ஆசிரியரின் சொற்கள்

ஆசிரியர் ஜெயமோகன் ஈழத்தில் புதிய அலைக்கான சாத்தியமும் விசையும் என்னிடமும் யதார்த்தனிடமும் இருப்பதாக ஒரு அவதானிப்பை சொல்லியிருக்கிறார். “பாலையில் முளைத்தல்“. ஒரு நற்சொல் என்பது எப்பொழுதும் பொறுப்பும் கூட. அவரிடமிருப்பது ஓர் எதிர்பார்ப்பு. அது நிகழக் கூடும், நிகழாமல் போகவும் கூடும்.
இலக்கிய விவாதங்களில் அடிப்படைகளையும் வாசிப்பதற்கான வழிகளையும் ஓரளவு விரிவாக எழுதிய பின்னர் இந்த எதிர்வினைகளின் காலத்தைக் கடந்து சென்று விடுவேன். எங்கள் சூழலில் வாசிப்பு அறவே இல்லையெனச் சொல்ல முடியாது. ஆனால் பெரும்பான்மையானவர்கள் கோட்டுக்கு அந்தப் பக்கத்தில் சென்று தான் கலைகிறார்கள்.

தர்மு பிரசாத் அடிக்கடி ஒரு திருக்குறளினைச் சொல்வார். “கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தற்று”. பெரிய செல்வமென்பது கூத்தைப் பார்ப்பதற்கு மக்கள் எப்படிச் சிறுகச் சிறுக கூடுகிறார்களோ அப்படிச் சேர்வது. அப்படியென்றால் செல்வம் எப்படி அழியும்? கூத்து முடிந்ததும் சட்டென்று அகல்வது போல. செல்வத்தின் திரட்சியையும் அழியும் முறைமையையும் அய்யன் வள்ளுவன் எப்படிச் சொல்லியிருக்கிறார் பாருங்கள் பாஸ் என வியப்பார்.

பண்பாடு எனும் பெருஞ்செல்வத்தை நாம் சிறுகச் சிறுகச் சேர்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது அழிவதும் கூத்தரங்கத்திலிருந்து மக்கள் அகல்வது போலச் சட்டென்று நம்பிக்கையிழப்பை உருவாக்கி விடும். நானோ தர்மு பிரசாத்தோ யதார்த்தனோ முன்வைப்பது ஒரு வகை இலக்கிய இலட்சியவாதமே. அதை ஒருவர் எடுக்கலாம், எடுக்காமல் போகலாம். க. ந. சுவிடம் அப்படி இலக்கியத்திற்கென ஓர் இயக்கத்துக்கான கனவிருந்தது. ஈழத்துச் சூழலிலும் அப்படிக் கனவுகளுடன் உரையாடல்களுடன் புறப்பட்ட பல நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கின்றன. அவையே இன்று நாம் இலக்கியச் சூழல் எனச் சுட்டும் என்ற ஒன்றை உருவாக்கியிருக்கிறது. வெறும் காற்றில் எந்த மந்திரத்திலும் விளைந்தது அல்ல. பலபேரின் உழைப்பு அடங்கியது. தமிழ்ச்சூழலில் இலக்கியமே ஒரு இலட்சியவாதம் தான். கசப்பும் ஆணவப் பூசல்களும் நிறைந்தது. அதை மீறியே இலக்கியம் முன்னகர முடியும். முன்னகர்ந்தாக வேண்டும்.

ஈழம், தமிழ்நாடு, இந்தியா, உலகம் என இலக்கியத்திற்கு பல அடுக்குகளாலான வாசிப்புச் சூழல் இருக்கிறது. விரிந்த பரப்பிலேயே இலக்கியம் தன் கனவுகளை அதன் உச்ச சாத்தியத்துடன் அடைய முடியும். நான் என்னை ஒரு ஈழ எழுத்தாளர் எனச் சொல்ல மாட்டேன். நான் ஒரு எழுத்தாளன், என் கலை வழி திகழ்பவன். அதை நிமிர்வு என்பேன். அதே நேரம் நிரை வகுத்து நிற்கும் பெரும்படைப்பாளிகளுக்கும் பெருஞ் சாதனையாளர்களுக்கும் முன் பணியும் தன்னறிவும் இருக்கிறது. அவர்களின் கண்ணியாகவே என்னை நான் உணர்கிறேன். சு. வில்வரத்தினத்திலும் சண்முகம் சிவலிங்கத்திலும் இருந்த ஒன்று என்னிலிருக்கிறது. மு. தளையசிங்கத்திலும் எஸ். பொவிலும், சுந்தர ராமசாமியிலும் ஜெயமோகனிலும் புதுமைப்பித்தனிலும் க. நா. சுவிலும் இருந்த ஒன்று. அது கனவு. பண்பாட்டிற்காக அவர்களது பங்களிப்புகளை பல தளங்களில் உருவாக்கி அளிப்பவர்களே பெரும்படைப்பாளிகள். தஸ்தவேஸ்கி எழுதிய பத்திரிகைக் கட்டுரைகளின் தொகுப்பே நாவலை விட நீண்டிருக்கும்.

விமர்சனம், செயல்வாதம், உரையாடல்கள் என்பன தொடர்ந்து தீவிரமாக நிகழாத இலக்கியச் சூழலில் பெரும்படைப்புகளோ படைப்பாளிகளோ உருவாக முடியாது. அதை இன்னும் கூர்மையாக இப்படிச் சொல்வேன், பத்து நல்ல எழுத்தாளர்களாவது நவகண்டம் புகாமல் ஒரு மேதை ஒரு சூழலில் உருவாக முடியாது. தன்னைத் தான் அறுத்துக் கொண்டு அந்த இலட்சியத்தை அடையும் ஆவேசம் இல்லாமல் பெரும்படைப்புகள் நிகழ முடியாது. நான் அந்த நவகண்டம் புகும் பத்துப் பேரில் ஒருவராகக் கூட நிகழ்ந்து முடியலாம். ஆனால் அது நிகழ வேண்டும். அப்படி நிகழாமல் பண்பாடு உச்சமெனக் கொண்டாடக் கூடிய பெரும்படைப்பும் அதை ஆக்கும் கரங்களும் நிகழத் தாமதமாகும்.

பெருங்கனவுகளை ஊட்டுவதென்பது வாழ்க்கையை அதன் உச்ச அளவில் நிறைவுடனும் முழுமையுடன் வாழ்ந்து கொள்வதற்காகவே.
எது இம்மண்ணில் நிகழ்ந்து கொண்டிருக்கிறதோ அதன் புறவயமான இருப்பு, உரையாடல் இந்தச் சூழலில் வாசிப்பிற்கு வருபவர்களில் தாக்கம் செலுத்தும். ஆகவே தான் அந்த வாசிப்புச் சூழலை, அதன் மந்தத்தனத்தை, கூர்மையின்மையை, நுண்ணுணர்வின்மையை சுட்டிக் காட்டி, வகுத்தும் தொகுத்தும் கொடுக்க வேண்டியிருக்கிறது. இன்னொருவரும் அதைச் செய்யலாம். என்னிடம் கொஞ்சம் சிறிய வடியென்றால் அவர் கொஞ்சம் பெரிய ஓட்டையுள்ள வடியை வைத்திருப்பார்.

நம் உடலுக்குள் ஒரு அன்ரி பயோட்டிக்சை செலுத்துவது போன்றது எங்கள் விமர்சனங்கள். அதன் மெய்யையும் தீவிரத்தையும் உணர்வோர், தயக்கமின்றி விவாதத்தில் இணையவும், கடிதங்களை எழுதி சந்தேகங்களை உரையாடவும் முடியும். ஆனால் இனி அது நம் பண்பாட்டு உடலின் செல்களின் தன்மையிலிருக்கிறது. இலது உளதாகாது. உளது இலதாகாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *