இலக்கியத்தில் இந்த ஒரு விடயதானம் குறித்து மட்டும் தமிழ்சமூகத்திற்கு அபரிமிதமான நுண்ணுணர்வு உண்டு. ஒரு புதிய பெண் கவிஞர் புயலாகப் புறப்பட்டு வந்து மூன்று மாதங்களில் முந்நூறு கவிதைகளை வடித்துத் தள்ளினால், தம் பங்கிற்கு சிதல்புற்றிலிருந்து ஈசல்கூட்டம் போல தமிழ் சராசரி வாசகர் கூட்டமொன்று, இறங்கி புகழ்மொழிந்து அவரை அழிக்கும். அண்மையில் இரண்டு இளம் வாசகர்களுடன் கதைத்துக் கொண்டிருந்தேன். அதிலொருவர் பெண். இப்பொழுது தன் இருபதுகளில் இருப்பவர். தீவிரமாக இலக்கியம் வாசிக்கிறார். ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதுகிறார். அவருக்கு நம் சூழலைப் பற்றி சில அவதானங்களைச் சொல்லிய பொழுது அதை எழுத வேண்டுமெனத் தோன்றியது. நேற்று கீதிர் எனும் இலங்கையைச் சேர்ந்த பெண் கவிஞர் ஒருவரின் முதல் தொகுப்பு வெளியாகும் அறிவிப்பொன்றையும் அதனுடன் அவரது கவிதைகள் பற்றி கரிகாலன் என்பவர் எழுதிய குறிப்பையும் வாசிக்கக் கிடைத்தது. வேறு வழியேயில்லை, யூரியூப் ஜோசியரின் எச்சரிக்கையையும் மீறி அக்கினி புகுந்தே ஆக வேண்டும் என்று சங்கல்பம் எடுத்துள்ளேன்.
தமிழில் பெரும்பாலும் பெண் கவிஞர்கள் அரிய வகையினர். அவர்களது வாழ்க்கை வட்டம் (life circle), வாழ்க்கைக் காலம் (life span) என்பன அதிகபட்சம் மூன்று மாதத்திலிருந்து மூந்நூற்று அறுபத்து ஐந்து நாட்களாக இருப்பதை கடந்த பதின்னான்கு வருடங்களாக அவதானிக்கிறேன்.
வாழ்க்கை வட்டத்தை ஒவ்வொரு தொகுப்பிற்கும் ஒன்றிலிருந்து இன்னொன்றாக கூடுகளையும் சிறகுகளையும் உதிர்த்து புதிதாக ஆகிக்கொண்டிருப்பவர்கள் என்று இன்று யாரேனும் ஒரு பெண் கவிஞரையாவது சுட்ட முடியுமா?
அதிலும் குறிப்பாக இலங்கைப் பெண் கவிஞர்களில் தொண்ணூற்று ஒன்பது விகிதம் பேருக்கு நவீன இலக்கியம் என்றால் என்னவென்றே கடைசி வரை தெரிய வருவதில்லை. அதற்குள் அவர்கள் ஒரு கவிதைத் தொகுப்பு போட்டு விட்டு, முகநூலில் பிறரது கவிதைகளை வாழ்த்தி பின்னூட்டமிட்டு மூத்த பெண் கவிஞர்கள் ஆகி விடுவார்கள். இலக்கியத்தில் என்ன சாதித்தாய்? மொழியில் உன் பங்களிப்பு என்ன? ஒரு தொகுப்பிலிருந்து அடுத்த தொகுப்பில் எப்படி மேம்பட்டிருக்கிறாய்? என்றெல்லாம் எவரும் கேட்க முடியாது. கேட்டால் அபச்சாரம். வரிசையாக முகநூல் பெண்ணுரிமைப் போராளிகள் தோன்றி, கலங்காதே கண்ணே, அவன் கிடக்கிறான் ஆணாதிக்க மேட்டிமைவாதி, நீ பாட்டுக்கு உனக்கு என்ன மனஅழுத்தமோ அதை இங்கு வந்து கொட்டு, நாலு வரி புகழ்வோம். நீ பெண்ணுரிமையின் புதிய அலை என்போம். ஒரு தொகுப்புடன் உன்னை நாங்கள் ஒழித்துக் கட்டுவோம். இல்லையென்றால் நீயே உன் சொந்தத் தொகுப்புள் சிக்கிக் கொள்ளச் செய்வோம். சொந்தச் சிறைகளை உருவாக்கிக் கொள்ளாமல் நீயென்ன பெண்!
இப்படி அவர்களின் உசுப்பேற்றல்களில் இருக்கும் பெண் கவிஞர்கள் அவை குறித்து கம்முன்னு இருந்தாலும், சில பதிப்பகங்களும் அவர்களின் நட்பார்ந்த எழுத்தாளப் பெருந்தகைகள் சிலரும் சதாசர்வ காலமும் பெண் கவிஞர்களை ஊக்குவிப்பதையே குலத்தொழிலாகக் கொண்டு இயங்குபவர்கள். அத்தகைய குலத்தொழில்வாசிகளை ஏதாவது ஒரு பெண் கவிஞர் நம்பிவிட்டால், உடனே தொகுப்பு வரும். அதற்கு அந்த எழுத்தாளப் பெருந்தகை, ஆஹாவென்று எழுந்தது பார் யுகப் புரட்சியென்று ஒரு கட்டுரையும் எழுதி கல்லறை வாசலில் நின்று படித்துக் கொண்டிருப்பார். அதை உள்ளே படுத்திருந்து அந்தப் பெண்ணுக்குள் எழுந்த கவிஞை கேட்டு விட்டு செத்து விடும். பிறகென்ன நம் பெருந்தகைகள் அடுத்த பெண் கவிஞரைக் காவு வாங்க அதே வேகத்துடன் புறப்பட்டுவிடுவார்கள். அவர்களுக்குப் புகழவும் அடுத்த ஷணமே புதைக்கவும் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள்.
பெண் கவிஞர்களிடம் இருக்கும் சில சிக்கல்களை என் அவதானத்திலிருந்து சொல்கிறேன்.
ஒன்று, அவர்கள் உணர்ச்சி வேகத்தில் எழுதிக் குவிக்கிறார்கள். அவை மொழி மீதான ஈடுபாடோ, கவிதையென்பது கலையென்பதாலோ அல்ல. அவர்கள் உணர்ச்சிகரமாக இருந்தால் மொழி கொந்தளிக்க வேண்டும். வேட்கையுடன் இருந்தால் அடிப்பாதம் உரசும் இறகுக் கொத்துப் போலத் தழைய வேண்டும். அவர்கள் சீற்றத்துடன் இருந்தால் தீப்பிடிக்க வேண்டும். கவிதையும் தாம் விரும்ப விழையும் ஆணைப் போல இருக்க வேண்டுமெனக் விரும்புகிறார்களா எனச் சந்தேகமாய் இருக்கிறது.
இப்படியான இந்தக் கவிதைகளுக்குச் சில அடிப்படையான கருப்பொருட்கள் உண்டு. தற்பொழுது காட்சிப் படிமங்களும் கூட உருவாகி விட்டன. ஏதாவதொரு மாடியிலிருந்து தற்கொலை செய்யவோ எவனையாவது பித்துறக் காதலோ காமமோ கொள்வதோ கவிதையில் தான் வாலயாமாகிறது. ஆன்மீகமான கவிதைகளைப் பொதுவாக முஸ்லிம் பெண் கவிஞர்களே எழுதுகிறார்கள். அவையும் கூட அல்லாவின் எல்லையில் சூபி மரபின் எழுத்துச்சாயலில் எழுதப்படுகின்றன. ரூமியைப் பார்த்தால் செருப்பால் அடிக்க வேண்டுமெனக் கோபம் வரவைக்குமளவுக்கு புதிய பெண்களின் ஆன்மீகத்தை இன்றும் ரூமி எழுதிக் கொண்டிருப்பதைப் போன்ற ஹலுசினேசனில் அவர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் மதத்தின் ஆன்மீக எல்லையை கடப்பதேயில்லை. கடவுளைக் கடக்காதவர்கள் கவிதை எழுத முடியாது. மதம் சார் பற்றுப் போல ஒரு கவிஞரை அழிக்க கூடியது வேறில்லை. கவிஞர்கள் காலாதீத்ததில் நின்று வாழ்வை எதிர்கொண்டு அதன் மொழிச்சவாலை நீட்டிப்பதை முதன்மைப் பணியாகக் கொண்டவர்கள். ஆணிடம் அடிமையாவதை விட கடவுளிடம் அடிமையாவது ஒன்றும் மேம்பட்ட நிலை அல்ல. இரண்டும் ஒன்று தான். பின்னையது முன்னையதை விட அசட்டு வழி.
இரண்டாவது, மிக நவீனமான உலகின் அன்றாடச் சொற்களும் மொழிபெயர்ப்புக் கவிதைகளின் மொழிச்சாயலும் துலக்கமாகக் கொண்டவர்கள் நம் புதிய கவிஞைகள். முன்னர் அந்தச் சொல்முறை ஒரு தற்காலிக விளையாட்டாக கொஞ்சக்காலம் மொழியில் கவனிக்கப்பட்டது. ஆனால் எல்லாப் புரட்சிகரக் கருத்துகளையும் எப்பொழுதும் கவிதை வாசகர்கள் கைவிட்டு வாழ்க்கையை, நுண்மைகளை தேடும் கவிதைகளை நோக்கித் தான் வாசகர்கள் செல்வதை என் அவதானிப்பில் பார்த்திருக்கிறேன். எனது மகள் கேள்வி கேட்பவள் எனும் கற்பகம் யசோதரவோ, உன் சின்ன உலகத்தைத் தாறுமாறாகத்தான் புணர்ந்திருக்கிறாய் எனும் பெருந்தேவியோ, ஐந்து டாலருக்குக் கொஞ்சம் கற்பை வாங்கினேன் எனும் கீதிரோ, கணப்பொழுது அதிர்ச்சிக்கும் அறைகூவலுக்கும் அப்பால் கவிதையின் வரிகளில் சாஸ்வதத்தை அடைவதற்கான பயணமாக இலக்கியத்தைக் கொள்வதில்லை. பெரும்பாலான பெண்கவிஞர்களுக்கு அது லெளகீக சாதனம், ஆனால் கலையென்பது ஒரு மெய்காண்வழிமுறை. அத்தகைய நம்பிக்கை கொண்ட பெண்கள் அரிதிலும் அரிதாக எங்கேனும் இருப்பார்கள் என உறுதியாக உள்ளுணர்வு சொல்கிறது. புத்தி தான் சாத்தான், அதை நம்ப மறுக்கிறது.
மூன்றாவது, நம் இளைய கவிஞைகள், இந்த என் ஜி ஓத்தனமனான கவிதை கருத்துகளை எழுதுவதை ஆங்கில வழியாகவோ, மொழிபெயர்ப்பு வழியாகவோ கற்றுக் கொள்கிறார்கள். தமிழின் உச்சமான அழகை நவீன தமிழில் ஒரு பெண்கவிஞர் கூட இதுவரை அடையவில்லை. அந்தச் சுரங்கத்தின் வாசலுக்குக் கூட அவர்கள் செல்வதில்லை. முக்கியமான சிக்கல், தமிழின் தொல்மரபின் மீது ஒரு முதன்மைப் பெண் படைப்பாளி எழுந்து பெண்களின் சிக்கலை எப்படி கவிதையில் படைப்பது என்பது இதுவரை நிகழவில்லை. அதனால் அவர்கள் சாடித்தொட்டிகள் போல தங்கள் வீட்டு பல்கனிகளில் தூங்குகிறார்கள். சமயலறைகளைப் பாடுகிறார்கள். வக்யூம் கிளீனர்களில் கணவர்களின் தலைகளைக் கவ்வி இழுக்கிறார்கள். நடுநடுவே கொஞ்சம் உலகியல் இயற்கைக் காட்சிகள். கிரஷ்களுக்கு காதல் காவியம் படைக்கிறார்கள். மன அழுத்தம் கொள்கிறார்கள். அரசியல் கட்சிகள் போலக் கூடுகிறார்கள், அல்லது
துவண்டு வெளியேறுகிறார்கள். இலக்கியம் போன்ற நுண்மையும் அறிவார்ந்ததுமான கலையைக் கற்றுக் கொள்வதோ, வித்தையை வித்தைக்காகப் பயின்று மேலானதை அடையவோ, விரும்பவோ செய்ய மாட்டோம் என எங்கோ, பெண்கள் மட்டும் கலந்து கொள்ளும் சூம் மீட்டிங்கில் முடிவெடுத்துவிட்டதைப் போல நடந்து கொள்கிறார்கள். என்ன தான் ஆய்வுக் கட்டுரைகளும் புகழாரங்களும் கிடைத்தாலும், மொழியில் நாம் கவிதையால் புதிதாக ஒன்றை நிகழ்திக் கொண்டிருக்கிறோம் எனும் தன்னுணர்வை வாழ்க்கை நீளத்திற்குமெனக் கொண்டு செல்லும் ஒரு பெண் படைப்பாளி அமைய நம் மொழிக்கு ஊழின் பெருந்திட்டம் ஏதேனுமின்றி வேறு வழிகளில்லைப் போலிருக்கிறது. சொல்லி வைத்தாற் போல ஒரே வாழ்க்கை வட்டத்தில் தீர்ந்து விடுகிறார்கள்.
இந்த நிலை கடக்கப்பட வேண்டும். ஒரு பெண்ணாவது இந்த மொழியின் இதுவரையான சொற்களின் பெருஞ்செல்வத்தை சொந்தம் கொண்டாடி பெரும்படைப்பாளியாக ஆகியே தீருவேன் என்ற ஓர்மத்துடன் மொழி புக வேண்டும். அதுவரையான இலக்கிய மேதமைகளைக் கடந்து வளர்வேன் எனும் ஆவேசம் இருக்க வேண்டும். லெளகீக, புரட்சிகர, பெண்ணிய, இடதுசாரிய, தமிழ்த்தேசிய, இஸ்லாமிய என எந்த பக்கமும் சாயாமால், மெய்யை அறிய மொழியை கையிலெடுக்கும் லட்சியவாதியாக இருக்க வேண்டும். எந்தப் பெரும்படைப்பாளிக்கும் நிகரான ஆளுமையாகத் தன்னைக் கற்பனை செய்து கொள்ளாத ஆணோ பெண்ணோ, தற்செயலாக, தன்னம்பிக்கையாக, பெரும்படைப்பாளி ஆக முடியாது. இலக்கியம் என்பது நிகர் போர். தீவிரமாக இருட்டும் ஒளியும் மோதிக் கொண்டு நிறங்கள் பிரிந்து சுடரும் கலை. நீண்ட கால உழைப்பும், பிறிதெதுவும் வேண்டாத தீவிரமும் இல்லாமல் அது வந்தமராது.
கீதிர் கவிதைகளின் முதலாவது தொகுப்பு வருவது நல்லது. எந்தப் படைப்பாளிக்கும் தன் முதல் தொகுப்பிலேயே அவரது அடிப்படையான ‘ஒன்று’ உருவாகி விடும். தன் அதுவரையான சிந்தனையை, சொல்முறையை, வடிவத்தை என அனைத்தையும் ஒரு ஆளுயர நிலைக்காண்ணாடியிலெனப் பார்க்கும் வாய்ப்பை தொகுப்பு அளிக்கும். அதுவரை உணர்ச்சிகரமாய் இருந்தவை ஒரு வடிவமற்ற, சொல்லப் போனால் கோணலான ஒரு சரளைக் கல் போல ஆகிவிடும். பொற்கிழிப் பையில் குறுணிக்கற்களெனத் தன் முதற் தொகுப்பின் கவிதைகளை உணரும் திறனற்றவர்கள் தம் இரண்டாவது பாய்ச்சலை, அசலானதை நிகழ்த்த முடியாது.
விமர்சனங்களை கூர்ந்து அவதானிக்க வேண்டும். அவற்றிலிருந்து கற்க அம்சங்கள் இருந்தால் பெற்றுக் கொள்ள வேண்டும். உள்ளுணர்வையும் தீவிரத்தையும் தவிர வேறு இன்னொருவர் சொல்வதை நம்பக் கூடாது. உலகில் கவிதைகளை விட கவிதை பற்றிய மூட நம்பிக்கைகள் தான் அதிகம். ஆனால் எப்பாடுபட்டாவது, கவிதை பற்றி அறியவும் வேண்டும்.
கீதிரின் கவிதைகளில் ஆங்கில மொழியின் இசைத்தன்மை உண்டு. முன்னர் இதே தளத்தில் “மூர்க்கனும் விழைவியும்” எனும் குறிப்பை அவரது கவிதைகள் குறித்து எழுதினேன். அதில் சில அம்சங்களைச் சுட்டிக் காட்டியிருக்கிறேன். சொல்லிணைவுகளின் முக்கியத்துவம், தமிழின் இசைத்தன்மை, சொற்களுடனான பந்தம் உட்பட சில அம்சங்களை அவர் கவனிக்க வேண்டும். ஆனால் அவருக்கு வழக்கமான தமிழ்ப் பெண்கவிஞர்களின் பரம்பரைச் சாபம் விழுந்து விட்டதோ என ஐயுறும் அளவுக்கு, அவரது கவிதைகளை, புகழத் தொடங்கினார்கள். ஒருவரை மதிப்பீடின்றி புகழ்வதில், அதுவும் பெண்ணென்றால், எடுத்த அடி வைத்து அடுத்த அடி தூக்க முன்னரே நோகுமென்று எண்ணியது போல அவ்வளவு விரைவாக வந்து பாராட்டுவார்கள்.
பெரும்பாலானவர்கள் கீதிரின் பலவீனங்களை எங்கும் சுட்டி எழுதியதில்லை. தொகுப்பு, களம் புதிதில் வெளியாகிறதாம். அது ஜென்ம சனியின் தொடக்கம். ரியாஸ் குரானாவை ஒரு கவிஞரென்றும் இலக்கியத்தில் சிந்தனையாளர் என்றும் நம்பும் அந்த இதழுக்கு இலங்கை இலக்கியமென்றால் குரானாவின் மாலுபாண் இலக்கியம் எனும் பார்வை இருக்கலாம். அதன் வரிசையில் களம் புதிதின் குறிப்பை பார்த்த போது இரண்டாயிரங்களுக்கு காலப்பயணம் சென்ற அனுபவம் கிடைத்தது. ஒரு இளம் கவிஞைக்கு சனி பிடித்தால் நம் சமுதாயத்தையும் அது பாதிக்கும் என்பது விதி. ஆகவே வேறு மார்க்கமில்லை, களம் புதிதின் குறிப்பை வாசியுங்கள்.
“உடல்சார்ந்த தன்னாட்சிக் கவிதைகள்
உலகக் கவிதைப் பரப்பில் பெண் குரல்கள் பெரும்பாலும் விலகியே ஒலித்திருக்கின்றன. பாரம்பரிய வடிவங்களும், ஆண் மையச் சொல்லாடல்களும் கட்டமைத்த எல்லைகளைக் கடந்து, தங்களின் உடலை, அகத்தை, இருப்பை, அரசியலைப் பேச பெண் கவிஞர்கள் தமக்குரிய மொழியை உருவாக்க வேண்டியிருந்தது.
சில்வியா பிளாத் தனது அகத்தின் இருளையும், உளவியல் நெருக்கடிகளையும் கூர்மையான உருவகங்களால் உடைத்தெறிந்தார். ஆட்ரி லார்ட் , நிறம், பாலினம், அடையாளம் ஆகியவற்றின் குறுக்குவெட்டில் நின்று கோபத்தையும் வலிமையையும் கவிதையின் ஆயுதமாக்கினார். கமலா தாஸ் தெற்காசியச் சமூகத்தின் ஒழுக்க வரையறைகளைத் தகர்த்து, பெண்ணின் காமத்தையும் சுதந்திரத்தையும் தயக்கமின்றிப் பதிவு செய்தார். ஃபரோக் ஃபரோக்ஸாத், பாரசீகக் கவிதை மரபில் பெண்ணின் தனிமையையும், சமூக விலகலையும் துணிச்சலாக முன்வைத்தார்.
இவர்களது கவிதை மரபின் தொடர்ச்சியாகவும், இன்றைய டிஜிட்டல் யுகத்தின் தனித்துவமான வெளிப்பாடாகவும் இலங்கையிலிருந்து எழுதி வரும் கீதிர் கவிதைகளைப் பார்க்க முடியும். பெண்ணின் ஒழுக்க மதிப்பு, குடும்ப கௌரவம் அல்லது தூய்மை ஆகியவை அவளது பாலியல் கட்டுப்பாட்டில்தான் அடங்கியுள்ளது, என்ற வரலாற்று எதிர்பார்ப்பை கீதிர் தனது ‘ஐந்து டாலருக்கு கொஞ்சம் கற்பை வாங்கினேன்’ தொகுப்பில் உடைக்கிறார்.
தெற்காசியா, மத்திய கிழக்கு மற்றும் இலத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த சமகாலப் பெண் கவிஞர்கள், தலைமுறை தலைமுறையாகத் தொடரும் வெட்கத்தைக் களைவது குறித்தும், தூய்மைக் கலாச்சாரம் எவ்வாறு பெண்களின் நடமாட்டம், பேச்சு மற்றும் ஆசைகளைக் கட்டுப்படுத்துகிறது என்பதை அம்பலப்படுத்துவது குறித்தும் எழுதுகிறார்கள்.
ஆன்மீகத்தையும் பௌதீகத்தையும் பிரிப்பதற்குப் பதிலாக, கீதிர் போன்றோர் அவற்றை ஒன்றிணைக்கின்றனர். மாதவிடாய், பிரசவம், முதுமை, மற்றும் காம வேட்கை உள்ளிட்ட பௌதீகமானது, தீண்டப்படாததாக இருக்க வேண்டிய அவசியமில்லை. கவிதைகளில் அவை இயல்பாக எதிர்கொள்ளப்படுகின்றன.
பெண்களின் உடல்களைக் கட்டுப்படுத்துவது, பெரும்பாலும் அரசியல் மற்றும் காலனித்துவக் கட்டுப்பாட்டிற்கான ஒரு உருவகமாகவோ அல்லது கருவியாகவோ விளங்குகிறது.
கவிதையில் உடல்சார்ந்த தன்னாட்சியை மீட்டெடுப்பது என்பது, அரசு, மதம் மற்றும் ஆணாதிக்கத் தணிக்கைக்கு எதிரான ஒரு நேரடியான அரசியல் எதிர்ப்பாக அமைகிறது. பிற உலகப் பெண் கவிஞர்களைப் போலவே, தனக்கு நேரும் அனுபவங்களையும், தன்னைச் சுற்றியுள்ள சமூக யதார்த்தங்களையும் பிரித்துப் பார்க்காத மொழி கீதிர் கவிதைகளில் வெளிப்படுகிறது. பெண்ணின் உணர்வுகளை மென்மையானவையாக மட்டும் சுருக்காமல், அவற்றின் சிக்கலையும், கூர்மையும், இயல்பையும் எந்தப் பூச்சுகளும் இன்றிப் பேசும் துணிச்சல் கீதிரிடம் காணப்படுகிறது.
மைய நீரோட்டக் கவிதைகள் பெரும்பாலும் பொதுமைப்படுத்தப்பட்ட கதைகளைப் பேசுகிறபோது, கீதிர் கவிதைகள் நுட்பமான, தனிப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட அனுபவங்களை மையத்திற்குக் கொண்டு வருகிறது.இதுதான் இவரது தனித்தன்மையும்கூட. கீதிரின் விலகல் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட விளிம்பு நிலை அல்ல. அது அதிகார மையங்களைக் கேள்வி கேட்கும் ஒரு அரசியல் நிலைப்பாடு.
தனக்கான மொழியைத் தானே செதுக்கிக்கொள்ளும் ஒவ்வொரு பெண் குரலும், பழைய இலக்கிய எல்லைகளை மெதுவாக நகர்த்தி விரிவுபடுத்துகின்றன.
இலங்கையிலிருந்து ஒலிக்கும் கீதிர் கவிதைகள் இன்றைய காலத்திற்கேற்ற புதிய சொற்களையும் உணர்வுகளையும் கட்டமைக்கின்றன. சமூக வலைத்தளத்தின் வேகமான ஓட்டத்திற்கு நடுவிலும், நிதானமாக வாசிக்கவும், சிந்திக்கவும், தன்னை அடையாளம் காணவும் வைக்கும் இவரது குரல், சமகாலத் தமிழ் மற்றும் பெண்ணியக் கவிதைப் பரப்பில் கவனிக்கத்தக்க பங்களிப்பைச் செய்கின்றன.
கீதிர் கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும் நாளில் உலகம் அவரை கவனிக்கும். இத்தகு நம்பிக்கையோடு களம் புதிது கீதிரை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறது”.
களம் புதிது
இதை எழுதியவருக்கு இலக்கியமென்பது கோட்பாட்டுத் தளைகளைத் தின்று விட்டு சொற்புழுக்கை போடுவது கவிதையெனும் நினைப்பிருப்பது தெரிகிறது. இளம் படைப்பாளிகளை களம் புதிது பதிப்பகம் ஊக்கப்படுத்துவது நல்லது தான். ஆனால் இப்படியொரு குறிப்பை எழுதி ஒரு தொகுப்பைப் போட்ட யாரும் இதுவரை உருப்பட்ட வரலாறு தமிழ் கூறும் நல்லுலகில் இல்லை. இதிலிருந்தெல்லாம் மீண்டு வந்து, கீதிர் நல்ல கவிதைகளை எதிர்காலத்தில் எழுதி வரலாறு படைக்க வாழ்த்துகள்.
பெண் கவிஞர்களை ஒழிப்பதையே நோக்காகக் கொண்டு பாராட்டி எழுதி நாசமாக்குபவர்கள் பலருக்கும் முதன்மையாகக் கவிதையைத் தெரியாது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம், அவள் கவிதை எழுதுகிறாள், அவளொரு புரட்சிப் பெண். அவளை ஒழிக்காமல் இன்னொருத்தி வரமாட்டாள். பெண் கவிஞர்கள் இந்த அக்கினிப் பிரவேசத்தைக் கடந்து கவிதையில், படைப்பில் தம்மை நிரூபிக்க வேண்டும். அப்படி ஓர்மமுள்ள ஒரு குரல், தீர்க்கமும் தீட்சண்யமும் உள்ள ஒரே ஒரு குரல் எழுந்தால் போதும், நம் மொழி தழைக்கும்.

