வேழாம்பல் தவம் நேர்காணல் தொடர்பில் பிரான்சைச் சேர்ந்த எழுத்தாளரும் விமர்சகருமான ப. பார்தீ மேலும் சில கேள்விகளை கேட்டிருக்கிறார். அவருக்கான பதில்களைக் கீழே தொகுத்திருக்கிறேன்.
அன்புள்ள தர்மு பிரசாத், கிரிசாந்,
கேள்வி : இலக்கியம் சார்ந்த உங்கள் உரையாடல் ஒரு படைப்பாளியின் அகத்தேடல், மொழி, புனைவு, இலக்கிய ரசனை ஆகியவற்றை அறிந்துகொள்வதற்கான வாய்ப்பைத் தருகிறது. குறிப்பாக, படைப்பு உருவாகும் உள்முரண்பாடுகளையும் எழுத்தாளன் தன்னைக் கடந்து செல்ல வேண்டிய அவசியத்தையும் பேசுகிறது.
ஆனால், ஒரு படைப்பாளியின் தீவிரத்தைப் பேசுவதோடு இலக்கியத்தின் தரத்தைத் தீர்மானித்துவிட முடியாது. அந்தத் தீவிரம் படைப்பில் எவ்வாறு வெளிப்படுகிறது, அதன் அழகியல் என்ன,அதன் அரசியல் நோக்கமென்ன அதன் பலவீனங்கள் எவை என்பவற்றையும் ஆராய வேண்டும். இலக்கியம் என்பது படைப்பாளியின் அகத்தேடல் மட்டுமல்ல; அது சமூகத்துடனும், வாசகர்களுடனும், முரண்பாடுகளுடனும் நிகழ்த்தும் தொடர்ச்சியான உரையாடலும்கூட. அந்த அடிப்படையில், இந்த உரையாடல் எனக்குள் எழுப்பும் கேள்விகளை உங்களிடம் விட்டுச் செல்கின்றேன்.
கேள்வி : படைப்பாளியின் தனிப்பட்ட அனுபவமும் அகத்தேடலும் இலக்கியமாக மாறுவது முக்கியமானதுதான். ஆனால், அந்தத் தனிப்பட்ட அனுபவம் சமூகத்தின் பொதுவான அனுபவமாக மாறுவதற்கான அளவுகோல் என்ன? படைப்பாளியின் தீவிரத்தை மதிப்பிடும்போது, தனிப்பட்ட ரசனைக்கும் இலக்கிய விமர்சனத்திற்கும் இடையிலான வேறுபாட்டை எவ்வாறு தீர்மானிக்கிறீர்கள்?
பதில் : படைப்பாளி என்பவர் தன் பண்பாட்டின் கூட்டு நனவிலியின் வாயிலொன்றைத் தன்னில் திறந்து கொண்டவர். ஆகவே தான் அவருக்குப் பண்பாட்டில் பெரிய இடம் அளிக்கப்படுகிறது. வள்ளுவனோ கம்பனோ பண்பாட்டின் திரண்ட நுண்மையையும் கவித்துவத்தையும் அதனூடாகத் தரிசனங்களையும் அளித்தவர்கள். அதற்காக அவர்கள் அனுபவித்த சொந்த அனுபவங்கள் மட்டும் அவர்களைப் பெரும்படைப்புகளை எழுதச் செய்ய முடியுமா என்றால் இல்லை என்றே சொல்ல முடியும். ஜெ ஒரு உதாரணம் சொல்லியிருப்பார். கம்ப ராமாயணத்தை எழுதியவர் தான் ஏரெழுபதும் எழுதியிருக்கிறார். ஏரெழுபது ஒரு சாதாரண படைப்பு. ஆனால் அவர் ராமாயணத்தை தமிழில் எழுதிய போது எழுந்து வந்தது வேறொன்று. அவரில் விழித்துக் கொண்டது பண்பாட்டு நனவிலியின் பெருவாயில். ஆகவே தான் என்னுடைய பார்வையில் நம் திறன்கள், உழைப்பு, தீவிரம் என்பவற்றுக்கு அப்பாலும் ஒரு தற்செயலாகவே பெரும்படைப்பை எழுதக் கூடிய ஆழுள்ளம் விழித்துக் கொள்கிறது என நம்புகின்றேன். கம்ப ராமாயணத்தை எழுத வேண்டுமென்றால் ஏரெழுபதும் எழுதத் தான் வேண்டும். அதற்காக ஏரெழுபது போன்ற படைப்பை எழுதுபவர்கள் எல்லாம் கம்ப ராமாயணம் போன்ற ஒன்றை எழுத முடியாது. அது ஒரு தற்செயல்.
ஆனால் அந்த தற்செயல் நிகழ சூழல் இருக்க வேண்டும். அதைத் தான் நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறேன். ஒரு பெரும்படைப்பாளி உருவாக பத்து நல்ல படைப்பாளிகள் வேண்டும். அவர்களுக்குள் முட்டி மோதி வெடித்தே ஒரு பெரும்படைப்பாளிக்கு தன் அகக்கண் திறக்கிறது. அப்படி அது திறந்து கொள்ள அவர் அந்தப் பெருவாயிலை நோக்கி முட்டி முட்டிக் குருதி வழியக் கிடக்கும் தீவிரம் தேவை.
தனிப்பட்ட ரசனைக்கும் இலக்கிய விமர்சனத்துக்கும் பெரிய வேறுபாடுகளை நான் பார்க்கவில்லை. நம் ரசனையிலிருந்தே நாம் ஒன்றை மதிப்பிடுகிறோம். புறவயமாக எந்த நெருக்கமும் இன்றி மதிப்பிடுவது இலக்கியம் பற்றிச் செய்யப்படும் பல்கலைக்கழக மட்ட ஆய்வுகளே. நம் சொந்த ரசனையுடன் மோதும் படைப்பையே நாம் எதிர்கொள்கிறோம். அது நம் ரசனையை, வாழ்க்கைப் பார்வையை மேம்படுத்தினால் அதை நல்லதென்று சுட்டுகிறோம். அது நம் ரசனையின் நுண்மையை தொடவில்லையென்றால் அதை நாம் புறவயமாக மதிப்பிடுவது அதன் போதாமையைச் சுட்டுவதாக இருக்கும். நான் ரசனை விமர்சனத்தையே முக்கியமானதாக கருதுகிறேன். அதில் தான் இன்னொரு பார்வைக் கோணம் உயிர்ப்புடன் எழுந்து வருகிறது.

கேள்வி : சமகால ஈழ இலக்கியத்தில் தீவிரமான படைப்பாளிகள் குறைவாக உள்ளனர் என்று மதிப்பிடும்போது, அந்த மதிப்பீட்டுக்கான அளவுகோல்கள் என்ன? குறிப்பிட்ட படைப்புகளின் மொழி, படிமம், வடிவம், கதைசொல்லல் ஆகியவற்றை நேரடியாக ஆராய்ந்து, அவற்றின் பலங்களையும் பலவீனங்களையும் ஒப்பிட்டுப் பேச வேண்டிய அவசியம் இல்லையா?
பதில் : ரசனை விமர்சனங்களின் மூலமோ அல்லது, தேர்ந்த வாசிப்பாளர்களின் பரிந்துரைகளின் மூலமோ தான் நான் படைப்புகளை வாசிக்கிறேன். சிறு வயதில் இருந்தே அப்படித் தான். இடைநிலை இலக்கியங்களைக் கூட சில நூறு புத்தகங்கள் தான் வாசித்திருப்பேன். அனைத்தையும் வாசித்து மதிப்பிட்டு பகுப்பது நேரவிரயம். நமக்கென்று சொந்த ரசனையால் உண்டான அளவு கோல் நமக்குள்ளேயே இருக்கிறது. அந்தச் சொந்த ரசனையின் உள்ளுணர்வையே ஒருவர் நம்ப வேண்டும்.
தேர்ந்து முன் செல்க. தட்டையான பலகை நீரின் பரப்பை அளக்கலாம். ஆனால் கூர்முனை கொண்ட ஈட்டியே ஆழங்களை நோக்கிச் செல்லும். கூர்ந்தும் முன் செல்க. அகலத்தை விட ஆழமே இலக்கியத்தில் முக்கியம்.
கேள்வி : இலக்கிய வளர்ச்சியைப் படைப்பாளியின் தனிப்பட்ட தேடலுடன் மட்டும் இணைத்துப் பார்க்க முடியுமா? பதிப்புச் சூழல், சிற்றிதழ்கள், வாசகர்கள், பொருளாதார நெருக்கடிகள், இலக்கிய நிறுவனங்கள் போன்றவை படைப்பின் உருவாக்கத்திலும் அதன் வளர்ச்சியிலும் செலுத்தும் தாக்கங்கள் குறித்து நாம் எந்த அளவுக்கு விவாதிக்கிறோம்? எழுத்தாளரின் நோக்கத்தைத் தாண்டி, வெவ்வேறு சமூகப் பின்னணிகளைக் கொண்ட வாசகர்கள் ஒரு படைப்புக்கு உருவாக்கும் புதிய அர்த்தங்களையும் இலக்கிய வளர்ச்சியின் பகுதியாகப் பார்க்க வேண்டாமா?
பதில் : சூழலுக்கு பெரிய இடம் இதில் உண்டு தான். அதனாலேயே நாங்களும் தொடர்ந்து எழுதுகிறோம், செயற்படுகிறோம், உருவாக்குகிறோம். இலக்கியத்தில் ஒருவர் படைப்பாளி ஆவதற்கு இலக்கியச் சுற்றமே முக்கியமானது. பொதுச்சூழல் மேல் விமர்சனத்தை வைக்கலாம். ஆனால் அது ஒருவரின் சொந்த படைப்பிற்கு உதவாது. அவர் உருவாக்கிக் கொள்ளும் இலக்கிய நண்பர்கள், அவரின் தன்னார்வம், திறன்கள், விரிவான உரையாடல் என்பனவே முக்கியம். என் சொந்த அனுபவத்தின் அடிப்படையில் இவையே பயன் தரக் கூடியவை. சூழலை விமர்சித்துக் கொண்டிருப்பது ஒரு படைப்பாளியின் மைய ஆளுமையுடன் இணைந்தது. நமது விவாதங்கள் சூழலை நிச்சயமாக அசைத்துக் கொண்டிருப்பதை நீங்களும் அறிவீர்கள். அதே நேரம் படைப்பும் முக்கியம். ஒரு படி மேலாக விமர்சனங்கள், விவாதங்களை விட படைப்பே பிரதானம்.
எழுத்தாளரொருவர் இன்ன, இன்ன நோக்கங்களுக்காக ஒரு படைப்பை எழுதுவதில்லை. அவரில் வெளிப்படும் ஒரு தொந்தரவு எதற்காக நிகழ்கிறது என அவரே கூட முழுமையாக அறிய முடியாது. எனக்கு இருக்கும் அரிதான அனுபவங்கள் இன்று வரை படைப்பாக வரவில்லை. என் வாழ்க்கைக்கு வெளியே உள்ளவை தான் என் கனவுகளை தொந்தரவு செய்கின்றன. திறந்து இருத்தலே படைப்பிற்கு அவசியமானது. திறந்து வைத்த காயத்தைப் போல இருக்க வேண்டும். குத்தி உறிஞ்சிடும் தொந்தரவுகளை எதிர்கொண்டு உணர்வதே எழுத்தாளரின் இடம். எது வந்து குத்தும் என எந்த முன் நிபந்தனையும் இல்லை.
பல்வேறு வகையான வாசிப்புகள் ஒரு ஆக்கத்தின் மீது நிகழ்வது இயல்பானது. அவரவர் புரிதல், ரசனை சார்ந்து அதை மதிப்பிடுவார்கள். அவற்றை படைப்பாளி கவனிக்கலாம். அவற்றில் அவர் அறிந்து கொள்ள புதிதாக இருப்பவற்றை எடுத்துக் கொள்ளலாம். அவை இலக்கிய வளர்ச்சியின் ஒரு பகுதியே. அதற்காகத் தான் வாசகர்களையும் எழுதச் சொல்லி எப்பொழுதும் ஊக்குவிப்பதுண்டு.
கேள்வி : முன்னோடிகளின் பாதிப்பிலிருந்து புதிய படைப்பாளிகள் எவ்வாறு தமது தனித்துவத்தை உருவாக்குகிறார்கள்?
பதில் : பாதிப்பிலிருந்து புதியது உருவாகுவது காலமாற்றத்தில் நிகழ்வது. இளம் படைப்பாளி தொடர்ந்து படைப்புகளை எழுதிக் கொண்டிருக்கும் பொழுதே நாம் அதை அறியலாம். எங்கு விலகுகிறார், எதைப் புதிதாகச் சேர்க்கிறார் என்பதிலேயே அவருடைய தனித்துவம் உருவாகி வருகிறது. முன்னோடிகளின் உதாரணத்தைப் பாருங்கள், பாரதியிலிருந்து நீளும் ஒரு கோடு மனுஷ்ய புத்திரனில் இருக்கிறது, அங்கிருந்து சதீஸ்குமார் சீனிவாசனுக்கு நீள்வது இன்னொன்று. ஆனால் அனைத்தையும் இணைக்கும் சரட்டென மொழியின் எளிமையும் உரைநடைத் தன்மையும் இருந்தாலும் மூவரும் தனித்த ஆளுமைகளாக தோன்றுவது எப்படி? அது தான் வித்தியாசம். அது படைப்பினால் உருவாகி வரும்.
கேள்வி : மரபைத் தொடர்வது, மறுப்பது, மறுவாசிப்புச் செய்வது ஆகியவற்றுக்கிடையில் புதிய இலக்கியத்தின் தனித்துவத்தை எவ்வாறு அடையாளம் காண்கிறீர்கள்?
பதில் : அவை என்றுமுள்ள மானுடச் சிக்கல்களை கணக்கில் எடுக்கின்றனவா, அவற்றை நோக்கி விரிகின்றனவா எனப் பார்க்கிறேன். அந்த அம்சங்கள் துலக்கமாகத் தெரிபவரை பின் தொடர்கிறேன்.
கேள்வி : அதேவேளை, பெண்ணிய எழுத்துகள், சாதிய அனுபவங்கள், தொழிலாளர் வாழ்வு, விளிம்புநிலை மக்களின் குரல்கள், புலம்பெயர் இலக்கியம் போன்றவற்றை மதிப்பிடுவதில் நமது விமர்சன மரபு எந்த அளவுக்கு திறந்திருக்கிறது? இலக்கியத் தரத்தைத் தீர்மானிக்கும் அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்பதையும் நாம் கேள்விக்குட்படுத்த வேண்டாமா?
பதில் : நம்மிடம் இலக்கியத்தின் நுண்மைகளைத் தொட்டுச் சொல்லும் விமர்சன மரபு இல்லை. இங்கிருப்பது ஒரு வகை தனி வாசிப்புகளின் கூட்டுக் கச்சேரியே. தர்மு பிரசாத் தான் நம்மில் நெடுங்காலம் கழித்து உருவாகியிருக்கும் கூர்மையான விமர்சகர்.
இலக்கியத் தரத்தை தீர்மானிக்கும் முற்றதிகாரம் இருப்பது என்றுமுள்ள காலத்திடம் மாத்திரம் தான். கேள்விக்குட்படுத்த முடியாத அதிகாரம் கொண்டது அது மட்டும் தான். மிகுதி அத்தனையையும் யாரும் எப்படியும் கேள்விக்கு உட்படுத்தலாம்.
கேள்வி : அரசியல் கருத்தியல் ஒரு படைப்பின் அழகியலைப் பாதிக்கிறதா?
இல்லை. பாதிக்காது. அரசியல் புரிதலென்பது மானுடரைப் புரிவதல்ல. நான் மானுடரையும் அவர்களை ஆக்கிய விசைகளையுமே தொடர்கிறேன். இரத்தத் துளிகளை வேட்டை நாயென.
கேள்வி : அல்லது அரசியல் சார்புள்ள ஒரு படைப்பும் கலைத்தன்மையில் உயர்ந்த படைப்பாக இருக்க முடியுமா?
அதற்கு எனக்கு உதாரணங்கள் தோன்றவில்லை.
கேள்வி : கருத்தியலை முன்வைக்கும் படைப்புகளையும் கருத்தியலையே கேள்விக்குட்படுத்தும் படைப்புகளையும் எவ்வாறு மதிப்பிடுகிறோம்? இங்கு கருத்தியலுக்கும் அழகியலுக்கும் இடையிலான உறவை எளிமையான எதிர்நிலையாகப் பார்க்காமல், அவற்றுக்கிடையிலான முரண்பாடுகளையும் சிக்கல்களையும் ஆராய வேண்டியிருக்கிறது.
பதில் : தர்க்க விளையாட்டாக படைப்பு சுருங்க முடியாது. விவாதம் ஒரு பகுதி. அதில் கருத்தியல்கள் மோதிக் கொள்வது மானுட சுபாவத்தினால். மானுட சுபாவமே முதன்மையாக நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியது. கருத்தியல்கள் நாம் காயத்துக்கு வைத்துக் கொள்ளும் புற்று மண்ணைப் போல.
கேள்வி : இலக்கியத்தின் போதாமைகளை அடையாளம் காண்பது அவசியமானது. ஆனால், அவற்றைச் சுட்டிக்காட்டுவதோடு நின்றுவிடாமல், புதிய படைப்பாளிகளை உருவாக்கவும், ஆரோக்கியமான விமர்சன மரபை வளர்க்கவும், படைப்புகளுக்கிடையிலான திறந்த விவாதங்களை உருவாக்கவும் நாம் என்ன நடைமுறை முயற்சிகளை முன்னெடுக்கிறோம்?
பதில் : பெரிய இலட்சியங்களை நாம் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் படிப்படியாகத் தானே வளர இயலும். நான் விரிவாக என் தளத்தில் இலக்கியம் பற்றி எழுதுகிறேன். புனைவுகள் வெளியாகின்றன. இந்த நேர்காணலும் அந்தப் பெரும் பயணத்தின் ஒரு அடியே. உங்கள் கேள்விகள் இன்னொரு அடி. இவை ஒவ்வொன்றும் நாம் நேரம் அளித்து உருவாக்கும் முயற்சிகள் தான். இதன் பயன்களை நாம் இன்னும் பத்தாண்டுகளில் உணரலாம்.
கேள்வி : இன்னொரு கேள்வியும் இருக்கிறது. ஒரு படைப்பாளியைப் பற்றிய உயர்ந்த மதிப்பீடுகளுடன் உரையாடலைத் தொடங்கும்போது, அந்த மதிப்பீடுகளையே கேள்விக்குட்படுத்துவதற்கான இடம் குறைந்துவிடாதா? ஒரு படைப்பாளியின் கருத்துகளுடன் முரண்படுவதற்கும், அவரது படைப்பின் பலவீனங்களைச் சுட்டிக்காட்டுவதற்கும், மாற்றுக் கருத்துகளை முன்வைப்பதற்கும் உரையாடலில் போதிய இடம் இருக்க வேண்டாமா? விமர்சனம் என்பது ஒருவரை உயர்த்துவதற்கோ தாழ்த்துவதற்கோ அல்ல; படைப்பையும் அதன் பின்னணியையும் இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்வதற்கான முயற்சி அல்லவா?
பதில் : நீங்கள் ஜெயமோகன் பற்றிய என் பக்திபாவ பதில்களிலிருந்து இதைக் கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். சில நேரங்களில் ஒரு எழுத்தாளர் எங்கள் மொத்த வாழ்வையும் எங்களுக்கு மீட்டுக் கொடுக்கலாம். எனக்கு ஆரம்பத்தில் தஸ்தவேஸ்கி மேல் அப்படி ஒரு பக்திபாவம் இருந்தது.
ஜெயமோகனை முன்னர் நான் பல தடவைகள் எள்ளி நகையாடியிருக்கிறேன். அவரை மிகக் கடுமையாக பேசியிருக்கிறேன். முதற் சிக்கல் அரசியல் சராசரித்தனத்துடன் அவரைப் பார்த்தது. ஈழத்துச் சூழல் நம் இரண்டு கண்களுக்கும் தனித்தனியே அணிவிப்பது இரண்டு வில்லைகளை. ஒன்று அரசியல் சராசரித்தனம். மற்றொன்று சதிக் கோட்பாடு. ஜெயமோகன் தினமும் காலையில் ஐந்து பதிவுகளை தன் இணையத்தில் போடுவது தன் வாசகர்கள் எங்கும் வேறெவரையும் வாசித்து விடாமல் அவரையே பின் தொடர்வதற்கான உளவியல் உத்தியென்று மிக வலுவாகச் சொல்லும் தரப்பெல்லாம் இங்கு உண்டு. இப்படி அவரைப் பற்றி நானே நூறு சதிக் கோட்பாடுகள், கருத்துப் பிழைகள் என எழுதித் தர முடியும். ஆனால் அது அல்ல அவர் என்பதை நான் உணர்ந்த இடம் வேறொன்று. தமிழ்ப்பண்பாட்டின் நனவிலியின் மாபெரும் தோரண வாயில்களைக் கொண்ட பெருங்கதவமொன்றைத் திறந்து கொண்டு வந்த முகபாடங்கள் அணிந்த பெருவேழம் அவர். அதை அவருடைய படைப்புகளின் ஊடாக உணர்ந்தேன். ஒரு எழுத்தாளர் தன் தொகுத்துக் கொண்ட முழு ஆளுமையும் வெளிப்படும் இடம் படைப்புத் தான். அதற்கான புற விசைகளை தனக்குத் தானே ஊட்டிக் கொள்ளவும் மனப்பயிற்சியை கூர்தீட்டவும் பிற கருத்துகளை எழுதுகிறார்கள். நீங்களும் படைப்புகளை எழுதக் கூடியவர். உங்கள் படைப்புக் கணத்தில் வெளிப்படும் ஆளுமை உங்கள் அன்றாட ஆளுமையிலிருந்து எவ்வளவு பெரியது என்பதை உணர்ந்திருப்பீர்கள். அல்லது எவ்வளவு வித்தியாசமான நுண்ணுணர்வு கொண்டது என்பதையாவது உணர்ந்திருக்க முடியும். ஜெயமோகன் அப்படி மாபெரும் நுண்முனை நீண்ட சிகரம். அதன் முன்னால் ஒரு குட்டி வேழத்தைப் போல என் அகம் பணிகிறது. அவருடைய கருத்துகளில் மாற்றுக் கருத்துகள் இருந்தால் நிச்சயம் என் தரப்பை எழுதுவேன். அது என்னைத் தனித்துவமானவனாகக் காட்டிக் கொள்ள வேண்டும் எனும் முனைப்பினால் அல்ல. அது வெற்றாணவம்.
அறிவாணவத்துக்கும் வெற்றாணவத்துக்கும் உள்ள வேறுபாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தனித்துவம் என்பது நான் யாருடைய கருத்தினதும் நீட்சியும் வளர்ச்சியும் அல்ல எனத் தருக்கி நிற்பதல்ல. அத்தகையவர் தனித்துவம் எனும் அம்சத்தை விளங்கவில்லை. ஏற்கெனவே உள்ள செல்வத்தின் மீது மேலுமொரு அழகிய கல்லை வைப்பது தான் தனித்துவம். மாபெரும் இலக்கியம் எனும் செல்வக் குவியல் மேல் உங்கள் கல் வைக்கத் தகுதியானதாக ஆகுவது தான் உங்கள் தனித்துவம்.
முற்றிலும் என் ஆன்மா தனித்து நின்று உணர்கொம்புகள் கருகி வீழும் நிலையில் எந்தத் தாதையும் தொட்டு மீட்க முடியாத போது என் ஆழுள்ளத்தின் தவிப்பை அவர் எங்கிருந்தோ மீட்டெடுத்தார். ஜெயமோகனின் ஒரு கூற்று உண்டு, “தன் வாழ்நாளில் இறந்து மீண்டும் பிறக்காதவன் வாழவே இல்லை என்று சொல்வேன். நம்மில் பெரும்பாலானவர்களுக்கு ஏறத்தாழ அதைப்போன்ற ஒரு தருணம் வாழ்க்கையில் அமைந்திருக்கும். நம்மை நாம் கண்டடையும் கணம் அது. ஆனால் முன்பிருந்த நாம் எச்சமில்லாமல் அழிந்து, முற்றிலும் புதிய ஒருவர் நம்மில் எழுவாரென்றால்தான் அது மறுபிறப்பு. மறுபிறப்பு எடுத்தவனுக்கு வாழ்க்கையில் குழப்பங்கள் இல்லை. அலைச்சல்களும் இல்லை. அவனுக்கு என்ன செய்ய வேண்டுமென்பது தெள்ளத்தெளிவாக தெரிந்திருக்கும்”. இப்படி ஒரு கூர்மையான வாழ்க்கை அவதானத்தை சொல்ல ஒரு எழுத்தாளர் நம் மொழியில் இன்றிருப்பது பெரு வாய்ப்பு. மானுட வாழ்க்கையின் அலகிலா ஆடலின் ஆழத்தை பார்க்கக் கூடிய கண் கொண்ட ஒருவர். அவரை மறுத்தே அவரை வந்தடைந்தேன். அதுவே எந்த முன்னோடியையும் எதிர்கொள்ளும் வழி. ஆனால் அந்தப் பேராளுமையின் விராட ரூபத்தை படைப்பில் கண்ட பின்னர் கரைந்து விட்டேன். என் நண்பர்கள் பலரும் இதைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். கொஞ்சம் கமுக்கமாகவாவது வைத்துக் கொள். ஏன் இவ்வளவு அவரை முன் வைக்கிறாய் என.
எனக்கு பெற்ற உதவியை மறக்கும் பண்பு அறவே கிடையாது. ஆன்மீகத்திலோ கலையிலோ ஓர் ஆசிரியர் அமைவது பெரும் பேறு. அதை மறுப்பதும் அவர்களை முன் வைக்கத் தயங்குவதும் கள்ளத்தனம். அதை நான் செய்ய மாட்டேன். நான் யாரை முன் வைக்கிறேன் என்பதும் நான் தான். அதைச் சொல்வது முக்கியம். அதை அறிவு நாணயம் எனச் சொல்வேன். என் தளத்தை தொடர்ந்து வாசிப்பவர்களுக்குத் தெரியும் எனக்கென ஒரு ஆசிரியர் நிரையை நான் தொடர்ந்து முன் வைக்கிறேன். ஆனால் ஜெயமோகன் பேராளுமை என்பதால் பிறரை விட கவனத்தை ஈர்க்கிறார்.
எனக்குத் தெரிந்து ஜெயமோகனை இவ்வளவு தூரம் ஆசிரியராக முன் வைக்கும் போக்கு இளம் எழுத்தாளர்களிடம் அரிது. யதார்த்தன் எழுதுவார். தர்மு பிரசாத் ஆங்காங்கு தொட்டுக் காட்டுவார். நான் பிறப்பில் கவிஞன். இயல்பிலேயே மிகையான உணர்ச்சிவசமானவன். என் இயல்பே என் எழுத்தின் சுபாவத்தை உருவாக்குகிறது. ஆகவே தான் என் வாழ்வை மீட்டெடுத்த என் ஆசிரியரை எந்தத் தயக்கமுமின்றி முன் வைக்கிறேன். பரப்புவேன். பாடுவேன்.
மூன்று மாதங்களாகத் தான் ஜெயமோகன் தன் தளத்தில் என்னைப் பற்றியும் யதார்த்தன், தர்மு பிரசாத் பற்றியும் எழுதி வருகிறார். ஆனால் அதை எதிர்பார்த்தா நாம் எழுதுகிறோம். இல்லை, அவர் நம்மை அடையாளம் கண்டு கொள்ளும் பொழுது எழும் உவகையை நான் அனுபவித்துக் கொள்கிறேன். அது மாணவர் அடையும் இன்பம். அதே போல நாளையே அவர் எனது எழுத்துகளை கடுமையாக விமர்சிக்கவும் கூடும். ஆனால் அது கற்றலின் ஒரு பகுதி தான். அதுவும் முக்கியமான பகுதி. ஏற்கும் போதல்ல, அவர் மறுக்கும் போதே நாம் கூர் கொள்ள முடியும். எங்கள் நாவல்களை வாசித்து விரிவாக எழுதுவதாகச் சொல்லியிருக்கிறார். (மூன்று ஈழத்து நாவல்கள்) அவர் ஈவிரக்கமற்ற பழைய ஜெயமோகனாக நின்று மதிப்பிட்டுச் சொல்வதையே நான் விரும்புவேன். அங்கிருந்தே நான் முன்னகரும் வழித்தடங்கள் பிடிகிடைக்கும். அதற்கு ஒருவர் அஞ்சவே கூடாது. அது தான் அவர் எனக்குச் செய்யக் கூடிய பேருதவி. அய்யனே, ஓர்மையுண்டோ ஈமுகம் என எண்ணிக் கொள்வது போல ஒரு come back thug life கொடுத்தார் என்றால் உள்ளபடியே மகிழ்ச்சி.
மேலும் அப்படி நாங்கள் சிலர் அவரை முன்வைப்பதால் சூழலில் நாங்கள் அடைவதை விட இழப்பது அதிகம். தமிழ் இலக்கியச் சூழலில் அவரளவுக்கு எதிரிகள் கொண்ட இன்னொருவர் இல்லை. அஜிதனுக்கு அடுத்து அத்தனை கசப்பும் எங்கள் மீதும் விழும். அத்தகைய கசப்புகளையும் எதிர்மனநிலையையும் நான் ஒரு புல்நுனியெனவும் மதிக்கவில்லை. ஜெயமோகனின் இன்னொரு கூற்று உண்டு. “பெருஞ்செயல்களுக்காக நாம் எழும்போது சிறியவை நமக்கு எதிராகத் திரள்வதில்லை, அவை சிதறி விலகிவிடுகின்றன. பிற பெரியவையே நிகரான ஆற்றலுடன் எழுந்து வந்து வழி மறிக்கின்றன. பெருங்கனவுகளை காக்கின்றன இரக்கமற்ற தெய்வங்கள். அவை விழிநகைக்க கைசுட்டி கேட்கின்றன, நீ எதை ஈடுவைப்பாய்? எதையெல்லாம் இழப்பாய்? நம் கனவின் மதிப்பை அதன்பொருட்டு இழப்பவற்றைக்கொண்டே அறிகிறோம்”.
நான் பெருஞ்செயல்கள் செய்யவே பிறந்தவன். ஆகவே அவர் தான் என் போன்ற ஒருவனுக்கு ஆசிரியராக அமைய முடியும்.
கேள்வி : இறுதியாக, இலக்கிய வளர்ச்சி என்பது சிறந்த படைப்பாளிகளை அடையாளம் காண்பது மட்டும்தானா? அல்லது சிறந்த படைப்புகள் உருவாகவும், அவை விமர்சிக்கப்படவும், புதிய குரல்கள் பழைய அதிகாரங்களை எதிர்த்துக் கேள்வி எழுப்பவும், ஏற்கப்பட்ட மதிப்பீடுகள் மறுபரிசீலனை செய்யப்படவும் கூடிய ஓர் இலக்கியச் சூழலை உருவாக்குவதுமா?
பதில் : அடையாளம் காண்பது அச்செயல்முறையின் ஒரு பகுதி. விசாரணை என்பது இலக்கியத்தின் அடிப்படை இயல்பு. வகுத்தும் தொகுத்தும் நாம் அதைச் செய்வோம்.

