நூலக எரிப்பு முதல் தோறை வரை – ப. பார்தீ

யாழ் நூலக எரிப்பிலிருந்து தோறை வரை ஒட்டியிருப்பது சிங்கள பேரினாவாத அதிகாரத்தின் அரசியல் ஒடுக்குமுறையே.

பேரினவாதத்தின் அதிகாரம் ஒருபோதும் சிறுபான்மை மக்களின் கருத்துச் சுதந்திரத்திற்குத் துணைநின்றதில்லை. அதேபோல, அவர்களின் எழுத்துச் சுதந்திரத்தையும் அது ஒருபோதும் முழுமையாக அங்கீகரித்ததில்லை. இதற்கான வரலாற்றுச் சாட்சிகள் எம்மிடம் ஏராளமாக இருக்கின்றன. 1981இல் யாழ்ப்பாணப் பொதுநூலகம் எரிக்கப்பட்டதிலிருந்து, இன்று தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் சுங்கத் திணைக்களத்தால் தடுத்து வைக்கப்படுவது வரை, அதிகாரத்தின் வடிவங்கள் மாறியிருக்கின்றனவே தவிர, அதன் அடிப்படையான மனநிலை மாறியிருக்கிறதா என்ற கேள்வி இன்னும் உயிரோடு இருக்கிறது.

அன்று ஒரு சமூகத்தின் அறிவுச் செல்வம் தீக்கிரையாக்கப்பட்டது. இன்று அந்தச் சமூகத்தின் எழுத்துக்கள் மக்களிடம் சென்றடைவதற்குத் தடைகள் உருவாக்கப்படுகின்றன. இரண்டையும் ஒரே சம்பவமாகப் பார்க்க முடியாது. ஆனால், அறிவையும் கருத்தையும் கட்டுப்படுத்துவதற்கான அதிகாரத்தின் மனநிலையை நாம் கேள்விக்குட்படுத்த வேண்டியிருக்கிறது.

அண்மையில், தீபச்செல்வனின் நூல்கள் சென்னையிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டபோது, அவற்றில் சில நூல்கள் சுங்கத் திணைக்களத்தால் தடுத்து வைக்கப்பட்டன. மனித உரிமைகள் ஆணைக்குழு அவற்றை விடுவிக்குமாறு பரிந்துரைத்தும், நூல்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகின. ஒரு நூலை வாசிப்பதற்கு முன்னரே, அதனைச் சந்தேகத்திற்குரியதாகக் கருதி மக்களிடம் செல்லவிடாமல் தடுப்பதற்கான அதிகாரத்தை அரச இயந்திரம் எங்கிருந்து பெற்றுக்கொள்கிறது?

இதே கேள்வியை எழுத்தாளர் யதார்த்தனின் தோறை நூலைச் சுற்றியுள்ள தடுப்பு விவகாரத்துடனும் நாம் இணைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஒரு நூலின் உள்ளடக்கத்துடன் முரண்படுவதற்கும், அந்த நூல் மக்களிடம் சென்றடைவதைத் தடுப்பதற்கும் இடையில் அடிப்படையான வேறுபாடு இருக்கிறது. கருத்தை எதிர்கொள்ள முடியாத அதிகாரம், கருத்தின் பயணத்தைக் கட்டுப்படுத்த முயலும்போது, அது கருத்துச் சுதந்திரத்திற்கான அச்சுறுத்தலாக மாறுகிறது.

(ப. பார்தீ)

தீபச்செல்வன், சோபாசக்தி, ரயாகரன், யதார்த்தன் போன்றோரின் எழுத்துக்கள் வெவ்வேறு அரசியல், இலக்கியப் பார்வைகளைக் கொண்டிருக்கலாம். அவர்களின் கருத்துக்களுடன் நாம் உடன்படலாம்; முரண்படலாம். ஆனால், அவர்கள் எழுதுவதற்கும், அவர்களின் நூல்களை வாசிப்பதற்கும், அவற்றுடன் விவாதிப்பதற்கும் உரிமை இருக்க வேண்டும். எழுத்தாளரின் அரசியல் நிலைப்பாட்டை வைத்து அவரது படைப்பின் பயணத்தைத் தீர்மானிப்பது ஜனநாயகத்தின் அடிப்படைகளுக்கு முரணானது.

இங்கே இன்னொரு கேள்வியும் எழுகிறது. இந்த நூல்கள் இலங்கைக்குள்ளேயே அச்சிடப்பட்டிருந்தால், இதே நிலைமை ஏற்பட்டிருக்குமா? இதற்கு உறுதியான பதிலைச் சொல்ல முடியாது. ஆனால், தமிழ்நாட்டிலிருந்து வரும் தமிழ் நூல்கள் இலங்கைக்குள் நுழையும்போது, அவை அந்நிய நாட்டிலிருந்து வரும் பொருட்களாக மட்டுமே பார்க்கப்படுகின்றனவா, அல்லது அவற்றின் கருத்தியல் உள்ளடக்கமும் சந்தேகத்திற்குரியதாகக் கருதப்படுகிறதா என்பதை ஆராய வேண்டியிருக்கிறது.

தமிழ்நாடு எமக்கு மொழியாலும் பண்பாட்டாலும் நெருக்கமான நிலம். அங்கிருந்து வரும் ஒரு நூலை இலங்கைக்குள் கொண்டுவருவதற்குச் சுங்க நடைமுறைகளைத் தாண்டி, பாதுகாப்பு அமைச்சின் அனுமதியும் அவசியமாக்கப்படுமானால், அந்த நடைமுறையின் சட்ட அடிப்படை என்ன? எந்தச் சட்டத்தின் கீழ் ஒரு நூல் தடுத்து வைக்கப்படுகிறது? அதை விடுவிப்பதற்கான காலவரையறை என்ன? அதற்கான பொறுப்பை ஏற்கும் அரச நிறுவனம் எது?

இவை வெறும் நிர்வாக நடைமுறைகள் பற்றிய கேள்விகள் அல்ல. ஒரு சமூகத்தின் கருத்துச் சுதந்திரத்தை எந்த அளவுக்கு அரசு கட்டுப்படுத்த முடியும் என்பதற்கான அரசியல் கேள்விகள்.

இன்று இடது சாரி அரசென தன்னை காட்டிகொள்ளும் அனுர அரசு இயந்திரத்தின் வடிவங்கள் மாறலாம். ஆட்சியாளர்கள் மாறலாம். அரசியல் மொழியும் மாறலாம். ஆனால், தமிழ் மக்களின் வரலாற்றையும் அரசியல் நினைவுகளையும் வெளிப்படுத்தும் எழுத்துக்களைப் பாதுகாப்பு என்ற பெயரில் சந்தேகத்திற்குள்ளாக்கும் போக்கு தொடருமானால், இலங்கை தனது பேரினவாத அரசியல் மனநிலையிலிருந்து உண்மையில் விடுபட்டுவிட்டதா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியாது.

யாழ்ப்பாண நூலகத்தை எரித்ததன் மூலம் தமிழ்சமூகத்தின் அறிவுச் செல்வத்தை அழிக்க முடியும் என்று சிங்கள பேரினவாத அதிகாரம் அன்று நினைத்திருக்கலாம். இன்றும் நூல்களைத் தடுத்து வைப்பதன் மூலம் அவற்றின் கருத்துக்களை மக்களிடமிருந்து விலக்கிவிட முடியும் என்று நினைக்கிறதா?


ப. பார்தீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *