“ஒவ்வொரு தனிமனிதனும் தனி ‘உலகம்’. இந்த உலகங்களையெல்லாம் ஒருகுடையின்கீழ் கொண்டுவருவதும், சிந்தனையை ஒழுங்கமைக்க முயற்சிப்பதும் இந்த தொழில்நுட்ப யுகத்தில் மாற்றமுற வேண்டிய சிந்தனை. பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய வரலாற்று நிகழ்வுகளாக இவற்றை கொண்டாட வேண்டிய தேவையும் இல்லை.இகழவேண்டிய அவசியமும் இல்லை. குறைந்தபட்சம் இலங்கையின் தமிழ் அரசர் வரலாற்றைக் கூட பாடப்புத்தகங்களில் பதிக்க முடியாத ஏதிலிகள், காத்திரமான படைப்புகளை அனுப்பியாவது இருத்தலை காட்ட வேண்டாமா?
அதேநேரம் எதிர்காலம், காத்திரமான இலக்கியம் என்பதைக்கூட தேடுபொறியில் தேடியவரின், வார்த்தையின் மொத்த எண்ணிக்கையின் ஊடாகத் தான் தீர்மானிக்கப்போகிறது.
இலங்கை இலக்கியம் கொஞ்சமாவது 60களில் இருந்து 2026 இற்கு வரட்டுமே”
– நண்பர் ஒருவரின் கேள்வி –
அரச விருதுகளைப் பெறுவது தொடர்பில் இருக்கும் சிக்கல்கள், எழுத்தாளர் அதைப் பெறுவது குறித்த என் பார்வைகளை மீண்டும் சுருக்கமாகச் சொல்கிறேன்.
1. இந்த வாதங்களில் முதன்மையாக நான் கவனம் கொள்வது ‘எழுத்தாளர்’ எனும் பண்பாட்டு பாத்திரத்தின் குணவியல்புகளை.
எழுத்தாளரின் இடமென்பது பண்பாட்டு அதிகாரத்தில் சொல் அதிகாரத்தை அடைதல். அவருடைய சொல்லுக்கு பண்பாட்டிலும் வெகுசனத்திலும் அதிகாரம் / ஆணை இருக்க வேண்டும். அதற்கென்றே அவர் கற்கிறார், படைக்கிறார், உரையாடுகிறார். அதை வெகுசனத் தளம் கவனித்தாக வேண்டும். அங்கிருந்தே அதன் நுண்மையான கலை உள்ளம் மேம்பட முடியும். இலக்கியத்தில் தீவிரத்திற்கும் இடைநிலைக்கும் சராசரிக்கும் கோடுகளைத் தெளிவாக வகுக்க வேண்டியது அதனாலேயே.
சராசரி எழுத்தாளர் பண்பாட்டின் ஒரு உறுப்பு மட்டுமே. அவர் ஏற்கெனவே உருவாகிய படைப்புகளில் வெளிப்பட்டிருக்கும் சராசரியான பார்வைகளை வெளிப்படுத்துவார். அதை அவரால் மீறி எழ முடியாது. அதற்கான விரிவான வாசிப்போ நுண்மையோ படைப்பாக்கத் திறனோ அவரிடம் இருக்காது.
அடுத்து இடைநிலை எழுத்தாளர்கள், இவர்கள் தீவிர இலக்கியத்தின் தன்மைகளை ஓரளவு அறிந்தவர்கள். இவர்களுடைய படைப்புகளில் தீவிர இலக்கியத்தில் உக்கிரமாக வெளிப்படுவது மெல்லிய அனலுடன் சிறு நுணுக்கத்துடன் மீள உருவாகும். இவர்களால் அசலான சிந்தனையை கருத்தை முன்வைக்க முடியாது. அவர்கள் அசலான சிந்தனைகளை முன்வைப்பவர்களை கவனிப்பதால் சிறிது ஊக்கம் அடைபவர்கள்.
தீவிர இலக்கியமென நான் வரையறுப்பது கலையின் முழுமையான அளவை நோக்கி எழும் பண்பாட்டினதும் படைப்பூக்கத்தினதும் கூரிய முனை நிகழ்பவர்களே. அவர்கள் தங்கள் படைப்பூக்கத்தினாலும் சிந்தனையாலும் எதிர்காலத்தில் நின்று கொண்டிருப்பவர்கள். அவர்களைச் சமகாலத்தால் சகிக்க இயலாது. பொதிமாடு போல நடுவீதியில் கிடப்பவர்களை சவுக்கால் அடிப்பது போல அவர்கள் சமூகத்தின் பொதுப்புத்தியை சீண்டிக்கொண்டேயிருப்பார்கள். புதுமைப்பித்தன், தளையசிங்கம் தொடங்கி ஷோபா சக்தி, ஜெயமோகன் வரை அவர்களுக்கு மேலிருக்கும் தீவிரமான பொதுச்சூழலின் எதிர்மறை அணுகுமுறைக்கு அது தான் காரணம். அவர்களது படைப்பூக்கத்தை நிராகரிக்க முடியாத சமநேரத்தில் அவர்களது கருத்துகளையும் சிந்திக்க முடியாது. அப்படிச் சிந்திக்கக் கூடிய சிறு எண்ணிக்கையான கூருணர்வுள்ள வாசகர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் இருப்பார்கள். அவர்களை மட்டும் நோக்கியே தீவிர இலக்கியம் பேசிக் கொண்டிருக்கிறது. புதுமைப்பித்தன் அதைத் தான் வாழையடி வாழையாக வரும் என் வாசகர்களுக்காக எழுதுகிறேன் எனச் சொன்னார்.
(ஜெயமோகன்)
நவீனத்துவத்திற்கு பிறகு பண்பாட்டின் மீதான கூரிய விமர்சனங்கள் இலக்கியத்தால் முன் வைக்கப்பட்டு வருகின்றன. கலை, இலக்கியவாதிகளின் சமூகப்பாத்திரம் விரிவாகவே உரையாடப்பட்டு வருகிறது. அதுவே பண்பாடு வளரும் நுண்மை நிகழும் இடம்.
இந்த வேறுபாட்டை நான் பல கட்டுரைகளிலும் குறிப்புகளிலும் தொடர்ந்து வரையறுத்தும் உரையாடல் கோரியும் எழுதி வருகிறேன். இந்த வேறுபாடுகளை ஒருவர் அறிவதென்பது இலக்கியத்தை அறிவதற்கு, அதன் கூறுகளை வகுத்துக் கொள்வதற்கு அவசியம். வைரமுத்துவும் கம்பனும் ஒன்று தான் என நினைப்பவரிடம் வைரமுத்து ஒரு பாடலாசிரியர், கம்பன் ஒரு பெருங்கவிஞன் என விளக்க அந்த வேறுபாட்டை ஒருவர் அறியத் தொடங்காமல் அவருடைய இலக்கிய நுண்ணுணர்வு மேம்படாது.
(மு. தளையசிங்கம்)
2. இழிவு படுத்துதல் தொடர்பில். இந்தக் குறிப்புகளில் ஒரு நபரோ ஆளுமையோ இழிவுபடுத்தப்படவில்லை. அவர்களுடைய பங்களிப்பு மதிப்பிடப்பட்டிருக்கிறது. அவர்களுடைய பண்பாட்டு இடம் வரையறுக்கப்படுகிறது. இல்லை, அவர் அதை விடப் பெறுமதியானவர் என்று ஒருவர் கருதினால் அவர் அதை விரிவாகவே அதை முன் வைத்து எழுதலாம். எழுதி அதை நிறுவலாம். அப்படி நிறுவாமல் ஒரு நம்பிக்கையாக மட்டும் நாம் ஒருவரை முன்வைத்தால் அது காலத்தால் துடைத்தழிக்கச் செய்யப்படும்.
நான் ஒருவரை மதிப்பிடும் முறையென்பது தீவிர இலக்கியம் முன்வைக்கும் நோக்கு நிலையிலிருந்து உருவாவது. பிறர் இந்த விவாதத்தில் செய்திருக்கச் சாத்தியமான இரண்டு கோணங்களைச் சொல்கிறேன்.
முதலாவது, அவரை விரிவாக முன்வைத்து பண்பாட்டு பாத்திரத்தை விளக்குவது. உதாரணமாக சோ. பத்மநாதன் பற்றி எழுதப்பட்ட பாராட்டுக் குறிப்புகளை விட நான் எழுதிய இரண்டு பந்திகள் செறிவானவை, பெறுமதியானவை. அவரது பாத்திரத்தை மதிப்போடும் அதற்குரிய அளவுகளோடும் அணுகுபவை.
இரண்டாவது, அரச இலக்கிய விருதைப் பெறுவதென்பது இனப்படுகொலைக்கு நீதி கிடைக்காத நாட்டில், மனிதப் புதைகுழிகளைத் தோண்டச் சொல்லி வீதிகளில் மக்கள் போராடும் நாட்டில், காணமாலக்கப்பட்ட தங்கள் உறவினரைத் தேடி தெருக்களில் கிடந்திழுபடும் மக்களை மதிக்காத நாட்டில், புத்தகங்களை தடுத்து வைக்கும் புத்தசாசன கலாசார திணைக்களம், தான் விரும்பினால் வெளியால் விடுவேன், இல்லையென்றால் மட்டும் நீ கேட்டா விடுவாய், விருதைக் கொடுத்தால் வாங்கிக் கொண்டு சிரிப்பாய் என எழுத்தாளர்களை கையாளும் நாட்டில், அதை முதன்மையாகச் செய்யும் திணைக்களத்திடம் விருது வாங்குவது, அவர்களை அங்கீகரிப்பது, அல்லது நற்சமிக்ஞை காட்டுவது என்று தான் வாதிடுகிறேன்.
(ஷோபா சக்தி)
இல்லை, நாங்கள் இந்த இந்தக் காரணங்களால் விருதைப் பெறுகிறோம். எங்களுடைய நிலைப்பாட்டை சொல்கிறோம் என ஒரு கருத்தும் இப்போது வரை வரவில்லை. இதற்கு பதிலளிக்க ஒரு சாமானியரால் இயலக் கூடியதல்ல, ஆனால் விருது பெறுபவர்கள் யாவரும் எழுத்தாளர்களே. ஆகவே அவர்களின் இடத்தை வரையறுக்க, அரசியல் நிலைப்பாடுகளில் உள்ள போதாமையை பொதுச்சமூகத்தின் முன் விளக்க வேண்டிய தேவையிருக்கிறது. நம் நாட்டில், நம் மக்கள் இருக்கும் நிலையில், இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக நம் குரல் முன்னெப்போதையும் விட இப்போது அதிகம் எழ வேண்டியிருக்கிறது. அடுத்த தலைமுறை அரசியலை அறியாது விடுகிறது, அரசாங்கங்களின் பிரச்சினையாக எங்கள் நெடிய போராட்டத்தை கருதுகிறது, அரசியல் மந்தத்தனம் முன்னெப்போதையும் விட சகஜமாகப் பரவியிருக்கிறது.
ஆனால் நாங்கள் எழுத்தாளர்கள், பண்பாடு நம்மை ஏன் கவனிக்க வேண்டுமென்றால் அத்தகைய நினைவுபடுத்தலைச் சொல்வது நாம் தான் என்பதால். அதைச் செயல்கள் மூலமாகக் காட்டுவது வழிகாட்டியாக, குறியீடாக நாம் நிகழ்த்தும் ஒன்று நம் தலைமுறைகளுக்கு முக்கியமானது என்பதால்.
அதனால் தான் எழுத்தாளருக்கு சொல்லாணை அளிக்கப்பட்டிருக்கிறது. இலக்கியத்தில் ஒரு கூற்றிருக்கிறது, சாமி வந்து ஆடி இறங்கிச் செல்லும் ஒரு கலையாடி தான் எழுத்தாளர். நம்மில் வந்தெழும் தெய்வமென்பது காலமும் நம் முன்னோரும். திரும்பவும் சொல்கிறேன், வரலாற்றுணர்வு, நீதியுணர்ச்சி, மனசாட்சி இம்முன்றும் ஒரு எழுத்தாளருக்கு அடிப்படைப் பண்புகள். அப்படி எல்லாம் இல்லை, நான் ஒரு சாமானியன் என்றால் அவர்களுக்கு நான் சொல்ல ஒன்றுமில்லை. ஒருவர் தன்னைத் தன் காலத்தினதும் தன் வரலாற்றினதும் குரலாகவும் ஆன்மாவாகவும் தன்னைக் கருதுவார் என்றால், நான் சொல்வது அந்தச் சிறிய எண்ணிக்கையின் காதுகளில் விழ வேண்டும் என்பதற்காக. நம் வருங்காலத்திற்காக.
3. இருத்தலைக் காட்டுவதற்காக அப்படி ஏதிலிகளாக வரலாறு மறுக்கப்படுபவர்களாக இருக்கும் நமக்கு இது தேவையென்று கருதுகிறீர்கள்.
எந்த நீதியுணர்ச்சியும் கருணையினதும் இரக்கத்தினதும் பாற்பட்டதல்ல. அது உரிமை, இழைக்கப்பட்ட ஒன்றிற்காக நிற்பது. நாம் நீதியைக் கெஞ்சிப் பெறக் கூடாது. நாம் இழந்திருப்பது அதிகம். கொடுத்த விலை மிக மிக அதிகம்.
ஒரு எழுத்தாளனாக நான் எதையும் அரசிடம் கோரிப் பெறமாட்டேன், கொடுத்தால் வாங்க மாட்டேன், நீ என் மக்களை இன்னமும் வஞ்சித்துக் கொண்டும் ஏமாற்றிக் கொண்டுமிருக்கும் அரசு எனச் சொல்லி அதை மறுப்பேன். உனது சிறு கடைக்கண் பார்வையும் எனக்குத் தேவையில்லை. நான் வரலாற்றின் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவன், என் மக்களுக்கு நீதியாகக் கொடுக்க வேண்டியதைக் கொடு என இடித்துரைக்க வேண்டியவன். அதற்கே அரசாணை உனக்கும் சொல்லாணை எனக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது எனக் கருதுபவன். அப்படிக் கருதுபவர்களையே நான் எழுத்தாளர்கள் என மதிக்கிறேன்.
எந்த அரசையும் விட ஒரு எழுத்தாளர் காலத்தினால் நினைவுகொள்ளப்படுவார். நம் பண்பாட்டில் தோன்றிய எத்தனை அரசர்கள் பற்றி என்ன நினைவு வைத்திருக்கிறோம். அந்த அமைப்பு ஒரு எழுத்தாளருக்கு முன் அற்பமானது. எந்த அரசியல்வாதியை விடவும் ஒரு எழுத்தாளர் ஆயிரம் மடங்கு பண்பாட்டில் முக்கியமானவர். அப்படிப்பட்ட இடத்தினை நோக்கி செல்லச் சொல்லி, அதற்கான பண்புகளை அடையாளங் கண்டு மதிக்கச் சொல்லியே நான் விரிவாக இவற்றை எழுதுகிறேன். எதிர்த்தரப்பு கொண்டவர்கள் தங்களை விரிவாகவே முன் வைத்து எழுதலாம்.

