நம்ம மோகனா அக்கா மறுபடியும் களத்தில் காளான் கதாயுதத்துடன் தோன்றி சன்னதமாடியிருக்கிறார். சபாஷ். “உனக்கு யார் இந்த அதிகாரத்தைக் கொடுத்தது” என்று கேட்டிருக்கிறார். நியாயம் தான். அவர் போன்ற பாமரருக்கு இந்த அதிகாரம் காலம் தோறும் எப்படிக் கைமாறி வருகிறதென்று தெரியாது. அவர்களுக்கு அதை விளக்க வேண்டிய அவர்கள் காலத்து எழுத்தாளனாகிய நான் சொல்லக் கூடியது எளிமையானது.
சாபவிமோசனம் கதையில் சீதையை தீக்குழிக்கச் சொல்லி ராமன் கேட்டான் என்பதை அறிந்து, அவனா சொன்னான்? எனக் கேட்ட அகலிகை மீண்டும் கல்லாகி விடுவாள். இந்தக் கதையில் ராமனை இப்படிச் சித்தரிப்பதற்கு புதுமைப்பித்தனுக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள் என ராஜாஜி கேட்டதாகச் சொல்வார்கள். அய்யா, அந்த அதிகாரம் காலம் தோறும் உள்ளவர் எழுத்தாளர்களே. அய்யன் வள்ளுவன் என்ன அதிகாரத்தில், “வில்லேர் உழவர் பகை கொள்ளினும் கொள்ளற்க, சொல்லேர் உழவர் பகையென” எச்சரித்து வைத்தானோ அவர்களின் அதிகாரம் அது. காலத்தை அவர்கள் தான் எழுதுகிறார்கள். மதிப்பீடுகளை உருவாக்குகிறார்கள். நுண்மையைக் கோருகிறார்கள். ஒரு எளிய பாமரருக்கு இதை விளங்கப்படுத்த இயலாது. தலைக்குள் அசட்டுத்தனம் அத்தனை எளிதாக குடி புகாது. மனிதர் இயல்பிலேயே புத்திசாலிகள். இன்னமும் பெரும்பாலானவர்கள் அப்படித்தான். ஆனால் முகநூல் பெண்ணியவாதமும் முன்னாள் இடதுசாரிவாதமும் ஒரு அபத்தமான கூட்டு. சகலகலாவல்லி மாலை பாடிக்கொண்டே சைடிசைத் தொட்டு நக்குவதைப் போல சகிக்க முடியாத நிலை.
உனக்கு யார் இந்த அதிகாரத்தை தந்தது என எந்த அசடாவது என்னைக் கேட்டால், ஒன்று தான் பதில்.
அப்படி யாரும் கொடுப்பதோ பெறுவதோ இல்லாத இடம் அது. தானே உருவாகிவரும் குரல் மதிப்பு. அது தன் இயல்பினால், ஆளுமையினால், பங்களிப்பினால் அடையப்படுவது. கிட்டத்தட்ட அவரவர் எடுத்துக் கொள்வது. அதற்கு கொஞ்சம் கூருணர்வு வேண்டும். இணைய மந்தர்களுக்கு இதை புரிய வைக்க முடியாது. முகநூலால் ஆன மூளையுள்ள ஒருவரிடம் விவாவத்துக்குப் போவது சுரிக்குள் மாட்டிய நரியைப் போல ஆகிவிடும் என்பதால் தவிர்த்து விடுகிறேன். அக்காவைப் போல் பலரும் என் மீது ப்ரியத்துடன் இருப்பதை அறிவேன். அவர்கள் படித்து இன்புற கீழே அவரின் சிந்தனைச் சிதறல்களை போட்டிருக்கிறேன். சீரியஸ் வாசகர்கள், எப்படிப் பட்ட உலகில் எத்தகைய ஜீவன்களுடன் நாம் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை அறிய வாசித்துப் பாருங்கள்.
எச்சில் துப்பிக் காடு வளராது.
கிரி
தமிழில் பெண் கவிஞர்களை ஒழிப்பது எப்படி? – கிரிசாந்
*
பெண் கவிஞர்களை “ஒழிக்கும்” கையேடும், அதை எழுதியவரின் சான்றிதழும் – மோகன தர்சினி
கொசுவை ஒழிப்பது எப்படி, எலியை ஒழிப்பது எப்படி என்று சுகாதார துறை கையேடுகள் உண்டு. நரிசாந்த் ஒரு படி மேலே போய், “தமிழில் பெண் கவிஞர்களை ஒழிப்பது எப்படி?” என்று எழுதியிருக்கிறார். ஒழிப்பவர்களைக் கண்டிப்பதாகத் தொடங்கும் கட்டுரையில், ஒழிப்பு வேலையைக் கையேடு எழுதியவரே செய்து காட்டிவிடுகிறார். கீதிரின் தொகுப்பு வருவதாக அறிவிப்பு மட்டுமே வந்திருக்கும்போதே, “ஜென்ம சனியின் தொடக்கம்” என்று பலனும் எழுதிவிட்டார்.
முதலில் ஒரு சின்னக் கேள்வி:
இந்தச் சான்றிதழ் கவுண்டரில் இவரை உட்கார வைத்தவர் யார்? பெண் கவிஞர்களிடம் “மொழிக்கு உன் பங்கு என்ன, அடுத்த தொகுப்பில் எவ்வளவு மேம்பட்டாய்” என்று கேட்கத் தமக்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்பதுதான் கட்டுரையின் தொனி. சரி, அதே கேள்வியை இவரிடமே கேட்போம். மொழிக்கு இவர் செய்தது என்ன? இவரது நூல்கள் மொத்தமாக எத்தனை பிரதிகள் விற்கின்றன? தேடி வாங்கும் வாசகர்கள் எத்தனை பேர்? இந்தக் கணக்காவது இவருக்குத் தெரியுமா? தெரியாமலேயே வாயிற்காப்பாளன் வேடம் போட்டு, “நீ கவிஞர், நீ கவிஞர் இல்லை” என்று முத்திரை குத்தலாமா? சான்றிதழ் கொடுப்பவருக்கே முதலில் ஒரு சான்றிதழ் வேண்டும். இவருக்கு அதைக் கொடுத்தவர் இவரேதான் போலும். அல்லது இவரது வாட்ஸ்அப் குழுவில் கொடுத்திருப்பார்களோ?
இலங்கைப் பெண் கவிஞர்களில் 99% பேருக்கு நவீன இலக்கியம் என்னவென்றே தெரியாது என்கிறார். அவர்களின் இலக்கிய ஆயுள் மூன்று மாதம் முதல் ஒரு வருடம்தான் என்கிறார். அதற்கு சான்று பதினான்கு வருடம் அவதானித்ததாகச் சொல்லும் அவருடைய ஒற்றை வரிதான். பெண்களை “அரிய வகையினர்” என்று பூச்சியியல் வகுப்பு எடுக்கும் பார்வையே போதும், இவரது அளவுகோலைப் புரிந்துகொள்ள. தமிழின் தொல்மரபை ஆதாரமாகக் கொண்டு ஒரு முதன்மைப் பெண் படைப்பாளி இதுவரை எழவில்லை என்கிறார். அந்தத் தொல்மரபிலேயே ஒளவையாரும் வெள்ளிவீதியாரும் ஆண்டாளும் இருக்கிறார்கள் என்பதைப் பள்ளிப் பாடப்புத்தகமே சொல்லும். இவரே பெயர் சொல்லும் பெருந்தேவியும், ஆழியாள், அனார், சல்மா, மாலதி மைத்ரி போன்றோரும் ஆண்டுக்கணக்காக எழுதுபவர்கள். தன் கட்டுரையே தன் கணக்கை மறுக்கிறது.
பல பெண்கள் ஒரு தொகுப்புக்குப் பின் காணாமல் போகிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம். ஏன்? பெண்கள் எல்லோரும் ஒரு சூம் கூட்டம் போட்டுக் கற்றுக்கொள்ளவே மாட்டோம் என்று தீர்மானம் போட்டார்கள் என்பதுபோல எழுதுகிறார்.
காலையில் அடுப்படி, பகலில் வேலை, மாலையில் பிள்ளைகள், இரவில் அலுப்பு. எழுத நேரம் எங்கே, தொகுப்பு போடப் பணம் எங்கே, நம்பிப் பதிப்பிக்க ஆள் எங்கே? நீண்டகால உழைப்பும் வேறெதுவும் வேண்டாத தீவிரமும் வேண்டும் என்கிறார். வீட்டு வேலையையும் பிள்ளை வளர்ப்பையும் வேறொருவர் செய்து தருபவருக்கே கிடைக்கும் ஆடம்பரம் அது. அந்த ஆடம்பரம் கிடைத்த பெரும்படைப்பாளிகள் பெரும்பாலும் ஆண்கள்; அவர்களுக்குச் சோறு பொங்கி வைத்தவர்கள் பெண்கள். அதிலும் இவர் பொருளாதார உழைப்பிலும் ஈடுபடாமல் தன் இணையரிடமும் அப்பாவிடம் கையெழுத்திட பிழைத்துக் கொண்டு இலக்கியம் வளர்ப்பதற்காக பிதற்றிக் திரியும் கயவன். இன்னும் குடும்பத்தினரை சுரண்டி தின்று கொண்டு பெண்களுக்கு உழைப்பை பற்றி பாடம் எடுக்கும் இலக்கிய பதர்.
போரின் வடுக்களும் தோட்ட லயன்களும் தொழிற்சாலைகளும் நிறைந்த நாட்டில் ஒரு பெண் எழுத வருவதே சாதனை. அவளுக்குத் தேவை கைகொடுப்பு; இப்படி வாயிற்காப்பாளர்கள் இல்லை
சமையலறையைப் பாடுகிறார்கள் என்று நகைக்கிறார். தொழிலாளி தன் தொழிற்சாலையைப் பற்றி எழுதினால் இலக்கியம்; பெண் தன் அடுப்படியைப் பற்றி எழுதினால் கேலியா? ஓர் ஆண் கவிஞர் மூன்று மாதத்தில் முந்நூறு கவிதை எழுதினால் இதே கட்டுரை அவரை ஒழிப்புப் பட்டியலில் சேர்க்குமா? அளவுகோல் கவிதைக்கானது அல்ல, கவிஞரின் பாலுக்கானது. இடையில், தம்மை “ஆணாதிக்க மேட்டிமைவாதி” என்று பிறர் திட்டுவார்கள் என்று முன்கூட்டியே எழுதிவைத்தவர், அந்தப் பட்டத்துக்கான தகுதிகளைத் தம் கையாலேயே நிரூபித்துவிடுகிறார்.
எந்தப் பக்கமும் சாயாதே; பெண்ணியம், இடதுசாரி, தமிழ்த்தேசியம், இஸ்லாம் எதுவும் வேண்டாம்; மெய்யைத் தேடு என்று அறிவுரை. போரின் வடுக்களும் புதைகுழிகளும் நிறைந்த நாட்டில் “நான் எந்தப் பக்கமும் இல்லை” என்பதும் ஒரு பக்கம்தான்: இருப்பதை அப்படியே வைத்திருக்க விரும்புபவர்களின் பக்கம். முஸ்லிம் பெண் கவிஞர்களை ஒட்டுமொத்தமாக, மதத்தின் எல்லையைத் தாண்டாதவர்கள் என்று ஒரே வரியில் முத்திரை குத்தியவர், கையில் வைத்திருப்பதோ பஞ்சாங்கம்: ஜென்ம சனி, ஊழின் பெருந்திட்டம், புத்தியைச் சாத்தானாக்கி உள்ளுணர்வை மட்டும் நம்பு என்ற உபதேசம். புத்தியே சாத்தான் என்றால், விமர்சனத்துக்குப் புத்தி எதற்கு?
இந்துத்துவ சங்கி பாசையில் இலக்கியம் எழுதும் பதர் எதற்கு மதத்தைப் பற்றி பேசுகிறது. அந்த பதருக்கு கம்பவாரிதி ஜெயராஜ் துணிச்சல்காரர்.
கடைசியில், ஒரே ஒரு பெண் மேதை எழுந்தால் மொழியே தழைக்குமாம்; அவதாரத்துக்குக் காத்திருக்கும் கனவு இது. இலக்கியம் அவதாரத்தால் வளர்வதில்லை. ஆயிரம் சாதாரணப் பெண்கள் எழுதித் தவறி, எழுதித் திருந்தும் பரந்த நிலத்திலிருந்துதான் சிகரங்கள் எழுகின்றன. விதைத்ததெல்லாம் மரமாகாது என்று விவசாயிக்குத் தெரியும்; அதற்காக முளையிலேயே கிள்ளச் சொல்பவர் அறுவடையை விரும்புபவர் அல்ல. அதோடு, பெண் கவிஞர்கள் “அக்கினிப் பிரவேசம்” செய்து தம்மை நிரூபிக்க வேண்டுமாம். சீதையைத் தீக்குளிக்கச் சொன்ன அதே கதை! நிரூபிக்க வேண்டியவள் எப்போதும் பெண், சான்றிதழ் கொடுப்பவர் எப்போதும் ஆண். கற்பு என்ற பழைய கட்டுப்பாட்டையே கேள்வி கேட்கும் தொகுப்பு என்று பதிப்பகக் குறிப்பு சொல்கிறது; அதைப் பற்றி எழுதும்போது இவருக்கு நினைவு வருவது தீக்குளிப்பு. இந்த மாதத் தொடக்கத்தில் ஓர் ஆண் கவிஞருக்குக் “கற்புக்கரசன்” பட்டம் சூட்டியதும் இதே நரிசாந்த்தான்.
கண்மூடிப் புகழ்வதால் யாருக்கும் பயனில்லை என்பதை ஒப்புக்கொள்ளலாம். கடுமையாக விமர்சியுங்கள்; ஆனால் தொகுப்பைப் படித்து, கவிதையை வரிவரியாக எடுத்துக்காட்டி, “இங்கே தளர்கிறது, இப்படி இறுக்கலாம்” என்று கூடவே நின்று சொல்லுங்கள். அது தோழமை. பால் நிலையையும் மதத்தையும் வைத்துச் சாதகம் எழுதுவது விமர்சனம் அல்ல, வாசலில் நின்று இடும் சாபம்.
பெண்கள் எழுதினார்கள், எழுதுகிறார்கள், எழுதுவார்கள். அவர்களுக்குத் தேவை சான்றிதழ் அல்ல, வாசகர்கள். ஒழிப்பது எப்படி என்று கையேடு எழுதியவர், எப்படி எழுதக்கூடாது என்பதற்கு அருமையான உதாரணமாகிவிட்டார்.
பின்குறிப்பு : யார் அந்த நரி என்று கேட்பவர்களுக்கு, அது ஆசானின் சீடரான தன்னைக் கூறிக்கொள்ளும் அற்பப் பதர். யாராவது தன் வாட்ஸ்அப் குழுவில் இல்லாதவர்கள் புத்தகம் எழுதிவிட்டார் மூக்கு வியர்த்து ஊளை வந்துவிடும்.
அதை முகநூலுக்கு கேள்விக் கொண்டு வர சிலர் இருக்கிறார்கள். பெண்களை பாலியல் சுரண்டல் செய்ததை அம்பலப்படுத்தாமல் தமக்குள்ளே கமுக்கமாக வைத்துக் கொண்டதற்காக தரும் கூலி இது.

