“..மு.தளையசிங்கத்தின் ‘ஏழாண்டு இலக்கிய வளார்ச்சி’ கட்டுரைகள் படிக்கும் போது நடந்த விவாதம் நினைவில் வருகிறது. ஒரு கதைக்குப் பல பக்கங்களில் எதிர்வினையாற்றி இருக்கிறார். அதிலிருந்து ஒன்று ஊகிக்க முடிந்தது. அந்தக் கதைக்கு அந்தக் காலத்தில் பெரும் விவாதம் நடந்திருக்க வேண்டும். பல இலக்கியர்களும் மாறி மாறி தொடர்ந்தும் விமர்சித்தார்கள். விவாதித்திருக்கிறார்கள். ஆனால் இன்று மு.தளையசிங்கத்தின் விமர்சனம் மட்டும் தான் அப்படி ஒரு கதை ஈழத்தில் வெளியாகியது விவாதம் நடந்திருக்கிறது என்பதற்குச் சான்று. ஒரு சூழலில் ஒரு படைப்பு விமர்சிக்கப்படுவது இரண்டு காரணங்களால். ஒன்று அது மிகையாக மதிப்பிடப்படும் போது அல்லது அது பொதுச்சூழலில் மொண்ணைத்தனத்தின் எளிமையான முன்னுதாரணமாக இருக்கும் போது. இளங்கோ டிசே இரண்டாவது வகை. அவர் உண்மையில் பொதுச்சூழலின் பிரதிநிதியாக இங்கே மையமாக அமர்ந்திருக்கிரார். அந்த வரிசையில் சுனில் கிருஷ்ணனின் குருதிவழி, ம.நவீனின் சிகண்டி உட்பட பல நாவல்களையும் நான் விமர்சித்து விரிவாகவே எழுதியிருக்கிறேன். கூடவே வாசு முருகவேலிடம் இருப்பது தனித்த உரைநடையே அல்ல. இளங்கோ டிசே எதைத் தனித்த உரைநடை என்கிறார்? குழப்பங்களும் இடறலுமான மொழி. பல இடங்களிலும் குழம்பிக் கிடக்கிறது. வாசு முருகவேலுக்கு சரியாக இன்னும் உரைநடையே எழுதவரவில்லை. அவருடைய மணிபல்லவம் வரை வாசித்திருக்கிறேன். மணிபல்லவம் மட்டுமே அவரது ஓரளவு குறிப்பிடத்தக்க இலக்கிய முயற்சி. ஆனால் அதுவும் இன்னும் அரசியல் சராசரித்தனங்கள் மலிந்திருக்கும் எளிமையான ஒற்றைப்படைப் பிரதி. அதில் நல்ல அம்சம் சில உண்டு. சில அபூர்வமான தருணங்கள். காலகட்டம், மனநிலை, சூழல் ஓரளவு நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. அந்தக் கால நயினாதீவின் புறச் சூழல் ஓரளவு நன்றாகப் பதிவாகியிருக்கிறது. அங்கு தனித்து காவலிருக்கும் ஒரு இராணுவவீரன் தனிமை. சிறிய உள்ளம் கையளவு தீவு. இராணுவக் கவலரண், போராடும் மக்கள் என புனைவுச் சூழலுக்கான பெரிய இடமிருக்கும் வெளி. ஆனால் ஒரு சில கூரிய பண்பாட்டு பகடிக்கு அப்பால் புனைவாக அதன் இடம் மிகச் சிறியது. அது செல்ல வேண்டிய தூரம் அதிகம்.
இன்னொரு இலக்கிய விமர்சனம், கருத்துதிர்ப்பை, மதிப்பீடுகளை ஏதோ அதிகாரச் செயற்பாடாக இவர்கள் முன்வைக்கிறார்கள். தொடர்ந்து இதையே இவர்கள் வலியுறுத்துகிறார்கள். இவர்களது கட்டுரைகளில் தவறாது இடம் பெறும் மூன்று கலைச் சொற்கள் எப்போதும் இருக்கும். அதிகாரபீடம். சனநாயகம். மாற்றுப்பார்வை. இளங்கோ டிசேக்கும் கொத்துரொட்டி தொடர்பில் ஒரு மதிப்பீடு இருக்கலாம், நித்தியானந்தா தொடர்பில் இருக்காலாம் ஆனால் இலக்கிய மதிப்பீடு மட்டும் எப்படி அதிகாரச் செயற்பாடு என்றாகிறது எனப் புரியவில்லை அல்லது ஏதோ அமைப்பின் பிரதிநிதிகளாக இருந்தா நாம் பேசுகிறோம். பண்பாட்டுச் சூழலில் ஒரு தரப்பு மட்டுமே. இதற்கு இருக்கும் ஒரே அதிகாரம் வாசக ஏற்பு. ஒப்பீட்டளவில் பாவனைகளுடன் எழுத்தை முன்வைக்கும் இளங்கோவுக்கு எங்களை விட அந்த அதிகார ஏற்பும் அதிகமிருக்கிறது. இது எப்படி பீடம் ஆகும். ஏதாவது யானை வந்து மாலையிட்டுத் தூக்கி அமர்த்திவிட்டிருக்கும் பீடமா இது. இல்லையே. மறுப்பதற்கும், நிராகரிப்பதற்கும் அத்தனை வெளியுமிருக்கும் சூழலிலேயே நாம் எழுதுகிறோம். உண்மையில் விமர்சனங்களுக்கான இடம் மிகச் சிறியது. விமர்சனக் கருத்துகள், பார்வைகள் விரைவிலேயே காலாவதியாகிவிடும். அது தெரிந்ததே. ஆனாலும் அது இலக்கியம் சார்ந்த வரையறைகளை, பார்வைகளை, எதிர்பார்ப்பை, மதிப்பீட்டை நாம் சுட்டியபடியே இருக்க வேண்டும். அது பண்பாட்டுக் கடமை. அதாவது, விமர்சனத்திற்கு சமூக விளைவு இருக்கலாம்; அதனால் விமர்சனம் தன்னிலேயே ஓர் அதிகாரச் செயற்பாடாகிவிடாது. அது ஊடுபாவும் பல விசைகளின் ஏற்பும் மறுப்பினாலும் ஆனது. என்னுடைய ஈழ நாவல்கள் பற்றிய கட்டுரையை படித்த மூத்தவர் ஒருவர் இப்படிச் சொன்னார். கட்டுரை நன்று. அதில் சொன்னதெல்லம் வரிக்கு வரிஉண்மை. ஆனால் அந்த வரையறைக்குப் பொருத்தமாக ஒரே ஒரு நாவல் மட்டும் இந்த உலகில் இருக்கிறது. அது பைபிள் என்றார். கட்டுரையில் நாவல் எதிர்பார்ப்பு அத்தகைய விரிவானது, பெரியது. ஆனால் அது எதிர்பார்ப்பு மட்டுமே”
-தர்மு பிரசாத்
(தர்மு பிரசாத்)
உரைநடையில் செல்வாக்கு பற்றி நிகழும் விவாதத்தில் இளங்கோ டிசேவால் எழுதப்பட்ட பதிவிற்கான தர்மு பிரசாத்தின் எதிர்வினை : இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்
பித்தம் தெளிய வைத்தல் – கிரிசாந்
முளைத்தலெனும் தொடர் – ஜெயமோகன்

