புத்தகத் தலையாட்டிகள் – கமலாபரன்

1~

சிறுவயதில் அப்பாவுடன் வசித்திருந்த ஒரு வீட்டில் சுவரோடு சேர்த்துக் கட்டப்பட்ட அலுமாரி ஒன்றிருந்தது. அது முழுவதும் அப்பா தேடிச் சேர்த்திருந்ததும், அவர் வெளியிட்டவைகளும், அவருடைய கையெழுத்துப் பிரதிகளும் இருந்தன, அப்பாவோடு இருந்த காலம் இப்போதைக்கு நான் கடந்ததன் ஆறில் ஒருபங்கு மட்டும் தான். ஆனால் அவர் வைத்துவிட்டுப் போயிருந்த அந்த புத்தகங்கள் மீதமாய் இருந்த இடைவெளிகளை நிரப்ப உடன் வந்தபடியிருந்தன. பாரதியார், பாரதிதாசன் முதல் செங்கை ஆழியான் எனப் பலரும் அங்கிருந்து தான் எனக்குக் கிடைத்தார்கள், மிகமுக்கியமாக போர்க்காலத்தில் வெளியிடப்பட்ட பல புத்தகங்கள்(கிட்டுவின் காதற் கடிதங்கள் உட்பட), மாஸ்கோ பதிப்பகத்தின் ‘லெனின்’ முதலாய அடர்சிவப்பு அட்டையிட்ட உறுதியான புத்தகங்கள் எல்லாம் அங்கே கிடந்தன, வேறு வீடு மாறிய பிறகு அந்த வீட்டுக்கு அருகே இருக்கிற காணியில் அந்தப் புத்தகங்கள் எரிக்கப்படுவது கேள்விப்பட்டு விழுந்தடித்து ஓடிப்போய் அள்ளிக்கொண்டு வந்தேன்;  

எழுத்துகள் எரிகின்ற நெருப்பில் அள்ளக்கூடுமாய்க் கிடந்தவைகளை. அதன்பிறகு அந்தத் திசைக்கு எனக்குத் தேவைப்படவில்லை; மன்னிப்பதற்காகிய சொற்கள்.

2~

தலையாட்டிகள் 

அப்போது நான்கைந்து வயது தான் இருக்கும், ரௌண்ட் அப் நடக்கும் போது அந்த வயது நான் கூட என்னைத் தூக்கி வைத்திருப்பவருடன் தலையாட்டி முன்னால் கொண்டு செல்லப்பட்டுக் கடந்துவர வேண்டும். கவச வாகனத்தின் உள்ளிருந்து நோக்குகின்ற இரு கண்கள் அல்லது கண்களுக்கு மட்டும் துளையிடப்பப்பட்ட கறுப்புத் துணியால் மூடப்பட்ட முகத்தின் முன்னால் வரிசையிட்டுச் செல்ல வேண்டும் அந்தத் தலை தான் எங்கள் தலையெழுத்தை தீர்மானித்தது. அன்றைக்குத் தான் கடைசியாக கண்டவர் பலர் இருந்தார்கள். ரௌண்ட் அப் முடிந்து வீடு திரும்பியவர்களிடம் அன்றைக்குத் தலையாட்டியாக வந்தவன் பற்றிய ஊகக் கதைகளும், அன்றைக்குத் தலையாட்டப்பட்டு இராணுவத்தால் கொண்டு செல்லப்பட்டவர்களுக்கான கண்ணீரும் இருக்கும். எனக்குத் தெரிந்து ஒரேயொருவர் தான் தலையாட்டப்பட்டும் விடுவிக்கப்பட்டவர் இருக்கிறார்; அப்போது அவருக்கு பதினாறு வயதிற்குள் தான் இருந்திருக்கும். அவரை கைதுசெய்த போது அந்த அண்ணாவின் தாய் கதறிய படி வீதியில் புரண்டழுத ஓலம் இன்னமும் என்கண்ணில் அப்படியே இருக்கிறது. அவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்களின் நிராதரவான கண்களும், கையாலாகமல் நின்றிருந்த எங்கள் நிலையும் எவருக்கும் வாய்த்துவிடக்கூடாத சாபப்பொழுது. 

3~

(கமலாபரன்)

பாதை திறந்திருந்த காலம், ஆறாம், ஏழாம் வகுப்புகள், நூலகத்தில் அங்கத்தவராகி தவறாமல் இரண்டிரண்டு புத்தகமாய் முடியமுடிய மாற்றிமாற்றி ஊற்றுக்கண் திறந்தது போலொரு காலம், ஊர் நூலகத்தில் எல்லாப் புத்தகங்களும் திறந்த இறாக்கைகளில் இருக்க, கவனம் நூலகரின் மேசைக்குப் பின்னாலிருந்த கண்ணாடி அலுமாரியிலிருந்த சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் எனக் குண்டுப்புத்தகங்களின் பக்கம் சேர்ந்தது. அதே அலுமாரி அடித்தட்டில் குண்டுப்புத்தகங்களாய் அடேல் பாலசிங்கத்தின் ‘சுதந்திர வேட்கை’, புதுவை இரத்தினதுரையின் ‘பூவரசம் வேலியும், புலுனிக்குஞ்சுகளும்’ இன்னும். ஒவ்வொன்றாய் வீடு வந்து திரும்பின. பாதை பூட்டி ‘ஃபீல்ட் பைக், ‘கொன் வே’ போன்றவை அகராதியில் சேர்ந்தன, மேலதிகமாய் சங்கக் கடைகளில் குடும்பக் கார்ட் அடுக்கி அத்தியாவசியப் பொருட்கள் வாங்கும் வரிசையில் பாதிக்கு மேல் நாள்கள் கழிந்தன. எப்போதும் சிரித்த முகமாய்த் திரியும் ஒரே வகுப்பில் படித்த சுரேஷ்குமார் கிளைமோர் வெடித்ததில் போல்ட்ஸ் பாய்ந்து அதேயிடத்தில் திரும்பாத திசை போனான், லீவு விடும்போது கண்டவர்கள் பலர் பள்ளி திறந்த போது இல்லை, இரவும் பகலுமாய் பலர் காணாமலாக்கப்பட்டார்கள். 

நூலகத்திலும் அதே காலத்தில் காணாமலாக்கப்பட்டிருந்தன அந்தப் புத்தகங்களும் வேறு பலவும்.

4~

யதார்த்தன் 

சென்ற ஆண்டில் கிட்டத்தட்ட இதே காலத்தில்  யதார்த்தன் தனது இரண்டாவது நாவலை எழுதி முடித்திருந்தார். அதில் இருந்த கதைக்களங்கள் எனக்குப் மிகப் பரிச்சயமானவை, அதில் எழுந்து வந்திருந்த கதைகள் எனக்கெட்டிய வரை முக்காற் பாகத்திற்கு மேல் எமதருகே மெய்யாக நிகழ்ந்தவை. மீதம் வேறு பலருக்கு நிகழ்ந்தவை. பாசாங்கான மருட்டுகின்ற கருத்துகளோ திணிப்புகளோ இன்றி அந்தந்தவாறு நிகழ்ந்திருந்த கதை. அதைவிட அந்த நாவலின் தலைப்பு; அது எங்கள் வீடுகளில் தடைசெய்யப்பட்ட சொல். நானதை மிகச் சிறுவயதில் அறிந்த போது அது பயன்படுத்தப்பட்ட வெளி; ஒரு சிறுவன் நின்றிருக்கக் கூடாத நிலம். பிறகொரு நாள் என் வாயில் அது வந்த போது அதை மீண்டும் உச்சரிக்கக் கூடாத படிக்குப் புகட்டப்பட்டேன். ஆக எனக்கு அந் நாவல் காலத்தை கடந்து நின்றிருக்கவேண்டிய கருவடைந்து விட்டதென்பதில் எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. அது பற்றி ஒன்றிரண்டு கருத்தைப் பகிர்ந்தபின் மேலும் கதைப்பதற்குள் எனது மதிப்பிற்குரிய பத்மநிகேதன் அண்ணா மர்மமான முறையில் மரித்துவிட்டிருந்தார், இன்னுமே அதற்கு காரணமான அதிகாரங்களில் உள்ளவர்கள் எந்தக் குற்றவுணர்வுமின்றி நடமாடுகையில் நான் மெல்ல நாளாந்தங்களுக்கு மீள்வதற்கே நாளானது. இதனிடையே நாவலின் வெளியீடு தொடர்பான அறிவிப்புகள் நிறைவைத் தந்தது. தமிழ்நாட்டிலிருந்து நண்பர்கள் நாவல் வெளியீடு பற்றியும், யதார்த்தனை தொடர்பு கொள்வது பற்றியும் அணுகியிருந்தனர். நானும் விபரங்கள் பகிர்ந்திருந்தேன். இப்போது நினைத்தாலும் நாவலில் வந்திருந்த சித்தரிப்புகள் கடந்துவந்த நிலத்தையும், சனத்தையும், அதனதன் உத்தரிப்புகளையும் கொண்டுநிறுத்தும். 

யதார்த்தன் நாவற் பிரதிகள் சுங்கத்தினரால் கையகப்படுத்தப்பட்டதை பகிர்ந்த போது அங்கே காத்திருந்த கணங்கள்; எனக்குத் தலையாட்டி முன்னால் நகர்ந்த நிமிடங்களை மீக்கொணர்ந்தது. ஏற்கனவே சோபாசக்தி, தீபச்செல்வன் ஆகியோரது நூல்கள் தடுக்கப்பட்டு இன்னும் விடுவிக்கப்படாதிருப்பதும் எம் நிலத்தின் தலையெழுத்தை நினைத்து வயிறெரிய வைக்கும். பொன்முடிப்பு பெறுகையில் கூட புலவன் கரந் தாழலாகாது என்று தட்டில் வைத்தேந்தி ஏற்கச்சொன்ன தமிழ் மன்னர் மரபு நமது. தீபச்செல்வன் அண்ணா நூல்களை விடுவிக்கக் கோரி ஒவ்வொரு மன்றாயேறியிறங்கிய போது அந்த நிலையிலா நந்தமிழ் என்றிருந்தது. அப்படி நடந்துகொள்கிற அதே அரசு வழங்கிய விருதுகளை பெற்றுப் புளகாங்கிதமடைந்தவர்களைக் காண கழிவிரக்கமே எஞ்சிற்று. மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ என்றதெல்லாம் எங்கே போயிற்று. 

அவரவருக்கு அத்தனை ஆயிரம் கடமைகள் அதெல்லாத்துடனும் முழுநேர எழுத்தாளனாகிறேன் என்பதற்குப் பெரியதொரு தற்துணிவு வேண்டும், அதுவும் ஈழத்தில்; அது யதார்த்தனுக்கிருந்தது. அத்தோடு அவன் சார்ந்தவர்களுக்கும் அதையேற்கிற மனதும், பக்குவமும் இருந்தது. உண்மையில் நேரங்கிடைத்த போது எழுதப்பட்ட நோகாத எழுத்துகளிற்கும், எழுதவென்றே நேரத்தை எடுத்துக் கொண்டவர்களின் எழுத்துக்கும் மலைக்கும் மடுவிற்குமான வேறுபாடுள்ளது. ஒருவனதும் அவன் சார்ந்தவர்களதும் ஆண்டுக்கால உழைப்பை அதிகாரத்திலிருக்கின்ற அற்பத்தனத்தால் அடைப்பதென்பதெல்லாம் அருவருக்கின்ற அநீதி. கண்முன்னால் கொண்டுசெல்லப்பட்டவர்களுக்கும், கண்டெடுக்கப்பட்ட எலும்புகளுக்கும் கூட இன்னும் நீதியில்லாது கிடக்கிற நிலம், அவர்களின் கதைகளுக்கு மட்டுமா நீதி செய்துவிடப் போகிறது?

கமலாபரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *