“மூன்று நாவல்கள் ஏககாலத்தில் வெளி வந்திருக்கின்றன. மூன்றும் ஈழ நாவல்கள். கிரிசாந்தின் ‘தத்வமசி’, யதார்த்தனின் ‘தோறை’. இவை இரண்டும் காலச்சுவடு வெளியீடுகள். என்னுடைய ‘வண்ணச்சீறடி’ கருப்புப் பிரதிகள் வெளியீடு. கவனமாகத் திட்டமிட்டால் கூட இந்தத் ‘தற்செயல்’ சாத்தியமாகுமா தெரியவில்லை. ஆனால் அப்படித்தான் ஊழ் சமைந்திருக்கிறது. இவற்றுள் எழுதிய காலத்தால் மூத்தது தத்வமசி. பிறகு தோறை. அவை இரண்டும் இந்த வருட ஆரம்பத்திலேயே வெளியாகியிருக்க வேண்டியவை.
நாவல்களை எழுதும் காலத்தில் மூவரும் தொடர் உரையாடலில் இருந்தோம். நாவல்களின் முதல் வரைபுகளை வாசித்துத் திருத்தங்கள் செய்தோம். புனைவின் அம்சங்களென்று ஒரு சில பிடி கிடைத்தன, பல போக்குக் காட்டிவிட்டுக் கை நழுவிச் சென்றன. புனைவின் சூட்சுமத்தை தொட்டுணர முடியுமென்ற நம்பிக்கையையும், இல்லை அது ஆழமானது இன்னும் நாம் நம்புவதிலும் அதிக சிக்கலானது என்ற தெளிவையும் ஒருசேர அடைந்தோம். கூர் மொழி, செறிவான சித்தரிப்பு, புனைவு நிகழும் காலகட்டம், உரையாடல்களின் நறுக்கு தெறித்த வடிவம், ஈழ வட்டார வழக்கின் எல்லைகள் என்று நிகழ்ந்த கலவையான உரையாடல்கள் புனைவாக்கத்தின் சாத்தியமான வாசல்களைத் திறந்து காட்டின. எழுதியவற்றை நீவிச் செம்மை செய்யப் பரஸ்பர பார்வைகள் பேருதவியாக இருந்தன. அந்த உரையாடல்களைத் தொகுத்து ஒரு சிலவற்றை இன்று இன்னும் நம்பிக்கையுடன் சொல்ல முடியும். அது எங்களை உருமாற்றியிருக்கிறது. அதன் தாக்கம் எங்கள் எழுத்துகளில், மொழி வெளிப்பாட்டில், சிந்தனையில் இப்போது மிகத் துலக்கமாகவே தெரிகின்றது. எனக்கு என்னுடைய மொழி வெளிப்பாட்டின், எடுத்துரைப்பின் சில உள் எல்லைகளைக் கடந்து செல்ல வழி கோலி இருக்கிறது.
புனைவின் இயல்பு, தேடல், கவனம், சொற்தேர்வு, மொழியின் கூர்மை, உவமை, சித்தரிப்பு போன்ற ஒரு புனைவின் அடிப்படைகளில் தனித்துவமான வெளிப்பாடுகளை மூவருமே அடைந்திருக்கிறோம். செல்லவேண்டிய தனித்த திசையின் தெளிவும் இருக்கிறது. ஆனால் வந்தடைந்த பாதைகளும், செல்லும் திசைகளும் கூட முற்றிலும் வேறானவை. அவற்றின் வேறுபாடுகளைத் தொகுத்துக் கொண்ட போதே விரிவான செவ்வியின் அவசியத்தை என்னால் உணர முடிந்தது. இந்தச் செவ்வியின் முதன்மை நோக்கு முழுமையாக தொகுத்து முன்வைப்பது. கூடவே அது நாங்கள் இன்று வந்தடைந்திருக்கும் இடங்களின் உறுதிப்பாட்டை – அப்படி ஒன்று இருக்குமானால்- பரிசோதித்துப் பார்க்கும் பெரு விருப்பும்தான்.
நம் காலத்தில் இன்னொரு இடரும் இருக்கிறது. ஒருவர் புனைவெழுத்தாளராகக் கவனம் பெற முன்னரே கருத்தாளராக ‘மிகையாக’ வெளிப்பட்டுவிடுகிறார். அநேகமும் சமூக வலைத்தளங்களில். அதனூடே அவரைப் பற்றிய சிதறுண்ட பொதுச் சித்திரம் ஒன்று வலுவாக உருவாகிவிட்டிருக்கும். பின்னால் அவர்கள் புனைவெழுத்தாளர்களாக வெளிப்படும் போது அவர்கள் குறித்து ஏலவே உருவாகிப் பொதுச் சூழலில் நிலைபெற்றிருக்கும் சிதறுண்ட கருத்தியல் சித்திரம் அவர்களுடைய புனைவுகளை சுதந்திரமாக வாசிப்பதற்கான முதற் தடையாகவும் அமைந்து விடுகிறது.
சமூக வலைத்தளங்களில் வெளிப்படும் ‘கருத்தியல்’ மனிதரும், புனைவுகளில் வெளிப்படும் புனைவெழுத்தாளனும் ஒருவர் அல்ல. இருவரும் ஒருவரை ஒருவர் இட்டு நிரப்ப முடியாதவர்கள். அல்லது ஒருவரில் இன்னொருவர் பிரதிபலிக்க முடியாதவர்கள். உண்மையில் தன்னுள் பிளவுபட்ட இரு வேறு நபர்கள். தொடர்பே இல்லாத இரட்டையர்கள். அத்தகைய முன் முடிவுகளின் கருத்தியல் சட்டகத்தூடு புனைவுகளை மதிப்பிடுவது, துண்டுக் கண்ணாடிச் சட்டகத்தூடு கடலாழத்தைப் பார்ப்பது போன்றது. குறுகிய முன் முடிவுகளுக்கே இட்டுச் செல்லும்.
ஓர் இளம் படைப்பாளி வெறும் சூழல் எதிர்வினைகளால் மட்டும் வெளிப்படுவது போன்ற கெடுவாய்ப்பு வேறு இல்லை. அதனால் தான் அவர்களை உந்தித் தள்ளும் அகத்தேடல், புனைவுப் பதட்டம், தத்தளிப்பு, சமூக நோக்கு, வரலாற்றுப் பார்வை ஏன் அவர்களது தடுமாற்றங்கள், வீழ்ச்சிகளைக் கூட நாம் அவர்களது சொற்களிலே விரிவாக தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அவர்களது இலக்கிய நோக்கு, ரசனை, நுண்ணுணர்வு, நுட்பம், ருசி குறித்தெல்லாம் தொகுப்பாக அறியமுடிந்தால், அவர்களது புனைவுகள் நமக்குத் திரைவிலக்கிக் காட்டும் ஆழம் அதிகமாகும். இன்னும் விரிந்த பகைப்புலத்தில் அவர்களைப் பொருத்திப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் ஏலவே கருத்தியல் கூடடைந்தவர்களுக்கு அத்தகைய உரையாடல்களினால் பயனில்லை. அவர்கள் தங்கள் புனைவுகளின் அலைகரையில் மட்டும் கால் நனைப்பவர்கள். கருத்தியல், அரசியல் இருமைகளுள் கூடடைந்த ‘அதனால்’ மட்டும் பொருட்படுத்தப்படும் கருத்தியலாளர்கள் பலரும் நம்மிடையே இருக்கிறார்கள். அதுவே புனைவெழுத்தாளனுக்குப் புதைசேறு. அவனால் ஒருபோதும் மீளவே முடியாத புதைசேறு.
புனைவெழுத்தாளர் அவர்களையும் மீறிய அவர்களின் அக-உந்துதலால் கொதித்து வெளிப்படக் கூடியவர்கள். எந்தச் சிமிழின் உள்ளேயும் சிறைப்படுத்த முடியாதவர்கள். அவர்களுள் நொதிக்கும் ‘ஒன்று’ கண்ணாடிக் குழாய்களில் ஆவியாகப் படிந்து குளிர்ந்து திரண்டு துளியாகி மண் குடுவைகளில் செறிவான ‘சாறாகத்’ திரள்கிறது. அப்படித் திரண்ட சாற்றினுள் இருக்கும் துளியின் கனதியை, செறிவை, ஒளிர்வை, சீற்றத்தை கிரிசாந்தின் ஒவ்வொரு பதில்களிலும் தொட்டுணர முடியும். அவருடையது எங்கோ மலைகளுக்கு அப்பால் இருந்து ஒலிக்கும் மீட்பரின் குரல் அல்ல. தலைக்கு மேல் ஒலிக்கும் அசரீரி கூட அல்ல. அது நமக்கு நன்கு பழக்கமான தெரிந்த குரல். மிகப் பழைய குரல். நாம் எரிச்சலுடன் தவிர்க்க விரும்பும் குரல். ஆனால் வேறு வழிகளே இல்லாமல் சிரத்தையுடன் காதுகொடுத்துக் கேட்டாகவேண்டிய குரலும் கூட. ஆம், அது நம் சிற்றிதழ் சூழலில் புழங்கக் கூடிய, நம் முன்னோடிகளின் குரல். அத்தகைய குரலின் விரல் நீட்டம் நம் காலத்தையும் கிரிசாந்தின் சொற்களில், நகைப்பில், இடித்துரைப்பில் ஆழம் பார்க்கிறது.
இது விரிவான நேர்காணல். கிரிசாந்தை முழுமையாக தொகுத்து முன்வைக்க விழைவது. பதில்களும் அப்படியே. அவரது பதில்களில் நான் உணர்வது ஒன்றைத் தான். அவரது படைப்பு மனதின் முன்னால் அவருக்கு அகத்தடைகள் என எதுவும் இல்லை. இரைச்சலுடன் குமிழியிட்டுக் கொதிக்கும் கொதிகலன். தொல் மூதாதையின் காட்டு வாழ்கையின் கவித்துவ உருவகங்களும், நவீன மனதின் சொல்லிணைவுகளும் முயங்கும் கலங்கல் வெளி. அது நேரடியாக ஆழ் உள்ளத்திலிருந்து பீறிட்டு வருவது, சுடு சொற்களும், உவமைகளும், படிமங்களுமாகத் தன்னுடைய புனைவுகளில் வெளிப்படுவது போன்ற தூய நிர்வாணத்துடன் இங்கேயும் தன்னை முழுமையாகவே நிகழ்த்திக் கொள்கிறது. அதன் அந்த அப்பட்டமான வெளிப்படைத் தன்மையே அதன் படைப்பூக்கத்தின் கூர் முனை எனத் தோன்றுகிறது. இன்னும் துணைக் கேள்விகள் விவாதம் என செவ்வியை விரிவாக்க முடியும். ஆனால் நான் உத்தேசிப்பது அப்படியான நாங்களே செய்து கொள்ளும் உள் ‘விவாதத்தை’ அல்ல.
முடிவாக, அகம் தகிக்கும் இளம் கவிஞன் ஒருவன் துறவு எண்ணங்களுடன் புனைவின் வாசலில் திகைத்து நிற்கும் சித்திரம் போரின் பின்னரான ஈழச் சூழலில் அபூர்வமானது. ஆனால் நம் மரபில் இருப்பதுதான். ஆகவே அதன் விழைவை நாம் அடையாளம் கண்டு கொள்வதும் எளிமையானதுதான்.
தர்மு பிரசாத்

