அன்புடையீர், வணக்கம்
“தளம்” இதழை அதன் ஆசிரியர் எனக்கு அனுப்பி வைத்திருந்தார்.
“உங்கள் அண்ணனைப் பற்றி ஒரு சிறுகதை,வந்திருக்கிறது படித்துப் பாருங்கள்” என்று போன் செய்திருந்தார்.
நான் தெளிவத்தையின் தம்பி. தமிழ்நாட்டில் இருக்கின்றேன்.
அண்ணனின் சிறுகதைகளை நிறைய வாசித்திருப்பீர்கள். முதற்கண் அதற்கு நன்றி.
அண்ணனுடைய அனைத்து சிறுகதைகளும் 59 ம் ஒரே நூலாக தொகுத்து வெளிவந்திருக்கிறது. தாங்கள் எங்கே இருக்கிறீர்கள். வெளிநாட்டிலா. சத்துரு கொன்றான் மட்டகளப்பில் இருக்கிறது என்று நினைக்கிறேன்.
கதைப்போக்கில் நல்ல உவமைகள்அழகாக வந்து விழுந்திருக்கின்றன தான் என்றாலும் அந்தத் தமிழ் எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாத வகையில் இருப்பதுதான் வருத்தமாக இருக்கிறது. நான் புரிந்து கொள்ளும் அளவுக்கு மற்றவர்களும் புரிந்து கொள்வார்களா என்பது கேள்விக் குறிதான். ஒரே போல சறமும் ஷேட்டும் என்றால் இங்கே யாருக்கும் புரியாது. மலையகம் பற்றிய ஒரு சிறுகதையை எழுத முன்வந்திருப்பதற்கு வாழ்த்துகள். பாராட்டுகள்.
அன்புடன்
குடந்தை பரிபூரணன்
*
அன்புள்ள குடந்தை பரிபூரணன்,
நான் யாழ்ப்பாணத்தில் இருக்கிறேன். தெளிவத்தை ஜோசப்பை ஒரே ஒரு முறை தான் நேரில் பார்த்திருக்கிறேன். அந்த நேரடிச் சந்திப்பின் சித்திரம் தான் கதையின் தொடக்கத்தில் இருப்பது.
அவரது அனைத்துக் கதைகளையும் நான் வாசிக்கவில்லை. தேர்ந்தெடுத்த இரண்டு சிறுகதைத் தொகுப்புகளையும் குறுநாவலையும் வாசித்திருக்கிறேன்.
மலையகம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் இருக்கும் பார்வையுடனேயே நான் வளர்ந்திருந்தேன். தோட்டக் காட்டான், கள்ளத் தோணியெனவே அவர்கள் இளவயதில் அறிமுகமானார்கள். பின்னர் வாசிப்புக்கும் இலக்கியத்திற்கும் வந்த பின்னர் அரசியல் ரீதியிலாக அப்படியான சொற்களினதும் பார்வைகளினதும் கீழ்மையை உணர்ந்திருந்தேன். என்றாலும் அகத்தால் அந்த மனிதர்களையும் வாழ்க்கையையும் அறிவதென்பது இலக்கியத்தின் மூலமே நடக்க முடியும்.
சத்துருக் கொண்டானில் நிகழ்ந்த இலக்கியச் சந்திப்பில் அவ்வகையான அரசியல் சரிநிலையுடனான பார்வையிலேயே மலையகத்தை அணுகியிருந்தேன். ஆனால் ஒற்றை வரியில் அந்தப் புரிதல்களின் போதாமையை அவர் எனக்கு உணர்த்திச் சென்றார். முதலில் அவரது அந்த சொற்கள் எனக்கு சொல்லழிவை அளித்தன. என்னால் தர்க்கத்துடன் அவர் முன் எழ முடியவில்லை. அதுவே ஒரு உண்மையான எழுத்தாளனின் கூருணர்வும் தன்மையும். அவர் ஒரு ஆளுமையாக என்னுள் நீண்ட காலம் அந்த வாக்கியத்தின் வழி வளந்தார். “எங்கள ஏத்துக்கங்கன்னு சொல்லல. புரிஞ்சுக்குங்கன்னு தான் சொல்லுறன்” என்ற வார்த்தைகளை என்னால் மறக்க முடியவில்லை. அதுவே இந்தக் கதைக்கான தொந்தரவை எனக்கு அளித்தது.

தெளிவத்தை ஜோசப் எனும் எழுத்தாளரை நான் அவரது எழுத்துகளின் வழி பார்த்த போது வேடிக்கையும் சிரிப்புமான மனிதனாகவே எழுந்து வந்தார். ஒரு சந்திப்பில் ஒரு மனிதன் இத்தனை தூரம் என்னைப் பாதித்திருக்கிறார் என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. அந்த வியப்பே இந்தக் கதை.
அவர் ஊடாக நான் மலையகம் முழுமையின் சாரத்தின் திரண்ட அம்சத்தை உணர்ந்தேன். அந்த மனிதர்களின் அசாதாரணமான வாழ்க்கைச் சூழல், மகிழ்ச்சி, துயரம், போராடும் குணம் என அது ஒவ்வொரு முறையும் கூடிக்கொண்டே சென்றது. அவரது எழுத்துகளின் வழி அவரை அல்ல, மலையகம் எனும் ஒரு பேரிருப்பின் தோரண வாயிலென நின்றிருக்கும் ஒரு மகத்தான ஆளுமையாகவே இன்றவரை மதிப்பிடுகிறேன். போகிற போக்கில் அவர் ஒரு மின்னதிர்வை எனக்குள் உண்டாக்கிச் சென்றிருக்கிறார்.
அக்கதையின் இறுதியில் வரும் மலையக மனிதரும் என் நேர் வாழ்வில் அறிந்த ஒருவரே. அச்சம்பவமும் உண்மையாகவே நிகழ்ந்தது தான். புனைவில் அது ஒரு கண்டடைதலாக வெளிப்பட்டது. வெள்ளைத் தாமரைப் பூப் போன்ற நாக்குக் கொண்டவராக ஒருவர் என தெளிவத்தையை உணர்ந்த போது அதில் தான் சரஸ்வதி வந்தமர்வாள் என அந்த மனிதர் சொன்னது கதையை வேறொரு தளத்திற்கு கொண்டு சென்று விட்டது. என் தம்பி கான்சரில் கடந்த வருட இறுதியில் மரணமடைந்து விட்டார். அந்த அறையில் காற்றாடியைக் கொழுவி விட்டு அவர் சென்ற பின் நானும் தம்பியும் அமைதியாக அந்தக் கருணையின் முன் நின்றிருந்தோம். இவர்களைப் போன்றவர்களைப் பற்றி எழுது என அவன் எனக்குச் சொல்லியிருந்தான். இது அவனுக்கு நானளித்த சொல்லுக்கான படைப்பே. அது தெளிவத்தையின் மூலமே நிகழ்ந்தது. அவரை நான் உக்கிரமாகவும் பசுமையாகவும் ஆடுபவராகப் புரிந்து கொண்ட போது எனக்கான தெளிவத்தையை உருவகித்துக் கொண்டேன். இனி அது உங்கள் அண்ணன் மட்டுமில்லை. அவர் மலையகத்தின் ஆன்மாவின் உருவகம். அதையே நான் அவருக்கான அஞ்சலியாகக் கொள்கிறேன். அவரை அறிய ஒரு சிறிய ஜன்னலாக இந்தக் கதையிருக்கும் என்று கருதுகிறேன். அவர் மூலமாக மலையகம் எனும் நிலத்தையும் மனிதர்களையும் தான்.
இந்தக் கதையின் மொழியில் உள்ள அமைப்பு தமிழ்நாட்டில் புரிந்து கொள்ளப்படுவதற்கான சாத்தியங்களை பற்றியோ அல்லது பொதுவாக கதைகளை எழுதும் பொழுது அது வாசகர்களின் அறிவு மட்டத்தைக் கொண்டு அளவிடத்தக்கதாக இருக்காதென்றோ நான் கருதுகிறேன். அது இலக்கியம் தொடர்பான என் பார்வை. மொழிக்கு அப்பாலும் அக்கதையில் ஒருவர் உணரக் கூடியவை இருக்கிறதென்றே நினைக்கிறேன். அதுவே முக்கியமானது. “லயத்துக் கோழி மலைக்கு மேல பறக்காதுன்னு சொன்னவனுங்க முன்னாலையெல்லாம் ஒரு புள்ளையாச்சும் எழுந்திருச்சு நிக்க வேணாமா” என்பது போன்ற ஒரு வரியை உணர மொழி ஒரு தடையல்ல.
ஆங்காரமும் கொதிப்புமாக இருந்த அசட்டு யாழ்ப்பாணத்தான் ஒருவனுக்கு உங்கள் அண்ணன் அவன் ஆணவத்தின் மீது அல்ல, ஆன்மாவின் மீது குட்டியிருக்கிறார். அதுவே என் அறிதல். மிகுதி இனி வாசிப்பவர்களுக்கானது.
கிரிசாந்

