வணிகத்திற்கும் அறமும் வாழ்க்கை நோக்கும் அடிப்படையானது. வணிக சினிமாவின் வளர்ச்சி வெகுசனக் கருத்துகளை தீவிரக் கலைகளிலிருந்து பெற்று விரித்தெடுப்பது. வெகுசனக் கலைகள் வாழ்க்கையை அப்படியே பிரதிபலிப்பவை அல்ல. அதிலிருந்து தேர்ந்தெடுத்த ஒரு சாராம்சமான கதையைப் பின்னியெடுக்கின்றன. கூடை முடைவது என்ற உவமை இலக்கியத்தில் உண்டு. ஒரு நாவலை எழுதி செம்மையாக்கம் செய்யும் பொழுது ஒவ்வொரு பகுதியாக முடைந்து, முடைந்து அதை இறுதியில் இறுக்கி இறுக்கிச் செறிவாக்குவதை அப்படிச் சொல்வார்கள். சினிமாவில் ஸ்கிரிப்டை அப்படிக் கூடை முடைவது போலச் செம்மையாக முறுக்கி செறிவாக்குவது அதன் இறுதி வடிவைச் செம்மையாகவும் செறிவாகவும் உருவாக்க உதவும். ஸ்கிரிப்டில் நிகழாத மாயம் படத்தை எடுக்கும் பொழுது உருவாக முடியாது. ஈழத்து சினிமாவை விமர்சிக்கும் பொழுது இந்த அடிப்படைகளைக் கவனத்தில் எடுத்தே எழுதி வருகிறேன்.
‘போராட்டம்’திரைப்படம் சிவராஜின் இயக்கத்தில் வெளியாகியிருக்கிறது. சிவராஜ் என் மனதுக்கு நெருக்கமான இயக்குனர். அவரது வளர்ச்சியும் வெற்றியும் ஒரு சகோதரனைப் போல நான் கொண்டாடக் கூடியது. இனிமையும் நல்லியல்புகளும் கொண்ட மனிதன் சிவராஜ். அதே நேரம் வணிக சினிமாவுக்கான புரிதலும் நீண்ட உழைப்பும் தீவிரமும் தொடர் ஊக்கமும் அதில் படிப்படியான முன்னேற்றங்களையும் அடைந்திருப்பவர். இன்று அவர் அடைந்திருக்கும் உச்சமான இடமென்பது அவர் ஒவ்வொரு அடியாக உழைத்து உருவாக்கிக் கொண்டது என்பதை அறிவேன். அவரது கனவுடன் சேர்த்து ஒரு சினிமாச் சூழல் இங்கு உருவாகியிருப்பது அவருடைய முக்கியமான பங்களிப்பு. அவருடைய இதுவரையான படங்கள் (தீப்பந்தம் தவிர) அனைத்தையும் பார்த்திருக்கிறேன். சிவராஜின் சினிமாக் கலையை தொகுத்துச் சொல்வதானால் சிவராஜ் ஒரு திறமையான பொம்மலாட்டக்காரன். கதைப்பின்னலையும் கதாபாத்திரங்களையும் தன் விரல்களில் நீளும் நூலின் வழியாக திறமையாக ஆட்டுவித்து ஒரு நிகழ்த்து கலையை ஆக்கக் கூடியவர். அது ஈற்றில் ஒரு நிறைவுணர்வை அளிக்கத்தக்கதாக ஆகியிருக்கும்.
போராட்டம் திரைப்படம் இப்போது வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. ஈழத்தில் சினிமா வணிக நோக்கில் பெரும் வெற்றிகளை அடைவது சாத்தியமின்மையிலிருந்து சாத்தியத்தை நோக்கி நகரும் காலம். இந்தப் படத்தின் பட்ஜெட்டும் விநியோகமும் அளவில் பெரியது. என்னுடைய கருத்துகள் தீவிரமான இலக்கியம் சார்ந்த நோக்கிலிருந்து உருவாவது. விமர்சனங்கள் இப்படத்தின் வணிகத்தை பாதிக்கும் எல்லையை சிவராஜ் கடந்து விட்டார். அந்த அடிப்படையிலேயே என் கருத்துகளை தொகுத்துச் சொல்கிறேன்.

படத்தின் கதைக்கு அப்பால் சிலவற்றைச் சுட்டிக் காட்ட வேண்டும். எந்தவொரு கலையும் அதன் வெற்றியை அது தாங்கிப் பிடித்திருக்கும் அரசியல் கொள்கையால் அடைவதில்லை. அப்படி அடைந்தாலும் அது தற்காலிகமானது. மார்க்சியமோ தமிழ்த்தேசியமோ சிங்களத் தேசியமோ, எதுவானாலும் அது தான் நிலமை. ‘என்னுடையது’ என ஒருவர் உருவாக்கிக் கொள்ளும் அல்லது முன் வைக்கும் அரசியல் கொள்கையொன்று கலைக்கு அவசியமற்றது. அது அடிப்படையில் ஒரு பார்வைக் குழறுபடியை உருவாக்கும். தன்னுடையது – பிறருடையது எனும் இருமையின் மேல் தன்னைக் கட்டிக் கொள்ளும். சிவராஜ் தமிழ் மக்களின் வாழ்க்கையை காட்டுவது வேறு, தமிழ்த்தேசிய நிறங்களையும், அதை ஒரு மொத்தக் குரலாகவும் சித்தரிப்பது வேறு. சிவராஜின் முன்னைய படங்களில் வாழ்க்கையிலிருந்து எழும் கதைக்கு உண்டான விசை இருக்கிறது. இக்கதை இரண்டு பெரிய பெயிண்ட் வாளியை அள்ளி சிவப்பு மஞ்சள் கொடியாக ஊற்றியிருக்கிறது. கலைக்கு வாழ்க்கை தான் எல்லாமுமே. வாழ்க்கையை விட எதுவும் பெரியதும் அல்ல எனும் நோக்கிலிருந்து உருவாகுவது.
அரசியல் கொள்கைகளின் சார்புநிலைகளின் மோதலாக ஒரு கதை உருவாகி வருவது முக்கியமானது. அதற்கு ஒரு புட்போல் கிரவுண்டின் நடுவில் நின்று கொண்டிருக்கும் ஒரு நடுவரைப் போன்ற சாய்வுத் தளங்கள் அற்ற வெளி வேண்டும். இரண்டு அணிக்கும் அவர் சாதகமாகச் செயற்பட முடியாது. கூட்டத்திலிருக்கும் பார்வையாளர்களின் விருப்பத்திற்கு செவிசாய்க்க முடியாது. தனது சொந்த விருப்ப அணியெனக் கூட ஒன்றை எடுத்துக் கொள்ளக் கூடாது. பாரபட்சமற்ற நடுநிலையே நீதியென இருப்பது போல அவர் செயல்பட வேண்டும். அத்தகைய நிலையிலிருந்து நோக்கும் சமநிலையே ஒரு படைப்பை அத்தனை தீவிரத்தை தாங்கும் சமநிலை அச்சாக ஒரு படைப்பாளியை நிற்க வைக்கும். அதற்கு வரலாற்றின் மீதான வாசிப்புத் தேவை. மனித வாழ்க்கையைக் கொள்கைகளும் கோட்பாடுகளும் நிலைப்பாடுகளும் எப்படி உருமாற்றி அளிக்கின்றன என்ற பரிமாணத்தை நோக்கும் நிலை அறியப்பட வேண்டும். அங்கிருந்தே அடுத்த கட்ட ஈழத்து சினிமா உருவாகி வரும்.
இவற்றைச் சொல்லும் பொழுது ‘நிசப்த நடனம்’ எனும் ஈழத்துச் சினிமா நினைவுக்கு வருகிறது. பிரதீபன் ரவீந்திரன் என்பவர் இயக்குனர். இதுவரை ஈழம் உருவாக்கிய முதன்மையான கலைப்படைப்பு அது தான். மனித வாழ்க்கையிலிருந்து அது வரலாற்றை உசாவுகிறது. அந்தத் தன்னிலை முக்கியமானது.

போராட்டம் திரைப்படம் போதைப்பொருள் வணிகம் ஒரு கடற்கரையோர நகரத்தில் பரவி அதன் வாழ்க்கையை உருமாற்றுவதையும் அதற்கு மாற்றாக அவர்களிடம் நீண்டகாலமாக இருந்து வரும் உக்கிரமான உதைபந்தாட்டக் கலாசாரத்தை முன்வைப்பதாகவும் இருக்கிறது எனச் சுருக்கமாகச் சொல்லலாம். சிவராஜின் படங்களின் பொதுத்தன்மை அது. ஒரு சமூகச் சிக்கலை எடுத்து அதைச் சுற்றி கதையைப் பின்னியெடுப்பார். அது வணிகமாகவும் நன்னோக்காகவும் முக்கியமானது. வணிகத்தின் அறமெனவும் வாழ்க்கை நோக்கெனவும் அதைத் தான் சுட்டினேன்.
படத்தின் சாதகமான அம்சங்களை முதலில் தொகுக்கிறேன். மையக் கதாபாத்திரத்திரத்திற்கு வெளியே துணை கதாபாத்திரங்களின் சிறப்பான நடிப்பும் சித்தரிப்பும் வெகுவாகக் கவர்ந்தது. முக்கியமாக காக்கா – ராஜியின் கதைப்பகுதியில் நடிப்பில் சிந்தரும் மிதுனாவும் மிகச் சிறப்பாக நடித்திருந்தனர். ஒரு துளி விஷமும் நஞ்சும் கொண்ட பாத்திரங்களையும் அதன் அலைக்கழிப்பையும் வெகு நேர்த்தியாக திரையில் கொண்டு வந்திருந்தனர். இருவரதும் திரைப்பயணத்தையும் கூட தொலைவில் இருந்து அவதானித்திருக்கிறேன். அவர்களது நெருக்கடியானதும் தீவிரமானதுமான வாழ்வும் உழைப்பும் இந்தப் படத்திற்கு செழுமையை அளித்திருக்கிறது. சிறப்பான பாத்திரத் தேர்வுகள்.
மிதுனாவின் பாத்திரம் போதை உலகில் முக்கியமானது. கணவனும் மனைவியுமாக போதைப் பொருட்களை விற்கும் பொழுது பெண் அடையும் நெருக்கடிகள் ஆணை விட வித்தியாசமானவை. அவை பெண் என்பதனாலேயே நிகழ்பவை. அந்தக் கீற்று படத்தில் துல்லியமாக விழுந்து சென்றிருக்கிறது. சிந்தருக்கு நடிப்பில் உள்ள பழக்கமும் பயிற்சியும் அவரை ‘கதாபாத்திரமாக’ திரையில் நிறைத்திருக்கிறது. இருவருக்கும் வாழ்த்துகள்.
அடுத்து அண்ணனும் தம்பியுமாக வரும் முக்காலாவும் ஒஸ்ட்டினும். இருவரதும் முகங்கள் திரையில் சலிக்கவில்லை. இருவரதும் கதைப்பகுதியும் கூட நுட்பமாக வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது.
சபிலின் வழக்கமான திரைப் பிரசன்னம் மகிழ்ச்சியானது. அவரது இயல்பான பேச்சுவழக்கும் உடல் மொழியும் நகைச்சுவையை உருவாக்குவது. இந்தப் படத்தில் அது சில இடங்களிலேயே நகைச்சுவையாக இருந்தது. பெரும்பாலும் அவரது கதாபாத்திரம் துல்லியமாக உருவாகி வராததன் குறையாக இருக்கலாம்.
இசையைப் பொறுத்த வரையில் சில இடங்களில் பார்வையை இடைவெட்டாது இருந்தாலும் பெருமளவுக்கு என்னைக் கவரவில்லை. பாடல்களில் ஈர்ப்பும் இருக்கவில்லை. வழக்கமான வணிக சினிமாக்கள் கூட இசையை நுட்பமாகவும் உற்சாகமாகவும் கையாளத் தொடங்கி விட்டன. மதீசனின் இசை அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டியிருக்கிறது. வாகீசனின் குரல் மட்டும் அரங்கில் தன் தனித்திறனால் ஒலித்திருப்பது போலிருந்தது. அவரது குரலின் வசீகரம் படத்திற்கு வேறொரு அடுக்கை அளித்தது. கோகிலாவின் குரலும் வேறொரு பரிமாணத்தை அளித்தது.
படத்தின் பின் பகுதி ஓரளவு இறுக்கமும் செறிவாகவுமாக நகர்ந்திருந்தது. சிவராஜின் கண்ணினால் நிகழும் காட்சிகளையே நாம் திரையனுபவமாக பெறுகிறோம். இந்தப் படத்தில் முன்னையவற்றை விடச் சற்று இறங்கியே காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன. பிரமாண்டமான காட்சிகள் நிறைய இருந்தன. ஆனால் அவற்றைக் கொண்டு காட்சிப்படுத்தியிருக்கக் கூடியதை அள்ள முடியாதது போல கமெரா நகர்ந்து கொண்டிருந்தது.
குருநகர் மக்களின் வாழ்க்கை, நிலம், கலாசாரம், மனிதர்கள் ஓரளவு கதையில் பதிவாகியிருப்பதும் முக்கியமானது. பல்வேறு நிலக்களங்கள் இப்படி திறக்கப்படுவது பாராட்டுக்குரியது. ஆனால் நுணுக்கமற்ற வாழ்க்கைச் சித்தரிப்பு சலிப்பை அளித்தது. குருநகரில் தங்கம் கடை மாட்டுக் கொத்து பிரபலம். படத்தில் ஆட்டுக்கறிக்கு பாட்டுப் பாடுகிறார்கள். மாடு ஒரு அரசியல், கலாசாரக் குறியீடு. அதை கதை இழந்திருக்கிறது. அந்த நிலத்தின் இளைஞர்களின் உடை, பேச்சு வழக்கு ஒரு நகரத்து இளைஞனைப் போலிருக்கிறது. கடற்புறம் முற்றிலும் வேறான கலாசாரப் பின்னணி கொண்டது. அதன் தீற்றல்கள் கதையில் இல்லை. அல்லது பின்னணியில் நிழலாக வந்து கரைகிறது. புதிதாகத் திறக்கும் நிலங்களின் வாழ்க்கை முறையை நன்கு அவதானித்து உள்வாங்கி அதை மேம்படுத்தி கதையாக்க வேண்டும்.
இனி படத்தின் சில சிக்கல்களை தொகுக்கிறேன். பெரும்பாலான கதாபாத்திரங்கள் இயன்றவரை நடித்திருந்தாலும் பெருமளமானவர்களிடம் ஒரு மிகை நாடகீயம் இருந்து கொண்டேயிருந்தது. அது நடிகர்களிடம் இருப்பதைப் போலவே திரைக்கதையின் கட்டமைப்பிலும் இருக்கிறது. உதாரணத்திற்கு, வில்லன் பாத்திரத்திற்கு உள்ள நிற வேறுபாடுகளைக் காட்டும் பகுதியில் அவரது முகபாவம் ஒவ்வொரு முறையும் முன்னர் சிரித்து பின்னர் கெட்டதாகவும் மாறவும். ஒரு முறை மாறுவது கூட தேவையற்றது, இயல்பாகவே அவரது செயல்கள் அந்த அதிர்ச்சியை மாறுபாட்டை தொற்ற வைத்திருக்கும். ஆனால் அந்த நச்சு முகபாவம் அதை ஒரு நாடகத்தில் நடிப்பது போல துலக்கமாகக் காட்டுவது சலிப்பை ஏற்படுத்தியது. இன்னொரு உதாரணம், மில்லரின் அக்காவின் கணவர், நிலையற்ற மனம் கொண்டவர் என்பதைக் காட்ட கண்களை நிலையில்லாமல் உருட்டிக் கொண்டிருப்பார். மீண்டும் அதே மிகை. ஒரு சந்தர்ப்பமோ துல்லியமான ஒரு காட்சியிலோ அதைக் காட்டியிருக்கலாம். தாய் அழும் காட்சியில் விறைத்த கண்களைக் கடந்து கண்ணீர் வருவது செயற்கையாக இருந்தது. இப்படி பல மிகை நாடகத் தருணங்கள் எதனால் வருகின்றன எனத் தெரியவில்லை. ஆனால் இது இயக்குனரின் கைக்கு அப்பாலானது அல்ல. அவரே அதைக் கையாண்டு இருக்க வேண்டியவர். வெற்றியோ தோல்வியோ, முடிவில் அவரே அதற்கு உரியவர்.

எண்ணங்களை மீள நினைத்துப் பார்க்கும் காட்சிகள் சில இடம்பெற்றிருந்தன. பத்து வயதுப் பிள்ளைக்கு கதை புரிகிறதா என திரும்பத் திரும்ப நினைவூட்டுவது போன்ற காட்சிகள் அவை. அவை இல்லாமலேயே கதையை தாவி நகர்த்தியிருக்க முடியும்.
இறுதியாக திரைக்கதையில் உள்ள பிரதானமான சிக்கல் இயக்குனர் நூலைக் கைவிட்டதென்று சுருக்கமாகச் சொல்லலாம். ஒரு திறமையான பொம்மலாட்டக்காரனின் நூல் அவன் கையை விட்டு நழுவி நழுவி சிக்குப்படுவது போன்றிருந்தது. முதல் பாதியின் தொய்வு இறுதிப் பகுதியை ஆழப்படுத்த முடியாமல் இருந்தது. கதாபாத்திரங்கள் அதிகளவில் வரும் பொழுது மையக்கதையோ பாத்திரமோ துலங்கி வரவில்லை. மில்லர் பாத்திரம் ஒரு உதைபந்து போல உதைக்கப்படுகிறதே ஒழிய அது மையமாக உருவாகி வரவில்லை. கதாநாயகனின் சிக்கல் அழுத்தமாக வரவில்லை என்பதால் கதை பிளவுபட்டு கிடக்கிறது. இது ஒருவகையான கேசவராஜா சிண்ட்ரோம். பனைமரக்காடு திரைப்படத்தின் முக்கியமான பிரச்சினை தமிழ் மக்களின் பிரச்சினையை பக்கம் பக்கமாக பேசி கதையை இழந்து அடிப்படையான உணர்வுத் தொற்றை ஏற்படுத்த தவறுவது. ஒரு மையச் சிக்கல் – ஒரு கதை தான் சினிமாவில் தொற்றை ஏற்படுத்தக் கூடியது. இக்கதையில் போதை பொருள் உலகின் நெருக்கடி, உதைபந்தின் அணிகளுக்கிடையிலான போட்டி, வெளிநாடுகளுக்கு களவாகக் கப்பலில் செல்லும் வாழ்க்கை, அரசியல் சிக்கல்கள், இனவாதச் சிக்கல்கள் என பல பிரச்சினைகளை அணுகியிருக்கிறது. அது கதையைச் சிதைக்கும். உள்ளோட்டத்தை அறுக்கும். வெட்டி வெட்டி வைத்த நூல் துண்டுகளாக்கும். அதுவே இறுதிப் பகுதியை செயற்கையான ஒரு எளிய கதை போல ஆக்கியிருக்கிறது. அவற்றுக்கிடையில் வெளிப்படாதவாறு கதையோட்டம் தீவிரமாக பின்னப்படவில்லை. ஒவ்வொரு பிரச்சினையையும் எடுத்து ஷோகேசில் அடுக்கி வைத்தது போலிருக்கிறது.
தமிழ் சினிமாவில் இந்தச் சிக்கல்களைக் கையாண்ட இரண்டு முக்கியமான படங்கள் சார்பட்டா பரம்பரை, வட சென்னை. அந்த நிலத்தின் காலகட்டத்தின் வாழ்க்கையை விரிவாகவே காட்சிப்படுத்தியிருப்பார்கள். ஆனால் அவை ஒவ்வொன்றும் செதுக்கி எடுக்கப்பட்ட காட்சித் துண்டுகள். மையக்கதாபாத்திரத்தின் வாழ்க்கைச் சிக்கலின் தொடக்கம், வீழ்ச்சி, எழுச்சியென சீரான வளர்ச்சியைக் காட்டுவது. வடசென்னையில் தனுசின் கதாபாத்திரம் ஒரு கரம்போர்ட் வீரன். அவன் எப்படி விளையாடுகிறான், எப்படி விளையாட்டு அங்கு நுழைகிறது, எதற்காக? அதன் பின்னர் அவன் வாழ்வை அங்கிருக்கும் பின்னணி எப்படி மாற்றுகிறது, அந்த வாழ்க்கையின் நுணுக்கங்கள், அன்றாடங்கள், வாழ்க்கைப் பார்வைகளின் மோதல், காதல் வாழ்க்கையைச் சொல்லும் பொழுது கூட பின்னணியில் நிகழும் அரசியல் சூழல், அங்கிருந்து வாழ்க்கை மாறுவது, எதிர்பாராத கொலை, அங்கிருந்து சிறை,
கரம்போர்ட் விளையாட்டு ஒரு கொலை நிகழ்வுக்கான தருணமாகும் இடம், அங்கிருந்து சுழன்று திரும்பும் வாழ்க்கை, இறுதியில் மையக் கதாபாத்திரம் ஊரின் சிக்கலை, அரச அதிகாரத்திற்கெதிராக மீண்டும் அறியும் இடம். வாழ்க்கையை தீர்மானிக்கும் அதிகாரத்திற்கெதிரானதும் மனித மனங்களுக்குள் வாழும் இருட்டிற்கு எதிரானதுமான போராட்டமாக மாறும் படமது. இத்தனை அம்சங்களிலும் சில மையச்சரடுகள் போராட்டம் படத்திலும் உண்டு. ஆனால் அவை அப்படி கண்ணுக்குத் தெரியாத இழைகளால் சரியாக பின்னப்பட்டு முடையப்படவில்லை.
சார்ப்பட்டா பரம்பரையில் விளையாட்டு, ஒரு தனிமனிதனின் வாழ்க்கையை எப்படி அரசியல், ஆணவ மோதல் களங்களுக்குள்ளால் தன் சொந்த ஞானத்தைக் கண்டடையும் இடமாக, எழுச்சி, வீழ்ச்சி, எழுச்சி எனும் தொடராக உருமாற்றிக் காட்டியிருக்கும். அந்தப் படத்தில் உள்ள விளையாட்டுத் தொடர்பாக திரண்ட தரிசனத்தின் சில வசனங்களை முற்பகுதியில் எளிமையான பின்னணியில் காட்டியிருக்கிறார்கள். வெற்றிமாறனும் ரஞ்சித்தும் தீவிர இலக்கிய வாசிப்பு பின்னணி கொண்டவர்கள். கதைகள் எப்படிப் பிணைகின்றன என்பதை உணர்ந்தவர்கள் என்பதை திரையில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
விளையாட்டு ஒரு மீட்பு. அதை வாழ்க்கையை விளக்கும் ஒரு கருவியாக எடுத்துக் கொண்டிருந்தால் போராட்டம் வென்றிருக்கும் வாய்ப்பிருக்கிறது. வாழ்க்கையின் நுணுக்கங்களை கைவிடும் பொழுது தட்டையான மேற்பரப்பு உருவாகும். ஒரு செய்தித் தாளின் முதற்பக்கச் செய்திகளை வாசிப்பது போல, அது ஒரு சிக்கல் இதுவொரு சிக்கலென பார்க்க வைக்கும். அவற்றுக்கு இடையில் உள்ள தொடர்பை பார்ப்பவர் அறியாது இணைப்பதே படைப்பின் வெற்றி. அது போராட்டத்தில் குலைந்து போயிருக்கிறது.
அனைத்துக்கும் மேலே என்னை உறுத்தும் கேள்வியொன்றுண்டு. படத்தின் தொடக்கம் முதலே தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை பற்றி சொல்லப்படுகிறது. மஞ்சள், சிவப்பு நிறத்தை அணிந்த விளையாட்டுக் குழு, ஊரடியிலும் கொடிகள் கட்டப்பட்டிருக்கின்றன. மையக் கதாபாத்திரத்தின் பெயர் மில்லர், இறந்த ஒரு உதைபந்து வீரனின் உடலை புலி பாயும் சிவப்பு மஞ்சள் அணியின் கொடி போர்த்தி வைத்திருக்கிறார்கள். மில்லரின் குடும்பத்திற்கு கடந்த கால விடுதலைப் போராட்டத்துடன் தொடர்புண்டு. இந்தப் பின்னணியில் தேசத்துக்காக விளையாடுவது ஊரின் கனவு என சொல்லப்படுகிறது. தேசமாக முன்னர் சொல்லப்படுவது தமிழீழமாக ஒருவர் கற்பிதம் செய்து கொள்ளலாம். குறியீடெனவும் நம்பலாம். ஆனால் அந்தத் தேசத்தின் குரலாக நாம் இலங்கைத் தேச அணியில் சேர்ந்து அங்கு வீரத்தமிழனாக நின்று குரல் கொடுக்கலாம் என கனவை வரையறுக்கலாம்.
ஆனால் இலங்கை உதைபந்து அணியில் இனவாதப் போக்கால் சேர முடியாத கதாநாயகன் கண்ணீர் விட்டு அழுகிறான். இதுவா தமிழ்த்தேசிய அரசியல் அடையும் இடம்? இலங்கை அணியில் விளையாடுவதற்காகவா இத்தனை போராட்டமும்? 2026 இல் நிகழும் கதையில் கடந்த காலம் ஒரு பூச்சைப் போல ஒட்டப்பட்டிருக்கிறது. அது ஒரு தீர்வை முன்மொழிகிறது. இலங்கைத் தேசத்தின் தேசிய அணியில் சேரும் தேசமற்ற ஒரு இளைஞனின் கதை என சொல்லலாம். ஆனால் அதற்கான ஏதாவது அரசியல் வரலாற்று புரிதல் படத்தில் விவாதிக்கப்படுகிறதா? காட்டப்படுகிறதா? இல்லை. நழுவுகிறது. மிக அடங்கிய தொனியில் அதை முணுமுணுக்கிறது. கதாநாயகன் அரசியலற்ற ஒரு வெறும் கோது. அவனுடைய புரிதல்கள் சாதாரணமானவை. காதலிக்கும் பெண் அண்ணனை ஏன் அடித்தாய் என உறுக்கிக் கேட்டால் அவளுக்கும் அடித்து அனுப்பும் ஒரு சாமானிய இளைஞன். வீட்டில் வருமானத்திற்கு என்ன செய்கிறார்கள் என அக்கறைப்படாதவன். அவனுக்கு அரசியல் உணர்வை ஊட்டக்கூடிய கதாபாத்திரங்கள் இரண்டு இருந்தன. அவை பயன்படுத்தப்படவில்லை. கதையின் ஆரம்பத்தில் வரும் குடிக் காட்சி. அல்லது ஐயா என ஊரார் அழைக்கும் ஒருவர். அவர் எந்தவகையில் ஊரில் முக்கியமானவர் என்றோ, அவரது ஆளுமையோ கதையில் ‘பதியும் அளவு’ காட்டப்படவில்லை. அவர் ஒரு பீடி ராயப்பனைப் போலவோ வாத்தியாரைப் போலவோ உருவாகியிருக்க வேண்டிய கதாபாத்திரம். ஆனால் மிக எளிமையாக அவரது ஆளுமை உருவாக்கப்பட்டிருக்கிறது.
இலங்கைத் தேசிய அணியில் முத்தையா முரளிதரன் போலத் தான் ஒருவரால் பேச முடியும். அது தான் நிலமை, நடைமுறை. அதை அறியாத அப்பாவிகள் அல்ல தமிழ் மக்கள். தீவிர தேசிய அரசியல் நிலைப்பாடும், உறுதியும் கொண்ட ஒரு குரல் அங்கு ஒலிக்க முடியாது என்பதே சிக்கல். தமிழ்நாட்டு சினிமாக்களில் வடக்கில் ஹிந்திக்காரர் தென்னகத்து வீரர்களை விளையாட அனுமதிப்பதில்லை என்றொரு டெம்ளெட் இருக்கிறது. வடக்கு மேலாதிக்கமாக அதைக் காட்டுவார்கள். அதை மீறி எழுவது கதாநாயகத்தனம். ஆனால் ஈழத்தின் சிக்கலும் பரிமாணமும் வேறானது. அந்த டெம்பிளெட் இங்கு செல்லுபடியாகாது. அரசியல் கொள்கைகளை பூசிக் கொள்வதின் பிரதானமான சிக்கல் இது தான். கோலை எந்தப் பக்கம் அடித்தாலும் தோல்வி தான். வாழ்க்கையையும் இலக்கியத்தையும் அரசியலையும் இன்னும் ஆழாமாகப் பயின்று முன்னேறியே ஈழத்துச் சினிமா தன் குரலின் சுரத்தை அடைய முடியும். தன் சொந்த வரலாற்றை விரிவாகவும் நுணுக்கமாகவும் கற்காமல் தீவிர இலக்கியத்தைப் பயிலாமல் அந்த நுண்மை உருவாகாது. சினிமாவை வைத்தல்ல சினிமா எடுப்பது. வாழ்க்கையும் வாசிப்பும் அளிக்கும் திரையனுபவமே சினிமா.

