புத்தகத் தடுப்பும் யாவாரமும்! – ஷோபா சக்தி

இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகத்தால் தமிழ் எழுத்தாளர்களின் சில புத்தகப் பொதிகள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து, எழுத்தாளர்களின் கூட்டறிக்கை ஒன்று இலங்கை சனாதிபதிக்கும் பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் சுங்கத் திணைக்களத்திற்கும் ஊடகங்களுக்கும் நாளை அனுப்பப்படயிருக்கிறது.

இதையொட்டிச் சமூக வலைத்தளங்களில் ஒரு குத்துமதிப்பான கருத்தாடல் நிகழ்வதைக் கண்டேன். அதாவது இதெல்லாம் புத்தக வியாபாரத்திற்காக எழுத்தாளர்களால் செய்யப்படும் சூழ்ச்சிகளாம். தமிழில் புத்தகம் எழுதிச் செல்வத்தில் கொழிக்கலாம் என்றொரு கருத்தும் சில அப்பாவி முகநூலர்களிடம் இருப்பதாகத் தெரிகிறது. எனவே, ஈழத் தமிழ் எழுத்துப் பரப்பில் முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி, சிலபல நூல்களை வெளியிட்டிருக்கும் நான் இந்தப் புத்தக யாவாரச் சூட்சுமம் குறித்துச் சில தெறிப்புகளைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். 

எடுத்துக்காட்டாக, எனது கடைசி நாவலான ‘ஸலாம் அலைக்’ பிரதியொன்றின் விலை தமிழகத்தில் 350 ரூபாய். எனது நூல்கள் தமிழகத்தில் ஓரளவு விற்பனையாகக் கூடியவை என்பதால் பதிப்பாளரால் 1000 பிரதிகள் அச்சிடப்படுகின்றன (மிகச்சில நூல்கள் மட்டுமே மறுபதிப்புக் கண்டுள்ளன). வேறு சில எழுத்தாளர்களின் புத்தகங்கள் 500 அல்லது 300 பிரதிகளே அச்சிடப்படுகின்றன.  POD முறையில் 20 பிரதிகள் கூடச் சில பதிப்பாளர்களால் அச்சிடப்படுகின்றன. 

எனது புத்தகங்கள் தமிழில் வெளியிடப்படுவதால் எனக்கு என்ன வருமானம் கிடைத்துவிடும் எனப் பார்க்கலாம். என்னுடைய முதலிரண்டு நூல்களான ‘கொரில்லா’ மற்றும் ‘தேசத்துரோகி’ நூல்களுக்கான அச்சகச் செலவு முழுவதையும் நான் பதிப்பகத்திற்குச் செலுத்தியே அந்தப் புத்தகங்கள் வெளியிடப்பட்டன. அப்போதெல்லாம் பெரும்பாலான புலம் பெயர் தமிழ் எழுத்தாளர்கள் அவ்வாறுதான் நூல்களை வெளியிட்டார்கள். நாங்கள் செலவு செய்த தொகையில் 10%  கூடத் திரும்பக் கிடைக்காது. இப்படித்தான் நட்டத்திற்கு இலக்கியம் வளர்த்தோம்.

நான் ‘கருப்புப் பிரதிகள்’ பதிப்பத்திற்குச் சென்ற பின்புதான் ரோயல்டி என்பதைக் கண்ணால் பார்த்தேன். எனது நூல்கள் ஒவ்வொன்றும் 1000 பிரதிகள்  அச்சிடப்படும். எனக்கு ரோயல்டியாக 10%வழங்கப்படும் (இதுதான் தமிழகப் பதிப்புலகில் உச்சபட்ச ரோயல்டி தொகை. பிரெஞ்சுப் பதிப்புலகில் 5 -12 %). நான் கருப்புப் பிரதிகள் பதிப்பகத்திடமிருந்து பணமாக அல்லாமல் புத்தகமாக நூறு பிரதிகள் பெற்றுக்கொள்வேன். எனவே ‘ஸலாம் அலைக்’  100  பிரதிகளின் மொத்தப் பெறுமதி: 30% விற்பனைக் கழிவு, போக சுமார் 25 ஆயிரம் இந்திய ரூபாய். பிரான்ஸ் நாணயப் பெறுமதியில் 240 யூரோக்கள். இவ்வளவுதான்  ‘ஸலாம் அலைக்’  நாவலால் எனக்குக் கிடைத்த மொத்த வருமானம்.

‘ஸலாம் அலைக்’  நாவலை எழுத எனக்கு முழுமையாக மூன்று மாதங்கள் ஆகின.  அந்த நாவலை எழுதியதால் மாதமொன்றுக்கு எனக்குக் கிடைத்துள்ள ஊதியம் 80 யூரோக்கள். நான் முன்புபோல சமையல் வேலைக்குச் சென்றால் இது எனது ஒருநாள் ஊதியம். மொத்த ரோயல்டி தொகையான 240 யூரோக்களின் பெறுமதி பிரான்ஸில் என்ன? இரண்டு வாரங்களுக்கு எனது சிகரெட் செலவை இந்த 240 யூரோவை வைத்துச் சமாளிக்கலாம் (20 சிகரெட்டுகள் அடங்கிய  பெட்டியொன்றின் விலை: 13.50 யூரோ). நாவலுக்கான பல வருடத் திட்டமிடல், எழுதுவதற்காவும் மெய்ப்புப் பார்ப்பதற்குமான என்னுடைய மூன்றுமாத உழைப்புக்குக் கிடைக்கும் ஊதியம் 17 பெட்டி சிகரெட்டுகள். நல்ல யாவாரம்!

அதெப்படி? அதுதான் ரோயல்டியாக பெற்ற 100 பிரதிகளையும் அய்ரோப்பாவில் நல்ல விலைக்கு விற்கலாம்தானே என நீங்கள் யோசித்தால்; உங்களுக்கு இதுபற்றி ஒரு இழவும் தெரியாது என நான் தைரியமாகச் சொல்வேன். இந்தப் பிரதிகளை அய்ரோப்பிய நகரங்களில் வெளியிட நமது நண்பர்கள் கூட்டங்களை ஏற்பாடு செய்வார்கள். நானும் பிரதிகளைக் கட்டிச் சுமந்துகொண்டு அங்கே செல்வேன். இலண்டனில் 20 பிரதிகளும், சுவிஸில் 15 பிரதிகளும், பாரிஸில் 15 பிரதிகளும் அதிகபட்சம் விற்பனையொகும். இதில் கிடைக்கும் பணம் எனது பயணச் செலவுக்கே போதாது. கூட்டத்தை ஏற்பாடு செய்த நண்பர்கள்தான் பாவம். அவர்கள்தான் மண்டபச் செலவு சித்தாயங்களை ஏற்றுக்கொள்வார்கள். இதில் வடை, தேத்தண்ணிச் செலவு வேறு!

இந்த 100 ரோயல்டி பிரதிகளில் நண்பர்களுக்கும் சக எழுத்தாளர்களுக்கும் அனுப்ப வேண்டிய விலையில்லாப் பிரதிகளும் அடக்கம். ஒரு நூலைச் சர்வதேசத் தபாலில் அனுப்ப இப்போது பிரான்ஸில் அண்ணளவாக 20 யூரோக்கள் கட்டணம். புத்தகத்தின் விலையை விட ஆறு மடங்கு அதிகம். ஏதோ சிலர் பணம் அனுப்புவார்கள். அது தபால் செலவுக்கே சரியாயிருக்கும்.

நீங்கள் ஒரு நாவலை எழுதக் குறைந்த பட்சம் நூறு புத்தகங்களையாவது வாசிக்க வேண்டியிருக்கும். இதையும் நீங்கள்தான் விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும். அண்மையில் பழைய புத்தகக் கடையில் ‘Funny Boy’ வாங்கினேன். அதுவே 10 யூரோக்கள். தமிழ் புத்தகங்களும் அய்ரோப்பாவில் அறாவிலை. புத்தகக் கடைக்காரர்கள் இந்தியாவிலிருந்து நேரடியாகப் புத்தகங்களை எடுத்து இங்கே விற்கிறார்கள். இதற்கும் எழுத்தாளருக்கும் எந்தத் தொடர்புமில்லை. ஆத்திர அவசரத்திற்கு நானே போய்ப் புத்தகக் கடையில் எனது நாவலை வாங்கினாலும் இந்தியாவில் 3 யூரோக்கள் பெறுமதியான நாவலை இங்கே 20 யூரோக்கள் கொடுத்துத்தான் வாங்க வேண்டும். 

அதிக இலக்கியத் தொடர்புகளையுடைய, கொஞ்சம் தண்டுசமத்தான என்னுடைய புத்தக யாவரமே இப்படியிருந்தால் புதிய – இளைய எழுத்தாளர்களின் யாவார நிலவரம் எப்படியிருக்கும் எனக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.  சிலர் தங்களது புத்தக வெளியீட்டுக் கூட்டங்களை இலக்கியத்திற்கே சம்பந்தமில்லாத உறவினர்கள் மற்றும் ஊரவர்கள் சூழ நடத்தி, அன்பளிப்புகளாக எக்கச்சக்கமாகக் காசு பார்க்கிறார்கள் என்பதுவும் உண்மை. ஆனால், நானோ அல்லது தீவிர இலக்கிய மரபில் உருவாகி வந்த இன்னொரு எழுத்தாளரோ இதை அவமானமாகக் கருதி, ஒருபோதும் செய்வதில்லை.

விதிவிலக்காக, நான் ஒரேயொரு நூலுக்கான கூட்டத்தை இவ்வாறு ஊரவர்கள், உறவினர்களை அழைத்து நடத்தியுள்ளேன். அந்தப் புத்தகம்தான் இப்போது தடுப்பிலுள்ளது. ‘1990 : லைடன்தீவு – மண்டைதீவு படுகொலைகளும் புதைகுழிகளும்’ என்ற அந்த நூல்  இலக்கிய நூல் அல்ல. அது என் ஊரவர்களது துயரத்தோடும் உணர்வோடும் சம்பந்தப்பட்டது. ஏராளமான பிரதிகள் அங்கே விற்பனையாகின. அந்தத் தொகையை முழுவதுமாக ‘அல்லையூர் இணையம்’ என்ற அறப்பணி அமைப்புக்காக அங்கேயே வழங்கிவிட்டேன்.

தமிழில் புத்தக யாவார நிலைமை இதுதான். ஏதோ பிரெஞ்சு, ஆங்கிலம்  என மேற்கத்திய மொழிகளில் எனது புத்தகங்கள் வெளியாவதால்; இந்த மொழிகளில் கிடைக்கும் ரோயல்டி மற்றும் விருதுத் தொகைகள், ஊக்குவிப்புத் தொகைகள், எப்போதாவது இலக்கியக் கூட்டங்களில் உரையாற்றுவதற்குக் கிடைக்கும் சன்மானம், நாடகம், திரைப்படம் என்பவற்றால்தான் என்னால் ஒரு முழுநேர எழுத்தாளனாக – கலைஞனாகத் தாக்குப்பிடிக்க முடிகிறது. தமிழைப் பொறுத்தவரை எனது மாதக்கணக்கான உழைப்புக்குக் கிடைத்தவை சில சிகரெட்டுகளும் சுவாசப்பையில் கோளாறுமே எனலாம். 

இந்த நிலைக்காக  நான் யாரையும் குற்றம் சாட்டவில்லை. இதுதான் நிலைமை என்பதை மட்டுமே சுட்டுகிறேன். நாங்களாவது பரவாயில்லை… எங்களுடைய முன்னோடிகளது நிலைமை இதைவிட மோசமாக இருந்திருக்கிறது. எஸ். அகஸ்தியர் தனது நாவலை வெளியிட 30 வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. கே. டானியலின் ‘சாநிழல்’ அவர் இறந்து நாற்பது வருடங்களுக்குப் பின்பே வெளியாகியிருக்கிறது. 

எனவே, தமிழில் புத்தக விற்பனை நிலவரங்கள் தெரியாமல் சும்மாச் சும்மா ‘புத்தக யாவாரம்’ என எழுத்தாளர்களைப் பழித்துப் பாவத்தைத் தேடிக்கொள்ளாதீர்கள் அன்பர்களே. பாதுகாப்பு அமைச்சின் புத்தகத் தடைக்கும் எழுத்தாளர்களின் பாவப்பட்ட யாவாரத்துக்கும் எந்தவொரு சம்பந்தமுமில்லை என்பது போக, மாறாக தடுத்துவைக்கப்பட்ட இந்த நூல்களால் எழுத்தாளர்களுக்குப் பொருள் நட்டமும் மனவுளைச்சலுமே ஏற்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இப்போது வெளிவரயிருக்கும் கூட்டறிக்கையை ஆதரிக்காமலிருக்க அச்சம், அரச ஆதரவு, இலக்கிய வெறுப்பு, எழுத்தாளருடனான முரண்கள், புத்தகங்களைப் பார்த்தாலே எரிச்சல் மற்றும் அலர்ஜி என உங்களுக்குப் பல்வேறு காரணங்களிருக்கலாம். ஆனால் ‘புத்தக யாவரம்’ என எழுதி உங்களையும் முட்டாளாக்கி, எங்களையும் மறுபடியும் மறுபடியும் ஆற்றாமையிலும் துயரத்திலும் ஆழ்த்தாதீர்கள் எனத் தயவாகக் கேட்டுக்கொள்கிறேன்.

பொப் மார்லியின் கூற்றோடு முடிக்கலாம்: எழுதுவதற்கான சுதந்திரம் காப்பாற்றப்படும் போதுதான், வாசிப்பதற்கான சுதந்திரமும் காப்பாற்றப்படுகிறது.

ஷோபா சக்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *