இளங்கோ டிசே தன் பங்கரிலிருந்து கையில் கிடைத்த தாள்களில் எழுதிய சிறு குறிப்புகளுடன் தைரியமாக மேலே ஏறி வந்திருக்கிறார். அதற்கு முதலில் வாழ்த்துகள். அப்படியாவது நம் ஈழத்துச் சூழலில் இருந்து ஒருவராவது வந்து தன் நம்பிக்கைகளைச் சொன்னால் தான் கூருணர்வுள்ள வாசகர்களுக்கு அவர்களின் மதிப்பீடு, ரசனை பற்றித் தெரியும்.
மொழிநடையில் முன்னோடிகளினது செல்வாக்கினைக் குறித்து ஜெயமோகன் எழுதிய ‘முளைத்தலெனும் தொடர்‘ குறிப்பில் நட்சு முதல் டிசே வரை அவர்களின் இயல்புகளின் சிக்கல்கள் எப்படி அவர்களது படைப்பூக்கத்தை அழிக்கிறது எனச் சொல்லியிருப்பார். இளங்கோ எழுதிய “ஜெயமோகனுக்கும் அவரது ஈழத்து சிஷ்யப் பிள்ளைகளுக்கும்..” எனும் எதிர்வினையில் இருக்கும் அடிப்படைக் குறைபாட்டைத் தான் இளங்கோ இதற்கு எதிர்வினையாற்ற முன்னரே ஜெயமோகன் துல்லியமாக வரையறுத்திருந்தார். அப்படி அறிவுக்களமில்லாத, படைப்பூக்கமில்லாத வம்புகளை எழுதுவது எப்படி என்ற சாமானிய இலக்கிய வகுப்பில் துணைப்பாட நூல்களில் மேலதிக வாசிப்பிற்கு இளங்கோவின் குறிப்பைக் கொடுக்கலாம்.
இளங்கோவின் சிக்கல்களை ஜெயமோகன் இப்படித் தொகுக்கிறார், “அவர் எழுதவந்த காலத்தில் அவரிடம் இருந்த மிதமிஞ்சிய பதற்றம் அவர் அயல்நிலத்தில் குடியேறியமையால் உருவானது என்றும், அவரது சூழலில் இருந்த போர்ப்பின்னணி அவரை எதிர்மறையான மனநிலைக்குச் செலுத்தியது என்றும், அவர் அவற்றில் இருந்து மீண்டிருக்கலாம் என்றும் எண்ணினேன். ஒரு தொடக்க விசை அவரிடம் இருப்பதாக முன்பு எனக்கு தோன்றியிருந்தது. ஒரு சில கதைகளில் அவர் எழுதுவதற்கான சாத்தியக்கூறுகளும் இருந்தன. ஆகவே அந்தச் சிறு நம்பிக்கை. அதை எழுதியுமிருக்கிறேன். ஆனால் மிகப் பல படிகள் பின்னகர்ந்து வெறும் வம்பாளர் மட்டுமாக, ஒரு பொருட்படுத்தத் தக்க இலக்கிய வம்பை எழுதுவதற்கான அறிவுக்களம்கூட அற்றவராக, அவர் மாறியிருப்பதையே கண்டேன். உண்மையில் இழந்த மகன் பற்றி ஒரு தந்தை அடையும் தவிப்பைத்தான் அடைந்தேன். அப்படி பல பேரைப் பற்றி எனக்கு தவிப்பும் இழப்புணர்வும் உருவாகியதுண்டு. ஆனால் இலக்கியத்தில் இதற்கு எவரும் எதுவும் செய்ய முடியாது”
இது தான் இளங்கோவின் அடிப்படைச் சிக்கல். அவரால் ஒரு இலக்கிய வம்பில் கூட படைப்பூக்கமாகச் செயற்பட முடியவில்லை. அதற்கு முதன்மையான காரணத்தை அவரது எதிர்வினையை வாசித்த போது அவதானித்தேன். எளிமையாகச் சொன்னால், அவர் தீவிர இலக்கியமெனும் கண்ணாடிக்கு அப்பால் சாமானிய இலக்கியம் எனும் ஒன்றினை எழுதி வருவதாக அவரே கற்பனை செய்து கொள்கிறார். ஆகவே தான் இந்தப் பக்கமிருந்து சொல்லும் எதையும் ஓரிரு உதட்டசைவுகளகவோ சைகைகளாகவோ பார்த்து ஊகித்துக் கொள்கிறார்.
ஆகவே அவரது கருத்துகளிற்கு வரிக்கு வரி விளக்கம் கொடுப்பது இயல்வதல்ல. ஆனால் அவர் எதிர்வினை புரிந்ததை மதித்து என் தரப்பை தொகுத்துச் சொல்கிறேன்.
குரு – சீடர் என்ற வம்பாக அவர் முகநூலில் எழுதியதை நான் என் சொந்தப் பிரச்சினையாக, அவரது சாமானிய மொழியில் தொப்பியாக அணிந்து கொண்டேன் எனச் சொல்கிறார்.
ஓம். நான் அப்படித் தான் எடுத்துக் கொண்டேன். சூழலில் பலரும் தொடர்ச்சியாக அந்தக் கருத்துகளைச் சொல்லி வருகிறார்கள் என்பதால் இவரை ஒரு முகாந்திரமாகக் கொண்டு சிக்கலை விவாதித்தேன். முன்னோடிகளின் நடை தன்னில் இருப்பதன் தேவையை, மொழி வழிக்கலைகளில் தாக்கத்தைப் பற்றியதாக என் தரப்பை “பித்தம் தெளிய வைத்தலில்” விரிவாகவே எழுதியிருக்கிறேன். ஜெயமோகனும் முளைத்தலெனும் தொடர், மொழிநடை, இன்றைய அறைகூவல் ஆகிய குறிப்புகளிலும் அதை விரிவாகவே சொல்லியிருக்கிறார். கண்ணாடிக்கு அப்பால் நிற்கும் இளங்கோவிற்கு முன்னோடிகளின் சொற்களை எடுத்து அங்கங்கு தூவுவதே நடையில் தாக்கமென்று விளங்கியிருக்கிறது. தமிழூழியம் என்றோ படையல் என்றோ எழுதுவது அவரது ஆசிரியரான எஸ். பொவை நினைவு கூர்வதாக கருதுகிறார்.
நடையில் தாக்கமென நாங்கள் தொடர்ந்து முன் வைப்பது, சொற்களின் மேலோட்டமான பயன்பாடோ, அவரது பார்வைகளில் சிலதைக் கொண்டிருப்பதோ அல்ல. அதைத் தான் ஜெயமோகன் சிக்கலானதும் நுண்மையானதும் என்று சுட்டுகிறார். அழிகளம் எனும் தொடரை என் தளத்தில் முன்னர் எழுதியிருந்தேன். அது வெறும் எழுத்துப் பயிற்சி. என் நூல்களில் அப்படியொரு நடை பின்னர் வரவில்லை. அதுவொரு பயிற்சியாட்டம் எனுமளவில் பொருட்படுத்தத் தக்க ஆக்கமே, இளங்கோவின் மொத்தப் படைப்புகளை விடவும் பல படிகள் மேலானதே. ஆனாலும் என்னளவில் அது பயிற்சியே. கொடிறோஸிலோ கல்விரலிலோ வாழ்க்கைக்குத் திரும்புதலிலோ என் சிறுகதைகளிலோ ஜெயமோகனின் தாக்கம் எப்படி இருக்கிறது என எவராவது துல்லியமாகச் சொல்ல முடியுமா? எனக்கும் கூட முழுமையாகத் தெரியாது. ஓடும் நீரின் நிழல், அது ஓடிக்கொண்டிருக்கும் நிலத்தில் விழுவது போன்றது அது. உள்ளடுக்குகள் மட்டுமே அறியும் ஒன்று.
பூமித்தட்டுகள் ஒன்றின் மீது இன்னொன்று அமைந்து நிலப்படுக்கை உருவாகுவது போன்றது இலக்கியத்தின் மொழியுலகு. அதைப் பாமரர்களால் வெற்றுக் கண்களால் பார்க்க முடியாது. குறைந்த பட்சம் அப்படியொன்று இருக்கும் தகவலையாவது தெரிந்து கொள்ளட்டும் என்று தான் அதை விரிவாக எழுதுகிறோம், சுட்டுகிறோம்.
அதே நேரம் இது கூர்மையான ஆணவச் சிக்கல் கொண்டது. விதை குழுமம் சிதைந்தழிந்து விட்டது. வேறு வழியில்லாமல் இலக்கியத்திற்கு வந்ததாக இளங்கோ டிசே கண்ணாடிக்கு அப்பாலிருந்து தன் காற்சட்டைப் பொக்கெற்றுக்குள்ளிருந்து எடுத்த நோட் புக்கில் குறிக்கிறார். பதினெட்டு வயதிலேயே கல்கி, தீராநதி போன்ற இதழ்களில் கவிதைகளை எழுதத் தொடங்கி விட்டேன். தீவிர இலக்கியத்தில் என் தலைமுறையை இணைத்து, முன்னெடுத்ததில் மட்டுமல்ல, எழுத்தில் விமர்சனத்தில் நான் என்றுமே என் காலத்தின் முதன்மையான ஆளுமையாகவே இருந்திருக்கிறேன். இன்று உருவாகியிருக்கும் பண்பாட்டில், அதன் சிந்தனையில் என்னளவுக்கு நேரடியான தாக்கம் செலுத்திய படைப்பாளிகள் வெகு சிலரே.
நான் பதினெட்டு வயதிலிருந்து எழுதி வருகிறேன், என் தலைமுறையென்று இன்று உருவாகி வந்திருப்போர்களில் பெரும்பாலானவர்களில் என் செயல்களினதும் சிந்தனைகளினதும் தாக்கமிருக்கிறது. மூத்தவர்களிலும் கூட நான் தாக்கம் செலுத்துமளவு ஆளுமையாகவே இருக்கிறேன். அது ஆணவத்தினால் சொல்லப்படுவதல்ல. அது மதிப்பீடு. அதை நம் சூழல், நீ சிறியவன், எனக்குச் சொல்ல யார் என்ற மனநிலையிலேயே தொடர்ந்தும் அணுகி வருகிறது, அந்தப் போலிவாதத்தை உடைக்கவே இலக்கிய விவாதங்களில் நான் சீண்டலையும் உக்கிரமான விவாதக் களங்களையும் திறக்கிறேன். மூர்க்கமாக கேள்வி கேட்கிறேன். இலக்கியத்தின் அடிப்படைகளே தெரியாதவர்கள் என்று சாட்டையால் அடிக்கிறேன்.
ஆனால் கண்ணாடிக்கு அப்பாலிருக்கும் இளங்கோவிற்கு இதெல்லாம் மனித உரிமை மீறல்கள் போலத் தெரிகிறது. நாங்கள் பாட்டுக்கு ஏதோ பிறந்தோமா, சாமானிய இலக்கியம் எழுதினோமா, நாலு டோழிகளையும் பூமர்களையும் கூட்டுச் சேர்த்தமா என்று வாழ்கிறோம், எங்களை ஏனைய்யா சீண்டுகிறீர்கள். எங்களுக்கு வாசு முருகவேலும் அனோஜன் பாலகிருஷ்ணனும் தான் எழுத்தாளர்கள், ஓரளவுக்கு யதார்த்தன் கூட. ஆனால் நீயோ தர்மு பிரசாத்தோ என்ன எழுதி விட்டீர்கள், நீங்கள் எழுதியதெல்லாம் எனக்கு அலுப்பைத் தருகின்றன. ஆனாலும் அலுப்பை முறித்தபடி உங்களை வாசிக்கிறேன் எனச் சொல்கிறார்.
எனக்கும் கண்ணாடிக்கு அப்பால் இளங்கோ செய்யும் அங்கச் சைகைகள் பருமட்டாகப் புரிகிறது. அவர் எல்லாவற்றையும் அப்படியே தலைகீழாக விளங்கி வைத்திருக்கிறார். உதாரணத்திற்கு ஒன்று மட்டும், அனோஜனிலும் வாசுவிலும் ஜெயமோகனின் தாக்கம் இல்லை, ஆனால் அவர்கள் தனித்து எழுதுகிறார்கள் என்று சொல்கிறார். ஆனால் சிக்கல் அப்படியானதல்ல, அனோஜனும் வாசுவும் நாகர்கோயிலுக்கும் லண்டனுக்கும் பால்காவடி எடுத்தால் கூட அப்படி எழுத முடியாது. நடையின் தாக்கமென்பது சொற்களை தெளிப்பதல்ல. மொழியின் ஆன்மாவை ஊடுருவிச் செல்வது. அதற்கெல்லாம் இருவரின் புனைவுகளிலும் சிறு விரிசல் இருக்கிறது தான். ஆனால் அது மிக நெடிய, சவால் நிறைந்த தனிவழிப்பயணம். அதற்கெல்லாம் அவர்கள் தோதுப்பட மாட்டார்கள். ஜெயமோகனினது என்று மட்டுமல்ல அவர்களில் வேறு எந்த முன்னோடியினதும் சிறு சுவடு கூட இல்லை. அதனால் தான் இருவராலும் எழுந்த விசைக்கு தேவையான அளவு பறக்க முடியவில்லை. புலுனிக் குந்தலில் அங்குமிங்கும் பாய்கிறார்கள்.
நடையின் தாக்கமென்பதும் புனைவுலகின் விருப்பத் தேர்வதென்பதும் அவரவருக்குரியது என்று ஜனநாயக நம்பிக்கையொன்று பலரிடமும் இருக்கிறது. அது மேலோட்டமாகப் பார்த்தால் சரிதான் எனத் தோன்றும். ஆனால் அது இலக்கிய அடிப்படைகள் உருவாகிய, இடைநிலை எழுத்துக்கு மேலெழுந்து தீவிர இலக்கியக் களத்திற்குள் சாதிக்கப்படக் கூடிய தனித்த நுண்மையால் மொழியால் அளவிடப்படுவது. அதை எளிமையான ஜனநாயகத்திற்கு விட்டுக் கொடுக்க முடியாது. கலையில் முன்னோடிகளின் சொல்லுக்கு இருக்கும் மதிப்பைப் போலவே, சமகாலத்து படைப்பாளிகளின் சொல்லுக்கும் இருக்கிறது. வருந்
தலைமுறைக்கும் அப்படியே. ஆனால் ஒரு புதிய படைப்பாளி, கலை நுண்மையினாலும் படைப்பூக்கத்தினாலும் எழும் கூருச்சியை நோக்கி விசையுடன் செல்லும் பொழுது அதே மலையில் உல்லாசமான சோம்பேறிகளாக அலைந்து வாழும் எலிகளை ஒரு கொத்துக் கொத்தி விட்டுப் பறப்பது இயற்கை தான். அவைகளுக்கு மலையைக் குடைவதில் ஒரு பங்கிருக்கிறது. சிறிய பல்லேயானாலும் அது மலையைச் சிதைக்கிறது. அப்படி தீவிர இலக்கியமெனும் மலையில் வாழும் உல்லாசமான சோம்பேறிகள் தான் இளங்கோ, வாசுமுருகவேல், தமிழ்நதி, தீபச்செல்வன், தெய்வீகன், அகரமுதல்வன் என எல்லோரும். அனோஜனிடம் சிறு நம்பிக்கையும் அவர் என்றாவது மேலும் விரிவான படைப்புகளை எழுத வேண்டும் எனும் விருப்பமும் எனக்கிருக்கிறது.
என்னுடைய எழுத்துகள் இளங்கோவுக்கு அலுப்பூட்டலாம். அதில் ஒன்றுமில்லை, எனக்கும் இளங்கோவின் எழுத்து அப்படியே, இளங்கோ எழுதிய எதிர்வினையை வாசிக்கத் தொடங்கியதும் முதலில் தென்பட்டது, கருத்துத் திரிபுகளோ பார்வைக் கோளாறுகளோ அல்ல. அது ஒரு புதிர்வழிப்பாதை, ஒரு கதையை எப்படி ஒவ்வொருவரும் திரித்துத் திரித்து தங்கள் சிமிலிகளுக்குள் அடைத்துக் கொள்கிறார்கள் என்பதற்கு வாதிடவே இயலாது. அப்படி திரிப்பதில் கூட நட்சுவுக்குத் தான் முதலிடம். புனைவுப் புலானாய்வில் கூட இளங்கோவுக்கு பார்வையாளர் வரிசை தான் அளிக்கலாம். இல்லையென்றால், நட்சுவுக்கு முதல் பரிசு கொடுக்கும் பொழுது தட்டேந்தும் சேடியாக நிற்க வைக்கலாம். புனைவுகளைப் புலனாய்வு என்று எழுதவும் ஒரு கீழ்மையின் அடுக்கு துலக்கமாக வேண்டும். அங்கும் அவர் சாமானியரே.
அவரிடம் ஒன்றைச் சொல்வதற்குக் கூட ஒரு நல்ல ஒப்புமையோ, கூற்றோ, இலக்கியம் சார்ந்த பார்வையோ இல்லை. சட்டென்று அது திகைப்பை அளித்தது. எப்படி ஒருவர் இத்தனை காலம், கிட்டத்தட்டக் கால் நூற்றாண்டு காலம், அல்லது அதற்கும் மேலே எழுதியும் கூட எழுத்தில் நுண்மை கூடிவரவில்லை, சிந்தனையை செறிவாகவும் உதாரணங்களுடனும் ஒப்புமைகளுடனும் முன் வைக்க முடியவில்லை என்பதைப் பார்க்கும் பொழுது மீளவும் உறுதியாகத் தோன்றுவது ஒன்றே தான்.
சழக்கு இலக்கியத்தினை சாட்டையால் அடித்தே ஆக வேண்டும். மொண்ணைத்தனம் ஒரு நோய். நம் காலமே இணைய மந்தர்களால், மொண்ணை அறிவுஜீவிகளால், சராசரி பேஸ்புக் வாசிகளால், இலக்கியப் பாமரர்களால் சூழப்பட்டிருக்கிறது. அந்தக் கண்ணாடி வானுயர எழுந்திருப்பது. அப்பால் பல்லாயிரம் கைகள் ஒன்றாய்ச் சேர்ந்து வெறியாடலாம். வாய்கள் கூச்சலிடலாம். மந்தத்தனத்தை நம் சூழல் தன் வேடமாக இப்போது தரித்திருக்கலாம். கண்ணாடிக்கு இப்பாலிருந்து சொல்லக் கூடியவற்றையும் சேர்த்து விவாதித்து முன் செல்பவர்களுக்கே தீவிர இலக்கியம் எனும் பெரிய தெய்வம் அருளும். கோருவது பெரிதென்றால் அதன் பொருட்டு இழப்பதுவும் பெரியதே. அதை இளங்கோ அறியாமல் இருக்கலாம், ஆனால் சூழலுக்கு அதை அறியாமை என்று சுட்டவும் எவரேனும் அவரை தீவிர இலக்கியத்தில் காலம் கடந்த படைப்புகளை எழுதும் எழுத்தாளர் என நம்பிவிடக் கூடாது என்பதற்காகவே இந்த வரையறைகளைச் சொல்கிறேன். அது ஒரு கருத்து, இது ஒரு கருத்து, எல்லாம் கருத்து என்பது ஜனநாயகம். கலையின் நுண்மையில் மஞ்சாடி குறைந்தாலும் நான் ஒரு இலக்கியப் பாசிஸ்ட்டைப் போலத் தான் நடந்து கொள்வேன். அது காலத்தின் இயல்பு. குரூரமும் ஈவிரக்கமுமின்றி அனைத்தையும் கூட்டியும் கழித்தும் எஞ்சுவதையும் எழுவதையும் கொண்டு மதிப்பிடும் இடமே எனது. கண்ணாடிக்கு இப்பாலிருந்து நான் புன்னகைப்பது இளங்கோவுக்கு என்னவாகத் தெரியுமென்பது புரிகிறது.
எனக்குக் கூட அவர் என்னை நோக்கி வீசியெறிந்த கையின் விரல்நுனிகள் படபடக்க வெறுங்காற்றை அளைந்து விழும் வஞ்சம் மட்டுமேயான ஒன்று அவரில் எழுந்து கீழ்மையாலும் அவதூறுகளாலும் மட்டுமே ஒருவரை அணுகும் அடிப்படைக் குறைபாடு கொண்ட நோக்குத் தெரிகிறது. அதை நான் செய்ய மாட்டேன். தனிமனிதர்களின் சுபாவங்களை இலக்கியத்தில் பொருட்படுத்துவதுண்டு. அவற்றை எழுதுவதும் உண்டு. ஆனால் அது என் தன்னறம் அல்ல. தலைவிரி கோலமாக எழுந்து வந்து வசைபாடியவர்களின் தனி வாழ்க்கையைக் கூட எக்காலத்திலும் பொருட்படுத்தி தாக்கியதில்லை. காற்சட்டை போட்ட பங்கர் வாழ் அங்கிளை மட்டும் தாக்கியா விடுவேன். ஆசான் சொன்னது போல, இவை எதுவும் காலத்தில் எஞ்சப் போவதில்லை. படைப்பே எஞ்சும். இவர்களின் எந்தச் சழக்கும் அதற்கு முன் நிற்காது. மயிர் சுட்டுக் கரியாகாது.

