தும்பி : 93

“நான் சிறு பிள்ளையாக இருக்கும் போது என் அம்மாவுக்கு உதவியாக விறகு சேகரிக்க அருகில் இருக்கும் காட்டுக்கு போவேன். அப்போது என் அம்மா ஒரு மரத்தை காண்பித்து இந்த மரத்திலிருந்து மட்டும் எப்போதும் விறகு சேகரிக்கக் கூடாது என்று கூறியது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. “ஏன் அம்மா இந்த மரத்திலிருந்து மட்டும் விறகு எடுக்கக் கூடாது?” என்று நான் கேட்டதற்கு – “இது கடவுளின் மரம், இதை நாம் வெட்டுவதில்லை. இதை நாம் எரிப்பதில்லை. இம்மரங்கள் எவ்வளவு காலம் வாழுமோ அவ்வளவு காலம் அப்படியே உயிர்த்திருக்கும்.” என்றார் அம்மா. அது ஓடைக்கு அருகிலிருந்த ஒரு பெரிய ஆலமரம்.

இந்த நம்பிக்கை ஆதியிலிருந்து மனிதர்கள் காலம் காலமாக மரபு விதை கைபகிர்ந்து வந்தது போல் நீட்சியாக பகிர்ந்து வந்த கதை. இவை சடங்குகளாகவும், கலாச்சார அங்கங்களாகவும் மாறி இருக்கிறது. சில சமயம் விழாக்களாகவும் கொண்டாடப்படுகிறது. இவ்வழக்கங்களை தற்போதைய அந்நிய கலாச்சார தாக்கத்திற்கு முன் நின்று உற்று நோக்கினால் ஒன்று நமக்கு புரியும். இவை அனைத்தும் ஏதோ ஒரு நற்காரணத்திற்காகவே நம் மூதாதையர்கள் பின்பற்றி வந்துள்ளனர். அவை மனித மரபின் ஞானங்கள் என்றே எனக்கு தோன்றுகிறது. எப்படி தாங்கள் கண்டு வளர்ந்த சூழலோடு ஒத்திசைந்து வாழ்வது என்ற கற்றலை வாழ்வின் ஒரு அங்கமாக கொண்டதின் வெளிப்பாடு. இவற்றில் இருந்து நாம் விலகியதன் விளைவே இயற்கைச் சுரண்டல்களும், மனிதர்களுக்கிடையே சண்டைகளும்.”

வங்காரி மாத்தாய்

தும்பி சிறார் இதழின் 93வது பிரதி அச்சில் மலர்ந்து மழலைகளின் கைகளைச் சென்றடைந்து வருகிறது. சமகாலத்தின் முக்கிய சூழலியல் இயக்கமான பசுமைப் பட்டை இயக்கத்தை நிறுவிய உயிரியலாளர், சமூகப் போராளி, மரங்களின் தாய் – செல்லமாக ‘மாமா மிட்டி’ என்றழைக்கப்படும் வங்காரி மாத்தாய் அன்னையின் வாழ்வை மிக அழகிய ஓவியங்களுடன் சொல்லும் கதை இவ்விதழில் பிரசுரமாகியுள்ளது. மேலும் வையம்பட்டி முத்துச்சாமி அய்யாவின் ‘ஆளுக்கு ஒரு மரம் வளர்ப்போம்’ என்ற நாட்டுப்புறப் பாடலும், குழந்தைகளின் கிறுக்க, வண்ணம் தீட்ட வித்யா பெனோவின் கோட்டோவியங்களும் உள்ளடங்கியுள்ளன. கதையை வாசிக்கும் குழந்தைகள் மனதில் பெருஞ்செயல்கள் அனைத்தும் ஒரு சிறு விதையிலிருந்து துளிர்க்கிறது என்ற எண்ணம் நிச்சயம் பசுமை கொள்ளும் என்று நம்புகிறோம். குழந்தைகளின் கனவுகள் இப்பூவுலகில் பேர்விருட்சமாய் எழ உளமார பிரார்த்திக்கிறோம்.

அட்டைப்படம் – மாரி
இதழ் வடிவமைப்பு: கல்ஆல், இரா. தியாகராஜன்

படைப்புகளை அனுப்ப / பேச/ இதழ் பெற:
9843870059, thumbigal@gmail.com
https://thumbigal.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *