொழிலாக ஒரு தீவிர இலக்கிய ரியூசன் செண்டரை உருவாக்குவது வரவேற்புக்குரியது. சிக்கலென்னவென்றால், தீவிர இலக்கியப் பரீட்சைக்கு நவீன தமிழ் இலக்கியத்தில் முன் மாதிரிகளே இல்லை. சிலபஸ் இல்லை. மாதிரி வினாத்தாள்களும் இல்லை. ஆகவே தன் தீக்கோழி அறிவிற்கு எட்டியபடி அந்த ரியூசன் ரீச்சர் ஒரு வினாத்தாளை கொடுத்திருக்கிறார். நம் அண்ணன்கள் சும்மா போக்கு இலக்கியத்தை தமிழுக்கு நல்கியதைப் போலவே இளவல்களான நாங்கள் தான் தீவிர இலக்கியத்திற்கான முதல் பரீட்சை நெறிமுறையை உண்டாக்கியிருக்கிறோம். ஆனால் எங்கள் குழுவிலிருந்து வினாத்தாள் கசிவெல்லாம் இந்தக் கலியுகத்தில் வாய்ப்பேயில்லை. போலி வினாத்தாள்களைக் கண்டு ஏமாந்து, புதிய ரியூசன் ரீச்சர்களைக் கண்டு அலமலந்து திரியாமல் தீவிர இலக்கியத்தை வாசியுங்கள். கம்பனை வள்ளுவனை சாத்தனாரை பாரதியை புதுமைப்பித்தனை கு. அழகிரிசாமியை சுந்தர ராமசாமியை ஜெயமோகனை, இன்னும் பெரு நிரையென நீண்டிருக்கும் உங்கள் முன்னோடிகளை வாசியுங்கள். தாஸ்தவேஸ்கியும் டோல்ஸ்டோயும் தாமஸ் மன்னும் அன்ரன் செக்கோவும் நம் தொட்டப்பாக்கள் என்பதை உணருங்கள். 

எளிமையான இத்தகைய மடார் வினாத்தாள்களை பயிலாமல் நேரடியாகப் பரீட்சைக்கு விண்ணப்பியுங்கள். தீவிர இலக்கியத்தில் உங்கள் சொந்த பதிலுக்கே எந்த நிலையிலும் முக்கியத்துவமிருக்கும். அதை எந்த ரீச்சரும் ஏற்கனெவே சொல்லித்தர முடியாது. 

கசிந்ததாகச் சொல்லப்படும் வினாத்தாள் கீழே தரப்பட்டுள்ளது. 

*

தீவிர இலக்கியப் படை:  

வாட்ஸ் குழுவில் இணைத்துக் கொள்வதற்கான  நுழைவுத் தேர்வு ; மாதிரி வினாத்தாள் 

நேரம்: ஆசானின் பதினாறு ஆண்டுகள்

மதிப்பெண்: உணர்கொம்பு அளவில்

அறிவுரை: ஆய்வுக் கருவிகள், ஆதாரங்கள், தர்க்கம் ஆகியவற்றை உள்ளே கொண்டுவரக் கூடாது. கொண்டுவந்தால் அவை “கடந்து செல்லப்படும்”.

1. “இலக்கியம் ஒரு பெருந்தெய்வம்; அது கோரும் பலியை மட்டுமே கவனிக்க வேண்டும்” என்றால், இக்கோயிலில் பூசாரி யார், பலி ஆடு யார்?

(அ) பூசாரி ஆசான், பலி ஆடு கேள்வி கேட்கும் வாசகர்

(ஆ) பூசாரி சீடர், பலி ஆடு “இலக்கியப் பாமரர்”

(இ) தெய்வம் பேசாது, பூசாரிகள் மட்டுமே பேசுவார்கள்

2. நாட்டுப்பிரச்சினை, சாதி, இடப்பெயர்வு பற்றிய கதைகளை “அரசியல் சரிநிலைகளின் கொத்து” என்று ஒதுக்கலாம். அப்படியானால் எந்தக் கதையில் அரசியல் இல்லை?

(அ) ஆசான் எழுதியவற்றில்

(ஆ) ஆசான் பாராட்டியவற்றில்

(இ) எதிலும் இல்லை என்று சொல்வதே ஓர் அரசியல்

3. “வாழ்க்கை முகநூலுக்கு வெளியே நிகழ்கிறது” என்றால்,  ஒடுக்கப்பட்டவர்கள் (சாதி, பால்நிலை, மதம், வர்க்கம்) தம் வாழ்க்கையை எழுத எங்கே செல்ல வேண்டும்?

(அ) ஆசானின் பட்டியலுக்கு

(ஆ) வாட்ஸ்அப் “படை”யின் தேர்வறைக்கு

(இ) எங்கும் செல்லக் கூடாது; அவர்கள் “மிகுதி”

4. குருவுக்குக் காணிக்கையாக ஒருவரின் கட்டைவிரலையே கேட்ட கதை நமக்குத் தெரியும். இன்றைய “இலக்கியம் கோரும் பலி”க்கும் அதற்கும் என்ன தொடர்பு?

(அ) தொடர்பே இல்லை, இப்போது கேட்கப்படுவது விரலல்ல, கேள்வி

(ஆ) தொடர்பு உண்டு, ஆனால் இதைச் சொன்னால் “அரசியல் சரிநிலை”

(இ) தொடர்பு உண்டு; ஏகலைவனுக்குத்தான் தேர்வு வைக்கப்பட்டது

5. ஆசானின் அரசியல் கட்டுரைகள் இந்துத்துவச் சார்புடையவை என்று விமர்சகர்கள் சுட்டுகிறார்கள். “அரசியல் வேறு, இலக்கியம் வேறு” என்று சொல்லும் சீடர்கள் இதை எவ்வாறு கையாள்வார்கள்?

(அ) விமர்சகர்களின் அரசியல் “அரசியல் சரிநிலை”, ஆசானின் அரசியல் “இலக்கியத் தரிசனம்”

(ஆ) “நீ படைப்பை வாசிக்கவில்லை”

(இ) மேற்கூறிய இரண்டும், மூன்றாவது கேள்விக்கு முன்

6.  தேவதாசி முறையைச் சட்டப்படி தடை செய்தவர்கள் 1947-ல் இப்படித்தான் “அரட்டை” அடித்தார்கள். முத்துலட்சுமி ரெட்டி போன்றோரின் போராட்டத்தை எவ்வாறு அழைப்பது?

(அ) தவளைக் கூச்சல்

(ஆ) சமூக சீர்திருத்தம்

(இ) உணர்கொம்பு இல்லாதவர்களின் அபிப்பிராய உதிர்ப்பு

7. நாள் முழுதும்  உழைத்துவிட்டு இரவு முகநூலில் தம் வாழ்க்கையை எழுதுபவர் எழுத்தாளராக முடியுமா?

(அ) முடியாது, ஆசானின் பட்டியலில் இல்லை

(ஆ) முடியாது, வாட்ஸ்அப் தேர்வில் தேறவில்லை

(இ) முடியும், ஆனால் “தவளை” என்ற பட்டத்துடன்

8. ஒரு கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் “நுழைவுத் தேர்வு” வைக்கும் அமைப்பு எந்தச் சமூக அமைப்பை நினைவுபடுத்துகிறது?

(அ) வாசலில் “தகுதி” என்ற பெயரில் தேர்வு வைத்து, பல்லாயிரம் பேரை வெளியே நிறுத்தும் அமைப்பு

(ஆ) திறந்த நூலகம்

(இ) ஆசான் காலத்து குருகுலம்

9. இலக்கிய சண்டித்தனத்துக்கும் அரசியல் சண்டித்தனத்துக்கும் உள்ள வேறுபாடு என்ன?

(அ) முன்னது நுண்ணுணர்வு, பின்னது அதிகாரம்

(ஆ) முன்னதில் ஆசான், பின்னதில் தலைவன்

(இ) இரண்டும் ஒன்றே; இலக்கியத்தில் மட்டும் அதை “நுண்ணுணர்வு” என்பார்கள்.

10. ஆய்வுக் கருவிகளைக் கடந்து நுண்ணுணர்வை வளர்க்க வேண்டும்” என்ற அறிவுரைக்குப் பின்னால் இருக்கும் அறிவு எதிர்ப்பு எவ்வாறு பயன்படுகிறது?

(அ) “ஆதாரம் கேட்டால் உணர்கொம்பு இல்லை” என்று பதில் சொல்லிவிடலாம்

(ஆ) சமூக ஆய்வு, வரலாற்றாய்வு, அரசியல் பகுப்பாய்வு ஆகியவற்றை இலக்கியத்துக்கு வெளியே துரத்தலாம்

(இ) இரண்டும்; 

பயன்பாடு பாதுகாப்பானது, ஆசானின் அரசியலுக்கும் சேர்த்து

11. தான் சொல்வது விமர்சனம், பிறர் சொல்வது வெறுப்பு என்று வகைப்படுத்தும் அதிகாரம் யாரிடம் இருக்கிறது?

(அ) தீவிர இலக்கிய வாட்ஸ்அப் குழு அட்மினின் ஆசானிடம்

(ஆ) அதே அட்மினுக்கு கூடுதலாகக் கிடைத்த “உணர்கொம்பு” என்ற உரிமமுள்ள சிலரிடம்

(இ) வாசகர்களிடமும் சமூகத்திடமும்; ஆனால் இது தேர்வில் வராத விடை.

12. ஆசானின் பொது அரசியலை விமர்சிப்பவர்களை “இலக்கியத்துக்கு எதிரானவர்கள்” என்று சித்திரிப்பது எந்த வகை அரசியல் உத்தி?

(அ) விமர்சனத்தையே தேசத்துரோகம்போலச் சித்திரிக்கும் அதிகார மரபின் இலக்கிய வடிவம்

(ஆ) “நம் ஆள்” – “எதிரி” என்ற பிரிவினையை உருவாக்கும் உத்தி

(இ) இரண்டும்; ஆனால் இவற்றை அடையாளம் காணும் உணர்கொம்பு ஆய்வு மாணவர்களிடம்தான் உள்ளது.

13. ஆசானின் அரசியல் பற்றியோ, அவரது தேவதாசிக் கருத்துப் பற்றியோ ஒரு கேள்வி கேட்கப்பட்டால், அதற்கு உடனடியாகச் சொல்ல வேண்டிய மூன்று பதில்கள் எவை?

(அ) “அது அரட்டை”

(ஆ) “நீ படைப்பைப் படிக்கவில்லை”

(இ) “உன் உணர்கொம்பை வளர்த்துக்கொள்”

14. எதையாவது ஒப்பேற்றி, நாலு கூட்டம் வைத்து, நாலு மதிப்புரை வந்தால் எழுத்தாளர்” என்ற காலம் ஒழிந்துவிட்டது. இனி எப்படி எழுத்தாளர் ஆவது?

(அ) ஐந்து கூட்டம், ஐந்து மதிப்புரை

(ஆ) வாட்ஸ்அப் குழுவில் தேர்வு எழுதிச் சேர்ந்து

(இ) ஆசானின் பட்டியலில் இடம்பெற்று

மூன்றுக்கும் உள்ள வேறுபாட்டைப் பத்து வரிகளில் எழுதுக.

15. முகநூல் விவாதங்கள் அரட்டைகள்” என்று எழுதிய பதிவு அதே முகநூலில் பகிரப்படுகிறது. எது சரி?

(அ) தவளையை விமர்சிக்கத் தவளையின் குளத்திலேயே கத்த வேண்டும்

(ஆ) எங்கள் தவளை வேறு, உங்கள் தவளை வேறு

(இ) இரண்டும், எப்படியும் நாங்கள்தாம் சரி

ஆக்கியவர் : மோகன தர்சினி (முகநூலாளர்) 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *