நான் புத்தகக் கடையில் வாங்கிய முதல் இலக்கியப் புத்தகம் கவிஞர் சேரனின் ‘யமன்’. யாழ்ப்பாண நவீன சந்தையில் ஏதோவொரு கடையில் 6 ரூபாவுக்கு வாங்கினேன். அது 1984-ஆம் ஆண்டு. ஈழ விடுதலைப் போராட்டம் முழு வேகத்துடன் எழுந்துகொண்டிருந்த காலம்.
அந்தத் தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கவிதையும் என் போன்ற இளைஞனுடைய இரத்த அணுக்களை வெடிக்க வைக்கக்கூடியவை. விடுதலை அவா பக்கங்கள் எங்கும் நிறைந்திருந்தது. யுத்த களத்தில் நின்று, ஒருகையில் ஆயுதத்தோடு மறுகையில் கவிதைப் புத்தகம் படிப்பது உணர்ச்சிகரமான இலக்கியப் படிமம். ஆனால், அக்காலத்தில் அவ்வாறே உண்மையில் நிகழ்ந்தது. யுத்தத்தின் நடுவே கவிதை படித்தோம். “வெல்வோமாயினும் வாழ்வோம்; வீழ்வோமாயினும் வாழ்வோம்; நமது பரம்பரை போர் புரியட்டும்!” என்பது ‘யமன்’ தொகுப்பின் இறுதி வரிகள்.
சேரன் எங்குமிருந்தார். கவிதைகளில், கவிதா நிகழ்வுகளில், நாடகத்தில், பத்திரிகையில் என எங்குமிருந்தார். ‘மண் சுமந்த மேனியர்’ நாடகத்தில் ஒலித்த சேரனின் கவிதை வரிகள் எனக்கு இப்போதும் இசையோடு மனப்பாடம். 42 வருடங்கள் கழித்தும் மனதிலிருந்து அகலவில்லை.
நான் புலம்பெயர்ந்து அய்ரோப்பாவுக்கு வந்த காலத்தில், ‘சரிநிகர்’ மிக முக்கியமான பத்திரிகையாக இருந்தது. அதன் ஆசிரியரும் சேரனே. அக்காலத்தில் பாரிஸில் ‘சரிநிகர்’ பத்திரிகைக்குப் புலிகள் தடைவிதித்திருந்தார்கள். எனவே கடைகளில் கிடைக்காது. நண்பர்களுக்கு இடையேயான சுற்றுக்களில் படித்துக்கொண்டிருந்தோம். அரசியலில் மட்டுமல்லாது இலக்கியத்திலும் பெரும் அடைவுகளைச் ‘சரிநிகர்’ கண்டது. சரிநிகரிலிருந்து ஓர் இளைஞர் பட்டாளமே உருவாகி இலக்கிய வெளிக்கு வந்திருக்கிறது.
1998, பிராங்ஃபோர்ட் இலக்கியச் சந்திப்பில் முதற்தடவையாகச் சேரனுடன் பேசினேன். இந்தக் காலத்தில் நானும் எழுதத் தொடங்கியிருந்தேன். அரசியல் மற்றும் இலக்கியம் குறித்த என்னுடைய நோக்குகளும் மதிப்பீடுகளும் மாறத் தொடங்கியிருந்த காலமது. சேரன் ஒருபோதும் மாறவேயில்லை என்றுதான் நினைக்கிறேன். நான் ‘யமன்’ தொகுப்பில் படித்த சேரன்தான் அவரது கடைசித் தொகுப்பான ‘காஞ்சி’யிலும் இருந்தார். அவருடைய ‘தீராநதி’ இதழ் நேர்காணல் மற்றும் சில அரசியல் கட்டுரைகள்மீது எனக்கு விமர்சனமிருந்தது. அவற்றை எழுதவும் செய்தேன். இதனால் எங்களிடையே இயல்பாக விலகலுமிருந்தது.
அய்ரோப்பாவில், கனடாவில், இந்தியாவில் என்று நாங்கள் பொது இடங்களில் சில தடவைகள் சந்தித்திருக்கிறோம். எல்லாச் சந்திப்புகளுமே தற்செயல்களே. சம்பிரதாயமாகச் சில வார்த்தைகள் பேசிக்கொள்வோம். சென்னையில் நிகழ்ந்த இறுதிச் சந்திப்பின்போது, ‘காலம்’ செல்வம், கவிஞர் கருணாகரன் உள்ளிட்ட சில நண்பர்கள் கூட இருந்தார்கள்.
அதேவேளை, சேரனைக் கருத்தியல்ரீதியாக நெருக்கமாகப் பின்தொடரும் ஏராளமானவர்கள் தமிழ்ப் புலத்திலுண்டு. அவரது கவிதைகளின் தீவிர வாசகர்கள் உலகம் முழுவதுமுண்டு. சேரனின் கவிதைகள் பல்வேறு உலக மொழிகளுக்குத் தமிழ்க் கவிதையைக் கொண்டு சென்றுள்ளன. நீண்டகாலமாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தாலும், இடையறாது அரசியல், இலக்கிய, சமூகச் செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டேயிருந்தவர் சேரன்.
என்னைப் பொறுத்தவரை, என் இளமைக்காலத்தின் எழுச்சிக் கவிஞனாகவே, புரட்சிகர இளைஞனாகவே அவரது பாத்திரம் என் மனதில் ஆழப் பதிந்துள்ளது. அவரது வேரில் என் எழுத்து அக்காலத்தே துளிர்த்தது.
கவிஞருக்கு என் இறுதி வணக்கமும் அஞ்சலியும்.
ஷோபா சக்தி

