மூர்க்கனும் விழைவியும் – கீதிர் கவிதைகள்

கவிஞர் ஆனந் குமார் முகநூலில் கீதிர் என்பவரின் கவிதைகளை பகிர்ந்து பாராட்டியிருப்பதாக நண்பர் ஒருவர் அனுப்பி வைத்தார். கீதிரின் முகநூலில் போடப்பட்டிருந்த கவிதைகளை வாசித்துப் பார்த்தேன். சிலவற்றை சுட்டிக் காட்ட வேண்டும் என்று தோன்றுகிறது. 

நவீன கவிதைகளின் அடிப்படையான சிக்கல் இலங்கைச் சூழலில் படைப்புச் சார்ந்து அதன் மொழி சார்ந்து இருக்கிறது. கீதிரின் கவிதைகளின் படைப்பு மொழியில் வெளிப்படும் ‘பச்சையான பெண்’ அல்லது ‘விழைவு கொண்ட பெண்’ உடனடியாக கவனத்தை ஈர்க்கக் கூடியவள். அதற்கொரு இரண்டாயிரம் வருடப் பாரம்பரியம் நம் மொழிக்கு இருக்கிறது. உடலை எலும்பாக்கி தலை கீழாய் நடந்து கொண்டிருந்த காரைக்கால் அம்மையார் தொடக்கம் தெய்வத்தைக் காதலித்து தன் உடலை கவிதையில் ஏந்தி தகிக்கத் தகிக்க காமத்தை எழுதிய ஆண்டாள் தொட்டு அனாரில் தொடரும் தெய்வத்தின் காமம் போன்ற தெய்வீகத்தன்மை முடிச்சிட்டு பொன்முகலியில் சீற்றமும் ஆங்காரமுமாய் வெளிப்படும் பெண் எனும் ஆதியியற்கையின் குரல் ஈறாக அதற்குப் பின்னரும் அதற்கொரு அறுபடாத முன்னவர் நிரை இருக்கிறது. அதனாலேயே இந்தக் கவிதைகளில் வெளிப்படும் விழைவும் தாய்மையும் கொண்ட ஆதாரமான இயற்கையான பெண் சட்டென்று அறிமுகமானவளாக இருக்கிறாள். கீதிர் அந்த நிரையின், அதன் பிறிதொரு தாளபேதத்தில் எழுதுகிறார். 

கீதிரின் கவிதைகளை உடனடியாகக் கவனிக்கச் செய்யும் இந்த அம்சத்துடன் சேர்த்து அவர் கவனிக்க வேண்டிய சிலவற்றை தொகுக்கிறேன். 

கவிதை என்பது மொழியில் நிகழும் கலை. எந்த மொழியில் அது வெளிப்படுகிறதோ அதன் அழகின் சேகரம் அதில் வெளிப்படுவது முக்கியமானது. அதற்கு நமக்கு சங்க இலக்கியமும் காவியங்களும் முன்னோடித் தமிழ் கவிதைகளின் வாசிப்பும் தேவை. அந்த மொழியில் எழுதப்பட்ட மிகச் சிறந்த சொல்லிணைவுகள், இசைத் தன்மை, தரிசனம், கவிதையின் இயல்புகள் என்பன சமகாலக் கவிதைகளுக்கு ஊட்டமாகவே இருக்கும். 

மொழிக்கு அலங்காரமின்மை வேண்டும், இசைத்தன்மை பொருட்டில்லை என்பன போன்ற வாதங்கள் இங்கு உண்டு. ஆனால் நான் அவற்றை முக்கியமானவையாகவே பார்க்கிறேன். தமிழ் போன்ற செவ்விலக்கியங்கள் தோன்றிய மொழியில் எழுதும் ஒருவர் அதன் மிக நீண்ட வரிசையின் இன்றைய குரல் என்ற தன்னுணர்வு கொள வாய்த்தல் ஒரு பேறு. அது நிகழ்க. 

கீதிரின் கவிதைகள் மொழி பெயர்ப்புக் கவிதைகளின் சொல்லாட்சிகள், நடைத்தன்மை ஆகியவற்றை கொண்டிருக்கின்றன. ஆரம்பத்தில் அப்படி தாக்கங்கள் நிகழ்வது இயல்பு. ஆனால் நமக்கு எந்த வகையான கவிதைகளுடன் பழக்கம் இருக்கிறது என்பது நம் சொந்தக் கவிதையில் தெரியும். செல்வத்தை வீணடிக்கத் தேவையில்லை. தொடர்ந்து நவீன கவிதை முன்னோடிகள், திருக்குறள், கம்பராமாயணம், சங்கக் கவிதைகள், பக்தி இலக்கியமென ஒரு கவிதை இலக்கிய சிலபசை மீண்டும் கருத்தூன்றி வாசிக்கலாம். 

இசைத்தன்மையும் முக்கியமானது. சந்தமோ அல்லது நேரடியான ஒத்திசைச் சொற்களையோ இங்கு குறிப்பிடவில்லை. அகமறியும் சந்தமொன்று மொழிக்குள் ஓடுகிறது. அதைச் சென்று தொடுவதே கவிஞர்களின் சவால். அதற்கான வாய்ப்பு கீதிரிடம் இருக்கிறது. உக்கிரமாகச் சென்று அந்த எரிமலைக் குழம்பில் குதித்து விட வேண்டியது தான். மொழிபெயர்ப்பு அல்லது பிற மொழிக்கவிதைகள், அந்த மொழிச்சூழலின் இசைத்தன்மை கொண்டவை. அவை இன்னொரு புறக் குரலாகவே தமிழுக்குள் இருக்கும். தன் சொந்த சுரத்தை அடையும் பறவையைப் போல சாதகம் செய்வது நல்லது. இசைத்தன்மை கொண்ட கவிதை வரிகளே நினைவில் தங்கும் தன்மை கொண்டவை. அந்த அம்சத்தை உணர்ந்தால் அது அகத்தாளத்தில் விழித்து விடும். 

கீதிருக்குள் இருக்கும் ராட்சத்தனமான மெய்காண் விழைவு கொண்ட பெண், இயற்கையை அதன் போக்கில் ஆளும் அரசியின் தோரணை கொண்ட பெண், காதலில் மெய்யான ஆணைத் தேடும் பெண், அவள் ஒரு நித்தியமான பெண். இந்த மூன்று அம்சங்களும் வெளிப்படாத தமிழ் பெண் கவிஞர்கள் அரிது. 

ஆண் கவிஞர்கள் ஒரு வகையில் தனக்குள்ளிருக்கும் ராட்சதனை சங்கிலி கட்டி இழுத்து வந்து நடுரோட்டில் வைத்து வித்தை காட்டி விட்டு சாவகாசமாக கூண்டில் அடைத்து விடுவார்கள். வெய்யிலின் கவிதைகளில் வெளிப்படும் விசை கொண்ட ஆணும் சதீஸ்குமார் சீனிவாசனில் காதலின் நடுக்கத்துடன் கையில் மலர் நடுங்க நின்றிருக்கும் ஆணும் அந்த ராட்சசனின் வெளிப்பாடுகள் தான். அந்த மூர்க்கனும் இந்த விழைவியும் உலகம் உருவாக்கிய அனைத்தையும் இருட்டில் இருட்டை கழற்றி வைத்து விட்டு ஒருவரை இன்னொருவர் தழுவிக் கொள்வதைப் போல இந்தக் கவிதைகளுக்குள் இருக்கும் இயற்கையான ஆவேசங்கள், மொழியை உதறிக் கொண்டு அந்தரத்தில் தழுவி முத்தமிட்டுக் கொள்கின்றன. 

மனிதரை ஆக்கிய விசைகளினால் அலைக்கழிக்கப்படும் கவிஞர்கள் மனிதரை நேருக்கு நேர் பார்த்து மன்னிக்கக் கூடியவர்கள். ஒரு மீட்பு போல நிகழக் கூடியவர்கள். கீதிரின் கவிதைகள் அத்தகைய உச்சங்களை மொழியில் அடைய வாழ்த்துகள். 

கிரிசாந்

கீழே அவரின் சில கவிதைகள். 

*

என் இருப்பையே குலைத்துப்போடும் 

ஒரு ஆணைக் காதலிக்க வேண்டும் 

என்று கனவு காண்கிறேன்

அவன் இல்லாதபோது 

எனக்குள் ஏதோ ஒன்று சிதைகிறது 

அது என்னை அழச் செய்கிறது 

பைத்தியமாக்குகிறது

பிறழ்வு எண்ணம் வரை தள்ளுகிறது

நடனமாடுவதைத் தவிர

வேறு எதையாவது 

செய்யத் தூண்டுகிறது

என் செல்லப் பிராணியான தோல்

நான் யாரையாவது காதலிக்க 

முயலும்போதெல்லாம்

தன் நாக்கை வெளியே நீட்டுகிறது 

இந்த வாழ்க்கையிலிருந்து 

இறக்க விரும்புகிறேன்

மரணத்தால் அல்ல

ஒரு பெண்ணின் 

ஆடையிலிருந்து கழன்று விழுந்த 

பொத்தானைப் போல

இந்த வாழ்க்கையிலிருந்து 

நழுவிச் செல்ல விரும்புகிறேன்

அந்தப் பெண்

அதை நீண்ட நேரம் தேடுவாள் 

பிறகு

துயரத்தால் ஏன் நிர்வாணமாக நின்றாள்

என்பதையே மறந்துவிடுவாள் 

‌.

பூமி சுருங்கிவிட்டது

இறந்தவர்கள் இப்போது

நின்றுகொண்டே தூங்குகிறார்கள்.

*

தோட்டத்தில்

ஒரு பூனையை மென்மையாகத் 

தடவிக்கொடுக்கிறேன்

அதை புலியாக மாற்ற விரும்புகிறேன்

ஆனால்

உறுமுவது நான்தான்

பறவையைத் தடவிக்கொடுக்கிறேன்

வெட்கமின்றியும் 

யாருடைய அனுமதியையும் 

கேட்காமலும் 

என் பெண்மையை நானே 

வருடிக்கொள்வதைப் போல.

*

தன் முதுகிலிருக்கும் 

மச்சத்தை 

அந்தப் பெண் 

நினைத்துப் பார்க்கிறாள்

அந்த மச்சத்திற்கு 

யாருமே முத்தமிட்டதில்லை 

அப்போதுதான்

தான் எவ்வளவு 

தனிமையில் இருக்கிறோம்

என்பதை அவள் உணர்கிறாள்.

*

காதலை அறியாத ஆண்களைத் 

திருமணம் செய்துகொள்ளும் 

பெண்கள்

ஒரு குலத்தையே 

பெற்றெடுத்தாலும் 

கன்னிகளாகவே இறக்கிறார்கள்

.

தன் காதலனைத் திருமணம் செய்துகொள்ளாத 

அந்தப் பெண்

தன் குழந்தைகளுக்குத் 

தாகத்தையே

பாலாக ஊட்டுகிறாள்.

*

காயமடைந்த 

ஓநாயைப் போல 

என் இதயத்தைப் பின்னால் 

இழுத்துக்கொண்டு நடக்கிறேன்

உன்னைப் பற்றிய 

ஏதோவொரு நினைவின் 

வாசனையில் அது 

தடுமாறும்போதெல்லாம்

நான் நின்றுவிடுகிறேன்

தலைநிமிர்ந்து 

இல்லாமையை 

நோக்கிப் பார்க்கிறேன்

பிறகு

ஊளையிடுகிறேன்.

*

நான் என் தலைக்கு மேலே 

பறக்கும் பறவைகளின் காதலி

மரணத்தின் காதலி

அறிவிலாத அண்டை வீட்டுக்காரனின் காதலி

வாழ்க்கை எனும் உண்டியலிலிருந்து 

தங்கள் வாழ்நாளின் இறுதிச் சில்லறைகளை 

வீணடித்துக் கொண்டிருக்கும் ஆண்களின் காதலி

முதியவர்களின் வேடமணிந்த குழந்தைகளின் காதலி

குழந்தைகளின் வேடமணிந்த

முதியவர்களின் காதலி

துயரத்தின் காதலி

தனிமையின் காதலியும் நானே

ஆனால்

நான் உன் காதலி அல்ல.

*

என்னுடன் உன்னால் ஈடுகொடுக்க முடியாது

.

ஏனெனில்

நான் மூன்று இதயங்களைக் கொண்ட பெண்

ஒன்று ஆண்களைக் காதலிக்கிறது

மற்றொன்று அவர்களை வெறுக்கிறது 

மூன்றாவது அவர்கள்மீது பரிதாபம் கொள்கிறது

திருவிழாப் பாடல்களுக்கு நடனமாடுகிறேன் 

ஒவ்வொரு நாட்டுப்புறப் பாடலின் முடிவிலும் 

குலவை ஒலியெழுப்புகிறேன்

நான் ஒரு பெண்

விடிவதற்கு முன்பே விழித்தெழுகிறேன் 

பிறகு நண்பகல் வரை உறங்குகிறேன்

அதன்பின்

இரவெல்லாம் கூரையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்

என்னுடன் எப்படிப் போட்டியிடுவாய்?

என் உடலுக்குள் குடிகொண்டிருக்கும் 

ஓர் இலையுதிர்காலத்துடன் 

எப்படிப் போட்டியிடுவாய்?

ஒரு மனநிலையில் பிறக்கிறேன் 

இன்னொரு மனநிலையில் இறக்கிறேன்

நீ உன் காலைக் காபியைக் குடித்து முடிப்பதற்குள்ளாகவே

தன் உடலிலிருந்து விடுதலை பெற்றுவிட்ட 

ஒரு பெண்ணுடன் உன்னால் ஒருபோதும் 

ஈடுகொடுக்க முடியாது

இப்போது அவள் உயரத்திலிருந்து 

தன் உடலையே கீழே 

பார்த்துக்கொண்டிருக்கிறாள்.

*

இறைவா 

எனக்குக் கொஞ்சம் அவகாசம் கொடு

.

இன்னும் கொஞ்சம் உடலைத் தந்தருளு

ஒருமுறையோ 

இருமுறையோ

பாவம் செய்துகொள்ளட்டும்

என் தோலிலிருந்து 

ஒரு பெண் வெளிப்படுவதற்கு 

எத்தனை ஆண்டுகள் எடுத்தன

எத்தனை பாவங்கள் தேவைப்பட்டன

என்பதைக்கூட 

என்னால் நினைவுகூர முடியவில்லை

மார்பு என்பது

யாரேனும் ஒருவர் அதை அணைத்துக்கொள்ளும்வரை 

உறுதிப்படுத்தப்படாத ஒன்று

மார்பு என்பதே ஒரு வதந்தி

இன்னும் கொஞ்சம் அவகாசம் மட்டும்

இந்தப் பெண்ணாக இருப்பதையே

நான் நிறுத்திக்கொள்ளும் வரையில்

எனக்கு ஒரு காலைப் பொழுது வேண்டும்

அதில்

உணவுத் தட்டிலிருந்து 

என் அம்மாவையே துடைத்து அகற்ற வேண்டிய

கொடுமை 

எனக்கு நேரக்கூடாது. 

*

என் அம்மாவுக்கு ஏழு பிள்ளைகள்

அவர்களில்

துக்கம்தான் அவள் 

செல்லமாக வளர்க்கும் பிள்ளை

தன் இதயத்திலிருந்து 

ஒரு துண்டை எடுத்து

யாருக்கும் தெரியாமல் 

அவனது சட்டைப் பைக்குள் 

நுழைத்துவிடுவாள்

சில நேரங்களில் 

தவறுதலாக 

அவனது பெயராலேயே 

எங்கள் எல்லோரையும் 

அழைப்பாள்.

கீதிர்

காரைக்கால் அம்மையார் கவிதைகள் பற்றி : நும்மார்பிற் பாம்பு

ஆண்டாள் கவிதைகள் பற்றி : கள்ளவிழ் செண்பகப் பூமலர்

அனார் பற்றி : கனவுகளின் தெய்வம்

பொன்முகலி பற்றி : பிறழ்வுகளின் தெய்வம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *