“…
ஏனென்றால் இலக்கியம் மானுட உள்ளம், வாழ்க்கைத்தருணங்கள், வரலாற்றுப்போக்கு, தத்துவம் ஆகியவற்றின் பன்மைத்தன்மையையும் உட்சிக்கலையும் முன்வைக்கும்பொருட்டே செயல்படுகிறது. இலக்கியம் முன்வைக்கும் பன்மைத்தன்மையை, நுட்பத்தை, அவற்றைக் கண்டடைவதற்கான அதன் தனித்த பயணத்தை போர்த்தரப்புகள், அவை எவையானாலும், மீறலாகவே காணும். பலி வாங்கவே முயலும்.
போர் முடிந்தபின்னரும்கூட அந்த உக்கிரமான வெறுப்புகளும் காழ்ப்புகளும் குறைந்தது ஒரு தலைமுறைக்காலம் அவ்வாறே நீடிப்பதை உலகமெங்கும் காணலாம். இலங்கைச்சூழலும் அப்படித்தான். இந்த வெறுப்புச்சூழல் மொத்தச் சிந்தனையுலகை நஞ்சூட்டுகிறது. காழ்ப்பும் கசப்புமாக அன்றி எதையுமே பேசமுடியாது என்னும் நிலை உருவாகிறது. ஓர் இலக்கியப்படைப்பை வாசகனாக மட்டுமே நின்று எவராலும் அணுக முடிவதில்லை. ஒவ்வொருவரையும் நம்மவரா எதிரியா என்னும் கேள்விக்குப் பின்னரே அணுகமுடிகிறது. எதிரி என எண்ணப்பட்டுவிட்ட ஒருவரின் எந்த எழுத்தும் வெறுக்கப்பட வேண்டியவை, முடிந்தால் அழித்தொழிக்கப்பட வேண்டியவை என்னும் மனநிலை அமைகிறது. ஈழச்சூழலில் இன்றுள்ள பொதுமனநிலை இது.
அதைக்கடந்து இன்று எந்த கொள்கைக்கும் விசுவாசத்தை அளித்துவிடாத தன்னம்பிக்கையுடன், இலக்கியம் என்னும் மெய்காண்முறையின் மீதான பற்றுடன் எழுதும் ஒரு தலைமுறை உருவாகத் தொடங்கியுள்ளது என்று படுகிறது. இந்நாவல்கள் அந்த தேடலின் விளைவுகள் என்று எண்ணுகிறேன். இவை கவனிக்கப்படவேண்டும் என விரும்புகிறேன். இவற்றை வாசித்துவிட்டு விரிவாக எழுதுகிறேன்”.
ஜெயமோகன்
முழுமையான குறிப்பிற்கான இணைப்பு : மூன்று ஈழத்து நாவல்கள் -ஜெயமோகன்

