ஒரு குலப்பாடகனின் கடமை

ஒரு கவிஞன் தன் குடியின் குலப்பாடகனாக ஆவதுண்டு. அது அவனது குடித்தொழில். அதற்கு அதற்கென்றே எல்லா வகையான கலைஞர்களுக்கும் மரபுகள் உண்டு. அந்த வகையில் சேரன் ஒரு குலப்பாடகன். சண்முகம் சிவலிங்கமும் சு. வில்வரத்தினமும் பாணர்கள். நிலாந்தனும் கருணாகரனும் கூட சேரனின் மரபினரே. அஸ்வகோஷ், நட்சத்திரன் செவ்விந்தியன் போன்றோர் ஒரு தொகுப்பில் வீச்சுடன் எழுந்து இன்னொரு வகை நியாயங்களை கவிதை பரப்புக்குள் கொண்டு வந்தனர். எஸ் போஸ், சித்தாந்தன் போன்றோர் எதிர்மரபினர். ஈழப்போராட்டக் காலகட்டத்தில் இப்படிப் பல கவிதை மரபினர் உருவாகி வந்தனர். 

குலப்பாடகனென சேரனை முன்வைப்பதில் சில அம்சங்களை கவனப்படுத்த விரும்புகிறேன். குலப்பாடகனான கவிஞன் தன் காலகட்டத்தின் குரல்வளையாக மட்டுமே ஆகக் கூடியவர்கள். அவர்களது தரிசனமென்பது அவர்களது அறத்தால் உருவாவது. சேரன், நிலாந்தன், கருணாகரன் ஆகியோரது முக்கியமான படைப்புகள் அனைத்தும் அந்தக் கணத்தின் உக்கிரத்தால் நிகழ்ந்தவை. ஈழவிடுதலைப் போராட்டம் ஆக்கியளித்த கொந்தளிப்பான வாழ்க்கைச் சந்தர்ப்பங்களினால் உருவானவை. அவற்றுக்கு ஒரு எல்லை உண்டு என இப்போது சொல்லலாம். அவற்றால் தன் காலம் கடந்து என்றுமுள்ளதைத் தொட முடியாமல் ஆகலாம். ஈழக்கவிதைகளின் அடிப்படையான அம்சம் அது. அக்காலகட்டத்தின் வாழ்க்கை, மனநிலை, கொந்தளிப்பு போன்றவை தீவிரமாக பலநூறு வரிகளாக எழுதப்பட்டுள்ளன. குலப்பாடகர்கள் அதனைப் பாடுகின்றனர். தன் குடியின் கதையை ஆயிரமாயிரம் சொல்லில் தேக்கி வைக்கின்றனர். நிலாந்தனின் கவிதை வரியைப் போல எரியும் கற்பூரப்புல் வெளிகளென அக்காலகட்டத்தை சித்தரிக்கின்றன. கருணாகரனைப் போல கூடாரம் வானமல்ல என அறைகூவுகின்றன. சேரன் அதில் தன் மூன்று முதன்மையான பரிணாமங்களை வெளிப்படுத்தியுள்ளார். 

சேரனின் இளமையின் தொடக்க காலத்தில் அவர் ஒரு கற்பூரம். மொழிபெயர்ப்புக் கவிதைகளின் வழி உருவான அரசியல் கவிதைகளை அவர் தமிழுக்குள் சட்டை கழற்றி மாற்றினார். அதன் அசலான சுரத்துக் கொண்ட நவீன கவிஞனின் ஆவேசமான தோற்றத்தை சூடிக் கொண்டார். அவன் ஒரு இளைஞன். விடுதலையை விரும்புபவன். சாதி, சமூகத் தளைகள், அரச ஒடுக்குமுறையென ஒவ்வொரு ஒடுக்குமுறையும் அவனைச் சீற்றம் கொள்ளச் செய்கின்றன. சேரனின் இரண்டாவது சூரியன் கவிதையின் முக்கியத்துவமென்பது அந்தச் சொற்களின் கவித்துவத்தால் நிகழவில்லை. அதிலிருந்த தீ போன்ற துணிச்சலால் அது கவிதையானது. சாம்பல் பூத்த தெருக்களிலிருந்து எழுந்து வருகவென அறைகூவும் குரல் மிக ஆதியானது. ஒவ்வொரு குடியும் தன் குடியை மண்ணில் ஊன்றவெனப் போர்களைப் புரிந்து கொண்டே இருந்தன. அதன் மிக நவீனமான போரை எதிர்கொண்ட கவிஞன் அதில் வாளும் கேடயமுமாய் தன்னை எண்ணிக் கொண்டான். ஆயிரமாயிரம் தோள்களின் மீது ஏறிநின்று எனது நிலம், எனது நிலம் எனக் கூவினான். அந்தத் துணிச்சலான இளைஞன் சேரனது முதல் காலகட்டம். அவரது கவிதை மொழி ஆவேசமும் உறுதியுமாக, அரசாவது மயிராவது, எழுக போரிடுக. சின்னஞ் சிறியதே ஆனாலும், ஒரு மண்புழுவுக்கும் இருக்கும் சீற்றம் அது. எதைப் பற்றியும் அக்கறை கொள்ளாது எதிர்த்து வென்றமைவதே ஒற்றை விசையாகக் கொண்டு எழுவது. ஆனால் நடைமுறையில் அந்தக் குரல் அசாதாராணமானது. மானுட சுபாவத்திற்கு எதிரானது. போர் வீரமென்பது நாம் வலிந்து உருவாக்கிக் கொள்வது தான். மனிதர்களின் இயற்கையில் அவர்கள் இலட்சியவாதங்களுக்கு எதிரானவர்கள். ஒவ்வொரு காலகட்டத்தின் இலட்சியவாதியும் தன் காலத்தின் முள்ளாயே சமூகத்தால் உணரப்படுவர். அவர்களைப் புரிந்து கொள்ள சமூகம் முயற்சி செய்வதே சமூகத்திற்கும் இலட்சியவாதிக்குமான உரையாடல். 

சேரனின் இரண்டாவது காலகட்டம் அவரது விமர்சனங்களால் உருவானது. அவை வெறுமனே கோட்பாடுகளால் ஆனதல்ல. அவரே கூட பல கோட்பாடுகளை தன் கவிதைகளுடன் இணைத்து பார்த்திருக்கலாம். ஆனால் அவரது குரல் அறத்திலிருந்து உருவானது. எது இளமையில் விசையளித்த ஆற்றலோ அதுவே அவரை விடுதலைப் போராட்டம் உருவாக்கிக் கொண்ட அறமீறல்களுக்கு எதிராகவும் தன் குரலை உயர்த்தியது. ராஜினி திராணகமவின் படுகொலை, சிவரமணியின் தற்கொலையென அந்தக் காலகட்டத்தை சேரன் எதிர்கொண்டார். முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களைக் கண்டு தன் சொந்தக் குடியினரைச் சபித்தார். அவரது குரல் நடுங்கத் தொடங்கியது. முன்னர் அறைகூவிய உறுதியை இழந்த காலகட்டமது. ஆனால் ஈழபோராட்டம் வழிதவறிய ஒவ்வொரு நிகழ்விலும் அவர் எதிர்வினையாற்றினார். தயங்கித் தழைத்த ஆற்றாமைக் குரலில்.

மூன்றாவது காலகட்டம் போர் முடிந்த பின்னர் சேரன் நீறான காலம். அந்தக் காலகட்டத்தில் காடாற்று தொகுப்பின் கவிதைகளின் வழி அவரது முதல் காலட்ட இளைஞன் முதிர்ந்து ஆவேசம் தணியாமல் மீண்டும் எழுந்தான். பிரபாகரனின் மரணத்துக்கு சேரன் எழுதிய கவிதையை வாசித்த போது மனம் திகைத்தது. அந்தக் கணம் பிரபாகரன் என்ற மனிதன் கவிதையில் அஞ்சலிக்கப்பட்டார். அவரது எஞ்சும் அம்சத்தை துல்லியமாக எழுதியிருப்பார். 

உடல்

கடலோரம் தலை பிளந்து கிடந்த உடல்

இறப்பிலும் மூட மறுத்த கண்களின்
நேர் கொண்ட பார்வையில் மிதக்கிறது:
எதிர்ப்பு,
ஆச்சரியம்,
தவிப்பு,
தத்தளிப்பு,
கொதிப்பு,
ஆற்றாமை,
முடிவற்ற ஒரு பெருங்கனவு.

இந்தக் கவிதையை சேரன் தான் எழுத வேண்டும். அதுவே அவரின் இடம். அவர் எழுதியது சரி. பிரபாகரனின் படிமம் ஈழத்தமிழ் மக்களின் உள்ளத்தில் ஆழமாக ஊன்றியதன் ஆதார விசைகளை சேரன் தொகுத்திருக்கிறார். அக்கணம் அது சேரன் என்ற ஆளுமையல்ல. அவர் என்றும் தன்னை இணைத்துக் கொண்டிருக்கும் தன் மக்களின் நாக்கு மட்டுமே. அதுவாக நின்று அதைப் பாடியிருப்பார். அதை ஒரு குலப்பாடகன் செய்தே ஆகவேண்டும். அது அவனது கடமை. 

“எறிகணை பட்டுத் தெறிக்க காயம்பட்ட

இரண்டரை வயதுக் குழந்தையின் கைகளை

மயக்க மருந்தின்றி அறுக்கின்ற மருத்துவன்

இக்கணம் கடவுள்

நீரற்ற விழிகளுடன் அலறும் தாய்

ஒரு பிசாசு” 

இந்தக் கவிதை நேரடியாக புறப்பாடல்களில் எடுத்து வைக்கக் கூடியது. அபாரமான காட்சித் துண்டு. மொழியில் தோன்றி வளர்ந்திருக்கிறது. காடாற்று தொகுப்பு இத்தகைய தீவிர சித்திரங்களினால் நிரம்பியது. அழுது ஆற்றிய கண்ணீர் போல. 

அதன் பின் சேரனின் கவிதைகள் தன் அகத்தீவிரத்தை இழந்தன. இந்த மூன்று காலகட்டத்திலும் அவர் எழுதிய இருபது கவிதைகளளவில் முக்கியமானவை. அந்தளவு முக்கியமான கவிதைகளை அவர் எழுதியிருப்பது அபூர்வமானது. அவரது காலம் அவரைத் தன் குரல்வளையாக ஆக்கிக் கொண்டு பாடியது. அறச் சீற்றம் கொண்டு இளைஞனாக நின்று தன் காலகட்டத்தை எதிர்கொண்டது. 

சேரனின் காதல் கவிதைகள் இறுதி வரை இளமையாகவே இருப்பதற்கு அதுதான் காரணம். அவரொரு நித்திய காதலர். காதலித்துக் கொண்டேயிருப்பார் என்று தோன்றுமளவுக்கு அவர் எழுதியிருக்கிறார். ஒரு குலப்பாடகனுக்கு பல காதலிகள் கொள்ள அனுமதியுண்டு.  ஜெயமோகனின் அவதானம் ஒன்றுள்ளது, போரின் உக்கிரமான வீச்சுத் தணிந்த சேரன் குருதி, சுக்கிலம், செம்மதுவென காமத்தில் சென்றடைந்தார் என்பது. நானும் அதை வழிமொழிவேன். அது சரியான அவதானிப்பு. போரின் ஊக்கமென்பது காமத்தின் விசையை குருதியாட்டமாக ஆக்கிக் கொள்ள விழைவது தான். ஆனால் சேரன் அதைக் காதலில் குழைத்து விளையாடிக் கொண்டே இருந்தார். ஒரு கணமும் விழிகளில் தீவிரம் அகலாத குழந்தையைப் போல. ஆனால் அது எளிமையானது. அவரால் காமத்திலோ காதலிலோ உச்சங்களை பெரிதளவு எழுத முடியவில்லை. 

ஒரு குலப்பாடகனுக்குரிய தன்னுணர்வு கொண்டிருப்பதால் தான் சேரன் பலரதும் மரணங்களுக்கு கவிதைகளை எழுதியிருக்கிறார். அதுவும் குலப்பாடகனின் கடமை தான். ஒரு ஆகிருதியாக சேரனின் இடமும் குரலும் இந்தக் காலகட்டத்திற்கு மிக முக்கியமானது. அவர் ஒரு மூத்தோன் எனும் இடத்திலிருந்து அடுத்த தலைமுறையை முன்வைக்கும் நிலையில் இருந்தார். அதைச் செய்து கொண்டுமிருந்தார். அவரது அந்த ஆளுமை மதிக்கத்தக்கது. எமது சூழலில் அரிதான சுபாவம் அது. 

காலையிலிருந்தே மனம் இதைக் குறித்துத் தான் அந்தரித்துச் சுமை கொண்டிருந்தது. ஒரு சொந்தச் சோகம் போலத் தோன்றும் ஒரு கவிஞனின் மரணம் எதனால் அப்படி எனக்குள் நிகழ்கிறதென எண்ணிக் கொண்டிருந்தேன். அவரது கவிதைகளை எடுத்து வாசித்துக் கொண்டிருந்தேன். அவ்வை அக்காவின் முகம் நினைவில் வந்து கொண்டிருந்தது. தர்மினி அக்காவுக்கும் ஷோபாசக்திக்கும் இடையிலிருக்கும் அண்ணன் தங்கை உறவை நான் ரசிக்கிறேன். தன் அண்ணன் எனும் அந்தச் சொல் அவருக்கு அளிக்கும் நெகிழ்ச்சி ஈடிணையில்லாதது. சேரனுக்கும் அவ்வை அக்காவுக்கும் அப்படி ஒரு உறவு. சின்னண்ணன் எனும் சொல் அவர்கள் இருவருக்கும் மட்டுமே இருக்கும் தனிக்கவிதை போல. இப்படி நினைவுகளும் கவிதைகளுமாய் கலந்து கொண்டிருந்தன. நான் இறந்து போகிற போது எனும் சேரனின் கவிதையை கமலாபரன் அனுப்பிய பின் ஒரு கவிஞன் இறந்து போகிற போது கவிதையை எழுதினேன். மனம் அடங்கவில்லை. இந்தக் குறிப்பை எழுதுவதன் மூலம் நான் கண்டுபிடிக்க விழைந்ததை கண்டுபிடித்து விட்டேன். எனக்கேன் அது சொந்தச் சோகம்? 

நான் அவரின் இளவல், என் காலத்தில் இச்சிறுகுடியில் குலப்பாடகன் என என்னை உணர்ந்தவன் நான். நான் அவரைப் பாடியாக வேண்டும். அவர் என் குலத்தின் மூத்த குலப்பாடகன். அவரது இருப்பு நிறைவானது. சமூகத்தால் இழப்பென ஆழமாக உணரப்படுவது. அவரைச் சொல்லில் நிறுத்துவது என் கடமை. அதுவே நம் குடி மரபு. 

ரத்தம், காமம், கவிதை – சேரனின் கவியுலகு – ஜெயமோகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *