“Bro.. நீங்க சிறுகதை எழுத்தாளரா?
தமிழ் வெண்பா எழுதிய அனுபவம் உண்டு. இருப்பினும் உங்கள் கவிதைகள் சிறிது புரிய /புரியாத போல் உள்ளது…i think I need to have a brief introduction to understand” என்றொரு கேள்வியை புதிய நண்பரொருவர் அனுப்பியிருந்தார். அவருடைய கேள்விக்கான பதிலை இளம் வாசகர்களுக்குமானதாக விரித்து இக்குறிப்பை எழுதுகிறேன்.
*
என்னை எழுத்தாளர் எனும் வகையில் சுட்டலாம். கவிதை, புனைவெழுத்துகள், இலக்கிய விமர்சனம், பண்பாட்டு விமர்சனம் ஆகிய களங்களில் கடந்த பதின்னான்கு வருடங்களுக்கு மேல் எழுதியும் செயற்பட்டும் வருகிறேன்.
நீங்கள் எழுதிப் பயின்றவை மரபுக் கவிதைகள். நான் எழுதியிருப்பவை நவீன கவிதைகள். இரண்டிற்குமான அடிப்படை வேறுபாடுகளை நீங்கள் புரிந்து கொள்வது என் கவிதைகளையும் நவீன கவிதைகளையும் விளங்கிக் கொள்ள உதவியாய் இருக்கும். மேலும், புதிதாக வாசிப்பிற்குள் வருபவர்களுக்கும் உதவியாய் இருக்கும் என்பதால் அடிப்படைகள் சிலவற்றை தொகுத்து எழுதுகிறேன்.
மரபுக்கும் நவீனத்துவத்துகுமான அடிப்படை வேறுபாடென்பது மரபில் உள்ள கட்டமைப்பு சார்ந்த இறுக்கம் நவீனத்தில் இல்லை. மரபை ஒரு இறுக்கமான சாஸ்த்திர எல்லைக்குள் தான் எழுத முடியும் என்ற நிபந்தனை உண்டு. நவீன கவிதை தன் வடிவத்தை தானே உருவாக்கிக் கொள்ள முடியும். அதற்கு வடிவம் சார்ந்த நெருக்கடி இல்லை. ஆனால் சில அம்சங்களில் மரபின் செழுமையான கூறுகளையும் உள்ளெடுக்கக் கூடியது.
நவீன கவிதையின் முன்னோடியாக தமிழில் பாரதியைச் சொல்லலாம். வசன கவிதையை அவர் மேற்கிலிருந்து எடுத்துக் கொண்டார். அதனை மரபுக்கும் நவீனத்துக்குமான பாலமாக ஆக்கினார். ஒருவகையில் வடிவம் சார்ந்தும், அதில் வெளிப்படும் உணர்ச்சிகள் சார்ந்தும் அவர் நவீன மனநிலைகளை நோக்கி வந்தார். அதிலிருந்து இன்று வரை தமிழில் மைய இலக்கிய வடிவமாக நவீன கவிதையே நிலை கொண்டிருக்கிறது. பாரதிக்குப் பின் அது வீச்சுடன் நிகழ்ந்தது பிரமிளில். அவரது புகழ்பெற்ற கவிதை காவியம் நவீன கவிதையின் பாலபாடம்.
காவியம்
சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது.
பிரமிள்

(பிரமிள்)
சங்க இலக்கியம், பக்தி இலக்கியம் என காலகட்டங்கள் உண்டு. அதே போல நவீன கவிதையும் ஒவ்வொரு காலகட்டத்திலும் மொழி நடையிலும் சொல்லும் தொனியிலும் எடுத்துக் கொள்ளும் பாடு பொருட்களுடனும் மாறி வருகிறது. தமிழின் பொதுப்பரப்பில் எண்பதுகளின் தொடக்கத்தில் சுகுமாரனின் வருகையுடன் தீவிரமும் உணர்ச்சிகரமானதுமான நடை உருவாகியது. அவரது மொழித்தீவிரமும் சொல்லிணைவுகளும் இசைத்தன்மையும் மூன்று தலைமுறைக் கவிஞர்களின் மேல் பாதிப்புச் செலுத்தியிருக்கிறது. அவர் ஒரு வகைமை என்றால் தேவதேவன் போன்ற ஒருவர் ஆன்மீகமான உலகின் தேடல்களையும் அறிதல்களையும் கவிதையாக்கினார். பின்னர் அப்படி வேறு பாடுபொருட்களும் நடையும் கொண்ட ஒரு நெடும் பட்டியல் தமிழில் உருவாகியது.
ஈழத்து இலக்கியத்தில் மஹாகவி எனும் பெயரில் எழுதிய உருத்திரமூர்த்தி மரபும் நவீனமுமான கவிதைகளில் குறிப்பிடத்தக்க அடைவை எட்டியவர். அவரது சிறுநண்டு மணல் மீது படமொன்று கீறும் என்பது ஒரு சிறுவர் பாடலென நம் சூழலில் நிலைபெற்று விட்டது. அதனோடு சண்முகம் சிவலிங்கம், சு. வில்வரத்தினம் என முன்னோடிகள் வரிசை இருக்கிறது. அதில் சு. வியும் மரபின் இசைத்தன்மை, சொல்லிணைவு போன்றவற்றை மிகச் சிறப்பாக நவீன கவிதைகளிலும் கையாண்டவர்.

(சு. வில்வரத்தினம்)
சொல்லிணைவு என்பது இரண்டு சொற்களோ அல்லது சொற்களின் தொடரோ உருவாகி வரும் பொழுது அதன் சொல்லாட்சியின் அழகு.
சு. வியின் ஒரு கவிதை, நெற்றி மண். அம்மா அடியழிப்பதைப் பற்றிய சித்திரம். ஆனால் அங்கிருந்து அது உச்சமடைந்து ஆண்டாளின் பாசுரம் போல் ஆகி ஒலியுச்சமாகவே ஆகியிருப்பது. அந்த மெளனமே நவீன கவிதை அடைவது. அது கரு, உரி, பொருளென்று அல்லாமல், உச்சத்தில் தீவிரமான ஒரு மெளனத்தை அடைந்தது.
நெற்றிமண்
அம்மா
விழாக் காலங்களிலும்
விரத நாள்களிலும்
கோயில்களில்
அடியழித்துத் தொழுவது
ஓர் அழகு.
கோயில் வீதிகளை சுற்றிச் சுற்றி
நெற்றிப் பிறை மண்ணில்
ஒற்றிடத் தொழுது எழுவாள்.
வியர்வையில் ஒட்டியிருக்கும்
மண்துகள்கள்
மின்னும்
புடமிட்ட பொன்னாக
பூமிப் பிறையாக.
என் அம்மை,
ஒற்றியெடுத்த
நெற்றிமண் அழகே
வழிவழி நினதடி தொழுதவர்,
உழுதவர், விதைத்தவர்,
வியர்த்தவர்க்கெல்லாம்
நிறைமணி தந்தவளே,
உனக்குப் பல்லாண்டு பல்லாண்டு;
பல்லாயிரத்தாண்டு.
சு. வில்வரத்தினம்
இதில் வருகின்ற புடமிட்ட பொன்னாக, பூமிப் பிறையாக எனும் சொல்லிணைவுகள் அபாரமான மன எழுச்சியை அளிக்கக் கூடியவை.
இசைத்தன்மை என்பது சொற்களுக்கிடையில் இருக்கும் அகஒழுக்கு. அதன் நாதம். மரபுக் கவிதைகளில் இது ஒரு வாய்ப்பாடாக இருக்கும். நவீன கவிதை அதை விரும்பியபடி பாடிக் கொள்ளும் சுதந்திரம் கொண்டது. ஆனால் அது இசையாகவும் ஒலிக்க வேண்டும்.
மூன்றாவதாக ஒரு கவிதையை மதிப்பிடும் அம்சத்தில் அதன் நினைவில் தங்கும் தன்மையும் இருக்கிறது. நினைவில் தங்கும் தன்மையென்பது மனப்பாடம் செய்வதல்ல. அதன் இசைத்தன்மையும் சொல்லிணைவும் நம் பண்பாட்டு நனவிலியுடன் இணைந்து ஒரு ஆரம் போல விரிவு கொள்ளக் கூடியது. சங்கக் கவிஞனின் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வரியில் இருக்கும் இசைத்தன்மையும் சொல்லிணைவும் அளிக்கும் அந்த அம்சமே அது. கவிதைகளை மதிப்பிடுவதில் அந்த அம்சத்தை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். நினைவில் தங்குதல் என்பது ஒருவரின் நினைவில் அல்ல. ஒரு பண்பாட்டின் நினைவில் தங்குவது. மனிதர்கள் பண்பாட்டின் நனவிலியை தமக்குள் நெருங்கி அதன் நுண்மையை அறியும் தோறும் அவர்களும் அதன் பெருக்கின் நினைவின் சங்கீதத்தை அறிய முடியும்.
“சொல்லித் தந்ததோ
கற்றுக் கொண்டதோ போல இல்லை வாழ்க்கை – அது குழந்தைக் கதையில் மந்திரவாதி எங்கோ ஒளித்து வைத்த உயிர்”
என்ற சுகுமாரனின் கவிதையில் இருக்கும் அகச்சந்தம் நினைவில் தானாகவே தன்னை நிறுத்திக் கொள்ளும் அம்சம் கொள்வது அதனால் தான்.

(சண்முகம் சிவலிங்கம்)
சண்முகம் சிவலிங்கமும் ஆன்மீகமும் அகத்தேடல்களும் அரசியல் சீற்றமும் கொண்ட கவிதைகளை எழுதினார். அவர்களது சம காலத்தில் ஈழப்போராட்டம் துவங்கியது. பாலஸ்தீனக் கவிதைகளும் ஆபிரிக்க கவிதைகளும் ரஷ்யக் கவிதைகளும் தமிழ்க் கவிதைகளுக்குள் மொழிபெயர்ப்பின் வழி வந்தன. அவை நவீன விடுதலைப் போராட்டங்களை எழுதுவதற்கான படிம வெளியையும் குரலையும் தொனியையும் அளித்தன. மஹாகவியின் மகனான சேரன் அதன் முன்னோடிகளில் ஒருவர். அவரில் தந்தையிலிருந்த மரபின் செழுமையும் உலகக் கவிதைகளின் மொழியும் வீச்சும் உருவாகி வந்தது. இரண்டாவது சூரிய உதயம் என்ற அவரது புகழ்பெற்ற கவிதை அந்தக் காலத்தை தீப்பிடிக்கச் செய்தது என்று சொல்வார்கள்.
இரண்டாவது சூரிய உதயம்
அன்றைக்குக் காற்றே இல்லை;
அலைகளும் எழாது செத்துப் போயிற்று
கடல்.
மணலில் கால் புதைதல் என
நடந்து வருகையில்
மறுபடியும் ஒரு சூரிய உதயம்.
இம்முறை தெற்கிலே
என்ன நிகழ்ந்தது?
எனது நகரம் எரிக்கப்பட்டது;
எனது மக்கள் முகங்களை இழந்தனர்,
எனது நிலம், எனது காற்று
எல்லாவற்றிலும்
அந்நியப் பதிவு.
கைகளைப் பின்புறம் இறுகக் கட்டி
யாருக்காகக் காத்திருந்தீர்கள்?
முகில்களின்மீது
நெருப்பு,
தன் சேதியை எழுதியாயிற்று
இனியும் யார் காத்துள்ளனர்?
சாம்பல் பூத்த தெருக்களிலிருந்து
எழுந்து வருக.
சேரன்
இக்கவிதை ஒரு அறைக்கூவலென மொழியில் நிகழ்ந்தது. சங்ககால மரபுக் கவிதைகளில் போரை புறப்பாடல்களில் வீரத்திற்கானதாகப் பாடினார்கள். ஆனால் நவீன கவிதைகளில் அது விடுதலைக்கானதாக தன்னை மாற்றிக் கொண்டது. நோக்கு, வெளிப்பாடு, வாழ்க்கை, அரசியல் பார்வை என பல மாறுதல்கள் நிகழ்ந்தன. அவரைப் போலவே அக்காலகட்டத்தில் ஏராளமானவர்கள் விடுதலைப் போரைப் பற்றிய கவிதைகளை எழுதினார்கள். மக்களின் அவலங்கள், சோகம், கூட்டுத் துயரம், விடுதலைப் போராட்டத்தின் மீதான விமர்சனம் என அது பின்னர் பல பரிமாணங்களை அடைந்தது.

(சேரன்)
தொண்ணூறுகளில் தமிழில் உருவாகி வந்த பெண்ணிய உரையாடல்கள் இன்னுமொரு பெரிய களத்தை திறந்தது. சிவரமணி, செல்வி, அனார், ஒளவை என்று பலர் எழுத வந்தனர். அவர்கள் விடுதலைப் போராட்டம் பற்றியும் பெண்களின் மீதான ஒடுக்குமுறைகள் பற்றியும் எழுதினர்.
அதன் பின்னர் விடுதலைப் போராட்டம் கவிதைகளை, கவிஞர்களை, அவர்களது அறக் கேள்விகளைப் புறந்தள்ளிய போது அதற்குப் பின்னரான தலைமுறை அதன் சலிப்பு, சோர்வு, புலப்பெயர்வு, அகதியாதல், அடையாளயச் சிக்கல்கள், ஏமாற்றம் ஆகியவற்றை விரிவாக எழுதியது. கவிஞர்களை ஒரு காலகட்டத்தின் குரல்வளையெனக் கொள்ளலாம். அவர்கள் அக்காலகட்டத்தை உருவாக்குவதில்லை. உருவாகிய காலகட்டத்தின் குரல்கள்.
ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆயுத வழிப் போராட்ட முறை பல உயர்ப்பலிகளுடனும் ஏராளாமான அழிவுகளுடனும் முடிந்ததன் பின்னர் எழுத வந்த தலைமுறையைச் சேர்ந்தவன் நான். என்னுடைய புரிதல் இவர்களின் நீண்ட நெடிய கவிதை வரலாற்றின் அடுத்த கட்டமே என்னுடைய தலைமுறையின் எழுத்துகள் என்பது. நான் விடுதலைப் போராட்டத்தில் எந்தத் தரப்பையும் எடுத்துக் கொள்ளவில்லை. என்னுடைய பிரபலமான கவிதை ஒரு தந்தையின் வீடு, அவ்வகையில் அக்காலகட்டத்தின் ஆன்மீக வாயிலில் வந்து நின்றது. மேலே சொல்லியது போல அது என் தனித்த பார்வை அல்ல. அப்போது உருவாகியிருந்த காலத்தின் நாவொன்று என்னில் தன்னை ஒலித்திருக்கிறது.
என் தந்தையின் வீடு
வெளிச்சம் கொள்ள நேராத வீடுகள்
காத்திருக்கின்றன.
என் தந்தையிடமிருந்து எனக்கு
என்னிடமிருந்து இன்னொருமுறை
என் மகனுக்கு.
மகனே,
உன் தந்தையின் வீட்டை நீ அறிவாயா?
உன் பட்டினங்களின் பாதைகளை,
கைவிடப்பட்டவர்களுக்குப் பிளந்து வழி விடாத
நந்திக் கடலிடம் கேள்
உலோக மழை கொட்டிய இரவில்
அங்கு தான் உன்னைத் தலையில் சுமந்து வந்தேன்.
ஆனால் இப்போது
உன் பட்டினங்களிடம் திரும்பு
வீட்டைச் சுற்றி அலையும்
குருவிகளிடம் கேள்
கூடென்பது
இடமா? இருப்பா?
சுவர்ப் பிளவில் அரச மரங்கள் – வேர் விடத்
துடிக்கும் உன் வீடு.
எனவே,
உன் தந்தையின் வீடு இப்போது
ஒரு நினைவாலயம்
அது சந்தையாகும் வரை காத்திருக்காதே
சீக்கிரம் அடைந்து விடு.
வீடென்பது
கிடைப்பதா? பெறுவதா ?
என் மகனே,
வீடென்பது பேறு.
கிரிசாந்
போர் முடிவடைந்த பின்னர் யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த இலக்கியச் சந்திப்பிற்காக குவர்னிகா எனும் பெருந்தொகுப்பை போர் சார்ந்து உருவாக்கியிருந்தார்கள். அதன் ஆசிரியர் குழுவின் குறிப்பின் தலைப்பு வீடென்பது பேறு. அந்தப் பெருந்தொகுப்பின் கடைசிக் கவிதை இது. வருங்காலத்தின் குரலாக ஒரு இளங் கவிஞனின் தரிசனமாக அதை அவர்கள் முன் வைத்தார்கள்.
அக்காலத்தில் நினைவு கூரல்கள், சாட்சியங்கள், போரின் பிரமாண்டமான அழிவுச் சித்திரங்கள் கவிதைகளில் விரிவாக எழுதப்பட்டன. நினைவு கூரல்கள் தொடர்பில் சித்தாந்தனின் புகழ்பெற்ற கவிதை நம் மக்களின் பிரார்த்தனைப் பாடல் போலவே ஒலிக்கத் தக்கது.
நெய் உறிஞ்சிய தீபத்தின் ஒளி
பெருவெளிக்குத் திரும்புகின்றது
புதைக்கப்பட்டவர் யார்?
காற்றில் கரைந்து போனவர் யார்?புதிரின் ஆழ் இடுக்குகளில்
சொருகப்பட்டிருக்கின்றன சாவுகள்
இனி வரப்போவது யாருமில்லை
ஆயினும்
நினைவுகளின் புதைவிடத்தில்
நான் இரண்டு பூக்களை வைக்கின்றேன்
நினைவு கூரக்கூடிய
நினைவு கூர முடியாத
எல்லோருக்குமாகவும்.
சித்தாந்தன்

(சித்தாந்தன்)
நான் குறிப்பிட்டிருப்பவை சில முக்கியமான யுகசந்திகளின் இடங்களை மட்டும் தான். ஒரு பெரும் கவிதைப் பரப்பு விடுதலைப் போராட்டமும் அது உண்டாக்கிய விளைவுகளின் மீதும் இருக்கிறது. நான் அதிகளவில் அரசியல் அல்லது விடுதலைப் போராட்டம் சார்ந்து எழுதவில்லை. அது என் களமும் அல்ல. நான் அதன் பின்னர் ஆன்மீகமான என் தேடல்களையும் நான் எதிர்கொண்ட வாழ்க்கை சார்ந்தும் எதிர்கொண்டேன். வழக்கமாக போருக்கும் அதன் கவிதையின் இரத்தச் சுவைக்கும் பழக்கப்பட்டிருந்த கவிதை வாசகர்கள் அதை பெரிதளவில் புரிந்து கொள்ளவில்லை.
ஆனால் கவிதைக்கு ஒரு குணமுள்ளது. அது முன்னெதிர் காலத்தின் விசையினால் உருவாவது. அது போரின் திரைகள் அகல, சாட்சியமளிப்பது, அரற்றுவது, காடாற்றுவது என்று அதன் மிகுதியையும் எழுதியது. கவிஞர்கள் பாணர் மரபின் தொடர்ச்சி. பாணர்கள் குலப்பாடகர்கள். அவர்களின் ஒரு பணி அது. ஆனால் கவிதை ஒரு பாடுபொருளுடன் அதன் உள்ளடுக்குகளுடன் மட்டும் தன்னை நிறுத்திக் கொள்ள முடியாதது. என் தலைமுறையில் நான் மீண்டும் சண்முகம் சிவலிங்கத்தை சு. வில்வரத்தினத்தை மறுவாசிப்பு செய்தேன். அவர்களின் வேரிலிருந்தே என் சத்தான பகுதிகளை வளர்த்துக் கொள்கிறேன்.
கலையின், கவிதையின் வரலாற்றில் இப்படி ஒரு தாவல் போக்கு எல்லாக் காலகட்டத்திலும் உண்டும். ஒரு நூலை ஓடிய பின்னர் அதைக் கைவிட்டு மறுநூலினால் தைத்து வரலாற்றைக் காலத்தைக் கோர்ப்பது போன்றது. அடுத்த தலைமுறை வேறொரு திசையையும் தேர்ந்து கொள்ளும். அப்போது என் காலகட்டம் ஒரு குரலாக மாறிவிடக் கூடும்.
என் கவிதைகளை என்று மட்டுமல்ல, இன்று ஒரு இளம் வாசகர் நவீன கவிதைகளை புரிந்து கொள்ள மரபு தொடக்கம், நவீனம் வரையுள்ள முன்னோடிகளை வாசிக்க வேண்டும். அதில் அவர் தன் ரசனையின் மூலம் சிலரைத் தனக்கான கவிஞர்களாக அடையாளம் காணலாம். பொதுப்பரப்பை அறிந்து கொள்ளவும் வேண்டும். தனித்த குரலைத் தொடரவும் வேண்டும்.
தமிழ்நாட்டுக் கவிதைகளில் வேறான அம்சங்கள் உள்ளன. இரண்டாயிரத்துக்குப் பின் அதன் தீவிரமான உணர்ச்சிகரங்கள் வடிந்து அது கேலியும் விளையாட்டும் பகிடியுமானதாக வாழ்க்கையை அணுகியது. அதற்கான மொழி உருவாகியது. தொனி வந்தமைந்தது. அதே நேரம் தீவிரம் ஒரு நதியாகவும், ஆன்மீகம் இன்னொரு நதியாகவும், குழந்தைகளின் அக உலகம், பெண்களின் குரல்கள் எல்லாம் வேறு வேறு வடிவங்களை எடுத்தன.
ஒரு கவிதை வாசகர் அனைத்தையும் அறிந்தே தேர்ந்து கொள்ள வேண்டும். இன்று என் பார்வையில் தொண்ணூறுகளில் எழுதத் தொடங்கியவர்களில் சேரனை விட நிலாந்தனை விட கருணாகரனை விட அஸ்வகோஷே முதன்மைக் கவிஞராகத் தெரிகிறார். எனது வாழ்க்கைப் பார்வைகள், கவிதை ரசனை மாறுகையில் இந்த நிலைமாற்றம் நிகழ்கிறது. அதை வேறொரு வகையிலும் சொல்லலாம், முன்னவர்கள் காலத்தின் அலைக்கொந்தளிப்பின் உச்சவிசையில் தெறிக்கும் நுரைச்சீறல்கள் என்றால் அஸ்வகோஷ் அதன் ஆழ்ந்த நீல இருள்.
அவர் வனத்தின் அழைப்பு என்ற ஒரு தொகுதியையே வெளியிட்டிருக்கிறார். அதன் பின்னர் பெரிதாகக் கவிதைகளை எழுதவுமில்லை. ஆனால் அவரது கவிதைகளில் அவரடைந்த உச்சங்கள் இன்று என் வாசிப்பில் மாபெரும் பாதாளங்கள் திறந்து கொள்வது போலிருக்கிறது. இந்த ரசனை மாற்றங்கள், பார்வை மாற்றங்களும் சேர்ந்ததுவே கவிதை வாசிப்பு. அது ஒருவர் தன் அகக்குரலை தன் காலகட்டதின், அல்லது தன் மொழியின் கவிஞருக்குள்ளால் அடைந்து மேலும் வளர்ந்து கொள்வது. மேலும் மனிதர்களையும் காலத்தையும் புரிந்து கொள்வது.
கவிதையைக் குறித்து இப்படிச் சுருக்கமாகச் சொல்வேன், கவிதையென்பது மொழியின் நுண்மையினால், சொல்லிணைவினால், இசைத்தன்மையினால், தன்னை மீறியெழும் அகச்சான்றினால் காலமின்மையை அடையும் ஒரு மொழி வெளிப்பாடு. அதை ஒருவர் ஏன் வாசிக்க வேண்டுமென்றால், ஒருவர் காலமின்மையில், என்றுமுள்ள மானுடச் சிக்கல்களில் ஒரு மொழி எப்படித் திகைக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்காக. எனது கவிதைகளுக்கு அத்தகைய மதிப்பிருக்கிறதா என்பதை சமகாலத்தில் அவ்வளவு துல்லியமாகவும் இறுக்கமாகவும் சொல்லி விட முடியாது. நூறு வருடங்கள் கழித்து இந்த எந்தப் பின்னணியும் இல்லாமல் ஒரு வாசகர் தன் அகத்துடன் அடையும் தீவிரத்தில் தேடலில் ஒரு வரியாகத் தன்னும் எஞ்சினேன் என்றால், அப்பொழுது நான் கவிஞன். அப்படி நிற்பவர்கள் தான் கவிஞர்கள். கலைகளுக்குக் காலம் தான் இருப்பதிலேயே பெரிய அளவு கோல்.

